‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!

ஜெய்தீப் அஹ்லாவத்தின் குரலில் தொடங்குகிறது ‘பாதாள் லோக்’.

”இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று உலகங்கள் இருக்கின்றன. கடவுள்கள் வசிக்கும் சொர்க்க உலகம்; மனிதர்கள் வசிக்கும் பூமி உலகம்; பூச்சிகளும் பிற ஊர்வனவும் வசிக்கும் பாதாள உலகம். இவை நமது புனித நூல்களில் இருக்கின்றன. ஆனால் நான் இதனை வாட்சாப்பில் படித்தேன்”.

இரவுநேர ரோந்துக்குச் செல்லும்போது, தனக்குக் கீழிருக்கும் காவல் அதிகாரியிடம் இதைச் சொல்கிறார் உயரதிகாரியான ஜெய்தீப் அஹ்லாவத். ஹாத்தி ராம் சௌத்ரி என்ற கதாபாத்திரம் அவருக்கு. சில்லறை வழக்குகளாலும், பணி உயர்வு பெற்ற தனது ஜூனியருக்குக் கீழ் பணியாற்றுவதாலும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. ஏதேனும் பெரிய வழக்கு கிடைத்துவிடாதா என்ற ஏக்கம். அப்படியாக அவருக்குக் கிடைக்கிறது ஒரு வழக்கு.

Paatal Lok poster

டெல்லியின் பாலம் ஒன்றில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நால்வரைத் துரத்திக் கைது செய்கிறது புலனாய்வுத் துறை. அந்தப் பாலம், ஹாத்தி ராம் சௌத்ரியின் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. வழக்கு விசாரணை அவருக்கு அளிக்கப்படுகிறது. நால்வரும் கைது செய்யப்படுகின்றனர். கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் கொலை செய்ய முயன்றதாகச் சுட்டிக்காட்டப்படும் நபர், தேசிய ஊடகம் ஒன்றின் மூத்த ஊடகவியலாளர், சஞ்சீவ் மெஹ்ரா. கடந்த கால ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் ஒன்றை வெளிக்கொண்டு வந்தவர். ஆதலால் அவர் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

வழக்கு விசாரணையைத் தொடங்குகிறார் ஹாத்தி ராம் சௌத்ரி. அவருக்கு உதவியாக இருப்பது, அவருக்குக் கீழ் பணியாற்றும் இம்ரான் அன்சாரி. ஐ.பி.எஸ் தேர்வுக்காகத் தயாராகும் அன்சாரி, தான் பணியாற்றும் இடத்தில், தான் முஸ்லிம் என்பதால் பல்வேறு விதமான பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார். விசாரணையின் கோணம், அரசுத் தரப்புக்குத் தோதாக அமையாததாலும், பல்வேறு குறைபாடுகளாலும் சி.பி.ஐக்கு மாற்றப்படுகிறது. ஹாத்தி ராம் சௌத்ரி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. சி.பி.ஐ தன் விசாரணையில், சஞ்சீவ் மெஹ்ரா கொலை முயற்சி வழக்கைப் பாகிஸ்தான் சதி என்று அறிவிக்க, தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளரான சஞ்சீவ் மெஹ்ரா இதனைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்கிறார். பிடிபட்ட நால்வரும் யார் என்பதைத் தேடி, ஹாத்தி ராம் சௌத்ரி பயணிக்கிறார். விடையைத் தெரிந்து கொண்டாரா என்பது மீதிக்கதை.

Paatal Lok

ஏறத்தாழ 7 மணி நேரங்கள் கவனம் சிதறவிடாமல், தொடர்ந்து பார்வையிடும் அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இதனை முன்னின்று எழுதியிருப்பவர் சுதீப் ஷர்மா. இவர் ஏற்கனவே எழுதிய திரைக்கதைகளான ’உட்தா பஞ்சாப்’, ‘NH10’, ‘சோன்சிரியா’ ஆகியவை இதே பாணியிலான கதைகள். ‘உட்தா பஞ்சாப்’ பஞ்சாப்பில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களைப் பற்றி பேசியது; ‘NH10’ ஆணவப்படுகொலையை முன்வைத்து நகர்ந்தது. ‘சோன்சிரியா’ இந்திரா காந்தி காலத்தில் மத்தியப் பிரதேசம் – பிஹார் எல்லையில் வாழ்ந்த கொள்ளைக்காரர்கள், சாதி, வன்கொடுமை முதலானவற்றைத் தொட்டது. வட இந்தியாவின் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியைத் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் சுதீப் ஷர்மா. அதன் நீட்சியாக, தற்போது வெளிவந்திருக்கிறது ‘பாதாள் லோக்’.

கடந்த காலங்களில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களுக்கான அரசியலைப் பேசத் தயங்கின. அரசு தலையீடு, சென்சார் பிரச்னை, வணிக சமரசங்கள் முதலானவை இதன் காரணிகளாக முன்வைக்கப்பட்டன. இணையம் உருவான பிறகு, இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இயக்குநர் அனுராக் காஷ்யப் கடந்த ஆண்டு, ஒரு பேட்டியில் “எனது தொழில் பெருகியதற்குக் காரணம், மக்கள் எனது திரைப்படங்களை இணையத்தில் டவுன்லோட் செய்ததால்தான்; எனது படங்கள் டவுன்லோட் செய்யப்படாமல் இருந்திருந்தால், நான் இந்தத் தொழிலில் இருந்திருக்க மாட்டேன்” என்றார். இணையத்தில் திரைப்படங்கள் பைரசி செய்யப்படக்கூடாது என்று பெரும்பான்மையான படைப்பாளிகள் கூறியபோது, இப்படியொரு கருத்தை அனுராக் முன்வைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஓ.டி.டி தளங்களுக்கான வணிகம் இந்தியாவில் பெருகிய பிறகு, அனுராக் உள்ளிட்ட படைப்பாளிகள் தணிக்கைக்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல், சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர். அதன் விளைவாகத் தற்போது பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் முதலானவை வெளிப்படையாக அரசியல் பேசி வருகின்றன.

Sacred Games

அனுராக் காஷ்யப் – விக்ரமாதித்ய மோட்வானே ஆகியோர் இயக்கிய ‘சேக்ரெட் கேம்ஸ்’ இதற்குத் தொடக்கமாக அமைந்தது. மும்பையின் நிலம், சமகால அரசியல் முதலானவற்றைத் தொட்ட கேங்க்ஸ்டர் கதை. அதன் இரண்டாம் பாகம் இன்னொரு படி மேலே சென்று, இந்திய அரசு நலன்களுக்காகப் பகடையாக்கப்படும் கேங்க்ஸ்டர், அவனைத் தீவிரவாதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்து சாமியார் என்ற கதையைப் பேசியது. ‘நெட்ஃப்ளிக்ஸ்’ தளத்தில் இந்தத் தொடர் வெளியான சில மாதங்களுக்குள், இதே பாணியில் இந்துத்துவ எதிர்ப்பை எதிர்கால டிஸ்டோப்பியன் உலகம் வழியாக முன்வைத்தன ‘கௌல்’, ‘லேலா’ ஆகிய தொடர்கள். ’அமேசான் ப்ரைம்’ தளம் அரசியலைத் தொட்டது, ‘தி பேமிலி மேன்’ தொடரின் வழியாக. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், வீட்டில் சாதாரணமாகவும், அலுவலகத்தில் மிகப்பெரிய உளவாளியாகவும் வாழும் ஒருவனின் கதை. காஷ்மீர், தீவிரவாதம் முதலானவற்றைத் தொட்டுச் சென்ற கதை. இவை அனைத்துமே, இந்திய அரசு என்னும் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகளை ஓரளவுக்குப் பேசியவை.

அதே வேளையில், அதிகார வர்க்கத்தின் முகங்களாக இருப்பவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளி, வழக்கு விசாரணை முதலானவற்றைக் கதைக்களங்களாக கொண்ட ‘டெல்லி க்ரைம்’, ‘பஞ்சாயத்’, ‘சோனி’, ‘She’ ஆகிய படைப்புகளும் சமீப காலங்களில் கவனம் பெற்றவை. இப்படியான இரண்டு தளங்களையும், நேர்த்தியாகக் கையாண்டு, திரைக்கதையில் ஆச்சர்யம் அளித்திருக்கிறது ‘பாதாள் லோக்’.

Paatal Lok

தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ‘The Story of my Assassins’ நூல் தான் இந்தத் தொடருக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இந்தக் கதையின் வழியாக, இந்தியச் சமூகத்தில் தலித்கள் மீதான சாதி ஆதிக்கம், முஸ்லிம்கள் மீதான கும்பல் படுகொலைகள், திருநங்கைகள் மீதான ஆணாதிக்க வன்கொடுமை முதலானவை எப்படி நிறுவனமயமாகியிருக்கின்றன என்பதையும், இதில் அரசு எப்படி தலையிடுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது இந்தத் தொடர். இந்திய அரசு இயங்குவதற்கும், தேர்தல் கட்சிகள் வெற்றி பெறுவதற்கும் (பாஜக குறித்து குறியீடுகள் உள்ளன), வட இந்திய ஊடகங்கள் மக்களிடையே தங்கள் இருப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் இஸ்லாமிய வெறுப்பு நிறுவனமயப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது ‘பாதாள் லோக்’.

உயர்சாதி – தலித், இந்து – முஸ்லிம், ஆணாதிக்கம் – பால்புதுமை, கிராமம் – நகரம் , ஆண் – பெண், மனிதன் – விலங்கு, அரசு – சாமான்யர்கள் முதலான பல்வேறு முரண்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன. தலித் வீட்டில் உணவருந்தி விட்டு, கங்கை நீரினால் கைகளைக் கழுவும் பார்ப்பன அரசியல்வாதி இதில் இருக்கிறார். கும்பல் படுகொலைகளையில் முதல் மகனை இழந்த பயத்தில், இரண்டாவது மகனை முஸ்லிமாக வளர்க்காதபோதும், அரசு அவனை ஜிஹாதியாக அறிவித்துவிட்டதே என்று வேதனைப்படும் முஸ்லிம் தந்தை இருக்கிறார். தான் திருநங்கை என்பதை வெளியில் கூறுவதற்கும், சமூகத்தால் தன்னை எப்படி அணுகும் என்று அஞ்சுபவர் இருக்கிறார். அதே வேளையில், திரைக்கதையிலும் அது பேசிய அரசியலிலும் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

சாதிய வன்முறை குறித்த காட்சியில் உயர்சாதி சீக்கியர்களைக் காட்டியிருப்பது, தலித் ஆண் பார்ப்பன பெண்ணை ஒடுக்குவதான சித்தரிப்பு முதலானவை சிக்கல்களாக வெளிப்பட்டன. இப்படியான பிரச்னைகள் சமூகத்தில் நிகழ்வது உண்மை என்றபோதும், பார்ப்பன மதத்தில் நிகழும் எண்ணிக்கையை விட மிகக் குறைவானவை. சீக்கிய சமூகம் இனப்படுகொலையை எதிர்கொண்ட சமூகம். ஓர் அரசைக் குற்றம் சாட்டும்போது, அதில் நிறுவனமயமாகியிருக்கும் பார்ப்பன நலன்களை ஒதுக்கி, அனைத்து சமூகங்களின் தலையிலும் பாரத்தை வைத்திருக்கிறது ‘பாதாள் லோக்’. மோடி பக்தரான விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இந்தத் தொடரைத் தயாரித்ததற்கான காரணம் இதில் புலப்படுகிறது.

Paatal Lok

ஹாத்தி ராம் சௌத்ரி கதாபாத்திரத்தைப் போலவே, சினிமா வாழ்க்கையைக் கொண்டவர் ஜெய்தீப் அஹ்லாவத். தனக்குக் கிடைத்த வாய்ப்பில், பின்னியெடுத்திருக்கிறார் ஜெய்தீப். ஊடகவியலாளர் சஞ்சீவ் மெஹ்ராவாக நீரஜ் கபி நடித்திருக்கிறார். ஓ.டி.டி காலங்களிலும் மாற்று சினிமாவிலும் வெளிப்படும் திறமையான நடிகர் நீரஜ் கபி. ’ஹத்தோடா’ தியாகியாக மிரட்டியிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. இந்தத் தொடரின் casting director இவர்தான்.

‘பாதாள் லோக்’ தொடரை இணையத்தில் இருக்கும் வலதுசாரி இந்துத்துவ ட்ரோல்கள், ஹிந்து ஃபோபியாவை உற்பத்தி செய்வதாகக் கூறி, புறக்கணிக்க அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். ‘சேக்ரெட் கேம்ஸ்’ தொடர் முதல் ஒவ்வொன்றிற்கும் அவர்களின் எதிர்வினை இதுவாகவே இருக்கிறது. இணையத்தில் இருக்கும் இந்துத்துவ எதிர்ப்புச் சந்தையை ஓ.டி.டி நிறுவனங்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ’ஓ.டி.டி தளங்கள் தங்களைத் தாங்களே தணிக்கை செய்துகொள்ள முன்வர வேண்டும்’ என்றார். Digital Content Complain Council என்ற அரசு அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி, படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்துத்துவ ட்ரோல்களின் எதிர்ப்பையும் மீறி, சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.