உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை எதிர்த்துக் கிளர்ந்துள்ளனர். முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ (The Innocence of Muslims) என்கிற அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட ஒரு இஸ்ரேலிய யூதர். பெயர் சாம் பாசில். ஃப்ளோரிடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அடிப்படைவாதியும் இஸ்லாம்-வெறுப்பாளருமான கிறிஸ்டியன் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இத்திரைப்படத்தைப் பரப்பி வருகிறார்.
படத்தைத் தயாரித்த சாம் பாசிலின் உண்மைப் பெயர் நகவ்லா பேசிலி நகவ்லா எனவும் அவர் யூதரல்ல எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர் என்றும் இன்னொரு கருத்து உள்ளது. இவர் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட ஒரு ரியல்எஸ்டேட்காரர் எனவும் நிதி மோசடிக்காகத் தண்டிக்கப்பட்டவர் எனவும் ஒரு தகவல் உள்ளது. பாசில் வேறு, நகவ்லா வேறு என்றும் சிலர் சொல்கின்றனர். ஆக படத்தின் பின்னணி மர்மமாக உள்ளது. ஒன்று நிச்சயம். இஸ்லாமோ ஃபோபியாவைத் தூண்டும் அடிப்படைவாதிகள் இப்படத்தை எடுத்துள்ளனர். 5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் ஆயிரம் அமெரிக்க யூதர்கள் நிதி உதவி செய்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் இது இப்படியான படம் எனச் சொல்லப்படாமலேயே தாம் இதில் நடிக்க வைக்கப்பட்டோம் என்கின்றனர்.
ஒரு நல்ல திரைப்படத்துக்குரிய எந்த அம்சமும் இல்லாத இந்த மூன்றாந்தரத் திரைப்படம் இப்போது இணையத் தளங்களில் கிடைக்கிறது. “ஒரு மாபெரும் மதத்தை இழிவு செய்து, முஸ்லிம்கள் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கும் அமெரிக்க அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ள போதிலும் படத்தைத் தயாரித்த சாம் பாசில் எந்த வருத்தத்தையும் தெரிவிக்கத் தயாராக இல்லை. இறைத்தூதர் நபிகள் நாயகத்தை ஒரு “ஏமாற்றுப் பேர்வழி” எனவும் “இஸ்லாம் ஒரு புற்று நோய்” எனவும், இஸ்லாம் மதத்தின் அபத்தங்களைத் தோலுரிக்கவே இந்தப் படத்தைத் தாம் தயாரித்துள்ளதாகவும் அவர் பேட்டியளித்துள்ள செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளன.
அவர் மேலும் கூறியுள்ளவற்றையும், படத்தில் இறைத்தூதர் முகம்மதும் இஸ்லாமும் சித்திரிக்கப்பட்டுள்ள விதங்களையும் இங்கே பதிவு செய்வது முஸ்லிம் மக்களின் மனத்தைப் புண்படுத்தும் என்பதால் தவிர்க்கிறேன்.
எதிர்பார்த்ததைப் போலவே மிகப்பெரிய எதிர்வினைகளை இப்படம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. லிபிய நகரமான பெங்காசியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் நிகழ்ந்த ஆர்பாட்டம் தாக்குதலாக மாறி அமெரிக்கத் தூதர் கிறிஸ்டபர் ஸ்டீவன்சும் இதர மூன்று அமெரிக்க அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்து, ஏமன், துனீசியா, பாகிஸ்தான், வங்கதேசம் என முஸ்லிம் உலகெங்கிலும் அமெரிக்கத் தூதரகங்கள் முன் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன. கார்ட்டூமில் நடைபெற்ற போலீஸ் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் முன் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன. சென்னையில் நேற்று (14.9.12) ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ நடத்திய ஆர்பாட்டத்தில் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டதோடு கல்வீச்சில் கண்காணிப்புத் தொலைக்காட்சி ஒன்றும் மின் விளக்குகளும், கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன. இதையொட்டி முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 7000 பேர்கள் வரை ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வோம் என முன்னதாகவே அறிவித்திருந்தும் காவல்துறை போதிய காவலர்களை அங்கு நிறுத்தாததோடு, ஆர்பாட்டக்காரர்களைக் கைது செய்து அகற்றுவதற்குப் போதிய வாகனங்கள் கொண்டு வரப்படாததும்தான் நடந்த வன்முறைகளுக்குக் காரணம் என ஆர்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
ஆர்பாட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா அந்தந்த நாட்டு அரசுகளை வற்புறுத்தியுள்ளது. லிபியாவை நோக்கி அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இரண்டு வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் செப்டம்பர் 11ஐ ஒட்டி அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டிருப்பதால், இது ‘ஜிஹாதிகள்’ நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் என்பதாக ஒரு கருத்தையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில் திட்டமிட்டு முஸ்லிம்களைக் கோபம் கொள்ளச் செய்வதற்கான ஒரு சதி இது என்றொரு கருத்தும் உள்ளது. முஸ்லிம் கோபத்திற்கு எதிர்வினை ஆற்றுவதன் மூலம் வேட்பாளர்கள் தம் ஆதரவுத் தொகுதியை அதிகரித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இப்படிச் செய்யப்பட்டது என்பது இதன் உட்பொருள்.
லிபியாவில் நடந்துள்ளது பயங்கரவாதத் தாக்குதலா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இன்று உலகெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பை வெறுமனே இந்தத் திரைப்படத்தை நோக்கிய எதிர்ப்பாகக் கருத முடியாது. இந்த எதிர்ப்பிற்குப் பின்னணியாக இரண்டு அம்சங்கள் உள்ளன. இறைத் தூதர் முகம்மதையும் இஸ்லாம் மதத்தையும் மேற்குலகு இன்று நேற்றல்ல, கடந்த பல நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து இழிவு செய்து வருகிறது.
13ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்சை ஆண்டவரும் முஸ்லிம்கள் மீது சிலுவைப் போரைத் தொடங்கியவருமான பதினாலாம் லூயி பின்னர் கிறிஸ்தவ மதத்தால் புனிதராக அறிவிக்கப்பட்டார். “இறுதி நாட்களில் எதிர் கிறிஸ்து ஒருவர் தோன்றி ஆட்சி செய்வார்” எனக் கிறிஸ்தவர்களின் புதிய ஏற்பாட்டில் உள்ள வாசகத்தைச் சுட்டிக்காட்டி அந்த எதிர் கிறிஸ்து முகம்மது நபிதான் என மேலைச் சமூக அறிவுஜீவிகள் தொடர்ந்து கூறிவந்தனர். நபிகள் நாயகத்திற்குப் புனித குர்ஆன் இறை அருளால் இறக்கப்பட்டது என்கிற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையும் கேலி செய்யப்பட்டது. அப்படிச் சொல்லி நபிகள் மக்களை ஏமாற்றி வந்தார் எனவும், இறை வசனம் இறங்கியபோது நபிகள் அடைந்த பரவசமும் வேதனைகளும் வெறும் காக்காய் வலிப்பே எனவும் நூல்கள் எழுதப்பட்டன. நபிகள் வாழ்ந்த வரலாற்றுச் சூழலைக் கணக்கில் கொள்ளாமல் அவரின் பலதார மணங்களும், சிறுமி ஆயிஷாவை அவர் திருமணம் செய்ய நேர்ந்ததும் இழித்துரைக்கப்பட்டன.
நபிகளைப் பொய்யராகச் சித்திரித்து எழுதப்பட்ட மான்டி குரூசின் ‘டிஸ்புடேஷியா’ எனும் நூலை சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்த மார்டின் லூதர் மொழிபெயர்த்து ஒரு முன்னுரையும் எழுதினார். மகாகவி தாந்தே தனது புகழ்பெற்ற ‘தி டிவைன் காமெடி’ எனும் நூலில் நபிகளை நரகத்தின் ஏழாவது குழியில் உழல்வதாக எழுதினார். ‘ரோம சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ எனும் முக்கிய நூலை எழுதிய கிப்பன், “கொள்ளைகளின் மூலம் அழகிய பெண்களையும் நிறைய சொத்துக்களையும் அடையலாம் என ஆசையூட்டி இஸ்லாத்தை வளர்த்தார்” என நபிகள் பற்றி எழுதினார்.
இப்படி மேலைச் சமூகம் இஸ்லாத்தை இழிவு செய்து வந்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் நபிகள் நாயகம் ‘ஓர் அழகிய முன்மாதிரி’. எதை ஏற்றுக் கொண்டாலும் அவரை இழிவு செய்வதை அவர்களால் தாங்க முடியாது. மேலைச் சமூகம் தொடர்ந்து செய்து வந்த இழிவுகளினால் முஸ்லிம்கள் மனம் புண்பட்டுக் கிடந்த பின்னணியை மறந்து விட்டு சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ நூலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை (1989) நாம் புரிந்து கொள்ள முடியாது. நபிகளை இழிவு செய்த அந்நூலுக்கு ஆயத்துல்லா கொமைனி விதித்த ஃபத்வாவை நாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்பது உண்மைதான். ஆனாலும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொமைனியின் இந்த ஃபத்வாவை 44 முஸ்லிம் நாடுகளும் எதிர்த்தன. 2005ல் டென்மார்க் நாட்டு இதழ் ஒன்றில் நபிகளின் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பும் இத்தகையதே.
முஸ்லிம்கள் எல்லோரும் ஜிஹாதிகள், சகிப்புத்தன்மை அற்றவர்கள். அதனால்தான் ஒரு திரைப்பட்டத்தைக்கூட அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்கிற ஒரு கருத்தைக் கட்டமைப்பதும் கூட இத்தகைய திரைப்பட வெளியீடுகளின் நோக்கமாக உள்ளது. ஆனால், இப்படியான எதிர்ப்புகளை ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர் என்பதல்ல. டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ திரைப்படத்திற்கும், ‘தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்’ படத்திற்கும் கிறிஸ்தவ சமூகம் காட்டிய எதிர்ப்பை நாம் மறந்து விட முடியாது. டாவின்சி கோட் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்தது. இந்துத்துவ அமைப்புகள் இதுபோல நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம். ஓவியக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஏன் ‘வாட்டர்’ போன்ற படத்தின் படப்பிடிப்புகளையும் கூட அவர்கள் எதிர்த்துள்ளனர். மிகச் சமீபத்தில் ‘டாம் 999’ திரைப்படத்திற்குத் தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பையும் அறிவோம்.
எனினும் இன்று இந்தத் திரைப்படத்தின் மீதான கோபம், அந்தப் படத்தோடு நின்று விடாமல் அமெரிக்காவின் மீது திரும்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடுகளின் மீது அமெரிக்கா தொடுத்து வரும் அநீதியான ஆக்கிரமிப்புகள், போர்கள், நாட்டெல்லைகளைத் தாண்டி மேற்கொள்ளப்படும் ட்ரோன் தாக்குதல்கள் ஆகியன அதன் மீது உலக முஸ்லிம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் கர்னல் கடாஃபியும், ஈராக்கின் சதாம் உசேனும் நேட்டோ மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்ட முறைகள் அவர்கள் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளன, ‘ஆட்சி மாற்றம்’ (regime change) என்கிற பெயர்களில் அவர்கள் முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து அரசுகளைக் கவிழ்ப்பதும், ஷிஆ- சன்னி சகோதரப் போர்களை உருவாக்குவதும் நிலையற்ற ஆட்சிகளுக்குக் காரணமாவதும் எப்போதையும் விட முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்பை அதிகரித்துள்ளது.
லிபியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய குழப்பங்களின் விளைவாக இன்று அங்கெல்லாம் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக நடமாடுகின்றன. பெங்காசியில் கொல்லப்பட்ட அமெரிக்கத் தூதர் கிறிஸ்டஃபர் ஸ்டீவன்ஸ் கடாஃபிக்கு எதிரானவர்களின் துணையோடு அங்கு அமெரிக்க இருப்பை உறுதி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தான் விதைத்த வினைகளை இப்போது அறுவடை செய்யத் துவங்கியிருக்கிறது.
நன்றி: சமகாலம் (கொழும்பு).