ஆனந்த விகடனில் (7-11-12) வந்துள்ள ‘நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி’ என்கிற கட்டுரைக்கு எதிரான சமூக வலைத்தள நண்பர்களின் பலவீனமான எதிர்ப்பு குறித்து ஒரு மூன்று குறிப்புகள்:
1. ஆனந்த விகடன் (ஆ.வி.) எனும் பாரம்பரியமிக்க வார இதழ் சமீப காலங்களில் ஈழப் போராட்டதையும், குறிப்பாக விடுதலைப் புலிகளையும் மிகத் தீவிரமாக ஆதரித்த ஒன்று. என்னிடம் ஆ.வி.யிடமிருந்து எனக்கும் அதற்குமான உறவு குறித்து ஒரு கட்டுரை கேட்டபோது அந்த உறவு குறித்து நான் சிறப்பாக எழுதியபோதும், விடுதலைப் புலிகள் குறித்த அதன் விமர்சனமற்ற நிலைப்பாட்டை விமர்சித்திருந்தேன். அந்தக் கட்டுரையை அவர்கள் வெளியிடவில்லை. பிறகு நான் அதை என் சமூக வலைப் பக்கங்களில் வெளியிட்டேன்.
அந்த அளவிற்குத் தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த ஆ.வி இதழ் இன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரைக்காக சமூக வலைத்தளங்களில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறது.
அந்தக் கட்டுரையை நான் சற்றுமுன்தான் படித்தேன். அது ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்வு பற்றிய ஒரு நேர்காணல் அடிப்படையிலான கட்டுரை. அது ஆ.வி.யின் வழக்கமான ஈழ ஆதரவு நிலைப்பாட்டை ஒட்டிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரையின் முக்காற்பங்கு சிங்கள இராணுவத்தின் கொடூரமான மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடுகிறது. வாசிக்கும் யாருக்கும் சிங்கள இனவெறி இராணுவத்தின் பாலியல் வன்முறைகளின் மீது ஆத்திரம் விளைவது தவிர்க்க இயலாத வகையில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தவிரவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும் மிகச் சிறப்பாகவே அப்பேட்டிக் கட்டுரை பேசுகிறது.
எனினும் நமது முகநூலிலுள்ள விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இந்த ஆ.வி இதழை எரிக்கும் அளவிற்குப் போனதன் பின்னணி என்ன? அக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்ட செய்திகள்தான் அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். அந்தப் போராளிப் பெண் இன்று பாலியல் தொழிலில் ஈடுபட்டுத் தன் குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்துள்ளது என்பது ஒன்று. மற்றது, நமது தமிழ் நாட்டுப் புலி ஆதரவு அரசியல் சக்திகள், இன்றைய ஈழத் தமிழர்களின் மனநிலையையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தங்களது சுய அரசியல் லாபத்திற்காக இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனப் பேசி இன்னொரு போரையும் அதன் தாங்கவொண்ணா வலிகளையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயலுவது குறித்து அந்தப் பெண் போராளியின் வாயிலான கண்டனம்.
இதில் நண்பர்கள் கவனத்தில் ஏற்க வேண்டிய அம்சம் இதுதான். ஆ.வி. தொடர்ந்து விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த ஒரு இதழ், இதிலும் அந்த நிலையிலிருந்து விலகாமல், போர்த் தோல்வியை ஒட்டி அந்த இனவாத அரசு மேற்கொண்டுள்ள அத்துமீறல்களைத்தான் அதிகம் பேசுகிறது. இருந்தும், இன்றும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும், இன்னொரு ஈழப் போர் ஒன்றின் மூலமே விடிவு சாத்தியம் என்றும் கூறாமல் இன்றைய உடனடிப் பிரச்னைகளின்பால் கவனத்தைத் திருப்புவதைத்தான் இவர்களால் சகிக்க முடியவில்லை.
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இவர்கள் பேசுகிற அதே வார்த்தைகளை வரி பிசகாமல் மற்றவர்களும் பேச வேண்டும். இம்மி விலகினாலும் இவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். நான் சொல்வதை அப்படியே வரிக்குவரி வழிமொழிய வேண்டும். இல்லாவிட்டல் நீ என் எதிரி என்கிற ஜார்ஜ் புஷ்ஷின் ஆணவத்திலிருந்து இது எந்த அம்சத்தில் வேறுபடுகிறது? ஆ.வி. என்ன இவர்களின் கட்சிப் பத்திரிக்கையா? ஒரு பத்திரிக்கையில் எல்லாக் கருத்துகளுக்கும் இடமுண்டு என்பதை ஏற்காத அரசியலைப் பாசிசம் என்பதைத் தவிர வேறு எந்தச் சொல்லால் குறிப்பிட இயலும்?
பொதுப்புலத்தில் உலவும் ஒரு இதழைத் தன் கட்சிப் பத்திரிக்கை போல எழுத வேண்டும், இம்மி விலகினாலும் அதை எரிப்போம் எனக் கொக்கரிப்பதை என்னென்பது?
2. பேட்டிக் கட்டுரையில் அந்தப் பெண் போராளி சொல்லியுள்ள விஷயங்கள் குறித்து: இன்றைய நிலையை அந்தப் பெண் சரியாகவே சொல்லியுள்ளார். போருக்குப் பிந்திய ஈழத் தமிழர்கள் குறித்த எதார்த்தம் பற்றி இங்குள்ள புலி ஆதரவாளர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. மறுவாழ்வுக்குச் சாத்தியமில்லாத நிலை, இன்னும் தமிழ்ப் பகுதிகளில் 16 சிங்கள இராணுவப் பிரிவுகள் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள நிலை, ஆண் துணை இல்லாத ஏராளமான குடும்பங்கள், போராளிகளாக இருந்து திரும்பிச் சென்றோர் சமூகத்தில் ஒன்ற இயலாத சூழல் முதலியன இன்று வடக்கு மாநில ஈழத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பாரதூரமான விளைவுகளை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது. குற்ற நடவடிக்கைகளின் பெருக்கத்தையும் அங்கே உருவாகியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளையும் போரின் கொடும் விளைவுகளில் ஒன்றாக நாம் புரிந்து கொள்ளல் அவசியம். இதை நாம் ஏற்றுக் கொண்டால்தான் இதற்கான சரியான தீர்வுகளை நாம் பேச முடியும். மாறாக ஈழப் போரை முன்னிறுத்தி இங்கு அரசியல் லாபம் சேர்க்கவும், இங்குள்ள பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளவும் முயல்வோர் இவற்றை மறைக்கவே முயல்வார்கள். அந்த முயற்சியில் அவர்கள் தோற்றும் போவார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரியும் ஈழப் பெண்மணி ஒருவர் இங்கு வந்திருந்தார். பலரும் அறிந்துள்ள பேராசிரியர் ஒருவரின் மனைவி அவர். அவரது தொண்டு நிறுவனம் இத்தகைய சீரழிவின் ஊடாக நோய்வாய்ப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி செய்து மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்ய இயலுமே தவிர, இந்தக் கொடுமைகளை அவர்களால் அரசியலாக்க முடியாது. அவர் சொன்ன இன்னொரு செய்தி இன்னும் கொடுமையானது. இலங்கையின் முக்கிய வருமானங்களுள் ஒன்று மேலை நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வது. அத்தகைய ஒரு நிறுவனம் (பெயரைக்கூட அவர் சொன்னார்), வேலைக்குப் பெண்கள் தேவை என விளம்பரம் செய்து, அதைக் கண்டு வரும் தமிழ்ப் பெண்களை பாலியல் தொழில்களில் ஈடுபடுத்துகிறது என்பதுதான் அது. குழந்தையோடும், நோயுடனும் திரும்பி வருவோருக்கு நிவாரணம் வழங்குகிற பணியை அவரது தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
நண்பர்களே இதுதான் இன்றைய ஈழ எதார்த்தம். இந்த உண்மையை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நாம் இதற்கான தீர்வுகளை யோசிக்க இயலும். நம்முடைய அரசியல் நலன்களிலிருந்து ஈழப் பிரச்னையை நாம் அணுகக் கூடாது.
உண்மைகளின் ஆற்றல் மிகப் பெரிது. அவற்றை நம் இரு கரங்களால் மூடி மறைத்துவிட இயலாது. வேண்டுமானால் உண்மைகள் நம் கவனத்திற்கு வராமல் கண்களை மூடிக்கொள்ள அந்தக் கரங்களைப் பயன்படுத்தலாம்.
முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பின் இன்றைய நிலை குறித்த நேரடி அனுபவத்தின் அடிப்படியிலான எனது கட்டுரைக்காக தாண்டிக் குதித்தவர்கள், இந்த இதழ் FRONTLINE இதழில் அட்டைப் படக் கட்டுரையாக அதே செய்திகளும் படங்களும் வந்துள்ளனவே என்ன செய்யப் போகிறீர்கள்?
3. ஆனந்த விகடனுக்கான எதிர்ப்பு ஏன் சமூக வலைத்தளங்கள் மட்டத்திலேயே முடங்கிவிடுகிறது? ஏன் வழக்கமான விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இதில் மௌனம் சாதிக்கின்றனர்? ஒரு பத்திரிக்கையை அப்படியே வரிக்கு வரி நம்மைப் போலவே எழுத வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் அரசியல் maturityயைக் காட்டுவதாகவே நான் இதைப் புரிந்துகொள்கிறேன்.
நாம் தகவல் தொழில்நுட்பம் வீச்சுடன் வளர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் நண்பர்களே.