‘ரத்த சாட்சி’ – இடதுசாரி சாகசவாத நாயகனும், காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வும்!

ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ சிறுகதையின் தழுவலாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ரத்த சாட்சி’. ‘கைதிகள்’ கதை இந்தத் திரைப்படத்தின் இறுதி 20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், அதன் தொடக்கமாக சுமார் 100 நிமிடங்களுக்கும் மேலாக முன்கதை விரிவாக திரைக்கதையாக சேர்க்கப்பட்டுள்ளது. அராஜக பண்ணையார்களுக்கு எதிராக தொழிலாளர்களை கம்யூனிஸ்ட்கள் திரட்டுவது, நக்சலைட்கள் மீதான காவல்துறை அடக்குமுறை, நக்சலைட் ஒழிப்பில் எம்ஜிஆர் காட்டிய தீவிர முனைப்பு முதலான காட்சிகள் ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான காட்சியமைப்புகள். இதனைக் கழித்து பார்த்தால், இது மற்றொரு Woke Cinema Genreல் இடம்பெறும் திரைப்படமாகவே இருக்கிறது.

தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களையும், பாடாவதி பூமர் புராணங்களையும் முன்வைத்து வந்த தமிழ் சினிமாவில் சமூகம், அரசியல் சார்ந்து பேசும் திரைப்படங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சியை நம்மால் காண முடியும். முன்பு கலை திரைப்படங்களில் ஏதேனும் திரைப்பட விழாக்களில் மட்டுமே காண முடிந்த கதைகள் இன்று வெகுஜன மக்களிடையே லாபம் ஈட்டும் சந்தைப் பொருளாக மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியாக, ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் அரசியல் கறார்தன்மை கொண்ட திரைப்படங்களை ஏற்று நடிக்க தொடங்கினர்; கலைப்புலி தாணு போன்ற தயாரிப்பாளர்களும் இந்த சந்தை உத்தியைத் தெரிந்தே வியாபாரம் செய்து வருகின்றனர். புதிதாக வளர்ந்திருக்கும் இந்த சந்தையில் பல்வேறு நன்மைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கோபி நயினார், லெனின் பாரதி முதலான இயக்குநர்கள் புதிதாக உருவாகியதோடு, வெற்றிமாறன், வெங்கட் பிரபு போன்றோர் முன்பை விட வெளிப்படையாக அரசியல் பேசும் வெகுஜன திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவர்கள் பேசும் அரசியலில் மாற்றுக் கருத்து இருக்கலாம்; அது அவரவர் அரசியல் தேர்வு. ஆனால் இப்படியான ஒரு சந்தை உருவாகியிருப்பது மறுக்க முடியாது.

இந்த சந்தையை நம்பி ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு திரைப்படம் வெளியாகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் விக்ரமன் போன்ற போட்டியாளர்களைக் களமிறக்கியிருப்பதும், அவருக்கு இணையத்தில் குவியும் பாராட்டுகளும், ஆதரவும் இந்த சந்தை இயங்குவதை உறுதிப்படுத்துகிறது. அப்படியாக இந்த சந்தையைக் குறிவைத்து வெளியிடப்பட்டிருக்கிறது ‘ரத்த சாட்சி’. தோழர் அப்புவின் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நக்சலைட்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், நக்சலைட் – காவல்துறை இருபக்கமும் பாதிப்புகள் இருந்தன என்ற ‘நடுநிலை’ வகித்து பேசியிருக்கிறது. ஜெயமோகன் எழுதிய கதையும் இதே பாணியிலானவை.

‘ரத்த சாட்சி’ படத்தின் போஸ்டரே ஒரு சாகச நாயகனைப் பற்றிய கதையாக வெளிவந்தது. இருளில் தீப்பற்றி எரியும் கரும்புத் தோட்டத்தின் நடுவில் யானை மீது முஷ்டியை உயர்த்தி, சிவப்புச் சட்டை அணிந்த நாயகன்; பின்னணியில் சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் காட்டியது. தொடக்க காட்சியில் ஒரு சாதிய வன்கொடுமை. காவல்துறை அதனை அலட்சியம் செய்கிறது. ‘இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?’ என்ற ரீதியில் சில காட்சிகள். அடுத்ததாக கதாநாயகன் அப்பு யானையுடன் சென்று மக்களைத் தூண்டிவிடுகிறார்; மக்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். நக்சலைட் பாணியிலான ‘நீதி’ பெற்றுத் தரப்படுகிறது. எம்ஜிஆர் காலம் முதல் ‘நெஞ்சுக்கு நீதி’ வரை, தற்போது ‘ரத்த சாட்சி’ வரை இதே ஃபார்முலா தான். திரைக்கதையில் தோன்றும் மீட்பர்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் போல காட்சிப்படுத்தப்பட்டாலும், அமைப்புகளால் கட்டுப்படுத்த முடியாவதவர்களாக, வழமையான சினிமாத்தனமான ஆண் மையவாத ‘மாஸ்’ சட்டகங்களுக்குள் உட்பட்டு (சமீப கால உதாரணங்களில் Nerd வகைமை ‘மாஸ்’ சட்டகத்திற்குள் சேர்க்கப்பட்டுவிட்டது; உபயம் – La Casa de Papel, Breaking Bad, Prison Break etc.) உருவாக்கப்படுகின்றனர்.

‘ரத்த சாட்சி’ வெளியான அதே நாளில், ‘விட்னெஸ்’ வெளியாகியிருக்கிறது; சமூகத்தில் நிகழ்த்தப்படும் ஒரு கொலையின் ‘சாட்சி’ என்ற அடிப்படையில் இரு திரைப்படங்கள் பேச முயன்றிருக்கும் தத்துவம் சற்றே ஒற்றுமை கொண்டது. ஆனால், ‘விட்னெஸ்’ ஒரு இடதுசாரி சினிமாவாக, மக்களின் பக்கம் நின்று சமகாலத்தில் நிலவும் பிரச்னைகளைப் பேசுகிறது. ’விட்னெஸ்’ பெத்துராஜு தோழர் கதாபாத்திரம் வழமையான ‘மீட்பர்’ சட்டகங்களுக்குள் நிற்காமல், தான் கைது செய்யப்பட்டாலும் ’அமைப்பு உங்களைக் கைவிடாது’ என்று பேசுகிறது. ’ரத்த சாட்சி’ அப்படியாக இல்லாமல் மக்களைத் தூண்டிவிடும் கதாபாத்திரமாக தோழர் அப்புவைச் சித்தரிக்கிறது. மற்றொரு ரவுடி கம்யூனிஸ்ட் கதாபாத்திரம் இருக்கிறது. இவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவராக பண்ணையார் கதாபாத்திரம் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் காவல்துறையையும், நக்சலைட்களையும் ஒரே தராசில் சமன்படுத்த சேர்க்கப்பட்டிருக்கும் செருகல்களாகவே தென்பட்டன. மேலும், தோழர் அப்பு தான் சார்ந்திருந்த கட்சி மீது அதிருப்தி கொண்டு, சண்டையிட்டு கிளம்பி சென்றதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் இடதுசாரி அரசியல் பேசும் சாகசவாத நாயகனைக் கொண்டிருக்கும் ‘ரத்த சாட்சி’ திரைக்கதை, ‘கைதிகள்’ நாவலுக்குள் வரும் போது குற்றவுணர்வு கொண்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தையும் காட்டுகிறது. காவல்துறையினர் அமைப்பாக மேற்கொள்ளும் வன்முறைகளைக் கண்டு குற்றவுணர்வு கொள்ளும் கதாபாத்திரங்களைச் சமீப ஆண்டுகளில் ‘விசாரணை’, ‘ரைட்டர்’ முதலான திரைப்படங்களில் கண்டோம். இதில் ‘ரைட்டர்’ படத்தின் கதை எடுத்துக் கொண்ட கதைக்களமே இந்த காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வு தான். ஆனால் அது முன்னெடுத்த பாதை, காவல்துறையினருக்கு சங்கம் தேவை என்பதை மட்டும் பிரசாரப்படுத்தாமல் ஒரு பிரச்னையை முழுவதுமாக அலசி ஆராய்ந்து, இறுதியில் குற்றவுணர்வைத் தீர்த்துக் கொள்ள முன்னெடுக்கும் முயற்சியையும் தேடுகிறது. ‘ரத்த சாட்சி’ காவல்துறை – நக்சலைட் பிரச்னையை கட்டளையிடும் இடத்திற்கும், கட்டளை பெறும் இடத்திற்குமான பிரச்னையாக, இருதரப்பில் இருக்கும் தனிநபர்களின் சிக்கலாக மாற்றுகிறது. ஜெயமோகன் சிறுகதையில் இல்லாத புதிய முடிவொன்று ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பு கதாபாத்திரம் மக்களைத் தூண்டும் காட்சிகள், இடதுசாரிகள் அமைப்பாக இல்லாமல் தனிநபர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது, பண்ணையாரின் தலைமையில் பணியாற்றுவது தொடங்கி இறுதிக் காட்சி வரை, தோழர் அப்புவின் பெயரைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள அபத்தம் என்றே கருத முடியும்.

ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையும் அப்படியான அபத்தமே என்ற போதும், அதனைத் திரைக்கதையாக மாற்றும் போது, அதனை நேர்மையான ஒன்றாக, மக்கள் அரசியலைப் பேசும் ஒன்றாக மாற்றுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தன. மணி ரத்னம், வெற்றிமாறன் முதலானோர் படமாக்க விரும்பிய சிறுகதை இது. மணி ரத்னம் பாணியில், ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தை மேம்போக்கான அரசியல் பார்வையுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில்.

ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையும் ஏறத்தாழ இதே கதைக்களம் தான்; வெற்றிமாறனின் ‘விடுதலை’ அதை எப்படி அணுகுகிறது என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும்.

‘ரத்த சாட்சி’ Aha தளத்தில் வெளியாகியுள்ளது.

– ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.