அப்சல் குருவிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை ஒட்டித் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகளுள் பெரும்பாலானவை நடுநிலை தவறியும் குறைந்தபட்ச மனிதநேயத்தைக் கூடக் கைவிட்டும் எவ்வாறு இந்துத்துவ அதிகாரத்தை உமிழ்ந்திருந்தன என்பதை முன்னர்க் கண்டோம். அந்த மதவாதச் சார்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அப்சலின் வழக்கில் மூடிமறைக்கப்பட்ட சட்டச்சிக்கல்களையும் அத்துமீறப்பட்ட மனித உரிமைகளையும் பழியுணர்ச்சியைத் தூண்டும் மரணதண்டனைகளையும் கண்டித்து அவற்றின் மீது ஒரு முக்கிய கவன ஈர்ப்பை மட்டுமின்றி, கிட்டத்தட்ட ஒரு விழிப்புணர்வையே ஏற்படுத்தியிருந்தது ‘தி இந்து’ நாளிதழ்.
“அப்சல்குரு ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டார்” (Afsal Guru Hanged in Secrecy) என்ற தலைப்பில் முதல்பக்கச் செய்தியை வெளியிட்டிருந்த ‘இந்து’ நாளிதழ் மட்டும் தான் அப்சல் குருவிற்கு ‘தீவிரவாதி’ ‘பயங்கரவாதி’ என்ற பட்டங்களைக் கொடுக்காமல் அவர் சரணடைந்ததைக் கணக்கிலெடுத்து சகமனிதராக அவரை அடையாளம் கண்டது. வழக்கு குறித்து அரசுதரப்பு சொல்லிய செய்திகளை வெளியிட்டிருந்தாலும், தாமதமாகவேனும் தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டு மகிழ்ந்து வாயை மூடிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நமக்கு அறிவுரை கூறாமல், இதற்கு மேல் பேசினால் நீங்களெல்லாம் ‘தேசத்துரோகிகள்’ என்று நம்மை எச்சரிக்காமல், இந்தத் தளத்தை மிக விரிவாக விவாதித்திருந்தது. அவற்றின் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம். (10.2.13., 11.2.13, 12.2.13 ஆகிய மூன்றுநாள் இதழ்கள் இங்கு கவனிக்கப்பட்டுள்ளன)
“இந்நாளில் விடையளிக்கப்படாமல் எஞ்சி இருக்கும் கேள்விகள்” (Unanswered Questions are the Remains of the Day) என்ற தலைப்பில் அஞ்சலி மோடி எழுதிய கட்டுரை, அப்சல் குருவின் வழக்கு எப்படி ஒரு முறையற்ற நீதிவிசாரணையாக நடத்தப்பட்டது என்பதைக் குறித்து விவாதித்தது. அஞ்சலி மோடி, நாடாளுமன்ற வழக்கு விசாரணையின் செய்தியாளராக (2002) இந்து நாளிதழில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“விசாரணையின் போது காவல்துறையினர் முன்வைத்த ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன. அப்சல் குருவைக் கைது செய்யுமாறு டெல்லி போலிஸ் ஶ்ரீநகர் போலிசாருக்கு அறிவுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், டெல்லி போலிசார் அறிவுறுத்திய நேரத்திற்கு முன்பாகவே அப்சல் ஶ்ரீநகர் போலிசால் கைது செய்யப்பட்டிருந்ததை ஆவணங்கள் எடுத்துக்காட்டின. இதுகுறித்து நீதிமன்றத்திற்கு வெளியே கருத்துக்கூறிய அரசு வழக்கறிஞர், மத்திய புலனாய்வுத்துறை ஶ்ரீநகர் போலிசுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தார்கள் என்றார். ஆனால், ஏன் நீதிமன்றத்திற்குள் இது விவாதிக்கப்படவில்லை? இந்த விஷயத்தில் அரசு வழக்கறிஞர் பொய் சொல்கிறாரா? அல்லது அரசு உண்மைகளை மூடிமறைக்கிறதா?”எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
“கல்லறையில் தொழுகை நடத்த குடும்பத்தினர் அனுமதி கோரினர்” (family sought permission for prayers in jail) என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியில், நந்திதா ஹக்சர் முக்கிய உண்மைகளை வெளிச்சமிட்டுக்காட்டினார்.“இது ஒரு துயர் மிகுந்த நாள். அப்சலுக்கு மிக அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு அடிப்படைவாதியோ ஜமாதியோ அல்லர். அவர் பாகிஸ்தானின் பிரிவினைவாதக் கொள்கைகளில் இருந்து விடுபட்டுத் திரும்பிவந்தவர். ஆனால் ஒருவரும் இதைக்கேட்கத் தயாராக இல்லை.” என்று வருந்திய ஹக்சர், அப்சலின் மரணத்தைக் கொண்டாடுவதன் பின்னுள்ள முரணை மிகச்சரியாக அடையாளம் காட்டினார்: “காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க இயலாத அங்கம் என்று சொல்லிக்கொள்ளும் “வலதுசாரிகள்” இன்னொருபக்கம், காஷ்மீர் மக்கள் எந்த துக்கத்திற்காக அழுதுகொண்டிருக்கிறார்களோ அந்த சோகத்தை கொண்டாடுவதற்கு அழைப்புவிடுக்கிறார்கள்” என்றார். இதன்மூலம், அகண்ட பாரதக் கூப்பாட்டில் உள்ள முரணை அவர் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்கது. மேலும், இந்த தூக்கு தண்டனை அப்சலின் மகனிடமும் காஷ்மீர் மக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
கல்பனா கண்ணபிரான் எழுதிய “UPA Strays off Sonia’s Course” என்ற கட்டுரை, மரணதண்டனை நீதிக்கு உட்பட்டதாக அல்லாமல் அரசியலுக்கு உட்பட்டதாய் இயங்குகிறது என்பதை விளக்கியதோடு, ராஜீவ்காந்தி படுகொலையில் தூக்கு விதிக்கப்பட்டவர்களுக்காக அன்று சோனியாகாந்தி எப்படித் தனது சொந்த துக்கத்தையும் கோபத்தையும் ஒதுக்கிவிட்டு, அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் கருணை அளிக்கக் கோரி அறம் சார்ந்த அரசியலை முதன்மைப் படுத்தினாரோ அதே கொள்கையைத் இன்று பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
‘பழிவாங்கல் நீதி வழங்கலாகாது’ (Vengeance isn’t Justice) என்ற தலையங்கம், மரணதண்டனை என்பது ஒரே சீரான சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் எப்படி நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியலைப் பொறுத்து அமைகிறது என்பதைச் சமீபத்திய நிகழ்வுகளினூடே கீழ்வருமாறு விளக்கியது.
சென்ற மாதம் நீதிமன்ற வழக்கு ஒன்றில் நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஃபக்கீர் கலிஃபுல்லா ஆகியோர் மொஹிந்தர் சிங் என்ற குற்றவாளியின் தூக்கு தண்டனையைக் குறைத்தார்கள். மொஹிந்தர், ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறைத்தண்டனையில் இருந்தபோது பரோலில் வெளியே சென்றுவிட்டு தனது சொந்த மகளையும் மனைவியையும் கொன்றவன். அவனது தண்டனைக் குறைப்பிற்கு நீதிபதிகள் சொன்ன காரணம், சமூக அமைதிக்கும் சமாதான வாழ்விற்கும் குந்தகம் விளைவிப்பவர்களுக்குத் தான் இந்தத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே. ஒருவாரத்திற்குப் பின்பு, நீதிபதிகள் சதாசிவம் மற்றும் கேஹர் சிங் ஆகியோர் சுந்தர்ராஜன் என்பவருக்கு தூக்கு தண்டனை வழங்கினர். அவன் மீதான குற்றம் ஏழு வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்று கொலை செய்தான் என்பதுதான். இந்தக் குற்றத்திற்கு மரணதண்டனை வழங்க நீதிபதிகள் சொன்ன காரணம், பரம்பரையை நிலைநிறுத்தக் கூடிய ஒரு ஆண்மகனை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினரின் வருத்தத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதுதான். இதிலிருக்கும் ஆணாதிக்கப் பார்வை என்பது ஒருபுறமிக்க, மரணதண்டனை என்பது எவ்வாறு வரையறுக்கப்படாத சட்டவிதிகளின் கீழ், நீதிபதிகளின் சொந்தக் கருத்தியலை வைத்து வழங்கப்படுகிறது என்பதை இந்து நாளிதழ் தெளிவாக எடுத்துக்காட்டியது.
“மக்களாட்சிக்கு ஓர் உயரிய நாள்” (A Perfect Day for Democracy) என்ற தலைப்பில் வெளியான அருந்ததிராயின் கட்டுரை, அப்சல் வழக்கில் இருந்த தில்லுமுல்லுகளை எல்லாம் நாடறிய அம்பலப்படுத்தியது.
நீதிமன்றம் கிலானியை விடுதலை செய்துவிட்டு அப்சலுக்கு மட்டும் தண்டனையைச் கொடுத்தது என்பதிலிருந்தே இவ்வழக்கு நடுநிலையாக நடைபெற்றிருக்கிறது என்பது புர்ர்யவில்லையா? என்று வாதிடும் ‘நடுநிலைவாதிகளின்’ முன் அருந்ததி மீண்டும் அந்த முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த வழக்கிலுள்ள ஏராளமான குளறுபடிகளில் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
காவல்துறை கிலானியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே அப்சலைப் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறியது. ஆனால், நீதிமன்ற ஆவணங்கள் கிலானியைக் கைது செய்வதற்கு முன்பே, அப்சலைக் கைது செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாகக் கூறுகின்றன. நீதிமன்றம் இதை ஆவண முரண்பாடு என்று கூறியது. ஆனால், எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்சல் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கைப்பேசியும் மடிக்கணிணியும் கைப்பற்றப்பட்டன. இப்படிப் பறிக்கப்பட்ட பின்பு அவரது மடிக்கணிணியை யாரோ பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல, அப்சல் குருவிற்கு விற்கப்பட்ட – தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்வதற்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட – சிம்கார்டு, அவருக்கு விற்கப்பட்ட நாளுக்கு முன்பிலிருந்தே பயன்பாட்டில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றம் இவை அனைத்தையும் கவனித்தது. ஆனால், காவல்துறையை இலேசாகக் கடிந்து கொண்டதோடு விட்டுவிட்டது என்று சொல்லி இந்த வழக்கின்ன் முறையற்ற விசாரணைகளை விளக்கிய அருந்ததி, இறுதியாக இப்படிச் சொன்னார் :
வழக்கமாக காஷ்மீரில் சரணடையும் போராளிகளைப் போலவே அப்சலும் இரையாகி விட்டார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார், மோசமாகத் துன்புறுத்தப்பட்டார். நடந்த சதித்திட்டங்களின் முன் அவர் ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொணர விரும்பும் யாரொருவருக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் யாருமே உண்மையைக் கண்டறிய விரும்பவில்லை. இந்தச் சதித்திட்டத்தின் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை ; விசாரிக்கப்படவில்லை. ஆனால், அப்சல் தூக்கிலிடப்பட்டுவிட்டார். இப்போது நமது கூட்டுமனசாட்சி திருப்தி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது நமது கோப்பையில் பாதி இரத்தம் தான் நிரம்பியிருக்கிறதா?
அருந்ததிராயின் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய, நாடறிந்த – முஸ்லிம் வெறுப்புப் – பத்தி எழுத்தாளர் ப்ரவீண்சாமியின் கட்டுரையையும் ‘இந்து’ நாளிதழ் வெளியிட்டிருந்தது. அருந்ததி ராயின் கருத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட அக்கட்டுரை, ஆதாரமே இல்லாமல் மொண்ணையாக வார்த்தைகளைக் கொட்டியது.அருந்ததியின் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரிக்கப்படாதவை அல்ல. நீதிமன்றத்தால் “கவனத்தில் கொள்ளப்பட்டவை தான்” என்கிற மழுப்பலைத் தவிர வேறெந்த அறிவுப்பூர்வ விவாதமும் அவரது கட்டுரையில் இல்லை.
வழக்கமாக ‘விவாதம்’ எனத் தலைப்பிட்டு முதற் கட்டுரையாளரின் பதிலைப் பெற்று வெளியிடும் இந்து நாளிதழ் ப்ரவீண்சாமியின் கட்டுரைக்கு அருந்ததியிடமிருந்து பதில் எதையும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை இந்தச் சத்தற்ற கட்டுரைக்குப் பதில் ஏதும் தேவையில்லை என அருந்ததி பதில் எழுத மறுத்துவிட்டாரோ என்னவோ!. ப்ரவீனின் கட்டுரையில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் நம்ம ஊர் ஜெயமோகனைப்போல அருந்ததி ராயைக் ‘குருவி மண்டை’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு எழுதவில்லை என்பதுதான்.
11.2.12 அன்று வெளியான, “In tihar, officials feel ‘tingle of sorrow” என்ற கட்டுரை, அனைத்து நாளிதழ்களும் அப்சலை ஒரு தீவிரவாதியாக மட்டுமே அடையாளப்படுத்திய நிலையில் அவரது மறைக்கப்பட்ட முகத்தைத் துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தது.
ஒரு பெயர் சொல்ல விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதன் அடிப்படையில் அந்தச் செய்தி இப்படிப் பதிவு செய்யப்பட்டிருந்தது :
இந்தியாவின் உள்ள வெகுமக்கள் , இந்துத்துவ ஆதரவாளர்கள் அப்சல் குருவின் தூக்கை வெடிவைத்து கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம் அமைதியாகவே காணப்பட்டது. சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர் . காரணம் அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் எல்லோரையும் பெயரைச்சொல்லி அழைத்துத் தான் விடைபெறுவதை அறிவித்தபடி நகர்ந்தார்.
அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் … பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்படவில்லை . தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது.
அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார் . அவருக்கு உணவு வழங்கப் படவில்லை . குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை நடத்தினார் …இது வரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது . எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம் . ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல் , மரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த மனிதரை பார்த்ததில்லை.
கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் . அவர் வாழ்வும் மரணமும் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம் , ஒருமைப்பாடு , மனித நேயம் குறித்து பேசினார் . எந்த மனிதனும் தீயவன் அல்ல, எல்லா உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது . நாம் உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும் . அது தான் உண்மையான சாதனை என்றார் . ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டார் “ என்று விளக்கியதோடு, “இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிதுதான்” என்றும் கண்கள் பனித்தது அந்தக் கட்டுரை.
“ஒரு இரகசியத் தூக்கின் ரகசியங்களை வெளிக்கொணர்தல்” (Unlocking the Secret’s of a Secret Execution) என்ற நித்யா ராமகிருஷ்ணனின் கட்டுரை, உச்சநீதிமன்றம் முன்னிறுத்திய “கூட்டு மனசாட்சி” என்பதன் மீது ஒரு விவாதத்தை முன்னெடுத்ததோடு காஷ்மீரிகள் இந்திய அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்துகொண்டு வருவதையும் சுட்டிக்காட்டியது. மேலும், தீவிரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றி விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அரசியலமைப்புகளை நோக்கி இந்தக் கேள்வியையும் எழுப்பியது : “ஒரு தூக்குத் தண்டனைக்கைதி தனது குடும்பத்தைச் சந்திப்பதன் மூலமாகவும் அந்தக் குடும்பம் இறுதிச் சடங்கைச் செய்வதன் மூலமாகவும் தனது வலிமை தேய்ந்துவிடும் என்று அரசாங்கம் கருதினால், தீவிரவாதிகளிடம் இருந்து நாடாளுமன்றத்தைக் காப்பாற்றிவிட்டதற்காக அது எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்??”
12.2.13 அன்று வெளியான “இரகசியத் தூக்கிலிடுதலின் அநாகரிகம்” (The Indecency of a Secret Execution) என்ற தலையங்கம், 24 வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி படுகொலையில் தூக்கிலிடப்பட்ட சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோரது மரணதண்டனைச் செயல்முறையை நினைவுகூர்ந்தது. அன்றைய காங்கிரஸ் அரசால் கருணை மனு நிராகரிப்பட்ட போது, அது எப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது என்பதையும், குற்றவாளிகளுக்கு மேல்முறையீட்டிற்கான இறுதிவாய்ப்பும் மறுக்காமல் அளிக்கப்பட்டது என்பதையும் இருவரின் குடும்பத்தாரும் (முப்பத்து மூன்று பேர்) கைதிகளை இறுதியாக சந்திக்க அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இன்று நிறைவேற்றப்பட்டுள்ள இரகசியத் தூக்கின் மூலம், இந்த 24 வருட இடைவெளியில் இந்தியாவின் கூட்டு அறம் வீழ்ந்துபோயிருப்பதை அறிவுறுத்தியது.
“சட்ட ஒழுங்கு மீறல்” (lawlessness and disorder) என்ற தலைப்பில் வெளியான இன்னொரு தலையங்கம் குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா அவர்களின் மகளும், மருமகனும் பத்திரிக்கையாளருமான இப்திகார் கிலானியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் – அப்சலை தூக்கிலிட்ட உடனேயே – எந்தக் காரணங்களும் சொல்லப்படாமல் சில மணிநேரம் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த காவல்துறை அராஜகத்தை எதிர்த்து பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்தக் காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஒரு பத்திரிக்கையாளரின் மீதான இந்த சட்டமீறலைக் கூட பெரும்பாலான நாளிதழ்கள் கண்டுகொள்ளாத நிலையில், கட்சுவின் அறிக்கையை முன்வைத்து, இந்த சட்ட ஒழுங்கு மீறலைக் கண்டித்தது ‘இந்து’ நாளிதழ் மேற்கூறிய தலையங்கத்தை எழுதியிருந்தது.
மார்க்கண்டேய கட்சுவின் இதே அறிக்கையை முன்வைத்து ‘காக்கியும் ஈரமும்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டிய தினமணி, ஏதோ இப்திகார் கிலானிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு, பிறகு இது கிலானிக்கு மட்டும் ஏற்படுவதல்ல, இங்கே எல்லாருக்குமே அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதாக எழுதி இப்திகார் மீதான காவல்துறை அராஜகத்தை நீர்த்துப் போகச் செய்தது.
“அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞருக்காக, அவருடைய தம்பியரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல்நிலையத்துக்குபோய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு, உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறியதால் மனம்வெறுத்த அந்தத் தாய், வீடுவந்து தூக்கில் தொங்கி இறந்தார். இப்திகார் கிலானிக்கு குரல் கொடுக்க பத்திரிகைகள் இருந்தன. ஆனால்,பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை.”
என்று உச்சுக்கொட்டி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு முஸ்லீம்கள் மீதான தன் வன்மத்தைத் தீர்த்துக்கொண்டது.
மொத்தமாக தொகுத்துப் பார்க்கையில், பெரும்பாலான செய்தி இதழ்கள் எல்லாம், ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ ‘இதோடு நிறுத்திக்கொள்ளலாம்’ ‘இதை விமர்சனமாக்காதீர்கள்’ ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சிந்தனையை முடக்கிய வேளையில் ‘இந்து’ நாளிதழ், இது பற்றிய பலதரப்புக் கேள்விகளை முன்னிறுத்தி வெகுமக்களிடம் ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டியிருப்பதை அறியமுடிகிறது. ’இந்து’ நாளிதழின் இந்த பொறுப்புமிக்க அணுகுமுறையும் அறமும் பாராட்டத்தக்கது.
மேலும் பார்க்க
A perfect day for democracy
Vengeance isn’t justice
The indecency of a secret execution
Lawlessness and disorder
காக்கியும் ஈரமும்…