(கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ இதழில் இந்த வாரம் எழுதியுள்ள பத்தி)
மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அரபு வசந்தத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைத்தளங்கள் ஆற்றிய பங்கு உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்களைத் துணுக்குற வைத்துள்ளது. வலைத்தளங்களின் மீது கட்டுப்பாடுகளை உருவாக்கி அவற்றில் பதியப்படும் இடுகைகளைத் தணிக்கைக்குள்ளாக்க முயற்சிகள் நடக்கின்றன. சீனா, சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் சட்டங்கள் இயற்றியும் வலைத்தளங்களின் இடுகைகளை வடிகட்டுகின்றன. தணிக்கை செய்கின்றன. போலி செய்தலைக் (piracy) கட்டுப்படுத்துவது என்கிற பெயரில் SOPA, PIPA என்கிற இரு சட்ட வரைவுகளை அமெரிக்க அரசு விவாதத்திற்கு முன்வைத்துள்ளது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி என இதைக் கண்டித்து சமீபத்தில் விக்கிப்பீடியா ஒருநாள் அடையாளமாகத் தன் வலைத்தளத்தை மூடியது நினைவிருக்கும்.
இது மாதிரி அம்சங்களில் முந்திக்கொண்டு கறுப்புச் சட்டங்களை இயற்றத் தயங்காத இந்திய அரசு இதிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது. கருத்துச் சுதந்திரத்தில் கைவைப்பது என்கிற அரசியல் நோக்கத்தை வெளிக்காட்டாமல் வேறு காரணங்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களை மிரட்டத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் சென்ற செப்டம்பர் 5ஆம் தேதியன்று முகநூல் வலைத்தளத்தை வெளிப்படையாகக் கண்டித்தார். சோனியா காந்தியை இழிவாக விமர்சிக்கும் இடுகைகள் உள்ளன என இந்தக் கண்டனத்தை முன்வைத்தார். ‘இறை நிந்தனை’ (blasphemy) என்கிற சொல்லையும் அவர் கையாண்டார். தங்கள் தலைவி சோனியாவை அவர் கடவுளுக்குச் சமமாக நினைத்துக் கொள்வதில் நமக்குப் பிரச்னையில்லை. எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என வற்புறுத்துவதுதான் பிரச்னை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கே இறை நிந்தனைத் தடைச் சட்டங்கள் கிடையாது என்பவற்றையும் அவர் மறந்து போனார். இத்தகைய சட்டங்கள் அமுலில் இருந்த பிரிட்டன் போன்ற நாடுகளிலேயே இன்று இந்தச் சட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன. அமுலில் இருந்தபோது கூட இத்தகைய சட்டங்களின்படி நடவடிக்கை எடுப்பதை பலமுறை நீதிமன்றங்கள் தடை செய்துள்ளன.
அடுத்தடுத்த மாதங்களில் முகநூல், கூகிள் முதலான வலைத்தளங்களின் நிர்வாகிகளைக் கூட்டி இடுகைகளைக் கண்காணிக்குமாறும் தணிக்கை செய்து வெளியிடுமாறும் (pre screening and monitoring) கபில் சிபல் வற்புறுத்தினார். நவம்பர் மாதத்தில் ND TVக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சமூக வலைத்தளங்கள் ஆபாசப் படங்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார். டிசம்பர் 5ஆம் தேதியன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி சமூக வலைத்தளங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கண்டித்தார். ஆக வலைத்தளங்களைக் கண்டிப்பதற்கு அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு காரணத்தைச் சொன்னார்.
முன் தணிக்கை சாத்தியமில்லை என்பதே வலைத்தளங்களின் நிலைபாடாக இருந்தது. ஒவ்வொரு நாளும் பல கோடிப் பேர் இடுகைகள் இடுகின்றனர். ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு பில்லியன் ட்வீட்கள் இடப்படுகின்றன. எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. குறிச் சொல்களின் அடிப்படையில் வடிகட்டுவதும் சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக sex என்கிற சொல்லை எடுத்துக் கொண்டால் குடும்ப அடையாள அட்டை, கல்விக்கூட விண்ணப்பம் முதலியவற்றிலும் கூடத்தான் அச்சொல் பயனிலுள்ளது.
தவிரவும் பயன்படுத்துபவர் செய்யும் குற்றங்களுக்கு எப்படி ஊடகத்தைப் பொறுப்பாக்க முடியும்? தொலைபேசி மூலம் ஒருவர் ஆபாசமாகத் திட்டுகிறார் என்றால் அதற்கு தொலைபேசித் துறை பொறுப்பாக முடியுமா? மத வெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த நோக்கத்திலேயே சில அரசியல் இயக்கங்கள் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா அரசியல் கட்சிகளும் சாதியின் அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சமூக வலைத்தளங்களை மட்டும் குறிவைப்பதேன்? சமூக ஒழுங்கை தணிக்கைகள் மூலமே சாத்தியப்படுத்திவிட முடியுமென்றால், பின் நூறு சத குடிமக்களும் ஒழுக்கசீலர்களாக உள்ள ஒரு நாட்டை உருவாக்க தணிக்கை வாரியம் மட்டும் போதுமே என்றெல்லாம் சமூக வலைத்தளத்தினரும் கருத்துச் சுதந்திர ஆர்வலர்களும் விவாதிக்கின்றனர்.
பிரச்னை அதுவல்ல. தகவல் தொழில்நுட்பங்களில் இன்று ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியானது கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள பெரும் கார்பரேட்கள், விளம்பர நிறுவனங்கள், அரசு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டு, வடிகட்டப்பட்ட செய்திகள் மட்டுமே மக்களைச் சென்றடைய முடியும் என்கிற நிலை இன்று தகர்ந்துவிட்டது. காசு கொடுத்துச் செய்திகளை வெளியிட்ட பிரச்னையில் (paid news) ஒரு முதலமைச்சர் பதவி இழந்து, பல பத்திரிக்கையாளர்கள் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்பட்டுள்ள தகவல் விகசிப்பு அதிகாரத்தில் உள்ளவர்களைக் கலங்க அடித்துள்ளது. மக்கள் மத்தியில் தம் கருத்துகளுக்கு ஒப்புதலை ஏற்படுத்துவது (manufacturing of consent) இன்று அவர்களுக்கு சிக்கலாகியுள்ளது. முகநூல் முதலான சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் தம்மைக் கருத்து உருவாக்கம் செய்யக் கூடியவர்களாகவும், அந்த அடிப்படையில் ஒரு பொதுச் சமூகத்தினராகவும் உணரத் தலைப்பட்டுள்ளனர். இவை யாவும் அதிகாரங்களைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுவதில் வியப்பில்லை.
கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள தமது நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி (transparency report, 2011) சென்ற ஆண்டு 352 இடுகைகளை ஏற்க இயலாதவை என இந்திய அரசு நிறுவனங்கள் புகாரளித்திருந்தன. இவற்றில் 70 சத இடுகைகள் அரசியல் தொடர்பானவை. வெறும் 7 சத இடுகைகள் மீதே வெறுப்புப் பேச்சு என்கிற அடிப்படையில் தடை கோரப்பட்டிருந்தன. அவற்றை கூகுள் நிறுவனம் உடனே நீக்கிவிட்டது.
இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இடைத் தொடர்பாளர்களுக்கான நெறிமுறைகளின் (IT- Intermediaries Guidelines Act) 79ஆம் பிரிவின்படி அரசு நிறுவனங்களோ அல்லது தனி நபர்களோ ஏற்கத் தகாத இடுகைகள் ஏதும் இருப்பதாகக் கருதினால் அந்த இணையதளத்திடம் அதை நீக்குமாறு கோரலாம். அவ்வாறு மின்னஞ்சல் அனுப்பபட்ட 36 மணி நேரத்திற்குள் அந்த இடுகை எடுக்கப்படாவிட்டால் புகாரளித்தவர் நீதிமன்றத்தை நாடலாம் அல்லது சைபர் குற்றங்களுக்கான மேல்முறையீட்டு நடுவத்திடம் முறையீடு செய்யலாம். அவ்வாறு முறையீடுகள் செய்யும்போது பொதுவாக இச்சமூக வலைத்தளங்கள், புகாரளித்தவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் தானா, அந்த இடுகை உண்மையிலேயே இந்தியச் சட்டங்களின்படி ஏற்கத் தகாததுதானா என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் உடனடியாக நீக்கி விடுவதுதான் நடந்துவருகிறது. ஏனெனில், இந்த வலைத்தளங்களைச் செயல்படுத்துகிற கார்பரேட்களின் நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான். இந்தியாவில் 100 மில்லியன் பேர் இணையதளங்களைப் பாவிக்கின்றனர். விளம்பரங்களின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. பிரச்னை எதுவுமின்றி வணிகம் செய்வதுதான் இவர்களின் நோக்கமாக உள்ளதே அன்றி கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதில் பெரிய அக்கறை ஏதும் கிடையாது.
‘இணையதள மற்றும் சமூக வலைத்தள மையம்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த சுனில் ஆப்ரஹாம் என்பவர் இது தொடர்பாக ‘ஏமாற்று ஆய்வு’ (sting operation) ஒன்றைச் செய்தார். பொய்யான புகார்களை எழுதி பல்வேறு சமூக வலைத்தளங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த வலைத்தளங்கள் அனைத்துமே புகார்கள் தொடர்பான உண்மைகளை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் புகாரில் சொல்லப்பட்ட எல்லா இடுகைகளையும் உடனே நீக்கிவிட்டன. ஒரு இடுகையில் கண்டுள்ள மூன்று பின்னூட்டங்கள் ஏற்க இயலாதவை எனச் சொன்னபோது, அதிலிருந்த அத்தனை பின்னூட்டங்களையுமே அந்த வலைத்தளம் நீக்கியது. ஒரு நாட்டின் சட்டபூர்வமான அதிகாரி ஒருவரிடமிருந்து தகுதியான வேண்டுகோள் ஏதும் விடுக்கப்பட்டால் அந்த நாட்டிற்குள் குறிப்பான ட்வீட்களை நீக்கிக் கொள்ளத் தயார் எனச் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில்தான் சென்ற டிசம்பர் 23 அன்று டெல்லியிலிருந்து வெளிவரும் ‘அக்பரி’ என்கிற உருது இதழின் ஆசிரியர் வினய் ராய் என்பவர் டெல்லி மெட்ரோபொலிடன் நடுவர் நீதிமன்றத்தில் கூகுள், முகநூல், யூ ட்யூப் உள்ளிட்ட 21 சமூக வலைத்தளங்களின் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார். தரவிறக்கம் செய்யப்பட்ட 62 இடுகைகள் ஏற்கத் தகாதவை என அவர் குற்றஞ்சாட்டினார். புகார் செய்யப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஏற்கத்தகாத இடுகையை நீக்க வேண்டுமென்கிற தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79ஆம் பிரிவைப் பயன்படுத்தாமல் நேரடியாகத் தன்னிடம் வந்ததை நீதிமன்றமும் கேள்வி கேட்கவில்லை. பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது தனியார் நிறுவனங்களிடமெல்லாம் போய்ப் பேசிக் கொண்டிருக்க முடியாது என்றார் வினய் ராய்.
ஆபாசப் புத்தகங்கள் மற்றும் ஆபாசப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பது தொடர்பான இடுகைகள், மத அவதூறு செய்து மத ஒற்றுமையையும் தேச ஒற்றுமையையும் குலைப்பது முதலிய குற்றச்சாட்டுகள் இந்த வலைத்தளங்களின் மீது வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரில் தோன்றி பதிலளிக்கும் வண்ணம் அந்த வலைத்தள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நெறிமுறை வழங்கியது நடுவர் நீதிமன்றம். தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக இவ்விடுகைகள் அமைந்துள்ளன என்பதைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 196ன் கீழ் இவ்வலைத்தளங்களின் மீது தேசிய நலன் மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அமைச்சகம் பதிலுரைத்தது.
கூகுள், முகநூல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டதை எதிர்த்தும், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. நேரில் நீதிமன்றத்தில் தோன்ற வேண்டியதில்லை என ஆணை வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்தது. இதுபோன்ற இடுகைகள் நீக்கப்படுவதற்கான வழிமுறைகள் கண்டறியப்படாவிட்டால் சீனாவைப் போல இங்கும் வலைத்தளங்களைத் தடுக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கவும் செய்தார். இரு வழக்குகளும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத ஆபத்து ஆகியவற்றைக் காரணம் காட்டியே உலகெங்கிலும் மனித உரிமைகளும், கருத்துரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களை வெறுப்பு அரசியலுக்கும் தீய நோக்கங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். சில நேரங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றைக் காரணம் காட்டி அரசியல்சட்ட ஆளுகைக்கு முடிவுகட்டிவிட இயலாது. இத்தகைய தருணங்களில் தேவையான கண்காணிப்பை மேற்கொண்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இவற்றைச் சாக்காக வைத்து முன்கூட்டியே தணிக்கையை நடைமுறைப்படுத்துவது என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மிக அடிப்படையான கருத்துரிமையைப் பறிப்பதே. எக்காரணம் கொண்டும் இதை அனுமதிக்கவே முடியாது. அதே நேரத்தில் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்கள் சில பொதுப்படையான அறநெறிகளைப் பின்பற்றுவது அவசியம். வெறுப்பு அரசியலுக்குத் துணைபோகாமல் இருப்பதும், நுண்மையான அம்சங்களில் சுய தணிக்கை மேற்கொள்வதும் தேவை.
லாப நோக்கங்களுடன் கடைவிரிக்கும் சமூக வலைத்தளங்கள் அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்து தணிக்கை முறைகளைக் கைக்கொள்ளுமானால் என்னசெய்வது? இலாப நோக்கமில்லாத வலைத்தள மாற்றுகளையும் திறந்த வள மென்பொருட்களையும் (open source softwares) நாம் யோசிக்க வேண்டியதுதான். சமூக வலைத்தளங்கள் தாங்கள் அரசுகளின் பக்கமா இல்லை கருத்துரிமையின் பக்கமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.