கோவையில் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதை ’மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்’ கண்டித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையிலிருந்து செயல்படும் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியன் என்பவரை கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாநகராட்சியைச் சேர்ந்த துணை ஆணையர் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாக வெளியான செய்தியையும் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ள சுந்தரராஜன், இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராகப் போராடுவதற்குத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று (23.04.2020) காலை, சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலஜியை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல், யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்குச் சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்துள்ளனர். இறுதியாக, இரவு 7 மணியளவில், ஜெரால்ட் மற்றும் பாலாஜியை விடுவித்துள்ள காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியனைக் கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பிற்கு இணையானது பத்திரிகையாளர்களின் பணி. ஏனென்றால், மக்களுக்குச் சேவை செய்வதற்காக பணியாற்றும் இந்தத் துறையினரின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்ப்பது பத்திரிகைத்துறை. அதேபோல், அவர்களில் யாரேனும் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பொறுப்பு பத்திரிகைத்துறைக்கு உள்ளது. அதனால்தான் பத்திரிகைத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கிறோம். ஒரு பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள இந்த நேரத்தில், பத்திரிகைத்துறை மிகவும் விழிப்புடன் செயல்பட்டால்தான், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் முழுமையாக அவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்படும். அதேநேரம், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் அரசு ஊழியர்களுக்கு, அரசு தரவேண்டிய அடிப்படையான விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்காதபட்சத்தில் அதையும் அரசுக்குச் சுட்டிக்காட்டும் பொறுப்பு பத்திரிகைகளையே சாரும்.
இதன் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டைச் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய ரேஷன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின்படி, தனது பணியைச் செய்த பத்திரிகையாளரைக் கைது செய்துள்ளது, அரசியல்சாசனத்தை மாதிக்காத செயலாகும். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயலாகும். அடிப்படையில் இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
ஆகவே, சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது. சாம் ராஜா பாண்டியன் மீது மாநகராட்சி துணை ஆணையர் சுந்தரராஜன் கொடுத்துள்ள புகாரில் உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆகவே, அவரை விசாரித்து உண்மையை அறிய அரசு தரப்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். விசாரணை என்ற பெயரிலும், கைது நடவடிக்கையாலும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள சாம் ராஜா பாண்டியன், ஜெரால்ட், பாலாஜி ஆகியோருக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.