Home Blog Page 9

இஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு

முன்னுரை

புதிய தகவல் தொடர்பு ஊடகங்கள் பல முகிழ்த்துப் பரவலாகி விட்ட நிலையிலும் இதழ் தனது செல்வாக்குக் குறையாமல் இன்னமும் ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல தளங்களில் கிளைத்துப் பரவியிருக்கும் தமிழ் இதழ்த் துறையின் தொடக்கம் சமயம் சார்ந்தே அமைந்திருந்தது. இன்றும் பல்வேறு சமயச் சார்பு இதழ்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது அறியத்தக்கது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழ் வளர்ச்சிப் போக்கில் பல இதழ்கள் தமது பயணத்தைத் தொடர முடியாமல் குறைந்த காலத்திலேயே மறைந்து விட்டன. ஆயின் ஒரு சில இதழ்கள் உருத்தும் தடைகளை உடைத்துப் பல்லாண்டுக் காலம் எழுச்சியுடன் இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியக் கொள்கைகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில், முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டதாக, முஸ்லிம் வாசகர்களை முன்னிறுத்தி அமைந்த இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அறியச் செய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ்

1869–ஆம் ஆண்டில் துவான் பாபா யூனூசு என்பவரால் வெளியிடப் பெற்ற அலாமத் லங்காபுரி என்ற இதழையே முஸ்லிம்களால் நடத்தப் பெற்ற தமிழ் இதழ்களுள் காலத்தால் முந்தியதாக அறிய முடிகிறது. அரபுத் தமிழில் கையெழுத்து இதழாக வெளிவந்த இவ்விதழ், இஸ்லாமியக் கொள்கைகளை அறியச் செய்யும் நோக்கில் இயங்கியதாக அறிய இயலவில்லை. எனவே இதனையும் 1875 –இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கை வர்த்தமானியையும், 1876- இல் இலங்கையிலிருந்து வெளிவந்த புதினா லங்காரியையும், 1878- இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தங்கை நேசனையும் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் என்று கூற இயலவில்லை. இந்நிலையில் 1882-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 21- ஆம் நாள் இலங்கையிலுள்ள கண்டியிலிருந்து தொடங்கப் பெற்ற முஸ்லிம் நேசன் என்ற இதழ் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்ற வரைவு இலக்கணத்திற்கு இயைய அமைந்திருப்பதால் இவ்விதழையே முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்று குறிப்பிட இயல்கிறது.

முஸ்லிம் நேசன் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதலாவதாக மட்டும் அமையாது முதன்மையானதாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ்ப் புதின வரலாற்றில் இரண்டாவதாகவும், தமிழ்த் தொடர்கதை வரலாற்றில் முதலாவதாகவும் விளங்குகின்ற ‘அசன்பே சரித்திரம்’ என்னும் புதினத்தைப் படைத்த சித்தி லெப்பை முகம்மது காசிம் மரைக்காயரே முஸ்லிம் நேசனின் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டின் முதல் இதழ்கள்

முஸ்லிம் நேசனைத் தொடர்ந்து சில இதழ்கள் வெளிநாட்டிலிருந்து வெளிவந்துள்ளன. 1883 –இல் குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்னும் இதழ் பினாங்கிலிருந்து வெளி வந்துள்ளது. அ.லெ.கா. முகிய்யித்தீனை ஆசிரியராகக் கொண்டு 1886 –இல் சர்வ ஜன நேசன் என்னும் இதழ் கொழும்பிலிருந்து வெளி வந்துள்ளது. 1887 –ஆம் ஆண்டில் அ.மு. மரைக்காயரை ஆசிரியராகக் கொண்டு உலகநேசன் என்னும் இதழ் பினாங்கிலிருந்தும் அதே ஆண்டில் சி.கு. மகுதூம் சாயபுவை ஆசிரியராகக் கொண்டு சிங்கை நேசன் என்ற இதழ் சிங்கப்பூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

1888–ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டில் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வாண்டில் முஹம்மது யூசுபை ஆசிரியராகக் கொண்டு சம்சுல் ஈமான் என்ற திங்கள் இதழ் சென்னை யிலிருந்தும், காசிம் முகைதீன் இராவுத்தரை ஆசிரியராகக் கொண்டு முகமது சமதானி என்ற கிழமை இதழ் காரைக்காலிலிருந்தும், குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்ற கிழமை இதழ் நாகூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

முதல் நாளிதழ்

1893- ஆம் ஆண்டு இலங்கையில் மு.அ. சாகிபு மரைக்காயரால் திங்கள் இருமுறை இதழாகத் தொடங்கப் பெற்ற இஸ்லாம் மித்திரன் 1897 ஜூலைத் திங்கள் 20- ஆம் நாளிலிருந்து நாளிதழாக 1906 –ஆம் ஆண்டு வரை நடத்தப் பெற்றது. எனவே இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதல் நாளிதழாக விளங்குகிறது. இவ்விதழின் ஆசிரியராகிய உதுமான் முஸ்லிம் நேசன் இதழிலும் எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை மும்முறை இதழ்

1897- இலிருந்து நாளிதழாக நடைபெற்ற இஸ்லாம் மித்திரன் 1906 –இல் கிழமை மும்முறை இதழாக வெளிவந்தது. இதுவே முதல் கிழமை மும்முறை இதழாகும். இவ்விதழ் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் வரலாற்றில் இஸ்லாம் மித்திரனைத் தவிர வேறு எவ்விதழும் கிழமை மும்முறை இடைவெளியில் நடைபெறவில்லை என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை இருமுறை இதழ்

1915 –ஆம் ஆண்டில் கிழமை இருமுறை என வெளிவந்த இஸ்லாம் மித்திரனே இப்பருவ வகையில் அமைந்த முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக அமைகிறது. இவ்விதழ் புதன், சனி ஆகிய இரு நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் இவ்விதழ் மட்டுமே கிழமை இருமுறை இடைவெளியில் வந்த ஒரே இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கிழமை இதழ்

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் கிழமை இடைவெளியில் நடைபெற்றுள்ளது. எனவே 1883 – ஆம் ஆண்டில் வெளிவந்த இவ்விதழே முதல் கிழமை இதழ் என்பது உறுதியாகிறது. இவ்விதழ் திங்கட்கிழமை தோறும் வெளிவந்தது.

முதல் திங்கள் இருமுறை இதழ்

நாள், கிழமை மும்முறை, கிழமை இருமுறை ஆகிய பருவ இதழ்களின் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த சிறப்பினைப் பெற்றுள்ள இஸ்லாம் மித்திரன் 1893 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இருமுறை இதழாகவே வெளிவந்தது. இவ்விதழுக்கு முன்னர் வேறு எவ்விதழும் திங்கள் இருமுறை இடைவெளியில் வெளிவராததால் இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் முதலாவதாகத் தோற்றம் பெற்ற திங்கள் இருமுறை இதழ் எனத் துணியலாம்.

முதல் திங்கள் இதழ்

இதுவரை வெளிவந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இதழ்களுள் திங்கள் இடைவெளியில் வந்த இதழ்களே மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் 1888 –ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப் பெற்ற சம்சுல் ஈமான் என்ற இதழ் முதல் திங்கள் இதழாகத் திகழ்கிறது.

முதல் இரு திங்கள் இதழ்

காதியானிக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்த ஹிபாஜத்துல் இஸ்லாம் 1930 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இதழாக வெளி வந்தது. 1937 –இல் இரு திங்கள் என மாறியது. அதற்கு முன்னர் இரு திங்கள் இடைவெளியில் இதழ் எதுவும் வெளிவந்ததாக அறிய இயல வில்லை. எனவே ஹிபாஜத்துல் இஸ்லாம் இதழே இப்பருவ வகையில் தோன்றிய முதல் இதழ் என்பது வெளிப்படை.

முதல் காலாண்டு இதழ்

1911 ஜூலை இஸ்லாம் நேசன் இதழ்த் தலையங்கத்தில் “இஸ்லாம் நேசன் 1909 வருடம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கிற்று. அம்மாதத் திலிருந்து 1910 வருடம் ஜூன் மாதம் முடிய மட்டும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை விகிதம் நான்கு பத்திரிகைகளே வெளிவந்தன… மாதாந்திரப் பத்திரிகையின் முதல் சஞ்சிகை 1910 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாயிற்று” என்ற குறிப்பு காணப் பெறுகிறது. இவ்விதழுக்கு முன் வேறு இதழ் எதுவும் காலாண்டு இடைவெளியில் வெளிவரவில்லை. எனவே இஸ்லாம் நேசனே இவ்வகையில் அமைந்த முதல் இதழாக விளங்குகிறது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் சமுதாயம், இஸ்லாமியச் சிந்தனை, நிதாவுல் இஸ்லாம், அல் ஜம் இய்யத், செளத்துல் உலமா, அல்ஹுதா, நமது முற்றம் ஆகிய மேலும் ஏழு இதழ்களும் காலாண்டு இதழ்களாக வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

முதல் அரையாண்டிதழ்

சிங்கப்பூர் வக்ஃப் வாரிய இதழாகிய செய்திச்சுடர் 1991- ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்று ஆறு திங்களுக்கொரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவே அரையாண்டு இடைவெளியில் நடைபெறும் முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகவும் இவ்வகையிலமைந்த ஒரே இதழாகவும் விளங்குகிறது.

முதல் எதிர் இதழ்

ஓர் இதழின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்காகவே சில பக்கங்களை ஒதுக்கிய இதழ்களையும் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வகை இதழ்களை எதிர் இதழ்கள் எனலாம்.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த மூடப்பழக்க வழக்கங் களையும் இஸ்லாத்திற்கு முரணான கருத்துகளையும் மக்களுக்கு உணர்த்தி அவற்றைக் களைகின்ற பணியினைச் செய்தது.

முஸ்லிம் நேசன் தோன்றி மூன்றாண்டுகளுக்குப் பின்னர்த் தொடங்கப் பெற்ற சர்வஜன நேசன் அவ்விதழின் கருத்துக்களை மறுத்து எழுதி வந்தது. முஸ்லிம் நேசனும் உடனுக்குடன் தகுந்த பதிலளித்து வந்தது. ஒன்றனது கருத்தை மற்றொன்று மறுக்கின்ற எதிர்மைப் போக்கு இவ்விரு இதழ்களிலிருந்தே தொடங்குகின்றதெனலாம்.

திருக்குறளை முகப்பில் இடம் பெறச் செய்த முதல் இதழ்

‘தமிழ் இதழ்களின் முகப்பில் திருக்குறள்’ என்ற கட்டுரையை எழுதிய வீ. கோபால், 1897- இல் வெளிவந்த ஞான போதினி என்ற இதழை முகப்பில் திருக்குறளை இடம் பெறச் செய்த முதல் இதழ் என்கிறார் (’வள்ளுவம்’ இதழ் மே, ஜூன் 1999, ப. 68). ஆயின் இவ்விதழ் வெளிவருவதற்குப் பதினோராண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது 1886- ஆம் ஆண்டிலேயே சர்வஜன நேசனில் திருக்குறள் இடம் பெற்றுள்ளதால் இவ்விதழே திருக்குறளை முகப்பில் வெளியிட்ட முதல் இதழ் என்று துணிந்து கூறலாம்.

இவ்விதழின் முகப்புப் பக்கத்தில்,

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்”

என்னும் குறள் இடம் பெற்றுள்ளது. இது தமிழ் இதழியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் என்பது ஈண்டுச் சுட்டிச் சொல்லத் தக்க செய்தியாகும். அது மட்டுமல்லாது, 1887- ஆம் ஆண்டில் வெளிவந்த சிங்கை நேசனில்,

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.”

என்ற திருக்குறள் காணப் பெறுவதால், திருக்குறளை முகப்பில் வெளியிட்ட இரண்டாவது இதழ் என்ற பெருமையைச் சிங்கை நேசன் பெறுகிறது. அதற்கு அடுத்த நிலையிலேயே வீ. கோபால் குறிப்பிடும் ஞான போதினி அமைகிறது.

பெண் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ்

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை ரமீஜா, அனீஸ் பாத்திமா, ஆயிஷா பீவி, அலீமா ஜவகர், பானு நூர் மைதீன் ஆகிய பெண்டிர் ஐவர் மட்டுமே இதழாசிரியராகப் பொறுப் பேற்றுள்ளமையை அறிய முடிகிறது. இவர்களுள் 1961- இல் முஸ்லிம் முரசின் ஆசிரியர் பொறுப்பேற்ற ரமீஜா, முதல் பெண் ஆசிரியர் என்னும் பெருமையைப் பெறுகிறார். முஸ்லிம் முரசு, பெண் ஒருவர் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ் என்ற சிறப்பைப் பெறுகிறது.

முதல் மகளிர் இதழ்

பெண்களுக்கான அறிவுரைகள், மருத்துவச் செய்திகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றுடன் இஸ்லாமியக் கருத்துக்களைத் தாங்கித் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழான நர்கிஸ் 1972- இல் திருச்சியில் தொடங்கப் பெற்றது. இவ்விதழே முதல் மகளிர் இதழாக விளங்குகிறது.

முதல் ஆய்விதழ்

இலங்கையிலுள்ள நளீமிய்யா இஸ்லாமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் சார்பில் 1979- ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இதழ் இஸ்லாமியச் சிந்தனை. இவ்விதழில் இடம் பெறும் கட்டுரைகள் அடிக் குறிப்புகளுடனும் துணைநூற்பட்டியலுடனும் ஆய்வுப் போக்கில் அமைந்திருக்கின்றன. இவ்வகையிலான இதழ் வேறு எதுவும் இதுவரை வெளிவராததால் இதுவே முதல் ஆய்விதழாகவும் ஒரே ஆய்விதழாகவும் தனித்துத் திகழ்கிறது.

பிற சமயத்தவரையும் கருத்திற் கொண்ட முதல் இதழ்

இஸ்லாத்தை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டும் நோக்கத்துடன் முஸ்லிம் அல்லாத பிற சமயத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வகையில் தொடங்கப் பெற்ற முதல் இதழாகச் சமரசம் திகழ்கிறது. இவ்விதழ் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் சார்பில் 1980- ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15- ஆம் நாள் தொடங்கப் பெற்று இன்று வரை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா 2006- ஆம் ஆண்டில் சிறந்த பக்தி இதழாகச் சமரசத்தைத் தேர்ந்தெடுத்துள்ளமை (ஆனந்த விகடன், 03.01.07) இவ்விதழின் சிறப்பை உணர்த்தும்.

முனைவர் பட்ட இதழியல் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இதழ்

மிகுதியாக இல்லையெனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிலாது பிற தமிழ் இதழ்கள் இதழியல் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றிருக்க, இஸ்லாமியத் தமிழ் இதழ் எதுவும் அவ்வகை ஆய்விற்கு மேற்கொள்ளப் பெறா நிலையில் பேரா. மு.இ. அகமது மரைக்காயர் “சமரசம் இதழின் கருத்தியல் நிறுவல் உத்திகள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எனவே இதழியல் நோக்கில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக சமரசம் விளங்குகிறது.

முடிவுரை

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சில கண்டறியப் பெற்று இக்கட்டுரையில் சுட்டப் பெற்றுள்ளன. இலக்கிய ஆய்வுகளில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள ஆய்வாளர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பரப்பினை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழியலில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினால் சமயம், சமுதாயம் மட்டுமல்லாது இலக்கியம் தொடர்பான அரிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய இயலும் என்பதில் ஐயமில்லை.

(நன்றி : சமரசம், ஜனவரி 16 –31, 2009)

நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை

சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று நான் படித்து முடித்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. எனக்குள் சில கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால், “இந்நாவல் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்” (பக். 9) என்று ‘மெளனத்தைப் பேசுதல்’ என்று தலைப்பிடப்பட்ட தனது முன்னுரையில் கூறுகிறார் சல்மா. போகட்டும். அவர் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வாசகர்களுடன் எனது கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அவர் தடை விதிக்கவில்லையே! எனவே அவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பெண்களால் நிரப்பப்பட்ட ஒரு உலகத்தை விரிக்கிறது நாவல். அவ்வப்போது ஆண்களும் வந்து போகிறார்கள். கதை நடப்பது ஒரு கிராமம் (என்பதாகத்தான் தெரிகிறது). ஆறு முஸ்லிம் குடும்பங்களையும் அக்குடும்பங்களின் மனிதர்களாக, கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 42 பாத்திரங்களையும், மாரியாயி, உமா, சிவா, முருகன் போன்ற சில முஸ்லிமல்லாத பாத்திரங்களையும் சுற்றி நடக்கிறது இந்த நாவலின் கதை.

கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இது பின்நவீனத்துவ எழுத்தின் தன்மையாக இருக்கலாம். வயதுக்கு வராத அல்லது வயதுக்கு வந்து கொஞ்ச காலமே ஆன சின்னப் பெண்களை அடாவடித்தனமாக, மனைவிகளைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள், அதாவது தகப்பன்மார்கள், மகளைவிட 15 அல்லது 20 வயது மூத்த ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பது, பொருத்தமில்லாத கல்யாணத்திலிருந்து துணிச்சலாக சில பெண்கள் விவாகரத்து கேட்டு ஒதுங்கி வாழ்வது, உடல் தாகத்தையும் தனிமையையும் பொறுக்க முடியாமல் அவர்கள் வேறு ஆண்களோடு சோரம் போவது, இதையொட்டி நிகழும் மரணங்கள், ஊர் விலக்கல்கள், சண்டைகள், இந்த எல்லாவற்றிலும் கலந்து கொள்ளும் பெண்களின் வாய்வழி புறப்படும் கருத்துக்கள், நம்பிக்கைகள், ஆண்களைப் பற்றிய அவர்களது எண்ணங்கள், பொதுவான நம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் — இவற்றையெல்லாம் பதிவு செய்கிறது இந்த நாவல்.

ஒரு உதாரணம் : திருமணம் முடித்த 15 நாட்களுக்குப் பிறகுதான் பீவி வயதுக்கே வந்தாள் (பக். 96).

இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம்.

முதலில் பெண்களின் பாத்திரப்படைப்புக்கு வருவோம். ராபியா என்ற சின்னப்பெண்ணின் இயற்கை ரசனையில் தொடங்கி மரப்பாச்சி பொம்மையை அஹ்மது என்ற தன் காதலனாக நினைத்துக்கொண்டு அவள் அணைத்துக்கொள்வதில் முடிகிறது நாவல். சின்னப் பெண் என்றால் ரொம்பச் சின்னப்பெண் அல்ல. வயதுக்கு வரும் நிலையில் இருப்பவள். அவளுடைய உயிர்த்தோழி அவளைவிட கொஞ்சம் பெரியவளான மதினா.

இந்த இருவரும் என்ன செய்கிறார்கள்? ஊர் சுற்றுகிறார்கள். ஆண் தோழர்களோடு விளையாடுகிறார்கள். குறிப்பாக அஹ்மது என்பவனோடு. நோன்பு நாட்களில் சினிமாவுக்குப் போகிறார்கள். அதுவும் பலான படத்துக்கு. “‘ஏ’ படத்துக்கா போயிட்டு வர்றே நாயே” என்று அவளை அவள் அம்மா கண்டிக்கிறாள்.

சின்னப் பெண்களோ அல்லது பெரிய பெண்களோ பலான படங்களுக்கு எந்த நாளும் செல்வதில்லை. அதுவும் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்கள். இது வலிந்து செய்யப்பட்ட ஒரு பதிவாகும்.

இதன் மூலம் சல்மா சொல்ல விரும்புவது என்ன? ஆண்கள் பலான படம் பார்க்கலாம் என்றால் பெண்களும் பார்க்கலாம் என்றா? பலான படம் பார்ப்பது எந்த வகையிலும் மன ஆரோக்கியத்தை பாதிக்காது, மாறாக வலுப்படுத்தவே செய்யும், எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்றா? எப்படி இருப்பினும் இது நடப்பு நிஜங்களில் காணமுடியாத ஒரு கற்பனை நிகழ்வு.

ஆனால் பலான படம் என்று தெரியாமல்தான் ராபியா சென்றதாக ஒரு சப்பைக் கட்டும் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அப்படிச் சென்றது தவறு என்பதான குறிப்பு கிடையாது. சரி, தெரியாமல் போனதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் சின்னப் பெண்கள், முஸ்லிம் பெண்கள், அதுவும் நோன்புடைய காலத்தில் படத்துக்குப் போவது நடக்காத ஒன்று. ஆனால் இந்த ராபியாவுக்கு திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அவளுடைய தொடர்ந்த பழக்கமாகவே அது இருந்து வந்திருக்கிறது. “அவள் வருவாளென்று நிச்சயமாகத் தெரியும்” என்று அஹ்மது நினைக்கிறான் (பக். 81).

இதுமட்டுமா? வஹீதா என்ற பெண்ணுக்கு திருமணமானபோது சொந்தக்காரப் பெண்களில் சில விவரமானதுகள் உடல் உறவுக் காட்சிகளை வெளிப்படுத்தும் நீலப்புத்தகங்களை மதினாவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதில் ஒன்றை ‘சுட்டு’ மதினா ராபியாவிடம் காண்பிக்கிறாள் (பக். 386). புது மணப்பெண் வஹீதாவுக்கு நீலப்பட கேசட்டுகளை போட்டுக் காட்டுகிறார்கள் மும்தாஜும் நபிஸாவும் (பக். 108 & 368). இதனாலெல்லாம் ஏற்படும் விளைவுகள் என்ன? ஒரு நாள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடும்போது அஹ்மதுவுக்கு ராபியா தன் மார்பைச் சுவைக்கக் கொடுத்து மகிழ்கிறாள் (பக்.177). ராபியா மதினாவுக்கிடையில் ‘லெஸ்பியன்’ ஈர்ப்பு வேறு ஏற்படுகிறது. அணைத்தல் முத்தமிடல் என (பக். 352).

சினிமா பார்க்கும் பழக்கம், அதுவும் தடைசெய்யப்படும் நோன்பு காலத்தில் பார்ப்பது பல பெண்களுடைய பழக்கமாக இருக்கிறது இந்த கிராமத்தில். முடியாதவர்கள் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். “அதுசரி, நோன்பு நாள்ல தியேட்டருக்குப் போயி படம் பாக்கச் சொல்றியாக்கும். அந்தப் பாவத்தெ என்னா செய்யிறது ? சலிப்புடன் சொல்லிய சொஹ்ராவுக்கு படம் பார்க்க முடியாத வருத்தம் இழையோடியது” (பக். 105).

சினிமா பார்ப்பதோ, பெண்கள் பார்க்க விரும்புவதோ தவறல்ல. ஆனால் முஸ்லிம் பெண்கள் நோன்பு காலத்தில் தொடர்ந்து தவறாமல் படம் பார்க்கச் செல்கிறார்கள் என்பதும், அதை ஆண்கள் எதிர்ப்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும் ஒரு கற்பனையான பிரச்சனையின் பதிவு. பெண் சுதந்திரம் என்ற கருத்தின் முட்டாள்தனமான வெளிப்பாடு.

சரி, அந்தக் கிராமத்து பெண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?

நபிஸாவின் கணவன் பஷீர். ஆனால் அவளுக்கு அஜீஸோடு தொடர்பு. ரமேஷ் அம்மாவுக்கு ரெண்டு புருஷன். தலாக் சொல்லப்பட்ட மைமூன் யாருக்கோ குழந்தை உண்டாகிறாள். அக்கா ஆமினா ஒரு கிராமத்து மருத்துவச்சி மூலம் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த கலைப்பு விஷயம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வர்ணிக்கப்படுகிறது. கிராமத்து தொழில்நுட்ப கருக்கலைப்பில் மைமூனும் சிசுவும் இறந்துபோகிறார்கள் (பக். 65). நூர்நிஷா வேற்று ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தாள் (பக். 213).

பாத்திமாவின் கணவன் ஓடிப்போய்விடுகிறான். பதிலுக்கு பாத்திமாவும் முருகனோடு ஓடிப்போய்விடுகிறாள் (பக். 269). சபாஷ். கணவன் ஓடிப்போவதற்கு மனைவி கொடுக்கும் தக்க பதிலடி அவளும் இன்னொருத்தனோடு ஓடிப்போவதுதான்! அடடா, இதுவன்றோ புதுமைப் பெண்மை!

சிவா என்ற எதிர்வீட்டு இளைஞனிடம் கெட்டுப் போன தன் மகள் பிர்தெளஸை வற்புறுத்தி விஷம் குடிக்க வைத்துக் கொல்கிறாள் அம்மா ஆமினா (பக். 417).

பிர்தெளவ்ஸ் விஷயத்தில் அவள் வழிதவறிச் செல்வதுவரைதான் யதார்த்தம் இருக்கிறது. பெற்ற மகளை விஷம் குடித்துச் சாகச்சொல்லும் தாய், நாவல் தாயாக மட்டுமே இருக்க முடியும். எனக்கு ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதை ஞாபகத்துக்கு வருகிறது. கல்லூரிக்குச் சென்று ஒரு பணக்கார இளைஞனிடம் கற்பை இழந்து திரும்பும் தன் ஏழை மகளின் தலையில் தண்ணீரை ஊற்றிக் குளிக்க வைத்துவிட்டு, நடந்ததை மறந்து விட்டு அவளை புது வாழ்வு தொடங்கச் சொல்லும் தாயின் கதை அது. அதுதான் தாயுள்ளம்.

வறுமையின் காரணமாக சில தாய்மார்கள் பிறந்த உடனேயே பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதை நாம் அறிவோம். ஆனால் தாயையும் மகளையும் பிணைக்கின்ற எந்தவிதமான உணர்ச்சிப் பூர்வமான உறவுச் சூழ்நிலைகளும் ஏற்படாத காலகட்டம் அது. பருவ வயது வரை வளர்ந்து, ஒருவனுக்குக் கட்டியும் கொடுத்து, பின் அவள் அவனைப் பிரிந்து, வாழாவெட்டியாக தனிமையில் வாடி, தாயோடு இருக்கும் காலகட்டத்தில் தவறு இழைத்துவிடுவாளேயானால், அவளை விஷம் குடித்துச் சாகு என்று சொல்வது தாயுள்ளத்துக்குப் பொருந்தாத பதிவு.

கதை பூராவும் பல பெண்கள் ஒழுக்கமற்றவர்களாக இருப்பதை சரிக்கட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் பார்க்க முடிகிறது.

பிர்தவ்ஸ் யூசுபுடன் வாழ விரும்பாததற்கு அவள் சொல்லும் காரணமும் இந்த போலித்தன்மையை உறுதிப்படுத்துகிறது. அவள் தன் கணவனை விரும்பாதற்கு இரண்டு காரணங்களாம். ஒன்று அவனது தோற்றம். “அவனது தோற்றம் மட்டும் காரணமில்லை”, அவனை கணவனாகத் தேர்ந்தெடுத்த தனது மச்சான் “கரீமைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி அவளிடம் இருந்தது” (பக். 37). ஒரு பெண் தன் கணவனுடனான உறவை முறித்துக்கொண்டு வாழாமல் இருப்பதற்கான காரணங்கள் இவை!

பெண்களைப் பற்றிய பதிவு இது. இதற்கு சப்பைக் கட்டு கட்டுகிறது ரவிக்குமாரின் முன்னுரை. அவர் சொல்கிறார். “திருமண உறவு, குடும்ப அமைப்பு ஆகியவை எந்த அளவு இறுக்கமானவையாக உள்ளனவோ அந்த அளவு விபச்சாரத்தின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன” (பக். 15). குடும்பம் கட்டுக்கோப்பாக இருந்தால் பெண்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள் என்ற இந்த ‘ஆராய்ச்சி முடிவை’ ஒத்துக்கொள்வீர்களா?

ஷெரிபாவின் கடிதம்

ஷெரிபா என்பவள் தன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள் (பக். 344). இலக்கணப் பிழைகள் மலிந்த தமிழில் அது இருக்கிறது. படிப்பறிவில்லாத ஒரு பெண்ணின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு பதிவாம் அது. இதில் விஷேஷம் என்னவெனில், இது ஷெரிபாவுக்குத் தெரிந்த தமிழ் அல்ல. சல்மாவால் ஷெரிபாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட கடிதம். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உள்ளது. கடிதத்தை ஊன்றி வாசித்தால் ‘தொழில்நுட்பம்’ புரிந்துவிடும். அடைப்புக் குறிகளுக்குள் பேசுவது நான்.

அன்புல்ல மச்சனுக்கு,

அஸ்ஸலமு அலைக்கும். …இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது.

(நெடிலுக்கு பதிலாக குறில். இது ஒரு டெக்னிக். பெரிய எழுத்துக்கு பதிலாக சின்ன எழுத்து. இது ஒரு டெக்னிக். ‘ள்’க்குப் பதிலாக ‘ல்’. ‘ன்’க்குப் பதிலாக ‘ண்’. ஆனால் ‘நாட்கள்’ என்பதில் மட்டும் நெடிலும் ‘ந’வும் சரியாக இருக்கிறது கவனிக்கவும்). ஒவ்வொரு நாலும்…திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை…நிணைத்துக்கொள்வேன். இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை…நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்து விட்டாள். உங்கலை நினைத்து கொண்டிருக்க (இங்கே ‘நினைத்து’ என்று சரியாக எழுதுகிறாள் ஷெரிபா. ‘அன்புல்ல’ என்று ‘ள்’, ‘ள’ இரண்டையும் தவறாக எழுதியவள், ‘பிள்ளை’ என்பதில் ஒரு ‘ள்’ சரியாகப் போடுகிறாள்). நேரமிறுக்காதோ…நேட்று…திரந்தபோது…கண்ணிள்..நற்பது நாளிலேயே (‘நாலும்’ என்று மேலே உள்ளது. ஆனால் இங்கே ‘நாளிலேயே’ என்று சரியாகப் போடப்பட்டிருக்கிறது) நிங்கள் உருக்கு போய்விட்டது கண் மரந்தார்போல இருக்கிரது…ஒட்டியிருக்கிறேன்…(‘ஓ’வுக்குப் பதிலாக ‘ஒ’) மீதி 23 மாதத்தை (இங்கே நெடில் சரியாக வந்துள்ளது) எப்படி ஓட்டப்போகிறேன் (இங்கே ‘ஓ’ சரியாக போடப்பட்டிருக்கிறது) தெரியவிள்லை. நினைக்கையிலேயே (‘னை’ சரியாக உள்ளது. ஆனால் மேலே ‘ணை’ உள்ளது). மளைப்பாக இருக்கிரது. எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில்…முடியும்போது போணில் பேசுங்கல். உங்க குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.

முத்தங்கலுடன்

ஷெரிபா

‘There is method in his madness’ என்று பைத்தியக்காரனாக நடிக்கும் ஹேம்லட் என்ற பாத்திரத்தைப் பற்றி ஷேக்ஸ்பியரில் ஒரு வரி வரும். முறைப்படி இழைக்கப்பட்ட தவறுகளுடன் கூடிய ஷெரிபாவின் கடிதம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. நாவலின் ஒட்டுமொத்த போலித்தனத்தையும் அடையாளம் காட்டும் பகுதியாக இது மாறிப்போகும் என்று சல்மா நினைத்திருக்க மாட்டார் பாவம்.

ஆண்களைப் பற்றிய பதிவும் இதைப்போன்ற மிகைப்படுத்தப் பட்டதேயாகும். ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள். பொம்பளைப் பொறுக்கிகள். பெண்களை அவர்கள் பெண்கள் என்ற காரணத்துக்காகவே மதிக்காதவர்கள். சில உதாரணங்கள்.

சொஹ்ராவின் கணவன் கரீம் மாரியாயியை வைத்துக்கொண்டிருக்கிறான். கனி ராவுத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து இஸ்மாயிலிடம் தன் பத்துவயது மகளை வைத்து சீட்டாடித் தோற்கிறார் (பக். 59). இரண்டாம் தாரமாக தன் மகளைத் தர ஒத்துக்கொள்கிறார். இந்த மகாபாரத அல்லது ‘கிழக்குச் சீமையிலே’ கிராமம் எங்குள்ளது சகோதரி?

தன் மகள் வஹீதாவைவிட 15 வயது பெரியவனும் தன் அக்கா மகனுமாகிய சிக்கந்தருக்கு வஹீதாவை மணமுடிக்க காதர் முடிவெடுக்கிறார். அதில் அவர் மனைவி றைமாவுக்கு விருப்பமில்லை. ஆனால் அவர் நினைக்கிறார். “அவளிடம் சம்மதம் கேட்பது தேவையில்லாமல் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மாறக்கூடும். திருமண வேலைகளைத் தொடங்கிவிடுவதன் மூலமே அவளது கருத்துக்கு மதிப்பில்லை என்பதை அவளே உணரும்படிச் செய்யலாம்” (பக். 89).

“ஊர்ல எவன் தான் ஒழுங்கு சொல்லு பாப்பம்? ஆம்பள அப்படித்தான் இருப்பான். பொம்பள அப்பிடி இருந்தாத்தான் தப்பு” கரீம் சொஹ்ராவிடம் (பக். 181).

“ஆண்களில் எவனும் யோக்கியன் இல்லைதான்” றைமா நினைக்கிறாள் (பக். 197).

“இறந்த நூர்நிஷாவின் கணவனுக்கு ஏதோ பெண் நோய் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்” (பக். 213).

இறந்து போன வீட்டுக்குச் செல்பவர்கள் பொதுவாகத் திரும்பி வரும்போது ‘போயிட்டு வர்றோம்’ என்று சொல்வதில்லை. ஆனால் இந்த நாவலில் இறப்புக்குச் செல்லும் பெண்கள் அத்தனை பேரும் திரும்பும்போது ஸலாம் சொல்லிவிட்டுத்தான் திரும்புகிறார்கள் (பக். 29).

முஸ்லிம் இளைஞர்கள் பொதுவாக வேஷ்டி கட்டுவதே இல்லை. அதுவும் கல்யாண மாப்பிள்ளை என்றால் சூட்டு கோட்டுதான் பெரும்பாலும். ஆனால் இந்த நாவலில் வரும் மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க வருகிறார் (பக். 36).

இப்படிப்பட்ட பதிவுகளின் இன்னொரு பரிமாணமாக, உச்சகட்டமாக, யதார்த்தம் அல்லது துணிச்சல் என்ற நினைப்பில் இன்னொரு காரியத்தையும் சல்மா செய்திருக்கிறார். வெளிப்படையாகப் பேச நாம் கூசும் பச்சையான வார்த்தைகளையும், நிகழ்வுகளையும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக, பெண்களின் உரையாடல் மொழி உடல் தொடர்பானதாகவும், மர்ம உறுப்புகளைச் சுற்றியும், உடலுறவு பற்றியுமே அடிக்கடி நிகழ்கிறது. அதுவும் மரண வீட்டில் குழுமியிருக்கும்போதும். சில உதாரணங்கள்.

“ஏன், சின்ன வயசா இருந்தா படுக்கத் தெரியாதாக்கும்?” (பக். 108).

மும்தாஜைப் பார்த்து ஒருத்தி: “என்னம்மா மாப்பிள்ளை வர்றாராமே? சத்து ஊசி போடுறதுக்கு. தயாரா இரு. உடம்பை தேத்திவை” (பக். 219).

“நீ புள்ளைக்கு தாய்ப்பால் குடுத்தியா, குடுக்கலையா? ஒன்னோட பால்கோவாவைப் பார்த்தா குடுத்தது மாதிரியே தெரியலயே” (பக். 220).

“நீ பிள்ளைக்கி மட்டும் பால் குடுத்திருந்தா அது இப்புடி ஓடுமா ? பாலை நீ மச்சான் கிட்ட குடுத்திருப்ப. அவரு ராத்திரியெல்லாம் தஸ்பீஹ் உருட்டியிருப்பாரு. அதுதான் ஒன்னோடது தொங்கிப் போயிருச்சு” (பக். 220).

கணவன் வருவதைப் பற்றி ஒருத்தி: “(புருஷன்) வந்தாலும் என் சாமானுக்குத்தான் கேடு…ஒரு வாரம் படுக்கலைன்னா, சாமான் நகச்சுத்தி வந்த மாதிரி விண்விண்ணுன்ணு தெறிக்க ஆரம்பிச்சுடுமுல்ல” (பக். 221).

“நாலு திருமணம் செய்து கொள்ளும் அப்துல்லா என்ற ஒரு பணக்கார கிழவனைப் பற்றி நபிஸா: அந்தாளு வயசுக்கு எந்திரிக்கிதா? ஆச்சரியமாவுல்ல இருக்கு” (பக். 240).

பாத்திமாவின் அம்மா நூரம்மா: “வீணாப்போன முண்டை, ஒரு பள்ளப்பய சுண்ணிதானா இவளுக்குக் கெடைச்சிச்சு, துலுக்கப் பயலுது கெடைக்கலயா?” (பக். 272).

அஹ்மது தன் தோழி ராபியாவின் சின்ன மார்பைச் சுவைப்பதை சல்மா இப்படி விவரிக்கிறார்:

“அவள் (ராபியா) ஒன்றும் சொல்லவில்லை. அவன் (அஹ்மது) மெதுவாகத் தவழ்ந்து வந்து அவளது சட்டையைத் தூக்கிவிட்டு மார்பைப் பார்த்தான்…பொம்மையை எடுத்துக் கீழே வைத்துவிட்டு அவளது மார்பை மிருதுவாக வருடினான்…தன் விரல்களால் அதைப் பற்றிக் கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதுபோல் செய்துவிட்டு பிறகு தன் தலையைச் சாய்த்து உதடுகளால் மெதுவாக முத்தமிட்டான். பின் அதனைப் பற்றி உறிஞ்சத் தொடங்கினான் ஒரு குழந்தையைப் போல” (பக். 177).

இதெல்லாம் காட்டுவது என்ன? ‘எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி’ என்ற சல்மாவின் கவிதை வரி பிரபலமானது. மாலதி மைத்ரி போன்றவர்கள் இந்த மாதிரி மனித உடலின் மர்ம உறுப்புகள் பற்றிய கவிதைகளை காப்பாற்றும் பொருட்டு ‘யோனி’ என்பதல்லாம் ஒரு குறியீடுதான் என்று கட்டுரை கட்டுரையாக எழுதுகிறார்கள். எனக்கு இந்த விஷயத்தில் வேறு கருத்துள்ளது. யோனி என்பது குறி என்பதுவரை எனக்குத் தெரியும். அது எப்படி குறியீடாகிறது என்பது விளங்கவில்லை. சரி, அந்த விவாதத்துக்கு இப்போது போகவேண்டாம். கவிதை என்பது எதையுமே விரிப்பது அல்ல. திரையை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏற்படும் தெளிவைவிட தெளிவாக திரைகளினூடே காட்டவல்லது கவிதை. எல்லாவற்றையும் விரித்துக்கொண்டே போவது இலக்கியமாகாது என்பது அடியேனுடைய மூடிய நம்பிக்கை. ஆனால் இந்த நாவலின் பெண்கள் பேசும் மொழியும் அஹ்மது ராபியா நிகழ்ச்சியும், மதினா ராபியா நிகழ்ச்சியும் காட்டுவது என்ன?

“பின்நவீனத்துவப் பிரதியொன்றில் காணக்கிடைக்கும் சாதகமான பண்புகள் இவை” என்று முன்னுரையில் ரவிக்குமார் சொல்கிறார். யாருக்குச் சாதகமான பண்புகள் என்று அவர் குறிப்பிடவில்லை. போகட்டும். சாருநிவேதிதா சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். தமிழுக்கு இன்னொரு சாருநிவேதிதா கிடைத்துவிட்டார் என்று. ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின்நவீனத்துவமோ!

இனி சல்மாவின் பிரதியின் அடுத்த பக்கத்துக்கு வருவோம். இது மதம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் பகுதி. ஆங்காங்கு பாத்திரங்கள், குறிப்பாக பெண் பாத்திரங்கள் மூலமாக மதம், சட்டதிட்டங்கள் சார்ந்த கேள்விகளை சல்மா எழுப்புகிறார். சில உதாரணங்கள்.

“இந்த மாசம் பூராவும் நன்மையை மட்டும்தான் சம்பாதிக்கணுமாம்” (பக். 80). “ஜும்ஆவுக்குக் கோடி உடுத்தித் தொழுவது நன்மையாம்” (பக். 98). ‘யாம்’களாகவும் ‘மாம்’களாகவும் மத நம்பிக்கைகளின் மீதான கிண்டல் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

“காதருக்கே தெரியாமல் கருத்தடை செய்துவிட்டு வந்தபொழுது ஷரியத்தை மீறி நடந்து கொண்டதாகக் கூறி கொஞ்சகாலம் றைமாவிடம் பேசாமலிருந்தான்…அவளுக்குத் தெரியும் ஷரியத்தை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க அவனால் முடியாது” (பக் 97).

ஷரீயத்தை மீறுவதுதான் சரி என்ற தொனி இதில் கிடைக்கிறது.

அஹ்மது ராபியாவிடமும் மதினாவிடமும் சவால் விடுவான், “எங்கே, எங்களை மாதிரி உள்ளே வந்து தொழுங்கடி பாப்பம்” (பக். 169). “ஏன் நாமும் போய் பள்ளிவாசலுக்குள்ளேயோ கொத்வா பள்ளியிலோ ஆண்களோடு சேர்ந்து தொழுக கூடாது?” ராபியா (பக். 189).

“இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினால் யாருக்கென்ன? சிவா முஸ்லிமாக இருந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமாம். இந்துவாக இருப்பதால் முடியாதாம்” (பக். 283).

“எல்லாவற்றையுமே படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்கள்?” (பக். 317).

இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்). அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.

எந்தக் கேள்விக்கும் சல்மா பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் raasathi@yahoo.com என்று தன் மின்னஞ்சல் முகவரியை மட்டும் ஏன் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை பாராட்டுக் கடிதங்களை மட்டும் ஒரு நூலாக வெளியிடும் எண்ணமிருக்கலாம்.

கடைசியாக

500 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவலில் எனது அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு வாக்கியம்கூட இல்லை. இலக்கியத்தின் சுவை என்பது மருந்துக்குக்கூட இல்லாத மொன்னையான, தட்டையான, முனை மழுங்கிப்போன அல்ல, முனையே இல்லாத, மிக மிகச் சாதாரணமான எழுத்தில் ஒரு நாவல். ஒரே விதமான சம்பவங்கள். பெயர்கள் மட்டும்தான் மாறுகின்றன. ஒரே ஒப்பாரியையே பலகுரலில் பாடுவது மாதிரி. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் வந்திருந்தால் ஒரு வேளை நவீன இலக்கிய படைப்பாக இது கருதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் இதற்கு ஜால்ரா போடுவதிலிருந்தே இது இலக்கியக் கலப்பில்லாத சுத்தமான அரசியல் என்று தெரிந்துவிடுகிறது.

மோகத்தையே மைய இழையாக வைத்து ‘மோகமுள்’ என்ற அற்புதமான நாவலை ஜானகிராமன் படைக்கவில்லையா? உடலைப் பேசவேண்டுமென்றால் அதற்கு சரோஜாதேவித்தனம்தான் வழியா? அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அப்படிப்பட்ட பின்நவீனத்துவம் தூக்கி எறியப்பட வேண்டியது.

எழுத்து என்பது நடப்பதையெல்லாம் நடப்பதுபோல சொல்வதல்ல. இருப்பதை எழுதுவதுதான் மிக உயர்ந்த இலக்கியம் என்று சொல்வோமேயானால் நாளிதழ்களும், மற்ற பத்திரிக்கைகளும்தான் இலக்கிய இதழ்களாக இருக்கும். இலக்கியம் என்பதே சொல்முறையில்தான் உள்ளது. நிஜம் ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமான பாதிப்பை, நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்த வல்லது இலக்கியம். எழுதுமுறையில்தான் ஒரு விஷயம் இலக்கியமாகவோ அல்லது அரசியலாகவோ மாறுகிறது. (பெற்றோர் பெயர், கணவர் பெயர், பிள்ளைகள் பெயர்களெல்லாம் குறிப்பிட்ட சல்மா, சகோதரர் மனுஷ்யபுத்திரன் பற்றி குறிப்பிடாததற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம். அதையும் அரசியலில் சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்).

சல்மா அவர்கள் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறார். அரசியல் அவருக்கு வெற்றிகரமாக வருகிறது. அதிலேயே அவர் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன். இலக்கியத்தில் அவர் அரசியலைக் கொண்டுவரச் செய்த இந்த மகா முயற்சி கடுமையான தோல்வியாகிவிட்டது. ஏனெனில் உண்மையை நாவலாக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை. அதை அவரே முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார்:

“நவீன இலக்கியத்தில் காலியாகக் கிடக்கும் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்கிற ஆர்வமும் கூட, வளர்ந்து கொண்டிருந்தன பக்கங்கள்”. (பக். 9, மெளனத்தைப் பேசுதல்). ஆக, நிறைய பக்கங்கள் எழுதியதன் காரணம் இதுதான்.

ஆனால் காலியாக உள்ள இடம் தூங்கும் இடமா துப்பும் இடமா என்று தெரியாமல் அந்த இடத்தில் யாரும் கால் வைக்க முடியாதபடியும், மூக்கைப் பொத்திக்கொண்டு கடக்கும் படியும் நிரப்பியிருக்கிறார்.

“ஏதேனும் ஒரு கட்டத்தில் வாசகர்களுக்கு அலுப்புண்டாக்கக் கூடிய நீளமான நாவல்தான் இது என்றாலும் பெண்களின் உறைந்து போன காலத்தை உணர்த்த வேண்டிய கட்டாயத்தோடு…” என்று மறுபடியும் இலக்கிய முட்டுக் கொடுக்கிறார். அவருடைய மன உறுத்தலின் விளைவாக இந்த அலுப்பை எடுத்துக்கொள்ளலாம். அவர் சொல்ல வருகின்ற காலம் உறைந்து போயிருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

“ஒரே நேரத்தில், மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்பு குணம் நிரம்பிய புனைவாக விளங்குகின்ற இந்தப்பிரதியின் ஒளி, நம்மை மேலும் மனிதப்பண்பு கொண்டவர்களாக மாற்றுகிறது. இந்த ஆக்க சக்தி பெண்களுக்கே உரியது” (ரவிக்குமார், பக். 20).

நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.