Home Blog Page 6

இந்திய ஊடகங்களில் சாதியம்

கடந்த நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து முக்கியமான பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர். ‘எல்லோருக்குமான ஊடகங்கள், ஊடகங்களில் பெண், மோதல் பகுதிகளில் செய்தி சேகரிப்பு, ஊடகங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், தெலங்கானா’ என்று பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றி வரும் கல்பனா ஷர்மா, அம்மு ஜோசப் போன்ற சீனியர்கள், சர்வதேச கவனிப்புக்குட்பட்ட அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் ரோஹினி மோகன், நேஹா தீக்‌ஷித் போன்ற ஊடகவியலாளர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கினர். நிகழ்வின் தொடக்க அமர்வில் எல்லோருக்குமான ஊடகங்கள் தலைப்பில் சிறுபான்மையினர், சாதியம் (தலித்), ஆதிவாசிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் சுதிப்தோ மோண்டல் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் ‘இந்திய ஊடகங்களில் சாதியம்’ குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயராணி ஆற்றிய உரை தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. கருத்தரங்கில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த உரையை thewire.in இணையதளம் பிரசுரித்துள்ளது.

ஜெயராணி தமிழில் எழுதிய அந்த உரையை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஊடகக்களத்தில் பத்திரிகையாளராக செயலாற்றி வருகிறார். சாதியம், தலித்கள், சிறுபான்மையினர், பாலின சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். சாதியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து விருதுகளை வென்றது.

இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசிய கருத்தரங்கில் ஜெயராணி ஆற்றிய உரையின் முழு வடிவம்:

பொறுப்புமிக்க ஊடகவியலாளர்களாக நாம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கற்பனை செய்து பார்க்கலாம். இனி இந்திய ஊடகங்கள் அனைத்தும் சாதிய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து பிரசுரிக்கவும் ஒளிபரப்பவும் வேண்டும் என திடீரென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்? இச்சட்டத்தை மீறுகிற அல்லது மதிக்காத ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு எமர்ஜென்சி நிலை உருவாகிறது. கற்பனை தானே! செய்து பார்ப்போம். நொடிக்கு நொடி பிரேக்கிங் செய்தியாக ஒரு தீண்டாமைக் கொடுமையை அம்பலப்படுத்த நேரிடும்; நிமிடத்துக்கு நிமிடம் சாதி அடிப்படையிலான பாலியல் வன்புணர்ச்சியை விவரிக்க வேண்டி வரும்; நாள்தோறும் நடந்தேறும் சாதிய வன்முறைகளை அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். 24×7 ஒளிபரப்ப அவ்வளவு செய்திகளுக்கு எங்கே போவது என மிரளவே வேண்டாம். ஏனெனில் இந்நாட்டில் இந்த கொடுமைகள் அனைத்தும் இப்போதும்… இதோ நான் இந்த உரையை நிகழ்த்தும் இந்நொடிகூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின், ‘மாற்றங்களுக்கு உட்படாத’ புள்ளி விவரம் என்ன சொல்கிறதெனில் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் இரண்டு தலித்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் நமக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பிரேக்கிங் செய்தி கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். எக்ஸ்க்ளூசிவ் என பிராண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தை மாஸ்க் செய்தோ மாஸ்க் செய்யாமலோ (தலித் பெண் என்றால் பெரும்பாலும் மாஸ்க் செய்ய வேண்டிய தேவையே உருவாவதில்லை) காட்டிக்கொண்டே இருக்கலாம். ஒரு நாளில் இரண்டு தலித்கள் கொலை செய்யப்படுகின்றனர்; இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எனவே டி.ஆர்.பிக்கும் பரபரப்புக்கும் சரிவே ஏற்படப் போவதில்லை. போர்ன் வீடியோக்களில் உணரும் கிளுகிளுப்பை விட இந்த நிஜ கொடூர வன்முறைக் காட்சிகளில் பரவசத்தை விதைக்கும்/தேடும் கெடு வாய்ப்பான காலகட்டத்தில் இந்த சரக்கு நன்றாகவே விற்பனையாகும். இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்திருந்து தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வரை, தலித்களுக்கான வாழ்வியல் நீதிகள் ஆதிக்க சாதியினரின் கரங்களால் பஞ்சாயத்துகளில் எழுதப்படும் அவலம் தொடர்கிற வரை சாதிய அத்துமீறல் குறித்த செய்திக்கு ஒருபோதும் தட்டுப்பாடு வந்துவிடாது.

எனவே நமது கற்பனைப்படி அப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டால் புதிய செய்தியை உடைத்து உடைத்து சேனல் ஜாம்பவான்களின் கைரேகை அழிந்துவிடும். பாகிஸ்தானுடன் போரை ஊக்குவித்து போர் அறைகளை உருவாக்கியது போல சாதிக்கலவர அறை, வன்கொடுமை அறை, வன்புணர்ச்சி அறை, தீண்டாமை அறை, பசு பாதுகாப்பு அறை, கர் வாப்ஸி அறை என பல்வேறு அறைகளை உருவாக்கி புதிய புரட்சியை அவை உண்டாக்கிவிடும். இந்நாட்டில் சாதி ஆதிக்கம் எத்தனை மோசமாக நிலை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள அப்படியொரு சூழல் உருவாக வேண்டும். இல்லையெனில் யானையை தொட்டுப் பார்த்த பார்வையற்றவர்களின் நிலை போல நம் கண்ணில் படுவதும் காதில் விழுவதும் மட்டுமே சாதியக் கொடுமைகளின் ஒட்டுமொத்த அளவு என்ற நம் (மூட) நம்பிக்கைக்கும் அலட்சிய மதிப்பீட்டுக்கும் முடிவே கிடைக்காது.

நாம் நம் கற்பனையை முடித்துக் கொண்டு நிஜத்துக்கு திரும்புவோம்!

இந்தியாவின் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடகங்களும் அலுக்கவோ, சலிக்கவோ முடியாத அளவுக்கு ஒரு செய்திச் சுரங்கமாக, அள்ளக் குறையாத ‘அட்சயப் பாத்திரமாக’ சாதிய அத்துமீறல்கள் நொடிக்கு நொடி நடந்து கொண்டிருக்கையில் இன்றைய ஊடகங்கள் அவற்றுக்குத் தந்திருக்கும் இடமென்ன? ஒரு நாளின், ஒரு வாரத்தின், ஒரு மாதத்தின், ஓர் ஆண்டின் செய்தி தொகுப்பில் எத்தனை சதவிகிதம் சாதிப் பிரச்னைக்காக ஒதுக்கப்படுகிறது? ஒவ்வோர் ஆண்டும் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 10-20 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கொலை செய்யப்படும் தலித்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நியாயம் இங்கே நிலைநிறுத்தப்பட்டிருக்குமானால் சம அளவில் ஊடகங்களில் அவற்றுக்கான இடமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏன்? ஏனென்றால், இந்த சமூகம் எவ்வாறான சாதியப் படிநிலையைக் கொண்டிருக்கிறதோ, பெரும்பான்மைச் சமூகம் எத்தகைய சாதிய சிந்தனையில் ஊறிப் போயிருக்கிறதோ அதேதான் ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களிடமும் நிலவுகிறது. நீதியின் பொருட்டு கம்பீரமாக நிற்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சாதியின் பொருட்டு சிதைவுற்று சரிந்து கிடக்கிறது.

தமிழில் ஊழிக்காலம் என ஒரு சொற்றொடர் உண்டு. அப்படியெனில் உலகம் அழியும் காலமென்று பொருள். ஓர் ஊடகவியலாளராக இந்த ஊடகக்காலத்தை ஊழிக்காலமென்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் இச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் எதிர்மறையாக அவை கட்டுப்படுத்துகின்றன. இங்கே என்ன நடக்க வேண்டும், இன்று நான் எதை பற்றி பேச வேண்டும், ஒரு விஷயம் குறித்து எவ்வாறு நான் சிந்திக்க வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும், எதை நான் உண்ண வேண்டும், எதை நான் வாங்க வேண்டும் என தனி மனிதர்களின் மூளையை இயக்குவதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மையை சிதறடித்து அதிகார நியாயங்களுக்கு உட்பட்ட ஒருமுகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு நாள் விடியலிலும் அவை விதைப்பதுதான் இச்சமூகத்தின் அறுவடைப் பொருளாகிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவை எழுதுவதுதான் எல்லாவற்றுக்குமானத் தீர்ப்பாகிறது.

அரசின், ஆளும் வர்க்கத்தின், அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குரலாக இருந்து உயர நின்று தனி ராஜ்ஜியம் நடத்தும் மைய நீரோட்ட ஊடகங்கள் எளியவர்களுக்கானவை அல்ல, ஒடுக்கப்பட்டோருக்கானவை அல்ல, சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளுக்கானவை அல்ல. மிக நிச்சயமாக அவை தலித்களுக்கானவை அல்ல. மைய நீரோட்ட ஊடகங்களின் உரிமையாளர்களாக காட்சி / அச்சு பாரபட்சமின்றி ஏறக்குறைய 95 சதவிகிதத்துக்கும் மேல் ஆதிக்க சாதியினரே உள்ளனர். 70-80% வரை அவற்றின் முக்கியப் பொறுப்புகளை ஆதிக்க சாதி ஆண்கள் வகிக்கின்றனர். இந்தியா ஊடகங்களில் ஒரு சதவிகிதம் கூட முடிவெடுக்கும் அதிகாரத்தை தலித்கள் கொண்டிருக்கவில்லை. ஊடகங்களுக்குள் பன்முகத் தன்மை கொலை செய்யப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நியாயத்தையும் இடத்தையும் அவற்றிடம் எவ்வாறு பெற முடியும்? ஆங்கில ஊடகங்களில் குறிப்பாக பத்திரிகைகளில் அரிதாகவேனும் சாதி எதிர்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மொழிவாரி ஊடகங்களில் அதற்கான சாத்தியம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக கல்வி பெற்று வரும் தலித்களுக்கு அவர்களது, குடும்பச் சூழல், வளர்ந்து வந்த சமூகச் சூழல், நிறம், ஆங்கிலம் என பல விஷயங்கள் தடையாக இருப்பதால் மொழிவாரி ஊடகங்களில்தான் தஞ்சமடைகின்றனர். ஆனால், அங்கே அவர்கள் கவுரவமாக நடத்தப்படுவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, எழுதுவதற்கான வெளியோ பிற ஆதிக்க சாதியினர் அளவுக்கு வழங்கப்படுவதில்லை. ஊடகத்துறையில் பத்தாண்டு கால அனுபவம் பெற்றிருந்த நிலையில் நான் பணிபுரிந்த செய்திச் சேனலில் எனது சம்பளம் வெறும் ரூபாய் 18,000 தான். ஒரு டெய்லி ஷோவுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். என் வேலைக்கான நன்மதிப்பையும் பெற்றிருந்தேன். ஆனால், ஊதிய உயர்வுக்கான நேரம் வந்தபோது, எனக்கு ஒரு நூறு ரூபாய் கூட உயர்வளிக்கப்படவில்லை. என்னை விட அனுபவமும் வேலைப் பளுவும் குறைந்த எனது சக ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது. காரணம் அவரது சாதி. என் ஜூனியரின் சம்பளம் அப்போது ரூபாய் 40,000. இதுதான் ஊடகங்களில் சாதியத்தின் பங்களிப்பு. இந்த சூழலால் வருமானத்துக்காக தன்னை முடக்கிக் கொள்வது அல்லது ஊடகத்துறையை விட்டே போய்விடுவது என இரண்டே வாய்ப்புகள்தான் தலித் ஊடகவியலாளர்கள் முன் இருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்பில் இதழியல் மாணவியாக எனது பல்கலைக்கழக பத்திரிகையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களின் கூலி உயர்வு போராட்டம், அதை தொடர்ந்த அரச பயங்கரவாதம் குறித்து எழுதினேன். 17 தலித்கள் கொல்லப்பட்ட கொடுமை அது. எனது கட்டுரையால் சஸ்பெண்ட் செய்யப்படும் நெருக்கடிக்கு ஆளானேன். எனது அந்த முதல் கட்டுரை தந்த அனுபவத்தால் சாதியை புரிந்து கொள்ளவும் தலித் மக்களின் துயரங்களை ஓர் ஊடகவியலாளராக வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் பேராவல் கொண்டேன். ஆனால் வேலை நிமித்தமாக மைய நீரோட்ட ஊடகங்களுக்கு வந்து சேர்ந்த போது, அங்கிருந்த சூழல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மொழிவாரி ஊடகங்களில் சமூக அரசியல் சார்ந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வேண்டாத விஷயமாகப் பார்க்கப்பட்டது. கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டாலே ஒழிய சாதியப் பிரச்னைகளுக்கு மைய நீரோட்ட ஊடகங்களில் இடம் கிடைப்பதே இல்லை. எடிட்டோரியல் போர்டில் நான் கொடுத்த ஐடியாக்கள் எல்லாம் குப்பைக்குப் போயின. என்னை ஓர் அதிகப்பிரசங்கியாகப் பார்க்கும் சூழல் உருவானது.

பத்திரிகையாளராக வேலையைத் தொடங்கியிருந்த சில மாதங்களில் ஒரு பெண்கள் பத்திரிகையில் செய்தியாளராக பணியில் அமர்ந்தேன். பல்வேறு சவால்களுக்கிடையில் சிறப்பாக செயல்படும் ஊராட்சித் தலைவிகள் குறித்து ஒரு தொடர் எழுதலாம் என ஒரு ஐடியாவை கொடுத்தேன். பெண்கள் பத்திரிகைக்கு உவப்பில்லாத தலைப்பிது என பல முறை நிராகரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊராட்சித் தலைவிகளின் பட்டியலை தயார் செய்துகொண்டு முதலில் சந்திக்க வேண்டிய ஐவரை தேர்ந்தெடுத்து அதில் முதல் நபராக காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவியான மேனகாவை சந்திக்க முடிவு செய்தேன். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என அப்போது எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணாக அவர் சந்திக்கும் சவால்களை கேட்க போன இடத்தில் அவர் ஆதிக்க சாதியினரால் தான் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்து விரிவாகப் பேசினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தன்னை அமரவிடாமல் அவர்கள் தடுப்பதாகக் குறிப்பிட்டார். பதவியிலிருந்து விலகும்படி தொடர்ச்சியானக் கொலை மிரட்டல்கள் வருவதால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஆனால் தனக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் முழுவதும் மேனகாவின் சவால்கள் குறித்து எல்லா தகவல்களையும் சேகரித்து முடித்து அலுவலகம் திரும்பினேன். மறுநாளே அதை கட்டுரையாக எழுதி எடிட்டரிடம் கொடுத்தேன். ஆனால் அந்த கட்டுரை ஒரு பெண்கள் பத்திரிகையில் இடம் பெறும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் சமையல் குறிப்புகள் எழுதி வர தொடர்ச்சியாக நிர்பந்திக்கப்பட்டேன். கடுமையான மன உளைச்சலில் வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணியபடியே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது மாலை பத்திரிகைகளின் போஸ்டர்களில் என்னை மயக்கமுற செய்யும் செய்தியைக் கண்டேன். ’பஞ்சாயத்துத் தலைவி படுகொலை’. கைகள் நடுங்கத்தான் செய்தித்தாளை வாங்கினேன். நான் பயந்தது சரிதான். மேனகா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்தவரை அரிவாளால் வெட்டிக் கொன்றிருந்தார்கள்.

அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு நேரே எடிட்டரிடம் போய் சண்டை போட்டேன். எந்த வகையில் என் கட்டுரை அதன் தகுதியை இழந்தது என கேட்டேன். அதற்கு அவர் தேவையில்லாமல் பதட்டமடையாமல் அவர் எனக்கிட்ட சமையல் குறிப்பு அசைன்மெண்ட்டை செய்து முடிக்கும்படி கட்டளையிட்டார். அலுவலக அனுமதியில்லாமல் அன்றிரவே ஊரப்பாக்கம் சென்று மேனகாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். மருத்துவமனையில் அவரது சடலத்தைப் பார்த்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நான் வேலை செய்த அதே குழுமத்திலிருந்து வந்த புலனாய்வு பத்திரிகை எடிட்டரிடம் மேனாகாவை பேட்டி கண்ட விஷயத்தைக் கூறி பிரசுரிக்குமாறு கேட்டேன். அது அன்றைய நாளின் பரபரப்புச் செய்தி என்பதால் இறுதிப் பேட்டி என அதை வெளியிட்டார்கள். அதன் பின்னர் என்னால் அங்கு பணிபுரிய முடியவில்லை. எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன். எனக்கு வேலையும் வேண்டும், ஆனால் நான் விரும்புகிற வகையில் சாதி எதிர்ப்பு இதழியல் பணியையும் செய்ய வேண்டும்…இரண்டும் ஓரிடத்தில் சாத்தியப்படாது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் சிறு பத்திரிகைகளை எனக்கானக் களமாக மாற்றிக் கொண்டேன். சாதி ஒழிப்பை ஒற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தலித் முரசு என்ற இதழோடு என்னை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். வெவ்வேறு புனைப்பெயர்களில் மைய நீரோட்ட ஊடகங்களில் பதிய சாத்தியப்படாத சாதியப் பிரச்னைகளை வெளிப்படையாக எழுதும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொண்டேன். 15 ஆண்டுகளாக நான் தலித் முரசு இதழில் எழுதியக் கட்டுரைகள் தான் ஜாதியற்றவளின் குரல் என்ற தொகுப்பாக தற்போது வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இது என் தனிப்பட்டக் கதை. ஆனால் இந்த வாய்ப்பும் சூழலும் என்னைப் போல எல்லோருக்கும் அமைந்துவிடாது. மைய நீரோட்ட ஊடகங்களில் செய்தியாளராக இருந்த வரை ஒவ்வொரு எடிட்டோரியல் மீட்டிங்கில் நிராகரிக்கப்பட்டாலும் நான் சாதிய அத்துமீறல்கள் குறித்து ஐடியாக்களை முன் வைப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தேன். ஆனால் யார் என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒரு பத்திரிகையாளராக குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டுமென்ற விதியை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். ஆனால் பொதுவாக தலித் ஊடகவியலாளர்கள் சாதிப் பிரச்னைகள் குறித்து எழுதவோ பேசவோ விழைந்தால், அது சுயசாதி மோகத்திலிருந்து வருவதாக சக ஊடகவியலாளர்களால் திரிக்கப்படுகிறது. உண்மையில், தலித்களுக்கு சாதி குறித்து பெருமிதம் கொள்வதற்கு ஒரு சின்னப் புள்ளி அளவிற்கான நியாயம் கூட இல்லை. சாதி என்பது அவர்கள் மீது திணிக்கப்பட்ட பேரிழிவு. சாதிய அத்துமீறல்கள் குறித்து எப்படியாவது பதிவு செய்துவிட வேண்டுமென நினைப்பது தலித் ஊடகவியலாளர்களின் சாதி எதிர்ப்பு மனநிலையின் விழைவே தவிர, சுயசாதிப் மோகமல்ல. இந்த பழிக்கு அஞ்சி என்னுடன் பணிபுரிந்த தலித் ஊடகவியலாளர்கள் பொதுவான அரசியல் நிகழ்வுகளில் காட்டுகிற ஆர்வத்தை சாதிப் பிரச்னைகளில் காட்டத் தயங்கினர். பலர் தமது அடையாளத்தையே மறைத்து ஒளித்து அதனால் உண்டாகும் மன உளைச்சலோடு முடங்கினார்கள். தலித்கள் சுதந்திரமாக பணி செய்கிற அளவிற்கான சமத்துவச் சூழல் ஊடக அலுவலகங்களில் இன்றும் கூட உருவாகவில்லை என்பது அவமானகரமானது.

தலித் ஊடகவியலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சாதிய அத்துமீறல்கள் ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில் அவர்கள் ஊடக அலுவலகங்களுக்கு வெளியே அதை நிகழ்த்துகிறவர்களின் ரத்த உறவாக இருக்கின்றனர். தி ஹூட் இணைய இதழுக்காக ஊடகவியலாளர் அய்ஜாஸ் அஷ்ரப் ஊடகங்களில் தலித்களின் நிலை குறித்து ஆய்வு செய்து விரிவானக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், தலித்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட தமது சமூகத்தின் நிலையை ஊடகப் பணியின் மூலம் வலுவாக்கும், தம்மை சூழ்ந்துள்ள சாதியப் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறார். மேலும் ஆங்கில ஊடகங்களை விட இந்தி மற்றும் பிற மொழிவாரி ஊடகங்களில்தான் தலித்கள் அதிகளவில் பணி செய்வதாகவும் ஆனால் அவர்கள் மீது அதிகளவிலான பாகுபாடு காட்டப்படுவதாக குறிப்பிடுகிறார். இதனால் வேலைப் பாதுகாப்போ வளர்ச்சிக்கான உத்திரவாதமோ இல்லாதததால் ஒருகட்டத்தில் ஊடகப் பணியை துறந்து ஏதேனும் ஒரு அரசு வேலையில் அவர்கள் தஞ்சமடைவதை உறுதி செய்கிறார். தலித் ஊடகவியலாளர்களின் பொருளாதாரப் பின்னணி இந்த முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.

அய்ஜாஸ் இந்த ஆய்வை மேற்கொண்ட சமயத்தில் என்னை தொடர்பு கொண்டார். அப்போது நான் ஒரு லைப் ஸ்டைல் இதழில் எடிட்டராக இருந்தேன். அவர் மீண்டும் மீண்டும் நம்ப முடியாமல், லைப் ஸ்டைல் இதழின் ஆசிரியராக ஒரு தலித் ஊடகவியலாளர் இருப்பது குறித்து ஆச்சர்யத்தோடு குறிப்பிட்டார். அப்போது இருந்த தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக என்னால் அவரது ஆய்வுக்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஆனால் அய்ஜாஸின் ஆச்சர்யம் என்னை வியப்புறச் செய்யவில்லை. ஏனெனில் ஒரு லைப் ஸ்டைல் இதழிலோ பெண்கள் இதழிலோ எடிட்டராவது என்னை பொறுத்தவரை எளிதானது. ஆனால் 15 ஆண்டு காலம் நான் சமூக அரசியல் சார்ந்த செய்தியாளராகக் களப்பணி ஆற்றியிருக்கிறேன் ஆனால் அடுத்த பத்தாண்டுகளிலேனும் சமூக அரசியல் சார்ந்த செய்திப் பத்திரிகையில் எடிட்டராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை. நான் இதை எனது எதிர்மறை எண்ணத்திலிருந்து சொல்லவில்லை. சமூக எதார்த்தத்திலிருந்தே முன் வைக்கிறேன். ஒரு தலித் ஊடகவியலாளரின் கைகளில் சமூக அரசியல் சார்ந்த பிரச்னைகளை வெளிக் கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைக்கும் துணிவு இன்னும் இச்சமூகத்திற்கு வரவில்லை. ஏனெனில் மிக வெளிப்படையாக சாதிய அத்துமீறல் குறித்த சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு நபரிடம் அப்படியொரு பொறுப்பு கொடுக்கப்படுமெனில் இச்சமூகத்தின் சாதி ஆதிக்கம் மைய நீரோட்டத் தளத்தில் அம்பலப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2006 ஆம் ஆண்டு நடந்த கயர்லாஞ்சி படுகொலை நாம் அறிந்ததே. இரு தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சியை, அதை தொடர்ந்த சித்ரவதைகளை ஊரே கொண்டாட்டத்தோடு நிகழ்த்திய அக்கொடுமை ஏன் நிர்பயா வழக்கைப் போல, பிற உயர்சாதி பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைப் போல தலைப்புச் செய்தியாகவில்லை, கவனத்தைப் பெறவில்லை? செய்தி அல்லாத, பிரச்னை அல்லாத விஷயங்களை எல்லாம் கத்திக் கூவி செய்தியாக்கும் ஊடகங்களுக்கு இந்த நாகரிக காலத்திலும் தொடரும், கையால் மலமள்ளும் இழிவு குறித்தோ, பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு சமைக்க மறுக்கும் தீண்டாமை குறித்தோ, நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தலித்களின் குடியிருப்புகள் குறித்தோ எந்த அக்கறையும் இல்லை. முதல் பக்க செய்தியாகும் தகுதியை இது போன்ற செய்திகள் என்றென்றைக்குமாக இழந்து நிற்கின்றன. உலகின் எந்த மூலையிலேனும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடைபெற்றால் அதை கண்டித்துக் கதறும் ஊடகங்கள் தன் சொந்த நாட்டில் தினம் தினம் சாதியின் பெயரால் நடந்தேறும் இனவெறித் தாக்குதல் குறித்து துளியளவும் அக்கறைப்படுவதில்லையே ஏன்? 2001 ஆம் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாட்டில் சாதியத்தை இனவெறியாக அங்கீகரிக்க வேண்டி ஐ.நாவிடம் தலித் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த இந்திய அரசு, சாதி எங்களது உள்நாட்டு பிரச்னை நாங்களே பார்த்துக் கொள்வோம் என பதில் அளித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மூர்க்கம் குன்றாமல், மனித உரிமைகள் அனைத்தையும் சிதைத்து இந்திய மண்ணில் பிறக்கிற ஒவ்வொரு தலித் குழந்தையின் முதுகிலும் குத்தப்படும் அடிமை முத்திரையை இன்றும் ஓர் உள்ளூர் பிரச்னையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது எத்தனை அயோக்கியத்தனம்?

தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானத் தீண்டாமை முறைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இரட்டை டம்ளர் முறை தொடங்கி கவுரவக் கொலை சாதிவெறியின் உக்கிரம் இத்தனை முன்னேறிய காலத்திலும் மட்டுபடவில்லை. நமது கிராமங்கள் இன்றும் ஊராகவும் சேரியாகவுமே பிரிந்து கிடக்கின்றன. அவற்றில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஆயிரமாண்டு ஒடுக்குமுறையின் நீட்சி என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். கல்வி கற்க விருப்பம் கொண்டதற்காக, நல்ல உடை அணிய முற்பட்டதற்காக, இருசக்கர வாகனம் வைத்ததற்காக, செருப்பு அணிந்ததற்காக, அடிமை வேலைகளை செய்ய மறுத்ததற்காகவெல்லாம் அவர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். மரணத்தை விட கொடிய தண்டனைகளை மனித உரிமைகள் குறித்த ஓர்மை அதிகரித்திருக்கும் இந்நாட்களில் அனுபவிக்கிறார்கள். தமிழகத்தின் திண்ணியத்தில் தனது கட்டளைக்கு அடிபணிய மறுத்த இரு தலித் ஆண்களின் வாயில் மலத்தைத் திணித்தார் ஓர் ஆதிக்கசாதிப் பெண். இத்தனை வன்மம் நிறைந்த சாதி அதே தன்மையோடு தலைமுறைகளுக்கு கைமாற்றப்படும் போது அதை எப்படி உள்ளூர் பிரச்னையாக நாம் சுருக்கிவிடவோ, ஒதுக்கிவிடவோ முடியும்? சாதி என்பது சிவில் பிரச்னை அல்ல. அதுவொரு தேசிய அவலம். தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் கொடிய நோய். ஆனால் சாதிய அத்துமீறல்கள் தனிநபர்களுக்கிடையிலான குற்றச் சம்பவங்களாக, வெறும் நிகழ்வுகளாக சுருக்கப்படுகின்றன. தேசிய ஊடகங்கள் மட்டுமல்ல உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை பெறும் வலு அவற்றுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.

ரோஹித் வெமூலாவின் கடிதம் ஆங்கிலத்தில், கவித்துவமான மொழி நடையில் இல்லையென்றால் அவரது (தற்)கொலை தேசிய ஊடகங்களில் இத்தகைய கவனத்தைப் பெற்றிருக்குமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. ரோஹித் வெமூலாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்த அய்யாறு என்ற இளைஞரும் சாதியின் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஒரு கடிதத்தோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். பஞ்சாயத்து அலுவலகத்தில் ப்யூனாக வேலை செய்த அய்யாறுவை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி பஞ்சாயத்து தலைவரான சாந்தி மற்றும் அவரது கணவரால் நிர்பந்திக்கப்பட்டார். தனது தற்கொலைக் குறிப்பில், ’’பயம் என்பது சிறுதுளி விஷம்’’ என குறிப்பிடுகிறார் அய்யாறு. ஆனால் ரோஹித்தின் மரணம் உண்டாக்கிய பரபரப்பில் ஒரு சதவிகித்தைக் கூட அய்யாறுவின் மரணம் கிளப்பவில்லை. ஏனெனில் அய்யாறுக்கள் அடிக்கடிக் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நம்மைப் போன்ற சாமானியர்களால். கிராமங்களில் சாதி இந்துக்களால் சேரிகளில் உழலும் தலித் மக்கள் படும் துன்புறுத்தல்களை எந்த ஊடகமும் பரபரப்பாக்குவதில்லை. அதுவொரு அத்துமீறலாகவே யாருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதற்கெதிராக எதிர்வினையாற்றுகிற அளவுக்கு நாம் தூண்டப்படுவதில்லை. ரோஹித்தின் கடிதத்தில் இச்சமூகம் உணர்ந்த அநீதியை அய்யாறுவின் கடிதத்தில் உணரவில்லை. ஏன் இப்படியொரு கடிதம் எழுதப்பட்டு அய்யாறு தற்கொலை செய்து கொண்டதே பலருக்கும் தெரியாது. அய்யாறு சொல்வது போல ஆண்டாண்டுகாலமாக தலித்கள் சுமக்கும் பயமானது சிறுதுளி விஷமே. அதுவே அதிகரிக்கும் போது பலதுளிகளாகி, பெருங்கடலாகிறது. இந்த பயமானது அய்யாறு என்ற தனி நபர் தன் வாழ்நாளின் எதிர்கொண்ட பயமன்று. பல நூற்றாண்டுகளாக தலைமுறைகளுக்கு கைமாற்றப்பட்டு அய்யாறுவிடமும் சேர்க்கப்பட்டது. தன் சாவின் மூலமாக அய்யாறு அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு போகிறார். சுதந்திர இந்தியாவில் நடந்த பல புரட்சிகளில், மாற்றங்களில் குறைந்தபட்சம் தலித் மக்கள் மனதிலிருந்து இந்த பயம் கூட போக்கப்படவில்லையே. இதில் ஊடகவியலாளர்களாக நமது பங்கும் பொறுப்பும் தான் என்ன?

ஊடகங்களின் இரக்கத்தை/கவனத்தைப் பெற தலித்கள் எதில் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்? சாதிய படுகொலைகளை ஊடகங்கள் எதிர்க்கின்றன என்றால் ஏன் ரோஹித் இடத்தில் அய்யாறு வைக்கப்படவில்லை? நாம் என்று அய்யாறுக்களின் கடிதத்தை படிக்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று அய்யாறுக்களின் பலிகளுக்கு நியாயம் கேட்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று நம்மை போன்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களை எதிர்க்கத் தொடங்குகிறோமோ அன்றுதான் ஊடகங்கள் தன் சொந்த உடலில் படிந்த அழுக்கை கழுவத் தொடங்கியிருக்கின்றன என்று அர்த்தம்.

இந்திய நாட்டில் ஓர் ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதியாக நான் கருதுவது சாதித் துறப்பு. ஆம், ஊடகப் பணிக்கு வருவோர் பல விதமான சமத்துவத்தையும் கடைபிடிக்கும் போது சாதியத்திலும் அதை செயல்படுத்த வேண்டும். அதாவது ஜாதியற்றவர்களாக, தீவிர சாதி எதிர்ப்பாளர்களாக இயங்க வேண்டும். பாலின சமத்துவத்தை ஆண்கள் கடைபிடிக்க வேண்டுமென நாம் விரும்புவதை போல, சாதி இழிவை வேரறுக்கும் நற்செயலில் ஆதிக்க சாதியினர் பங்கெடுக்க வேண்டுமென தலித் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, சாதிய அத்துமீறல்களை பதிவு செய்ய வேண்டுமானால் ஒரு தலித் ஊடகவியலாளர் வேண்டுமென கருதும் போக்கு நிலவுகிறது. சாதி ஒழிப்பில் தலித்கள் தான் ஈடுபட வேண்டுமென கருதுவது பாலின சமத்துவத்தை பெண்களிடம் கடைபிடிக்கச் சொல்லுவது போல வேடிக்கையானது.

நமது செய்தி அறைகளில் தலித்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். அதன் வழியே அவர்களது துயரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது எப்படி சாத்தியப்படும்? எத்தனை ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தியலைக் கொண்டுள்ளனர்? அரசு ஊடகங்களிலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாத போது தனியார் நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஊடகவியலாளர்களுக்கு என இயங்கும் அமைப்புகள் தமது உரிமைகளுக்கான கோரிக்கைகளுடன் சரியான பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதையும் தமது கடமையென கொள்ள வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் மீது செலுத்தப்படும் பாகுபாட்டை கண்காணிப்பது அதன் மீதான நடவடிக்கையை உறுதி செய்வது என நம்பிக்கையை விதைக்க வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் சுய மரியாதையோடும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையிலான ஊடகக் களத்தை உறுதி செய்து தரும் பொறுப்பை இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (NWMI) மாதிரியான அமைப்புகள் முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும்.

முதல் தலைமுறையாக கல்வி கற்று, ஆயிரமாண்டு அடிமை வாழ்வின் அத்தனை மனக் குமுறல்களை புறந்தள்ளி, ஆங்கிலம் கற்று, நேர்த்தியாக உடையணிந்து ஒரு சக மனிதராக ஊடக அலுவலகங்களுக்குள் நுழைந்து, அங்கே நிலவும் பாகுபாடுகளை சமாளித்து, வருமானத்திற்காக அந்த வேலையையும் தக்க வைத்து இதற்கிடையில் சாதிய அத்துமீறல்களையும் பதிவு செய்ய வேண்டுமெனில் அது எத்தனை சவாலானது? அய்ஜாஸின் ஆய்வு முடிவுகள் இந்த நெருக்கடியைதான் அம்பலப்படுத்துகின்றன. ஊடகங்களுக்குள் தலித்கள் சுதந்திரமாக செயல்படும் இந்த மாற்றம் நடக்க இன்னும் சில தலைமுறைகள் கடக்க வேண்டியிருக்கலாம்.

அதுவரை மைய நீரோட்ட ஊடகங்களிலும் தேசிய ஊடகங்களிலும் தலித்களுக்கான இடமே இருக்கப் போவதில்லை. அந்த வெற்றிடத்தை சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட தலித் அல்லாத சக ஊடகவியலாளர்களால் மட்டுமே நிரப்ப முடியும். நாம் வாழ்கிற இந்நாட்டை சாதியற்றதாக மாற்ற வேண்டிய பொறுப்பு முதன்மையாக தலித் அல்லாதவர்களுடையது. ஒரு குற்றத்திற்கும் வன்கொடுமைக்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள, ஆதிக்கம் குடிகொண்டிருக்கும் ஊர்களை விட்டு அவர்கள் அடிமைத்தனத்தின் புழுதிப் படர்ந்த சேரிகளுக்குள் காலடி வைக்க வேண்டும். அங்கே நிலவும் ஒடுக்குமுறைகளும் சாதிய அழுத்தங்களும் வறுமையும் உங்கள் கண்களுக்கு பட வேண்டுமானால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருக்க வேண்டும். ஆம் என் இறுதி கோரிக்கை இதுதான். நீங்கள் ஓர் ஊடகவியலாளராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருந்தே ஆக வேண்டும். ஏனென்றால் சாதியில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டவராக மாறும் போது, இங்கே நான் எதற்காக பேசிக் கொண்டிருக்கிறேனோ அந்த அற்புதம் நிகழும். நிச்சயமாக நிகழும். என்றோ ஒருநாள்.

(நன்றி: மின்னம்பலம், பாகம் 1, பாகம் 2)

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

மோடியின் நவதாராளவாத இந்துத்துவ அரசு நாட்டையே வாரிச் சுருட்டி பெருநிறுவன முதலாளிகளிடமும் பன்னாட்டு மூலதனத்திடமும் அடகு வைக்கும் வேலையை போர்க்கால அவசரத்தில் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நிதானித்து எழுவதற்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் சரமாரியாக அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்து நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்ற மோசடியான முழக்கங்களின் கீழ் சாமான்ய மக்களின் எளிய சேமிப்புகளைக் கூட விடாமல் உறிஞ்சி, அம்பானி-அதானி-டாடா-பிர்லா-ஜிந்தால் போன்ற பகாசுரக் கொள்ளைக் கும்பலின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட தரகு வேலையை மிகுந்த திமிர்த்தனத்துடன் செய்து வருகிறது இவ்வரசு. மோடியின் கார்பரேட் நேச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவதற்கான எல்லா நியாயங்களும் கூடிவந்துள்ள நிலையில், மோடியை பின்னாலிருந்து இயக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது வழமையான வெறுப்பு அரசியலையும் வேகம் தணியாமல் முன்னெடுத்துச் செல்கின்றது. மக்களின் கோபத்தை மடைமாற்றுவதற்காகவும், அவர்கள் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும்படி செய்வதற்காகவும்.

மக்களைச் சுரண்டிக் கொழுப்பது + அதை ஊழ்வினைப் பயன் என்று ஏற்கப் பழக்குவது + கற்பனை எதிரியை உருவகித்துக் காட்டி சொந்த கிரிமினல் முகத்தை மறைப்பது.

ஆரம்பம் முதலே அவர்களுக்குத் தவறாமல் பலன் ஈட்டிக் கொடுக்கும் வெற்றி ஃபார்முலா இதுதான்.

அக்ஷய முகுலும் அவரின் நூலும்

சரி, அவர்கள்தான் பொய்யையும் புரட்டையும் பரப்பி மக்களை பிரித்தாள முயல்கிறார்கள்; உண்மையான பிரச்சினைகளை விட்டு கவனத்தை திசைதிருப்புகிறார்கள் என்றால், மக்கள் ஏன் அதற்கு காது கொடுக்க வேண்டும்? புழுகு மூட்டைகளுடன் வரும் அவர்களின் முகத்திரையைக் கிழித்து, பிடரியில் அடித்து விரட்டாமல், அவர்களின் பிரச்சார பித்தலாட்டங்களுக்கு பலியாகும் நிலைக்கு பெருந்திரள் மக்கள் எப்படி வந்து சேர்கிறார்கள்?

இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி, நாம் அறிமுகம் செய்யவரும் நூலில் இருக்கிறது. ‘கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ என்ற முக்கியமான நூலை எழுதியுள்ள அக்ஷய முகுல் ஒரு பத்திரிக்கையாளர். பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்கென ஆண்டுதோறும் வழங்கப்படும் புகழ்பெற்ற ‘ராம்நாத் கோயங்கா விருது’க்கு இவ்வாண்டு அக்ஷய முகிலின் நூலும் தெரிவாகியிருந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி (2016-11-02) வழங்கப்படவிருந்த அந்த விருதினை மோடியின் கரங்களிலிருந்து தம்மால் பெறமுடியாது என்று மறுத்துவிட்டார் முகுல். “மோடியுடன் ஒரே ஃபிரேமில் நிற்பது பற்றிய நினைவுடன் என்னால் வாழ முடியாது” என்று கூறி மோடியின் முகத்தில் அடர்த்தியான கரியைப் பூசியிருக்கிறார்.

அக்ஷய முகுல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘கீதா பிரஸ்’ பதிப்பகத்தின் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது. உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் எனும் ஊரில் 1923-ம் ஆண்டு கீதா பிரஸ் துவங்கப்பட்டது. இதற்குப் பின்னாலிருந்த இரு மூளைகளும் – ஜெயதயால் கோயந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும்- இரு மார்வாடி வணிகர்களுடையது. மேற்கத்திய நாகரித்தின் தாக்கத்தால் மார்வாடி-அகர்வால் சமுதாயம் ‘சீரழிந்து’ கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கத்திலும், சனாதன தர்மத்தையும் அதன் அறவிழுமியங்களையும் மீண்டும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் பார்ப்பன இந்து மத புனிதப் பிரதிகளை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டுப் பரப்புவதற்கான ஒரு மதப் பிரசுர நிறுவனமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1926-ல் ‘கல்யாண்’ என்ற பெயரில் ஒரு மாத இதழைத் துவங்கியது முதலாகவே அந்நிறுவனம் வலதுசாரி இந்துத்துவ அரசியல் நியாயங்களை பரந்துபட்ட ‘இந்துக்களிடம்’ எடுத்துச் செல்லும் வாகனம் என்றவொரு கூடுதல் பரிமாணத்தையும் தனக்கு வரித்துக் கொண்டது. இப்பணியை அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் மிக வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறது.

கீதா பிரஸ் இது வரை பிரசுரம் செய்து விற்றுள்ள சனாதன இந்துமத நூற்பிரதிகளின் எண்ணிக்கை அபாரமானது. அது தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கணக்கின்படி பார்த்தால்,

பகவத் கீதை: 11.4 கோடி பிரதிகள்

ராம் சரித் மனாஸ், துளசி தாசரின் ஆக்கங்கள்: 9.2 கோடி பிரதிகள்

புராணங்கள், உபநிடதங்கள், ஏனைய பண்டைய புனிதப் பிரதிகள்: 2.2 கோடி பிரதிகள்

பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான குறுநூல்கள்: 10.5 கோடி பிரதிகள்

பக்தி கதைகள், பஜனைப் பாடல்கள்: 12.4 கோடி பிரதிகள்

ஏனையவை: 12.3 கோடி பிரதிகள்

என இதுவரை அது மொத்தம் 58 கோடி 25 இலட்சம் பிரதிகளை பிரசுரித்து ‘இந்து’ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் பிரதான இயங்குபுலம் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான். இந்தியிலும் சமஸ்கிருதத்திலும்தான் அது தனது பெரும்பாலான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அதே சமயம் குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், கன்னடம், அஸ்ஸாமி, மலையாளம், நேப்பாளி, உருது, பஞ்சாபி போன்ற ஏனைய மொழிகளிலும் அது கணிசமான வெளியீடுகளை பதிப்பித்து மலிவு விலைகளில் விற்றிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்தி மொழியில் அது வெளியிடும் ‘கல்யாண்‘ இதழின் சந்தாதாரர்களது எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2 இலட்சம்; ‘கல்யாண-கல்பதரு‘ என்ற ஆங்கில இதழின் சந்தாதாரர்கள் 1 இலட்சம். இவை மட்டுமின்றி, இன்றுவரை பலமுறை மறுபிரசுரம் செய்யப்படும் சிறப்பிதழ்களையும் துவக்கம் முதலே ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ளது.

இவ்வளவையும் பிரசுரம் செய்பவர்கள் நான்கு வேதங்களை மட்டும் பிரசுரம் செய்வதில்லை; ஏன், தமது எழுத்துக்களில் நேரடியாக மேற்கோள் கூட காட்டுவதில்லை. காரணம் கேட்டால் நழுவுகிறார்கள். கீழ்நிலைச் சாதியினர் வேத சுலோகங்களை கேட்கத் துணிந்தால், அவர்களின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுவதுதான் அதற்குரிய தண்டனை என்று இவர்களின் வர்ணாஸ்ரம ‘தர்மம்’ போதிக்கிறது. பிறகு எப்படி அதனைச் செய்வார்கள்?!

சரி, கீதா பிரஸ்ஸின் வெற்றிச் சரிதையையிட்டு நாம் துணுக்குற வேண்டுமா? அவர்கள் தங்கள் மதத்துக்குச் செய்யும் ‘ஆன்மீக’ சேவையை பார்த்து வயிற்றெரிச்சல் படுவதாகுமா இது? நிச்சயம் இல்லை. நாட்டை ‘இந்து இந்தியாவாக’ ஆக்கி, தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் அச்சு அவதாரக் கதைதான் கீதா பிரஸ்ஸுடைய கதை. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்து மஹா சபை, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், பா.ஜ.க., எனப் பலவண்ண முகமூடிகள் அணிந்து அணிவகுத்து வந்து இந்துத்துவ சக்திகள் செய்துவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள் அனைத்தையும் படித்த நடுத்தர ‘இந்து’ மக்களின் வீடுகள் வரை கொண்டு சேர்த்து, நாடு முழுக்க ஒரு ‘இந்து மனசாட்சியை’ வெற்றிகரமாக கட்டியெழுப்பியது பற்றிய கதை இந்நூலில் விரிகிறது.

‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்துவதற்கென்று அப்பாவிகளை தூக்கில் போட வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புகள் எழுதப்படும் சூழலில், அந்த ‘மனசாட்சி’ கட்டமைக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்வது நமக்குத் தொடர்பில்லாத விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகி விடுமா?

அக்ஷய முகுல் தனது ஐந்தாண்டு உழைப்பு மற்றும் சளைக்காத ஆய்வின் தொடர்ச்சியாக எழுதியுள்ள இந்நூலில் கீதா பிரஸ்ஸின் கதையை விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார். எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையான பார்ப்பன-பனியாக் கூட்டம் பெருந்திரளான சூத்திர, அவர்ண மக்களை நயவஞ்சகமாக ‘இந்து’ எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடைத்து, போலியான பெரும்பான்மையை உருவாக்கி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி, ‘இந்து மனசாட்சி’ என்ற ஒன்றை செயற்கையாகக் கட்டியமைத்து, நாட்டின் மீதான தனது மேலாதிக்கத்தை எவ்வாறு சரிந்துவிடாமல் பாதுகாத்தும் வளர்த்தும் வந்திருக்கிறது எனும் வரலாற்றை, கீதா பிரஸ் எனும் சாளரத்தின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் அக்ஷய முகுல். இதற்காக அவரைப் பாராட்டியாக வேண்டும்.

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

பிரிட்டிஷ் காலனியத்தின் கீழ் மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்தாலும் கூட சாதி அடுக்குமுறையிலும், சமூக அந்தஸ்திலும் போதிய அங்கீகாரம் பெற முடியாததையிட்டு வருந்தி வந்தது. பிறகு படிப்படியாக மேலேறி, ‘பார்ப்பனர்-ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை ‘பார்ப்பனர்-வைசியர்’ என எப்படி மாற்றியமைத்தது என்பதை முகுல் நூலின் முன்னுரையில் தொட்டுக் காட்டுகிறார். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மிகத் தாராளமாக செலவளிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தாம் விரும்பிய சமூக அந்தஸ்தை அது சம்பாதித்துக் கொண்டது பற்றிய சித்திரம் இதிலிருந்து தெளிவாகின்றது. இப்பின்னணியில் வைத்தே கீதா பிரஸ்ஸின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டை சூறையாடி வரும் ‘பார்ப்பன-கார்பரேட்’ நச்சுக் கூட்டணியின் வேர் எங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சூட்சுமம் இதிலிருக்கிறது.

ஜெயதயால் கோயந்த்கா

கீதா பிரஸ்ஸை நிறுவியது ஜெயதால் கோயந்த்கா என்ற மார்வாடி வணிகர். சிலகாலம் கழித்து ஹனுமன் பிரசாத் போதார் என்ற மற்றொரு மார்வாடி வணிகர் அவருடன் வந்து இணைகிறார். அவர் பிரம்மாண்டமானதொரு இந்துத்துவ வலையமைப்பையும், அச்சு சாம்ராஜ்யத்தையும் எப்படி உருவாக்கினார்? இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் அனைவரையும் மிகவும் நைச்சியமாக தனது சட்டகத்திற்குள் பொருத்தி, இந்து தேசியத்தின் நோக்கங்களை எவ்வாறு சாதித்துக் கொண்டார்? என்பதன் மீதே முகுலின் நூல் பெருமளவு கவனத்தை குவித்திருக்கிறது. கீதா பிரஸ்ஸின் செல்வாக்குப் புலத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஹனுமன் பிரசாத் போதாரை, அக்ஷய முகுல் ‘இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இந்து மிஷனரி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது ஏன் என்பது நூலை வாசித்து முடிக்கையில் துலக்கமாகி விடுகிறது.

பார்ப்பன பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டு, இன்று நாட்டில் கொழுந்து விட்டெரியும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ், ஹனுமன் போதார் ஆகியோரின் சுவடு வலுவாகப் பதிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான், வர்ணாஸ்ரம அமைப்பு, பசுப் பாதுகாப்பு, ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி, இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து, கர் வாப்ஸி (தாய் மதம் திரும்பல்) என நாட்டின் பாதுகாப்பையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் அச்சுறுத்தி வரும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ் ‘சங்கப் பரிவாரத்தின் காலாட்படை’யாகவே செயல்பட்டு வந்திருப்பதை, இதே பெயரில் அமைந்த ஒரு அத்தியாத்தில் நூலாசிரியர் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

ஹனுமன் பிரசாத் போதார்

அயோத்தியிலுள்ள பாபரி பள்ளிவாசலினுள் 1949 டிசம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் திடுமென முளைத்த ராமர் சிலை விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி பத்திரிக்கையாளரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான ராம் பகதூர் ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் தன்னிடம் கூறியதாக ‘அதிர்ச்சியூட்டும்’ உண்மை ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, அந்தச் சிலையை கள்ளத்தனமாக சுவரேறிக் குதித்து பள்ளிவாசலுக்குள் கொண்டு போய் வைப்பதற்கு முன்பாக சரயூ நதியில் அதனை புனித நீராட்டியிருக்கிறது நம்முடைய இந்து மஹா சபை கும்பல். அந்த புண்ணிய காரியத்துக்கு தலைமையேற்று நடத்திக் கொடுத்தது வேறு யாருமல்ல – கீதா பிரஸ்ஸின் உயர்திரு ஹனுமான் பிரசாத் போதார் அவர்கள்தான்.

சனாதன தர்மம் பேசும் இந்துத்துவ கும்பல் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் இக்கயமைத்தனத்தை அரங்கேற்றிவிட்டு, பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டுவது ‘ஒட்டுமொத்த இந்துக்களின் விருப்பம்’ என்று சகிக்க முடியாத சுரத்தில் பல்லவி பாடுகின்றது. அந்த இரவில் நடந்தது என்ன, அதன் பின்னணி என்ன என்பது பற்றி கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதியுள்ளவோர் நூல் இவர்களின் அழுகுணி ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. (‘அயோத்தி: இருண்ட இரவு, பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய வரலாறு’ (ஆங்.); தமிழில் இதனை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது). பாபரி பள்ளிவாசல் பிரச்சினை பற்றி கரிசனை கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

திருட்டுத்தனத்தை செய்துவிட்டு அப்பாவி போல், ‘சுயம்புவாகத் தோன்றிய ராமர் சிலையை அகற்ற முனையக் கூடாது’ என்பதை வலியுறுத்தி நாட்டின் ‘பிரபலங்களுக்கு’ கடிதம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டார் நம் சனாதன ஒழுக்க சீலர், போதார். ‘அவ்வாறு அகற்றிவிடும் பட்சத்தில், முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில்களை மீட்பது சாத்தியமில்லாமல் போய்விடும்’ என்ற பதைபதைப்பு வேறு அவருக்கு. இக்கயவர்கள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்பு, இன்றும் நாட்டை எரித்துப் பொசுக்கிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியுமா? இந்த அழகில் ‘இந்துக்களுக்கு’ ஒழுக்கப் பாடம் எடுப்பதற்காக இவர்கள் பதிப்பகம் நடத்துகிறார்களாம்.

இவர்களின் லட்சணத்தை நாட்டு மக்களிடம் வீச்சான பிரச்சாரங்களின் மூலம் எடுத்துச் சென்று, இந்துத்துவ கிரிமினல்களின் முகத்திரையை கிழித்தெறியத் துணிவில்லாமல், ‘விட்டுக் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமே’ என்று புழுவென நெளிகிறார்கள் சில ‘அறிவுஜீவிகள்’. நியாயத்துக்காகப் போராடும்படி மத-மொழி-இன வேறுபாடின்றி பரந்துபட்ட அளவில் வெகுமக்களை அணிதிரட்டுவதில்தான் உண்மையான சமூக நல்லிணக்கம் பிறக்க முடியுமேயோழிய, சமூக விரோதிகளின் கால்களில் விழுந்து, விட்டுவிடச் சொல்லி கெஞ்சுவதால் அல்ல.

கீதா பிரஸ்ஸின் பின்னணி, தொடர்புகள், கூட்டாளிகள், ஆசிரியக் குழு நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக அக்ஷய முகுல் இந்த வரலாற்று ஆய்வு நூலை, இந்துத்துவ அரசியலில் பங்காற்றும் சமூக, கலாச்சார, பொருளாதார, தனிமனித சக்திகள் பற்றிய நுட்பமான ஆய்வு நூலாக உருவாக்கியிருக்கிறார். பனியா மூலதனத்தால் முட்டுக் கொடுக்கப்படும் பார்ப்பன மேலாதிக்க செயற்திட்டத்துக்கு துலக்கமானவொரு எடுத்துக்காட்டுதான் கீதா பிரஸ்ஸின் பிறப்பும் வளர்ச்சியும். இச்செயற்திட்டத்தில் டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், குப்தாக்கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சதுர்வேதிகள், முகர்ஜிக்கள் என ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை எப்படி கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள் என்பது படம்பிடித்துக் காட்டப்படுகிறது.

கல்யாண் மற்றும் கல்யாண-கல்பதரு இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதாத அன்றைய முக்கிய ஆளுமைகள் எவருமில்லை என்று சொல்லுமளவு மிகப் பிரம்மாண்டமானதொரு வலையமைப்பை போதார் கட்டியெழுப்பினார். காந்தி, மதன் மோகன் மாளவியா, எஸ். சத்தியமூர்த்தி, இராஜாஜி, எஸ். இராதாகிருஷ்ணன், பட்டாபி சீத்தாராமையா, சம்பூராணந்த், கைலாஷ்நாத் கட்ஜூ, புருஷோத்தம்தாஸ் தாக்கூர்தாஸ், ரபீந்திரநாத் தாகூர், எம்.எஸ். கோல்வால்கர், வீர் சாவர்க்கர், லால்பஹதூர் சாஸ்திரி, டாக்டர் ராஜேந்திரபிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, ஸ்வாமி கர்பத்ரி மஹராஜ், பிரபுதத் பட்டாச்சார்ஜி, அன்னிபெசன்ட், வினோபா பாவே, காகா கலேல்கர், ஷிதிமோகன் சென் என்று முடிவில்லாமல் நீளும் ஒரு பட்டியலையும் அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகள் பற்றிய அறிமுகத்தையும் தருவதற்காக ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட தனியொரு அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் முகுல். காந்திக்கும் கீதா பிரஸ்ஸுக்கும் நடுவே நிலவிய நிலையான -அதேவேளை சிக்கலான- உறவு பற்றி நூல் தரும் தரவுகள், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திக்கும் நடுவில் நிலவிய முரணை விளங்கிக் கொள்வதை எளிதாக்குகின்றன.

கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதிய அனைவரும் அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுடன் கருத்துடன்பாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனினும், கீதா பிரஸ்ஸின் திசைவழி சனாதன தர்மத்தை நிலைநிறுத்துகின்ற, பார்ப்பன மேலாதிக்கத்தையும் அதன் குறியீடுகளையும் வலுப்படுத்துகின்ற தடத்திலேயே திடமாக நடைபோட்டு வந்துள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. போதார் இதனை மிகவும் சாணக்கியத்துடனும், விடாப்பிடியான உழைப்பின் மூலமும் சாதித்த நிகழ்ச்சித் தொடரை இந்நூல் வழியாக அறிந்துகொள்ள முடிகிற அதே வேளை, பார்ப்பன இந்து ராஷ்டிரத்துக்கான விதைகள் தூவப்பட்ட விதத்தையும் நம்மால் விரிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

வர்ணாஸ்ரம அமைப்பை எதிர்த்து ஓயாது கலகக்குரல் எழுப்பிய அம்பேத்கர், ‘இந்து சட்ட மசோதாவை’ நிறைவேற்றிய நேரு ஆகிய இருவர் மட்டும்தான் கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக ஒருபோதும் கட்டுரைகள் எழுதியதில்லை என்ற விடயம் நமக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. இவர்கள் இருவரையும் கீதா பிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்த்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவதூறையும் நஞ்சையும் கக்கியது.

கீதா பிரஸ் வெளியிட்ட நூல்கள், இதழ்களை மட்டுமின்றி அது ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ள சிறப்பிதழ்களையும் முகுல் விரிவாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்றைய இந்துத்துவ செயற்திட்டத்தை அவை எப்படி காலந்தோறும் வலுப்படுத்தி வந்துள்ளன என்பதை சிறப்பாக படம்பிடித்துக் காட்டுகிறார். மனாஸ் ஆங்க் (சிந்தனை), கௌ ஆங்க் (பசு), நாரி ஆங்க் (பெண்கள்), இந்து சன்ஸ்கிரிதி ஆங்க் (இந்துக் கலாச்சாரம்), பாலக் ஆங்க் (சிறுவர்), சிக்ஷா ஆங்க் (கல்வி), பக்தி ஆங்க் (பக்தி), உபாசனா ஆங்க் (வழிபாடு), தர்மா ஆங்க் (மதம்), பர்லோக் ஆவ்ர் புனர்ஜன்மா ஆங்க் (பரலோகமும் புனர்ஜென்மமும்), சதச்சார் ஆங்க் (நல்லொழுக்கம்), மாளவியா ஆங்க் (மதன் மோகன் மாளவியா) என அவற்றின் பட்டியல் நீளுகின்றது. சனாதன பக்தியோடு கலந்து பார்ப்பன மேலாதிக்க அரசியலை மக்களின் மனங்களில் திணிப்பதில் இவை ஆற்றிய பங்கு குறைவானதல்ல என்பது பற்றிய நிறைவானதொரு சித்திரம் முகுலின் பகுப்பாய்வை வாசிக்கையில் நம் மனங்களில் விரிகின்றது.

இந்துத்துவ முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் கீதா பிரஸ், ‘இந்துக்கள்’ அனைவரையும் ஓர் குடையின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டுமென்று தொடர்ந்து முழங்கி வருகின்றது. ஆனால், அது அனைவருக்கும் சுயமரியாதையுடன் கூடிய சம இடத்தை உறுதிசெய்யும் அமைப்பிலானவோர் ஒருங்கிணைவு அல்ல. மாறாக, வர்ணாஸ்ரம சாதிப் படிநிலையமைப்பில் பார்ப்பன-பனியா கூட்டணி ஒதுக்கித் தரும் இடத்தை, அது போட்டுத் தரும் நிபந்தனைகளின் பேரில், மற்றெல்லோரும் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்வதையே அது வலியுறுத்துகிறது.

சுதந்திர இந்தியாவுக்கென போதார் முன்வைத்த திட்டவரைவில் இடம்பெற்ற சில ‘சமூக நல்லிணக்க கருத்துக்கள்’ பின்வருமாறு:

“இராணுவத்தில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்”, “உயர் பதவிகள் எதிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்படக் கூடாது”, “அரசுக் கொள்கை என்ற அளவிலேயே பசுக் கொலை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்”, “காவிக் கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட வேண்டும்”, “தேவனகிரி வரிவடிவம் கொண்ட கலப்பற்ற இந்தி மொழியே தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டும்”, “இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் கலப்பற்ற இந்து தேசமாகவே இந்தியா இருக்க வேண்டும்”,…

கீதா பிரஸ் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலட்சிய வாழ்வு பற்றி அது கூறுவதைக் கேட்கும் எவருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கீதா பிரஸ் இந்துப் பெண்களுக்காக பரிந்துரைக்கும் ‘உன்னத ஒழுக்க விழுமியங்கள்’ பற்றி என்னுடன் வேலை செய்யும் வட இந்தியப் பெண்ணிடம் சொன்ன போது, “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்; தேடிப் போய் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்” என்று கொதித்தார்.

உதாரணத்திற்கு, மரணமடைந்து விட்ட கணவனோடு சேர்த்து மனைவியைக் கொளுத்தும் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) எனும் சனாதன தர்ம ‘பண்பாட்டை’ கூட அது வெட்கமின்றி இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது. கல்யாண் இதழின் தற்போதைய ஆசிரியர் ராதேஷ்யாம் கேம்கா, சதி எனும் சம்பிரதாயத்தின் சிறப்புகளை விரிவாகப் பட்டியலிடுவது மட்டுமின்றி, பண்டைய காலங்களில் கணவனை இழந்த மிக இளம் பெண்கள் கூட மனமுவந்து தம்மை எரியூட்டிக் கொண்டார்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார். 2011-ம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொல்வதைக் கேளுங்கள்:

“இந்தக் காலத்தில் அது (உடன்கட்டை ஏறுதல்) சாத்தியமில்லை. எனவே, விதவையானவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ஒரு சந்நியாசியைப் போல் தனது எஞ்சிய வாழ்வை கழிக்க வேண்டும். விதவை மறுமணம் என்பது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. காரணம் என்னவென்றால், ஒரு பெண் தனது பூர்வ ஜென்ம பாவங்களின் காரணமாகவே விதவையாகிறார். பாவங்களே துன்பம், துயரம், கஷ்டத்திற்குக் காரணம். அவற்றை மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் தனது பூர்வ ஜென்ம பாவங்களிலிருந்து விமோச்சனம் பெற முடியும். சாஸ்திரங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஒரு விதவை மறுமணம் செய்து கொள்வாரெனில், ஏற்கனவே செய்த பாவங்கள் கழிவதற்கு முன்பே புதிய பாவமொன்று அவளுடைய கணக்கில் சேர்ந்து கொள்கிறது. எதிர்காலத்தில் அவள் அதற்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டிவரும்.”

கீதா பிரஸ் வெளியீடான “இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும்?” என்ற நூலில் ஸ்வாமி ராம்ஷுக்தாஸ் கூறுவதைக் கேளுங்கள்:

“கணவனின் பிணத்தோடு சேர்த்து மனைவியை எரியூட்டுவது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல. அவள் மனதிற்குள் உண்மையும் உணர்ச்சிப் பெருக்கும் நுழையும் போது அவள் நெருப்பின்றியே எரிகிறாள். அவ்வாறு எரியும்போது வலியால் அவள் துன்புறுவதில்லை. அவள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல; அது அவளின் உண்மை நிலை, கற்பொழுக்கம், வேதப் பண்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் பாற்பட்டது… அது அவளுடைய மதப்பற்றினால் விளைவது. இது சம்பந்தமாக பிரபுதத்தா பிரம்மச்சாரிஜி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு, “கணவனின் பிணத்துடன் சேர்த்து மனைவியை எரியூட்டுவது இந்து மதத்தின் முதுகெலும்பு” என்பதாகும். அதனை கட்டாயம் படிக்க வேண்டும்.”

உடன்கட்டை ஏறுவதை ஆதரிப்பது மட்டுமல்ல; “வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டால் வெளியில் சொல்லக்கூடாது”, “கணவன் அடித்துத் துன்புறுத்துவதற்குக் காரணம் மனைவியின் பூர்வ ஜென்ம பாவங்கள்தான்” என்பது போன்ற சனாதன நல்லுரைகள் கீதா பிரஸ்ஸின் வெளியீடுகள் அனைத்திலும் குமட்டுமளவு நிரம்பி வழிகின்றன.

இவை எதுவும் பெரும்பான்மை ‘இந்து’ மக்களின் மத நம்பிக்கை சார்ந்தவை அல்ல; பார்ப்பன சனாதன மதத்தின் கருத்துக்கள் மட்டுமே. இவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதற்கு சனாதனவாதிகளுக்கிருக்கும் உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்து என்று சொல்லி இவற்றை எல்லோர் தலையிலும் கட்டப் பார்க்கிறார்கள் இந்த ஃபாசிஸ்டுகள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்றோர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சமரசமின்றி எதிர்த்தார்கள். பார்ப்பனப் புரட்டை சரியாகப் புரிந்து கொள்ளாதோர் மட்டுமே, “இது இந்து மதத்தின் உள்விவகாரமாயிற்றே; நாம் எப்படி அதில் தலையிடுவது?!” என்று தடுமாறுகிறார்கள். இதில் நாம் எந்த வகை?

பார்ப்பன பயங்கரவாதம் பற்றி, சனாதன அதர்மம் பற்றி, வர்ணாஸ்ரம இழிவு பற்றி பேசினால் ‘இந்துக்கள்’ மனம் புண்படும் என்று ஒதுங்கிக் கொள்வது பச்சை சந்தர்ப்பவாதமின்றி வேறு என்ன? அப்படியே இந்துத்துவ வாதிகளை எதிர்க்கக் கிளம்பினாலும், அவர்கள் ‘முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்’ என்பதை தாண்டி அந்த எதிர்ப்பின் பரப்பு நீளுவதில்லை. இவ்வாறு செய்வதால், அவர்கள் நாடுகின்ற ‘இந்துக்கள் vs. முஸ்லிம்கள்’ என்று எளிமைப்படுத்தப்பட்ட இருமை நிலைதான் வலுவடைகின்றது. மாற்றமாக, ‘இந்துக்கள்’ என்று சொல்லி பெருந்திரள் மக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனிய அறிவுக் கூலிப்படையை கரத்தை பிடித்திழுத்து எதிரில் நிறுத்தி முறியடிக்க வேண்டும். ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து அதைச் செய்யும்போது, பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அதே போல், பார்ப்பனியத்துக்கு முதலாளித்துவத்துடனும் நவ தாரளாவாதத்துடனும் இருக்கும் கள்ள உறவை அம்பலப்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பு முழுமை பெறாது என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.

எனவே முஸ்லிம்கள், தலித்துகள், மதச்சார்பின்மை வாதிகள், ஜனநாயகவாதிகள் என அனைவரும் -பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் சாதி, இன, மத, மொழி மக்கள் அனைவரும்- தமது ‘சமுதாயம்’, ‘இயக்கம்’ போன்ற வேறுபாடுகளைக் கடந்து, அநீதியின் ஊற்றுக் கண்ணான பார்ப்பனிய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, அதன் அடித்தளத்தை தகர்த்தெறிவதில் கவனத்தைக் குவிப்பது அவசியம்.

அநியாயம் இழைப்பவர் – இழைக்கப்படுபவர் இருவருக்குமே உதவ வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம். அநியாயம் இழைக்கப்படுபவருக்கு உதவ வேண்டுமென்பது புரிகிறது; அநியாயம் இழைப்பவருக்கு எப்படி உதவ முடியும்? அநியாயம் செய்பவரின் கரத்தைப் பிடித்து, அநீதி செய்யவிடாமல் தடுத்து, சுயஅழிவுப் பாதையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதே நாம் அவருக்கு செய்யத்தக்க உதவி.

இந்த வகையில், பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு நம் உதவி தேவையாயிருக்கிறது! செய்வோமா?

இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?

கல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லாத் துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.

முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.

அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்தப் பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.

முதலில் உறுதிமொழி,

1. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், காக்கி டவுசருக்கு எதிராக ஒரு போதும் சிந்திக்க மாட்டேன். கருப்பு சட்டைக்கு ஒரு போதும் துணைபோக மாட்டேன்.

2. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் முடிந்தவரை இழிவுபடுத்துவேன்.

3. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், RSS-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன். தேவைப்பட்டால் RSS-ன் ஆயுதமாக மாறி ஒரு தரப்பை மட்டும்கூட தாக்குவேன்.

4. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் அதிகாரத்தின் பக்கம் மட்டுமே நிற்பேன்.

5. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் RSS-க்குமான முரண்பாடுகளில் RSS பக்கம் மட்டுமே நிற்பேன்.

வளர்த்துக் கொள்ள வேண்டிய சில தகுதிகள்:

1. பா.ஜ.க.காரனிடம் பேட்டி எடுக்கையில் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே பேச வேண்டும்.

2. எதிர்க்கட்சிகளிடம் கேள்வி கேட்கையிலும் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே கேள்வி கேட்க வேண்டும். ‘நீ மட்டும் யோக்கியமா’ வகை கேள்விகள் சாலச்சிறந்தது.

3. இது மிக முக்கியமானது, உடல்மொழி ஒரு ஆகப்பெரும் தகுதி. நீங்கள் உரையாடுகையில் வெறும் 7 சதவிகிதச் செய்தியை மட்டுமே வார்த்தைகள் மூலம் புரியவைக்கிறீர்கள். மீதமுள்ள 93 சதம் செய்தியும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே எதிராளிக்குச் சென்று சேர்கிறது ஆகவே பா.ஜ.க.வுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக யார் பேசினாலும் அவர்களிடம் மிக சாதாரண கேள்விகளையும் ஒரு நக்கலான, மட்டம் தட்டும் வகையிலான உடல் மொழியில் கேட்கப் பழக வேண்டும்.

இதனால் எதிராளி உங்கள் உடல்மொழிக்கு பதிலளிக்க முயல்வார், பதற்றமடைவார்.

இதன்மூலம் விவாதத்தை திசை திருப்பலாம், பா.ஜ.க.வுக்கு எதிரான குற்றச்சாட்டை வலுவிழக்க வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை ஒரு மேதாவியாக எல்லோரையும் மடக்கும் வாதத் திறமையுள்ளவனாக உலகம் நம்பும்.

4. இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்தக் கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது. ஐ.எஸ், அல்காயிதா ஆகிய இயக்கங்கள் நடத்திய தாக்குதல்களில் 5 செய்திகளையாவது தினமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை சமையல் நிகழ்ச்சி நடத்தினாலும் குறிப்பிட மறக்கக் கூடாது.

5. மனிதாபிமானம், நியாய உணர்வு ஆகியவை அரை பர்செண்ட் கூட இருக்கக் கூடாது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு உங்கள் மனைவிக்கு ஒரு ஹேர்பின்கூட வாங்க முடியாது. பிறகெதற்கு இந்தக் கருமங்களைக் கட்டிச் சுமக்க வேண்டும்? (சுஷ்மா ஸ்வராஜுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த லிஸ்டில் வராது).

பாண்டே ஆவதற்கான தொழில்நுட்பங்கள் (உதாரணங்களுடன்):

1. விவாதத்துக்கான தலைப்பு பிரச்னையின் தீவிரத் தன்மையைக் கணிசமாக குறைப்பதாக இருக்க வேண்டும். தந்தி பேப்பரின் தலைப்புச் செய்திக்காகவா அது விற்பனையாகிறது? மூன்றாம் பக்க கள்ளக்காதல் செய்திதான் பேப்பரின் பலம். அதுபோல விவாதத்தின் தலைப்பும் செய்தியைச் சுட்டிக் காட்டவேண்டும், ஆனால் அதன் பொருள் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவதாக அமைய வேண்டும்.

ஆர்.கே நகர் தேர்தல் விதிமீறல்கள் பற்றிய விவாதங்களின் தலைப்பு இப்படி இருக்கலாம்.

  • ஆர்.கே நகரில் தேர்தல் விதிமீறல் இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது, வழக்கமான அரசியலா அல்லது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா?
  • ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் காரணம், தோல்வி பயமா அல்லது அக்கறையின்மையா?

இத்தகைய தலைப்புகள் எதிர்த்தரப்பை பெருமளவு தடுப்பாட்டம் ஆட வைக்கும். அதன்மூலம் ஆளும் தரப்பின் வேலையை எளிதாக்கலாம்.

2. நீங்கள் ஆய் போக ஆகும் நேரம் பத்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வயிறு நாளெல்லாம் உழைக்கிறது. அதுபோலவே காவி சேவைக்கான காலம் ஒன்றிரண்டு மணிநேரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம் மூளை நாளெல்லாம் உழைக்கவேண்டும். ஆகவே இந்துத்துவாவை ஒரு வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தியாகக் கருதாமல் ஒரு வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். இந்துத்துவா என்றதும் ஏதோ பெரிய ஃபார்முலாவோ என நினைத்து பயப்படவேண்டாம். வலியவனின் காலை நக்கு, எளியவனை எட்டி உதை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரம்சம். இது தெரியாமல்தான் பச்சமுத்து ஃபவுண்டேஷன் டிவி தொகுப்பாளர்கள் சிலர் மஹா சந்நிதானத்தின் சீற்றத்துக்கு ஆளானார்கள்.

ஆர்.எஸ்.எஸ்சை ஏன் எதிர்க்கிறீர்கள் எனும் கேள்வியை பின்வருமாறு கேட்கலாம்.

  • சுப்ரீம் கோர்ட்டே RSS ஒரு தீவிரவாத இயக்கமல்ல என்று சொல்லிவிட்ட பிறகும் நீங்கள் ஏன் அந்த இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லையா? இல்லையேல் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமே?
  • நைஜீரியாவில் தாக்குதல் நடத்தும் போகோ ஹாரம் இயக்கத்தை எதிர்க்காத நீங்கள் RSSஐ மட்டும் எதிர்ப்பதன் மர்மம் என்ன?

3. ஒருத்தனையும் முழுசாக பேசவிடாதீர்கள். பாஜக ஆட்கள் முழுசாக பேசிவிட்டால் நம் கொள்கைகள் அம்பலமாகி நாறிவிடும். அந்த மேன்ஹோல்கள் முழுசாகத் திறக்கப்பட்டுவிட்டால் அது எந்த செண்ட்டுக்கும் அடங்கமறுக்கும். எதிர்த்தரப்பை முழுமையாகப் பேசவிட்டாலும் இதுதான் கதி. அவர்களும் நம் சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைவார்கள்.

ஒரு விவாதம் என்பது நாம் சொல்ல விரும்பிய கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வழியேயன்றி அரங்கத்தில் பேசுபவர்கள் கருத்தைக் கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சியல்ல!

முசாபர் நகர் கலவரத்தில் ஏழை முஸ்லிம்கள் கொல்லப்பட்டு அகதிகளாக விரட்டப்படக் காரணம் என ஒருவர் பேசும்போது இடைமறித்து, ‘அப்போ பணக்கார முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?’ எனக் கேட்கலாம்.

4. ஓரளவுக்கு தரவுகளையும், நியாயத்தையும் முன்வைத்து பேசுவோருக்கு எதிராக கோமாளித்தனமும் திமிரும் கலந்து பேசும் RSS கல்யாணராமன் போன்ற சல்லிக் கிராக்கிகளை அமர வையுங்கள். இதன் மூலம் ஐன்ஸ்டீனையே தெருச்சண்டைக்காரனாக மாற்றிவிடமுடியும். ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது.

மேலும் இப்படியான கோளாறான விவாத அமைப்பின் மூலம் நல்ல முறையில் விவாதம் செய்பவர்கள் எனும் பெயரைப் பெற்ற நபர்களின் நன்மதிப்பைக் கணிசமாகச் சிதைக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.க கூடாரத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால் நம் நாக்பூர் நாதாரிகள் சங்கத்துக்கு எந்த சங்கடமும் வராது. ஆரோக்கியமான விவாதத்தில் ஒரு தொகுப்பாளரால் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்க முடியாது, விவாதத்தில் இருக்கும் எல்லோரையும் முட்டாளாக காட்டினால்தான் தொகுப்பாளனால் புத்திசாலியாக முடியும் என்கிறது பாண்டேயிசம்.

5. விவாதம் ஒரு சரியான முடிவை நோக்கி செல்லாமலிருப்பதை உறுதி செய்யுங்கள். விவாதத்தைப் பார்க்கும் பல ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே (பெண்களுக்கு சீரியலைப் போல). அதனைக் கெடுக்கக்கூடாது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவசியமில்லை, அதனைப் பழக்கப்படுத்தினால் போதும். முடிவற்ற விவாதங்கள் எப்போதும் மக்களைப் பிரச்னைக்குப் பழக்கப்படுத்தும் கருவியாக மட்டுமே இருக்கும். நாய்க்கு எதிர்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரியாது அதனால்தான் அது கொடுமைக்கார எஜமானனுக்கும் வாலாட்டுகிறது. மக்களையும் அப்படிப்பட்ட நாயாகத்தான் பாண்டேயாக விரும்புபவன் கருதவேண்டும்.

மேலும் சரியான விவாதம் ஒரு முடிவை நோக்கி செல்லும். அந்த முடிவு செயலாக மாறும. செயல் புரட்சியை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. கலாச்சாரம் பேசும் பாண்டேயிசத்தில் புரட்சி என்பது விலக்கப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள்.

6. கூமுட்டைகளையும், அறிவுபூர்வமான விவாதம் எப்படியிருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளக்கூட அக்கறையற்ற ஆஃப் பாயில்களையும் ஊக்குவியுங்கள். இதன் மூலம் பா.ஜ.க கூடாரத்து நபர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க முடியும். ஆதாரங்களோடு பேசமுடியாவிட்டாலும் நாமும் அறிவுஜீவியாகலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். அதனைக் கொண்டு ஒரிஜினல் அறிவுஜீவிகளுக்குப் பழிப்பு காட்ட முடியும்.

7. விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்னையைத் தனிப்பட்ட பிரச்னையாகவும், தனிப்பட்ட பிரச்னையைப் பொதுப் பிரச்னையாகவும் மாற்ற வேண்டும். இரண்டுக்குமான வெவ்வேறு அளவீடுகள் மக்களிடையே உண்டு. அதனால் பேசுவோரிடையே ஒரு குழப்பம் உருவாகும். அந்த கேப்பில் நான் ஒரு மீடியா டான் என பெயர் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.

குஜராத் கலவரம் ஒரு பொதுப் பிரச்னை. அதனை இரண்டு தரப்புக்கு இடையேயான கலவரமாக சித்தரித்து கேள்வி கேளுங்கள். மாட்டுக்கறி தின்பதும் திங்காததும் ஒருவனது தனிப்பட்ட பிரச்னை. ஆனால் மாட்டுக்கறி தின்றால் காயப்படப்போகும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு என்ன பதில் எனக் கேட்கலாம். இதனால் இந்துன்னா மாட்டுக்கறி தின்பதை எதிர்க்க வேண்டும் எனும் செய்தி பார்க்கும் வாசகன் மனதில் உருவாகும்.

8. விவாதத்தின் இடையே RSS ஒரு பண்பாட்டு அமைப்பு, அதற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை; பெரும்பான்மை இந்துக்கள் கோபப்பட்டால் சிறுபான்மையோர் கதி என்னாகும் தெரியுமா?; மதம் மாறிய தலித் மக்கள் இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா? என்பன போன்ற கருத்துகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்? பிழைக்க வேண்டுமானால் உங்கள் இருப்பை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தட்டில் தட்சணை விழும்.

9. எதிரணியானாலும் ஆள் பார்த்து பேசவேண்டும். குடியாத்தம் குமார், ஜெயராஜ் போன்ற ஆட்கள் சிக்கினால் அவர்களிடம் தி.மு.க மீதான மொத்த கடுப்பையும் இறக்கலாம். ஆனால் ஸ்டாலினிடம் பேசுகையில் அந்த சாயலே தெரியக்கூடாது.

ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவச் சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

10. அனைத்துக்கும் மேலாக கர்மா என்றொன்று இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். நீங்கள் என்னதான் மல்லாக்கப் படுத்து குட்டிக்கரணம் போட்டாலும் மீடியாவில் பிராமணன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு; பிற்படுத்தப்பட்டவன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டவன் அடையக் கூடிய உயரம் என்றொன்று உண்டு. அந்த விதிப்படி உங்கள் குலத்துக்கு உண்டான உயரத்துக்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கு மேலும் உங்கள் மனதில் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கில்லையா எனும் எண்ணம் எழுந்தால் உடனடியாகப் பயிற்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கெல்லாம் பாண்டேவின் பெயரை உச்சரிக்கும் தகுதிகூட கிடையாது.

பாண்டே ஒரு பொய் சொன்னா அது நூறு உண்மைகளைக் கொல்லணும்.

பாண்டே ஒரு உண்மையைச் சொன்னா அது உலகமே காறித்துப்பற மாதிரி இருக்கணும்.

பாண்டே ஒரு சேதி சொன்னா காதுல ரத்தம் வரணும்.

தென்னாட்டின் ஆர்னாப்,
முடி உள்ள துக்ளக் சோ,
சுப்ரமணியம் சாமியின் ஆல்டர் ஈகோ
பரம பூஜனிய ரங்கராஜ் பாண்டேஜிக்கு ஜே ஜே!

– வில்லவன்.

தி இந்து: போயஸ் தோட்டத்தின் மீடியா பூசாரி

தமிழ்ப் படங்களில் பட்டாபட்டி வேட்டி கட்டிய கிரிமினல்கள் அளவுக்கு, கோட்டு சூட்டு கிரிமினல்களை பார்க்க முடியாது. ஆள் பாதி ஆடை பாதி எனும் இமேஜை மூலதனமாகக் கொண்டே இன்றைய கிரிமினல்கள் ‘தொழில்’ செய்கிறார்கள்.

கோட்டு சூட்டு உளவியலை சாதகமாக பயன்படுத்தியே தமிழ் இந்து தினசரி தனது சந்தர்ப்பவாதத்தை வணிகம் செய்கிறது. இருப்பினும் எந்த ஒரு குற்றவாளியும் குற்றச் செயல் செய்யும் போது கண்டிப்பாக தடயங்களை மறந்து விட்டே செல்கிறான். அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.

“தி இந்து” மட்டும் தனது தோற்றத்திலேயே போயஸ் தோட்டத்தின் ஆசீர்வாதத்தோடு பிறந்தது. முதல் இதழ் அன்றே இவர்கள் அம்மாவின் விஷன் 2020 கனவுத் திட்டத்தை இலவச இணைப்பாக பக்தியுடன் வெளியிட்டார்கள். அ.தி.மு.க அமைச்சர்களே வெட்கப்படும்படியான புள்ளிவிவர துதிகளை வாழ்த்தாக வண்ணங்களில் இறைத்திருந்தார்கள்.

அதன்படி குமாரசாமி தீர்ப்பு இவாளுக்கு ஏற்படுத்திய குதூகலத்தை எழுத்தில் கொண்டு வருவது சிரமம்.

“ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் போலீஸ் குவிப்பு; காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்” என்று மே 11 தலைப்புச் செய்தியில் தி இந்து ஆரம்பிக்கிறது. இதில் வழக்கின் வரலாற்றை தொகுத்துக் கூறுகிறார்களாம்.

நீதிபதி குமாரசாமி குறித்த செய்தியில், “அனைத்து ஆவணங்களையும் சாட்சியங்களையும் வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுதியுள்ளார்.” என்று கூறுகிறார்கள். அவரது ஆய்வு, எழுத்து, திறன் அனைத்தும் தீர்ப்பு வருவதற்கு முன்பே “தி இந்து”வுக்கு எப்படி தெரியும்?

இவ்வளவிற்கும் ஏற்கனவே தீர்ப்பு எழுதிய குன்ஹா பகுதி வரும்போது “இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்” என்றே குறிப்பிடுகிறார்கள். வெளி வந்த தீர்ப்பில் ஆய்வு, எழுத்தை எதையும் பார்க்காதவர்கள் வெளிவராத தீர்ப்பில் மட்டும் அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

“உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு- பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர்” என்ற தலைப்பில் 11-ம் தேதி ஒரு செய்தி. அதில் ஓசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசு, 2 இலட்சம் மதிப்பில் அ.தி.மு.க செய்யும் இனிப்புகள், தலைவர்கள் போக வேண்டாம் என்று ஜெயா உத்திரவிட்டது எல்லாம் இருக்கிறது. தீர்ப்பு மாறி வந்தால் குன்ஹாவை அசிங்கப்படுத்தியது போல இப்போதும் செய்வார்களா என்று தி இந்து கேட்கவில்லை. முக்கியமாக இந்தத் தீர்ப்பிற்கு அ.தி.மு.க பட்டாசு வெடிக்கும் படத்தினை கோப்புக் காட்சி என்று போட்டு சேர்த்திருக்கிறார்கள். தீர்ப்பு வருமுன்னே கொண்டாட்டம் என்று எப்படி போட முடியும்? இதயத்தில் அம்மா விசுவாசம் இருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம் பேதமில்லை போலும்.

அதே நாளில் “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு” என்று மற்றுமொரு செய்தி. எதற்கு? நீதிபதி குமாரசாமி ஆய்வு செய்துதான் எழுதினார் என்ற பில்டப்பை நம்ப வைப்பதற்காக இந்த 900 என்ற எண்ணை தலைப்பில் போட்டிருக்கிறார்கள். உள்ளே 11 மணிக்கு தீர்ப்பு, 144 தடை, 1000 போலீசு, மோப்ப நாய்கள் என்று நிறைய எண்கள் இருக்கின்றன.

மேலும், பொறுமை காக்குமாறு ஜெயலலிதா கூறிய அறிக்கை, கர்நாடக எல்லையில் சுமூக சூழல், ‘அதிமுக நகரமான’ ஐ.டி சிட்டி பெங்களூரு’ என்றெல்லாம் மாறாத விசுவாசத்துடன் சில பல செய்திகளை போட்டிருக்கிறார்கள். இது அன்றி, “ஊழல் குறித்த வழக்குகளில் முக்கிய பதவியில் இருப்போர் தவறிழைத்தால் சட்டம் தண்டிக்குமா” போன்ற மேலோட்டமான பேச்சுகள் கூட அன்றைய தி இந்துவின் பக்கங்கள் எதிலும் இல்லை.

தீர்ப்பு வரும் நேரத்தில் நிகழ் நேரப் பதிவாக நேரலையில் செய்திகளை தருகிறார்கள். தீர்ப்பு வந்த பிறகு ஜெயாவுக்கு ஆதரவாக பிற கட்சி தலைவர்களது அறிக்கைகள் அதிகம் காட்டப்படுகின்றது. அன்று மாலை தீர்ப்பு குறித்து இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கேள்வியும் அதற்கான பதில்களையும் பாருங்கள்!

“சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது…

  • விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
  • பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
  • தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை

ஒரு நடுநிலைமை பத்திரிகையின் அம்மா விசுவாசம் துளியூண்டு வெட்க மானமின்றி அம்மணமாக ஆடுவதற்கு இதை விட எடுப்பான சான்று ஏது?

“ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்” என்ற தீர்ப்புக்கு முந்தைய செய்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஆஜராகி பிணை வாங்குவதற்கு தயாராக இருந்த வழக்கறிஞர் படை பற்றிய அறிவிப்பு இருக்கிறது. ஆனால் இதே போன்று தீர்ப்பு ஜெயாவை விடுதலை செய்தால் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க தரப்பு என்ன செய்வார்கள் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை.

“பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே: வழக்கறிஞர் ஆச்சார்யா”………. இந்த செய்தியில் ஆனானப்பட்ட ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்றது போன்ற தோற்றத்தை தருகிறார்கள். “தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு எனது கருத்துக்களை சொல்வேன்” என்கிறார் ஆச்சார்யா. செய்தியின் கடைசியில் ஆச்சார்யாவுடன் நேர்காணல் குறித்த தலைப்பு: “ஒரு தலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து” என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆச்சாரியா சொல்லும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து அறிவாளிகள் இந்த நாட்களில் எங்கேயும் எழுதவில்லை, விளக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தீர்ப்பு குறித்து “தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா” என்று செய்தி போடுபவர்கள், “ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து” என்று போடுகிறார்கள். அதாவது ஜெயலலிதா அறிக்கையில் தர்மம், நேர்மையைக் கொண்டு வந்தவர்கள், கருணாநிதியின் அறிக்கை தலைப்பில் எதையும் கொண்டு வரவில்லை. என்ன ஒரு நுட்பமான செய்தியாளர் வேலை! இத்தகைய தொழில் நேர்த்தியை மேல் மருவத்தூர் அருகே மனைகளை விற்கும் புரோக்கர்களிடமும் பார்க்கலாம் என்றாலும் மவுண்ட் ரோடு மஹா விஷ்ணுவின் டச் அற்பத்தனமானது.

“ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் ‘எண்கள்’”

இந்தத் தலைப்பில் ஏதோ கணித மேதை போல தீர்ப்பில் உள்ள ஏகப்பட்ட எண்களின் முக்கியத்துவத்தை அல்ஜிப்ரா ஆச்சரியத்தோடு விளக்குகிறார்கள். ஆனால் ஓரோன் ஒண்ணு எனும் சாதா வாய்ப்பாட்டையே கோட்டை விட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பிறகே இந்த ராமானுஜ பில்டப்பின் சூட்சுமம் புரிகிறது.

“திருப்புமுனை தீர்ப்பின் முக்கிய விவரங்கள்” என்ற செய்தியில் நீதிபதி குன்ஹா செய்த “மாபெரும்” தவறுகளை நீதிபதி குமாரசாமி எப்படி ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஆய்வு செய்து கண்டுபிடித்தார் என்பதாக விவரங்களையும், எண்களையும் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக தீர்ப்பின் முக்கிய விவரங்கள் என்று போடுவதற்கு பதிலாக திருப்புமுனை தீர்ப்பு என்று போட்டிருப்பதன் பொருள் என்ன?

“சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை” என்ற செய்தியில் 96-ம் ஆண்டில் சு.சாமி போட்ட வழக்கில் ஆரம்பத்தில் இருந்து, 2015- குமாரசாமி தீர்ப்பு வரைக்கும் ஆண்டு வாரியாக ‘முக்கிய’ நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார்கள். சரிங்க சார், அந்த முக்கிய நிகழ்வுகளில் வாய்தா ராணி வாய்தாவைப் பறித்த பல்வேறு போங்காட்டங்களில் ஒன்று கூடவா தெரியாது?

ஒருக்கால் நாளையே ஜெயா இல்லை மோடியோ தி இந்து அறிவாளிகளை இந்திய வரலாறோ இல்லை தமிழக வரலாறோ எழுத ஆணையிட்டால் எப்படி இருக்கும்? இட்டுக்கட்டி உருவாக்கும் வரலாற்று முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு தொழிற்முறை போட்டியாளரை சந்திப்பது உறுதி.

இது போக அ.தி.மு.கவினரின் ஆட்டம் பாட்டம், படங்கள், அம்மா மீண்டும் முதல்வராவதற்கு தடையேதும் இல்லை, எங்கே போட்டியிடுகிறார் இன்னபிற விட்டைகளுக்கு குறைவில்லை. எல்லாம் அதே ஜால்ரா விட்டைதான் என்பதால் கூறியன கூறி கூறி கூறி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை.

“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: இணையத்தில் எதிரொலித்த வாசகர் கருத்துகள்” இந்தச் செய்தியில் இணையவாசிகள் கருத்து என்று ஆறு பேர் எழுதியதை போட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் நேரடியாகவும், இரண்டு பேர் மறைமுகமாகவும் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். ஐந்து பேர் நேரடியாக கருணாநிதி, தி.மு.க ஊழலை குறிப்பிட்டு எதிர்த்துவிட்டு ஜெயா மீதான தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். தீர்ப்பு குறித்து இணையத்தின் கருத்து இதுவென்றால் குமராசாமியின் கணக்கில் மட்டும் என்ன தவறு காண முடியும்?

“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: பொதுமக்கள் கருத்து” இதில் ஐந்து பேர் ஜெயலலிதாவை ஆதரித்தும், ஒரு திருநங்கை மட்டும் ஜெயாவை எதிர்த்தும் கூறுகிறார்கள். ஆக இணையம் மட்டுமல்ல, மெய்யுலகத்திலும் அதேதான் என்று ‘நிறுவுகிறார்களாம்’. இதை உண்மையிலேயே கேட்டுத்தான் எழுதினார்கள் என்பதற்கு அந்த ஆறு பேர் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். சரி,சரி, அமீர்கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் லைவாக வந்து அழுதுவிட்டு போகும் துணை நடிகர்களை நம்புவர்கள் தி இந்து சேகரித்துதான் மக்கள் கருத்து என்று நம்பமாட்டார்களா என்ன?

மே 12 வாக்கில் குமாரசாமியின் கூட்டல் சதி எல்லா வகைகளிலும் வெளியே வந்தாலும் தி இந்துவின் எந்த பொந்திலும் அது குறித்த நேரடி செய்தி இல்லை. ஆக்ஸ்போர்டிலும், ஹார்வர்டிலும் கல்வி பயின்ற கனவான்கள் அந்த தீர்ப்பின் கூட்டல் பக்கங்களை படித்து இதுதான் உண்மை என்று மூச்சு கூட விடவில்லை. மாறாக அதைச் சொன்ன எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை மட்டும் வேண்டா விருப்பாக அவ்வப்போது போட்டுக் கொண்டார்கள்.

கூடவே பா.ஜ.க மோடி, தமிழிசை பிற கட்சி தலைவர்கள், வேல் முருகன், சே.கு தமிரசன் போன்ற அடிமைகளின் வாழ்த்துக்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டார்கள்.

“மறுவருகை நல்லதாக அமையட்டும்!” என்று மே 13 தலையங்கம் தீட்டுகிறார்கள். அதில் எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்தி வென்ற ஜெயா வின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக எழுதுகிறார்கள்.

“அவர் பதவியில் இல்லாத காலகட்டத்தில் தமிழக நிர்வாகத்தில் பெரும் உறைநிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் வளர்ச்சி ஓட்டத்தில் முன்வரிசையில் இருக்கும் தமிழகம், இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சுணங்கியிருக்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து, அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் இப்போது மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.”

ஆசிரியர் அசோகனின் அயோக்கியத்தனத்திற்கு சிறப்பான விளக்கம் ஏதும் தேவையா?

“ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியானது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.”

என்ற செய்தியை வெளியிட்ட தி இந்து அறிவாளிகளுக்கு மட்டும் அந்தக் கேள்வி ஏன் எழாது, நமக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து விட்டு மாநிலமே மறு வருகைக்கு காத்திருக்கிறது என்று எழுதுவதற்கு உடல் முழுக்க கரைக்க முடியாத கொழுப்பு நிரம்பி வழிய வேண்டும்.

“இணையகளம்: ‘ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!’” மீண்டும் இணையத்தை வைத்து நகைச்சுவையாக காட்டுகிறார்களாம்.

இதில் ஓ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் கருத்துக்கள் அல்லது அரசியலற்ற முறையில் இத்தீர்ப்பு குறித்து எழுதப்பட்ட கருத்துக்கள் அதில் அதிஷா, பாலபாரதி, மாலன், அராத்து என்று பலரையும் எடுத்துக் கொள்கிறார்கள். எதிர்த்து எழுதப்பட்ட ஓரிரண்டு கருத்துக்கள் கூட நேரடியாக புரியாத வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இணையம் என்றால் அம்மா ஜால்ராதான் என்று சொல்வது தி இந்துவுக்கு ஓகே. உண்மையான இணைய மக்களுக்கு எப்படி?

“ஜெயலலிதா விடுதலை எதிரொலி: மெட்ரோ ரயில் விரைவில் தொடக்கம்?- அதிகாரிகள் நம்பிக்கை” என்ற செய்தியைப் பாருங்கள்! ஒருவேளை ஜெயலலிதா குற்றவாளி என்று மீண்டும் தீர்க்களிக்கப்பட்டால் மெட்ரோ ரயில் வரவே வராதா? ஜெயா விடுதலை ஆனால்தான் தமிழகத்தில் மெட்ரோ ரெயில் ஓடுமென்றால் அது கடுமையான விமரிசனத்திற்குரியதே அன்றி தி இந்து பார்வையின் படி அம்மா விடுதலையாகும் போதே ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று பொய்யுரைப்பதல்ல.

“மீண்டும் முதல்வர் பதவி: ‘நிதானம்’ காட்டுகிறாரா ஜெயலலிதா?” மே 14-ம் தேதி இந்த செய்தியை வெளியிடும் போது கூட்டல் பிரச்சினையில் போயஸ் தோட்டமே சோகத்தில் இருந்தது. அந்த சோகத்தையே ஜெயாவின் மதி நுட்பமாக மாற்றி எழுதுகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு போகும் முன்னரே ஜெயா இந்த பிரச்சினையை கண்டு பிடித்து விட்டாராம். அதனால்தான் அவர் பால்கனியில் நின்று டாடா காட்டவில்லையாம். கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யுமா என்ற முடிவுக்கேற்பவே அவரது ராஜந்திர அசைவுகள் இருக்குமாம். இந்த செய்தி அச்சு நாளிதழில் அல்ல, இணையத்தில் மட்டும். இங்கேதான் முதன்முறையாக அந்த கூட்டல் அபத்தத்தை வரை படமாக போட்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜெயா கும்பலின் கொண்டாட்டத்தை கேலி செய்ய வேண்டிய செய்தியில் குமாரசாமியின் அபத்தத்தை அம்மா கண்டுபிடித்தார் என்று தத்துவஞானி போல காட்டுவதற்கு இவர்கள் தினசரி என்ன லேகியம் சாப்பிடுகிறார்கள் தெரியவில்லை.

ஊழலை மறைப்பதுதான் அறம் – தி இந்துவின் இலவச இணைப்பு ஆசிரியர் அரவிந்தன்

“அறம் சார்ந்த கனவு பலிக்குமா?” இந்தக் கட்டுரையின் தலைப்பே மிரட்டலாக உள்ளதா? தி இந்துவின் இலவச இணைப்புகளின் இன்சார்ஜ் ஸ்ரீமான் அரவிந்தன் என்பவர் எழுதிய நடுப்பக்க கட்டுரை இது. ஆர்.எஸ்.எஸ்-ல் தேசபக்தியையும், காலச்சுவடில் இலக்கியத்தையும் கண்டு கொண்டவர் தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்?

முதலில் ஓ.பன்னீரின் பரிதாபத்தை படிமாக்குகிறார். அது எந்த அளவுக்கு போகிறது என்றால் ராமனின் பாதுகையை வைத்து ஆட்சி புரிந்த பரதன்தான் ஓ.பி என்கிறார். இதைக் கம்பன் கேட்டிருந்தால் கதறக் கதற தீக்குளித்து செத்திருப்பான். அடுத்து இந்த வழக்கோடு ஜெயாவை குளோஸ் செய்து தமிழக அரசியலை மையம் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்த தலைவர்கள் மண்ணைக் கவ்வியதாக, ஏதோ அமர்த்யா சென் போல ஆய்வு செய்கிறாராம். அம்மாவை புகழணும் என்று ஆரம்பித்தாலே அது ஒரு ரத்தத்தின் ரத்தத்திற்கே இப்படித்தான் ஆரம்பிக்கும் என்று இந்த அறிவாளிக்கு தெரியவில்லை.

பிறகு தீர்ப்பு குறித்த கேள்விகள், கூட்டல் பிரச்சினைகள், குன்ஹா-குமாராசமி முரண்பாடு என்று விருப்பு வெறுப்பு இல்லாதது போல கவனமாக வார்த்தைகளை போட்டு என்னமோ கேள்விகள், வினாக்கள், கேள்விக்குறிகள் என்று தீட்டுகிறார். அய்யா சாமி இந்த விவகாரத்தில் உமது அபிப்ராயம் அல்லது மதிப்பீடு என்ன என்று விளக்கெண்ணெயில் மூழ்கி பார்த்தாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது.

கடைசியாக சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க வேண்டும் என்று கூறி இந்திய வெளியில் அறம், அறம் சார்ந்த கனவு, அதை இழக்க முடியாது, அறம்தான் நமது மீட்சிக்கு வழி என்று ஒருவாக்கியத்தில் ஏகப்பட்ட அறங்களை போட்டு ஜெயமோகனது கின்னஸ் சாதனையை (அதிகம் அறம் போட்டு எழுதுவதில்) முறியடிக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயாவின் ஊழல் சொத்து, அவரை விடுதலை செய்த குமாரசாமி, உதவிய உச்சநீதிமன்றம் என்ற எளிய விசயத்தில் கம்பெனியின் எடிட்டோரியில் பாலிசியை அதாவது சொம்பு தூக்குவதை கலந்து எழுதுவதை இப்படி கண்றாவியாகவா செய்ய வேண்டும்?

அரவிந்தனே இப்படி படாதபாடுபடும் போது அவரைக் காப்பாற்ற தி இந்துவின் நடுபக்க மேனேஜர் சம்ஸ் அடுத்து ஆஜராகிறார்.

“இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன?”

என்ன சமஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறாதா? அவசரப்படாதீர்கள். பசி வந்து விட்டது என்பதற்காக ஆடுகள் வேட்டைக்கு கிளம்புவதில்லை. இந்த வார்த்தைகள் ஜெயாவின் வழக்கு குறித்து அல்ல. சல்மான்கான் வழக்கிற்காக திருவாளர் சம்ஸ் பொங்கியது.

சட்டமும், நீதியும் மேட்டுக் குடியினருக்குத்தான், சாமானியருக்கு அல்ல என்று சல்மான்கானையும், பேரறிவாளனையும் ஒப்பிட்டு பாதுகாப்பாக எழுதிய அண்ணன் சமஸ் ஜெயா வழக்கு குறித்து என்ன எழுதினார்?

பேனை பெருமாளாக்கும் நாங்கள் ஊழல் குற்றத்தை மக்கள் செல்வாக்காக மாற்ற மாட்டோமா? ஆசிரியர் அசோகனுடன் சமஸ்

“இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16-ல் அவர் எழுதியிருப்பது சாராம்சத்தில் அரவிந்தன் எழுதியவையே! எடிட்டோரியல் பாலிஸி எனும் போது அதில் வடக்கு தெற்கு பேதம் மட்டுமல்ல, சுவாரசியமும் இல்லை என்பது சம்ஸ் எழுத்தில் சலங்கை கட்டி ஆடுகிறது.

என்றாலும் காவடி தூக்குவதில் ஒரிஜினல் பார்ப்பனர்களை விட புதுப்பார்ப்பனர்கள் தலை சிறந்தவர்கள் என்பதால் இங்கே சமஸ் நேரடியாகவே அம்மான்னா சும்மாவா என்று எகிறுகிறார்.

இதைப்பற்றி தனியாக எழுதவேண்டும் என்றாலும் சிற்சில. பாராளுமன்றத்தின் பணித்திறனில் மாற்றம் வந்திருக்கிறது என்று பூரிக்கும் சமஸ் (நில அபகரிப்பு சட்டத்தின் அமலாக்கம் போன்ற பணித்திறன்) மோடிக்கு ஜே போட்டு விட்டு தமிழகத்திற்கு திரும்புகிறார். இங்கே எதிர்க்கட்சிகள் எவையும் ஒரு தெருமுனைக்கூட்டம் கூட நடத்த வக்கற்று இருப்பதாக கேலி செய்கிறார்.

நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் ஜெயாவை வீழ்த்த முடியாது என்று ஒரு தேர்ந்த பூசாரி போல குறி சொல்கிறார். ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்கிற்கு 5 அல்லது 10 ஆயிரங்கள் அள்ளிக் கொடுத்து பறித்த வெற்றி போல அடுத்த பொதுத்தேர்தலில் அம்மா பெறப்போகும் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஈட்ட முடியுமா என்று சவால் விடுகிறார்?

இதன் படி அம்மா மாதிரி அனைவரும் சுருட்டினால்தான் செலவழிக்க முடியும் என்பதை மறைப்பதற்கு கொள்கை, செல்வாக்கு, திறமை, நேர்மை என்று எழுதுவதை நிச்சயமாக உப்பு போட்டு தின்னும் ஒரு மனிதனால் முடியவே முடியாது. சமஸிற்கு முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் சாதனை என்ன? ஜெயா சசி கும்பல் இறக்கிய பல கோடி பணம், பல முன்னணி வழக்கறிஞர்கள், பா.ஜ.க மற்றும் நீதித்துறை கவனிப்புகள் என்று பச்சையான அயோக்கியத்தனத்தின் மூலமே பல்வேறு வாய்தாக்கள், வாதங்கள் என்று இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வில்லத்தனத்தையே “சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று எழுதுவற்கு எவ்வளவு கற்பனை வளம் வேண்டும்?

இதை தொடராக இரா.வினோத் எனும் அடிப்பொடி அய்யாதான் எழுதுகிறார். இவர்தான் இந்த ஊழல் வழக்கின் இறுதி நாட்களை சுடச்சுட அனுப்பியவர். சூடு இருப்பதால் அது ஊசிப்போன கெட்டுப்போன உணவு எனும் உண்மையை மாற்ற முடியாது.

தினமணி வைத்தியுடன் தி இந்துவின் சமஸ் – ஜெயாவின் ஊடக பூசாரிகள்!

இந்த தொடரில் அ.தி.மு.க வக்கீல்கள் அங்கே எப்படி ஆண்டுக் கணக்கில் ஓட்டலில் தங்கி, வீட்டை பிரிந்து, எடுப்பு சாப்பாடு சாப்பிட்டு பயங்கரமாக வேலை செய்து இந்த வழக்கில் வெற்றி பெற்றார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் எழுதுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சீ…………. என்று சொல்லிவிட்டு மேலே போகலாம்.

இன்னொரு கட்டுரையில் குமாரசாமியின் கூட்டல் தவறு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் மற்ற வாதங்கள், விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஜெயாவை விடுதலை செய்தது செல்லுமாம். இதை அறிந்த உடன்தான் எதிர்க்கட்சிகள் அடக்கி வாசிக்கின்றன என்று நம்பியாரே யோசித்திராத கோணத்தில் அடித்து விடுகிறார்கள்.

ஜெயா சசி கும்பல் தமிழகத்தை ஆண்டு ஊழல் செய்து சம்பாதித்து அதை சட்டப்பூர்வமாகவும் தவறு இல்லை என்று நிலை நாட்டியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட சாதனை அல்ல.

நாட்டின் அனைத்துத் துறைகளும் இவர்களுக்கு சேவை செய்திருக்கின்றன. குமாரசாமி தீர்ப்பால் நீதித்துறை மட்டுமல்ல, தி இந்துவின் செய்திகளை தொகுத்து பார்க்கும் போது ஊடகத்துறையும் ஊழல் மயமாகிவிட்டதை எவரும் அறிய முடியும்.

(நன்றி: வினவு)

எங்கே மறைந்து போனீர்கள், வினோத்?

அவுட்லுக் இதழ் துவங்கிய காலம் முதல் அதன் ஆசிரியாக நீண்டகாலம் செயல்பட்ட வினோத் மேத்தா மார்ச் 8-ம் தேதி காலமானார். அவுட்லுக் ஒரு கார்ப்பரேட் ஊடகம் என்றாலும் இந்தியா டுடே போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஊடகங்களின் அறமற்ற பார்வையிலிருந்து சற்றே வேறுபட்டது. சரியாகச் சொன்னால் இந்த வேறுபாட்டின் அடிப்படை வினோத் மேத்தா என்பதே சரி.பரபரப்பான செய்திகள், நுகர்வுக் கலாச்சாரம், மசாலா சினிமா என்று அநேக விசயங்களில் அவுட்லுக்கும் மற்றுமொரு வணிக ஊடகம்தான். ஆனால் பல்வேறு தருணங்களில் அவ்விதழ் அரசியல் பிரச்சினைகளில் அதிகார மட்டங்களை கேள்வி கேட்டும், ஆளும் வர்க்கத்தின் அலை வரிசையிலிருந்து ஓரளவு விலகி நின்றும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றது.

இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் மையநீரோட்ட ஊடகங்களில் அவுட்லுக் முதன்மையானது. இன்று மோடியின் ஆட்சியிலும் கூட அத்தகைய பெருமையை அவுட்லுக் தக்கவைத்து வருகிறது. இதனால் இன்றும் அவ்விதழை இந்துமதவெறியர் மட்டுமல்ல அதன் வாசகர்களில் பலர் கூட எதிர்க்கின்றனர். வசைமாரி பொழிகின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துமதவெறி எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் ஊக்கசக்தியாக திகழும் அருந்ததி ராயின் கட்டுரைகள் பல அவுட்லுக்கில் வெளியாயின. இவற்றை வெளியிடும் தைரியம் வேறு எந்த ஆசிரியருக்கு இருக்கிறது என்றால் பதில் இல்லை. ஒருக்கால் இந்தக்கட்டுரையில் அருந்ததி ராய் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இன்றைய அவரது இடத்தை உருவாக்கிய பாதையில் அவுட்லுக்கின் பங்களிப்பும் இருக்கிறது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது, அதற்கு எதிரான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரையை அவுட்லுக் வெளியிட்டது. மாவோயிஸ்ட் தோழர் ஆசாத் பேச்சுவார்த்தைக்கு என்று அழைக்கப்பட்டு பின்னர் நயவஞ்சகமாக கொன்றழிக்கப்ப்பட்ட போது, அந்த போலி மோதல் கொலையை அம்பலப்படுத்தி அவுட்லுக் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.

மிக சமீபத்தில் கூட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி மோதல் கொலைகள் பற்றிய விரிவான கட்டுரை அவுட்லுக்கில் இடம்பெற்றது. அந்தக் கட்டுரை பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா எப்பேர்பட்ட கிரிமினல் என்பதை ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்தியது.

வினோத் மேத்தா முதலாளித்துவ ஜனநாயகத்தையே அதிகபட்ச சாத்தியமாக சரி என்பதாக ஏற்றுக் கொண்டவர். எனினும் சொல்லிக் கொள்ளப்பட்ட இந்த ஜனநாயகம் சந்தி சிரிக்கும் போது அவற்றை கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை. இத்தகைய குறைந்தபட்ச நேர்மை கூட இன்றைய ஊடக ஜாம்பவான்கள் பலரிடம் இல்லை. இந்த அளவாவது அவரிடம் ஒரு சமூகப்பார்வை இருந்தது.

அவுட்லுக் இதழை தொடங்கிய போது தனது பத்திரிக்கையின் அரசியல் மைய இடதுசாரி (left of centre) நிலை என்று அறிவித்தார். ஆனால் அப்படி ஒதுங்க ஒரு இடம் இல்லை என்பது பிற்பாடு அருந்ததி ராய்-க்கு அவர் அளித்த ஊடக முக்கியத்துவம் உணர்த்தியது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அவரது பார்வைக்கு எதிர்திசையிலான டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லி வந்தார். அர்னாபின் குறுக்கீடுகளுக்கு நடுவே இருமிக் கொண்டும், மூச்சிரைத்துக் கொண்டும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தன. தற்செயலாக அவரது மறைவின் போது அதே அர்னாப்பை திரைகிழித்து அவுட்லுக்கில் ஒரு அட்டைப்படக் கட்டுரையே வெளிவந்தது.

அருந்ததி ராய் தனக்கும் வினோத் மேத்தாவுக்கும் இடையே இருந்த அரசியல் உறவையும், அழகிய நட்பையும் குறித்து எழுதிய நினைவஞ்சலியின் தமிழாக்கம் இது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு இந்துத்துவம் மேலும் மேலும் தனது இருப்பை உறுதி செய்து வருகின்ற நேரத்தில் அதன் பேராபத்தை மக்களுக்கு இடைவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊடகவியலாளரின் மரணம் குறித்த அருந்ததி ராயின் இந்த அஞ்சலிக் குறிப்பை படிக்கும் போது நமது இதயம் மேலும் கனக்கிறது.

– வினவு

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளை அவுட்லுக்கில் வெளியிட்டு ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியர் செய்ய வேண்டியதை செய்தார், வினோத் மேத்தா. அதன் மூலம், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஊடக புரோக்கர்கள் மற்றும் அவர்களது கார்ப்பரேட் புரவலர்களுக்கு இடையேயான கூட்டுப்புணர்ச்சியின் இழிந்த டைரிக்குறிப்புகளை அம்பலப்படுத்தினார். அவ்வாறு, நாட்டை ஆளும் குற்றக் கும்பல் தங்கள் நலனுக்காக உருவாக்கி வைத்திருந்த மேட்டுக்குடி மன்றத்தின் விதிகளை மீறினார். அந்த நாடகம் முடிவுக்கு வந்து திரை விழுந்த போது, அதில் பங்கேற்ற பாத்திரங்களின் மேல் நோக்கிய உத்வேகத்தில் அது ஒரு சிறு அசௌகரியமான தேக்கமாக மட்டும் முடிந்தது என்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்காக வினோத் மேத்தா எதிர்கொண்ட பின்விளைவுகள் தீவிரமானவை. அவரது வாழ்வை வேகமாக முடித்து வைக்க அவையும் ஒரு பங்காற்றியிருந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.

எப்படியோ அவர் சென்று விட்டார். அவரோடு தடுமாற்றமில்லாத, ஊகிக்க முடியாத, விசித்திரமான பத்திரிகை ஆசிரியரின் சகாப்தமும் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற விசித்திரமான நபர்கள் யாரும் இனிமேல் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவு.

அவரது மறைவை ஒட்டி பெருமளவில் வெளியான இரங்கல் செய்திகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்தன. அவர்களில் அவருடன் தொழில்ரீதியாக எதிர்துருவங்களாக இருந்தவர்களும் உண்டு. அவை அவரது மறைவுக்காக மட்டுமின்றி, அவரைப் போன்ற சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவுக்கானதாகவும் இருந்தன.

ஒரு வகையில் வினோத் மேத்தா மாதிரியான கலகவாதிக்கு இடம் கொடுத்ததன் மூலம் அவுட்லுக் இதழின் உரிமையாளர்கள் தமக்குத் தாமே சிறப்பு சேர்த்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அலுவலகங்கள் பலமுறை தாக்கப்பட்ட போதும், பழிவாங்கும் வகையிலான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் வினோத் மேத்தாவை விட்டுக் கொடுக்கவில்லை. வினோத்துக்கு இரங்கல் தெரிவிக்கின்ற நம்மைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை விட்டு விட முடியவில்லை.

நான் வினோத்தின் இழப்பை மிகவும் அதிகமாக உணர்வேன். ஒரு எழுத்தாளராக எனது வாழ்க்கையில் மிகமுக்கிய பங்கை ஆற்றியவர் அவர்.

எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து இருந்ததில்லைதான்; பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. காங்கிரஸ் குறித்து, காஷ்மீர் குறித்து (அது இல்லாமலா!), சாதிய அரசியல் குறித்து, வினோதமானதும் சமீபத்தில் மீள எழுதப்பட்டதுமான அவரது “மீனா குமாரியின் வாழ்க்கை வரலாறு” புத்தகம் என்று வேறுபடும் புள்ளிகள் நிறைய இருந்தன. ஆனால், இப்போதைய கருத்து வேறுபாடு நிரந்தரமானது; தீர்க்கமுடியாதது. அவர் போயிருக்கக் கூடாது என்கிறேன் நான்; இன்னும் கொஞ்ச காலம் அவர் நம்மோடு இருந்திருக்கலாம். ஆனால், அவர் நான் கருதுவதை ஏற்றுக் கொள்ளாமல் போயே விட்டிருக்கிறார். இது அபத்தமானது; அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

என்னுடைய படைப்புகளுக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை.

1997-ல் என்னுடைய ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ வெளியான பிறகு, மேற்கத்திய ஊடகங்களுக்கு கிழக்கு உலகைப் பற்றி விளக்கிச் சொல்லும் முகவராக மாறிவிடும் அபாயத்தில் நான் இருந்தேன். அத்தகைய பங்களிப்பு செய்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் என்ன எழுதினாலும், எந்த வகையான விவாதங்களுக்குள் சிக்கிக் கொள்வதாக இருந்தாலும், எந்த களேபரத்தில் ஈடுபட விரும்பினாலும் அதை இங்கே செய்ய விரும்பினேன். எந்த ஒரு தேசியப் பெருமிதத்துக்கான காரணத்தாலோ, இது என்னுடைய நாடு என்ற உணர்வாலோ இல்லை; நான் வாழும் இடம் இது என்ற எளிமையான காரணத்தால் மட்டுமே. வினோத் மேத்தா என்னுடைய இந்த முயற்சியின் கூட்டாளி ஆனார். 1998-க்கு பிறகு நான் எழுதிய அனைத்தும் முதலில் அவுட்லுக்கில் தான் வெளியாகின.

எங்கள் உறவின் மிகத் தொடக்கத்திலே, இதற்கு மாறாக பல கருத்துகள் சொல்லப்பட்டாலும் (அப்படி நிறைய உள்ளன), நாங்கள் யாரும் மற்றவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று புரிந்து கொண்டிருந்தோம். எந்த உறவிலும் இது அபூர்வமான, அழகான ஒன்று என்று கருதுகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம். நான் அவர் வீட்டுக்கு சென்றதே இல்லை. என்னை பார்க்க ஒரே ஒருமுறை மட்டும் சமீபத்தில் வந்தார்.

என்னைப் பார்க்க வந்தார் என்று சொல்வதைக் காட்டிலும் என் வீட்டை பார்வையிட வந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். நான் எப்படி வாழ்கிறேன் என்று தனது மனதில் உருவாக்கிக் கொண்ட சித்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வந்தது போன்று இருந்தது, அவரது வருகை. அலட்டிக் கொள்ளாமல் தனது முதுமையின் தடுமாற்றத்துடன் வந்தவர் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு மறைந்து விட்டார். விருந்தினர் பாத்திரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை; விருந்து உபச்சாரம் செய்யும் பாத்திரம் எனக்கும் பொருந்தவில்லை; நாங்கள் எந்த வகையிலும் அதற்கு பொருத்தமற்றவர்கள். எங்கள் இருவரிடையேயான சமூக உறவாடல் இந்த அளவுக்குத்தான் இருந்தது.

நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம்.

இருப்பினும், இந்த வினோதமான, உரையாடலற்ற, குறைந்தபட்சமான உறவுமுறையிலிருந்துதான் ஐந்து பகுதிகளாக வெளியிடப்படும் அளவிலான கட்டுரைகளும், நேர்முகங்களும் படைக்கப்பட்டன. அவை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் செய்தித் தாள்களிலும், செய்தி இதழ்களிலும் வெளியிடப்பட்டன. இவற்றின் படைப்புக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை. கட்டுரைகளை நான்தான் எழுதினேன். ஆனால், “நான் என்ன எழுதினாலும், அதை வரையறுக்கப்பட்ட ஒரு இதழியல் வடிவத்துக்குள் மட்டுறுத்தாமல் வினோத் மேத்தா வெளியிடுவார்” என்ற நம்பிக்கைதான் எழுதுவதற்கான சுதந்திரத்தையும், வேகத்தையும் எனக்குக் கொடுத்தது. இது எளிதில் கிடைத்து விடுவது அல்ல. இப்போதும், எப்போதும் ஒரு வெகுஜன வாசகப்பரப்பை குறிவைக்கும் பெரிய வணிக இதழ், அவுட்லுக். அதன் பலம் அதுதான். இருப்பினும், என்னுடைய, மரபை மீறுகின்ற, மிக நீண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, பெரும்பாலும் புயலைக் கிளப்பும் கட்டுரைகளை பிரசுரிக்கும் தன்னம்பிக்கையும், நெகிழ்வுத் தன்மையும் வினோதிடம் இருந்தன.

இதற்கான விதிகள் ஆரம்பத்திலேயே வகுக்கப்பட்டு விட்டன. 1998-ல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு எதிர்வினையாக நான் எழுதி அனுப்பிய ‘சிந்தனையின் முடிவு’ கட்டுரையில் “‘யார் இந்த நாசமாப் போன பிரதமர், அணுகுண்டுக்கான பொத்தானில் கை வைக்கும் உரிமையைப் பெற’” என்ற வரியைப் படித்து விட்டு, “இப்படி உண்மையிலேயே சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது அதை ‘யார் இந்தப் பிரதமர்?’ என்று மாற்றிக் கொள்ளவா?” என்று கேட்டார். “அப்படி மாற்றுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை” என்றேன், நான். எனவே ‘யார் இந்த நாசமாப் போன பிரதமர்?’ என்ற வாக்கியம் அப்படியே வெளிவந்தது.

இப்போது, உதவி கேட்க வேண்டியது என்னுடைய முறை. அந்தக் கட்டுரை வெளியாவதை ஒட்டி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பாதையில் நடப்பதைப் போல உணர்ந்த நான், “இந்தக் கட்டுரை வெளியாகும் இதழின் அட்டையில் என்னுடய புகைப்படத்தை போடுவதை தவிர்க்க இயலுமா?” என்று வினோதிடம் கேட்டேன். “என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்றார் அவர். அவரது மொழியில் அதற்குப் பொருள், “அதுக்கு வேறு இடம் பார்த்துக்கோ”. இதழ் வெளியானபோது, அதன் அட்டையில் என் புகைப்படமும், அதன் மேல் கட்டுரையின் மிக விவகாரமான வரி கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது : “நான் பிரிந்து செல்கிறேன்”. அதன் பிறகு எல்லா வகையான கலாட்டாக்களும் அவிழ்த்து விடப்பட்டன.

இவைதான் எங்கள் உறவினுடைய எழுதாத சட்டங்கள். என்னுடைய கட்டுரை எதிலும் எனது சம்மதம் பெறாமல் சிறு மாற்றத்தைக் கூட வினோத் செய்ய மாட்டார். அதே போன்று, என்னுடையது அட்டைப்படக் கட்டுரையாக வருவதாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மற்றும் அட்டை வடிவமைப்பு பற்றி கருத்து சொல்வதை நான் தவிர்க்க வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அவரது இறுதிச் சடங்கின் போது, ஒரு கட்டத்தில் நிகழ்ந்த ஆச்சரியமான, சோகமான சூழலை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம். அத்வானி ஒரு மலர் வளையத்தை அவர் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார். நான் வினோத்துக்கு என் மனதிலிருந்து பிரியாவிடை கொடுக்கும் (அல்லது கொடுக்க மறுக்கும்) முயற்சியில் போராடிக் கொண்டிருந்தேன். வினோத் எனக்கு எச்சரிக்கை விடுத்த ஒரே சந்தர்ப்பம் அப்போது என நினைவில் ஓடியது. அது 2006-ம் வருடம். “டிசம்பர் 13, 2001 அன்று நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் ஆற்றிய பாத்திரத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு இன்னும் சில நாட்களில் தூக்கிலடப்படலாம்” என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.

அந்த வழக்கு தொடர்பான நிகழ்வுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்து, தொடர்பான சட்ட ஆவணங்கள் அனைத்தையும் படித்திருந்த எனக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. அப்சல் குருவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் பெரும்பாலானவை மிகவும் பலவீனமானவை அல்லது புனையப்பட்டவை என்பதை அறிந்திருந்தேன். (அந்தத் தாக்குதல் போலி அடையாளத்துடன் நடத்தப்பட்டது என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன.) அப்சல் தூக்கிலிடப்படுவது சில சங்கடமான கேள்விகளுக்கு ஒருபோதும் விடை கிடைக்காமல் செய்து விடும். எந்த நேரடியான ஆதாரமும் இல்லா விட்டாலும் ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக’ அப்சலுக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அதிர்ச்சியளித்தது.

அதே நேரத்தில், பா.ஜ.க தாக்குதல் நடந்த 2001-ல் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் தலைமையில் “தேஷ் அபி ஷர்மிந்தா ஹை, அப்சல் அபி பீ ஜிந்தா ஹை” (தேசத்துக்கு அவமானம், அப்சல் இன்னும் உயிரோடு இருப்பது) என்ற முழக்கத்தோடு ஒரு உரத்த பிரச்சாரத்தை நடத்தியது. “எனக்கு அவ்வளவு தெரிந்திருந்தும், அவற்றை எல்லாம் இப்போது வெளிப்படுத்தவில்லை என்றால் என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது” என்று தோன்றியது. வினோத்தை அழைத்து அது குறித்து நான் எழுதப் போவதாக கூறினேன். முதல் முறையாக, ஒரே தடவையும் அவர், ”அருந்ததி வேண்டாம். நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் நம் மீதே பாய்வார்கள். உனக்கு தீங்கு விளைவிப்பார்கள்” என்று சொன்னார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம் (படம் : நன்றி அவுட்லுக்)

“இது தொடர்பாக அமைதியாக இருக்கலாகாது” என்று அவரை ஏற்க வைக்க எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. “அவரது வாழ்க்கை இல்லாமல் போக வேண்டும்” என்ற தலைப்பில் நெடிய கட்டுரை ஒன்றை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே உருவப்பட்டது. அவுட்லுக் அட்டைப்படம், “அப்சலை தூக்கிலிடாதே என்று கொட்டை எழுத்துக்களில் முழங்கியது. உண்மையில் பா.ஜ.க. அல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தான் கோழைத்தனமாக, சட்டத்துக்கு புறம்பாக, அருவருப்பான முறையில் அப்சலை சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் தூக்கிலிட்டது.

அந்த இதழ் வெளிவந்த பிறகு மடை திறந்தாற் போன்ற வசைமழையில் அவுட்லுக் பல வாரங்கள் குளித்தது. ஆனால், இது எங்கள் ஒப்பந்த விதிகளின் இன்னொரு பகுதி. நான் எழுதியதை வினோத் வெளியிடுவார். பின்னர், அதற்கு எதிர்வினையாக கெட்ட வார்த்தைகளில் திட்டும் வாசகர் கடிதங்களால் பல வாரங்கள் இதழை நிறைப்பார். (வினோத்தின் உதவியாளராக 25 வருடங்கள் பணியாற்றிய சாஷி, 2008 மும்பை தாக்குதல்களுக்கு பிறகு அதைப் பற்றி நான் எதுவும் எழுதுவதற்கு முன்பே அவுட்லுக் இதழுக்கு வரத் துவங்கியிருந்த கோப எதிர்வினைகளை காட்டினார்). நானறிந்த வரையில் வேறெந்த பத்திரிகையும், தனது ஆசிரியரையும், விருந்தினர்களையும் நிந்திக்கும் கடிதங்களை அவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியிடுவதில்லை. வினோத் அந்த கடிதங்களிலிருந்து முடிவற்ற கேளிக்கையை பெற்றுக் கொண்டிருந்தார். சில சமயம், தனக்கு பிடித்தமான கடிதங்களை எடுத்துக் கொண்டு என்னை தொலைபேசியில் அழைத்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருப்பார். அப்சல் குரு தொடர்பான கடிதங்களில் அவருக்குப் பிடித்த கடிதம் இது தான். “அப்சல் குருவை விட்டுவிடுங்கள்; அருந்ததியை தூக்கிலிடுங்கள்”. சந்தேகத்திற்கிடமின்றி, அதை வெளியிடவும் செய்தார்.

ஆனால், இப்போது, எதிர்பாராத விதமாக, அத்வானியும், நானும் அவரது இறுதிச் சடங்கில் ஒன்றாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். நான் ஆடிப் போயிருந்தேன். அத்வானியின் தரப்பில் பெருந்தன்மையையும், ஆனால் என் தரப்பில் அது சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இத்தகைய சூழலைப் பற்றி வினோத் என்ன நினைத்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

அவுட்லுக் இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வினோத் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசியாக அவுட்லுக் வெளியிட்ட எனது கட்டுரை “தோழர்களுடன் ஒரு நடைப்பயணம்”. பஸ்தரின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடன் பல நாட்கள் நான் கழித்தது பற்றிய எனது அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் மரணித்த பி.ஜி. வர்கீஸ் கூட அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார். வினோத் ஒரு அசாதாரண செயலாக பி.ஜி. வர்கீஸின் எதிர்வினைக்கு மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் என்றழைக்கப்படும் செருகுரி ராஜ்குமாரின் மறுமொழியை வெளியிட்டார். அப்படி செய்தது வினோதின் மிகவும் குறிப்பிடத்தகுந்த பணியாக இருந்தது. எவ்வளவு நிதானமாகவும், தர்க்கரீதியாகவும் ஆசாத் எழுதியிருந்தார் என்று வினோத் என்னிடம் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அந்த கட்டுரை வெளியாகும் போது ஆசாத் உயிருடன் இருக்கவில்லை. நாக்பூரில் சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டு ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில், தண்டகாரண்யா காட்டுப் பகுதியில் வைத்து எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

அவர் நோய் வாய்ப்படுவதற்கு முன்பாக கடைசியாக ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்தார். “கவனியுங்கள் அருந்ததி; நான் உங்களிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை; இப்போது கேட்கிறேன். சரியாக சொல்வதென்றால், நான் இதனை கோரிக்கையாக வைக்கவில்லை; செய்யும்படி கூறுகிறேன். என்னுடைய புதிய நூல் “கட்டவிழ்க்கப்பட்ட – பத்திரிகை ஆசிரியர்”-ஐ நீங்கள்தான் வெளியிட வேண்டும். இது போன்ற வேலைகளை செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்’ என்றார். நான் சிரித்து விட்டு ஒத்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தார். “ஆங்! நான் சொல்ல மறந்து விட்டேன். நம்முடன் மேடையில் இருக்கப் போகும் மற்றொரு விருந்தாளி அர்னாப் கோஸ்வாமி” என்று குறும்புடன் கூறினார். அர்னாபிடமும் இது தொடர்பான முழு விபரங்களையும் வினோத் சொல்லியிருக்க மாட்டர் என்று நினைக்கிறேன். அந்த கிழட்டு நரி எங்கள் இருவரையும் எதிரெதிராக விளையாடியிருக்கிறது.

நாங்கள் மூவரும் ஒரே மேடையில். அதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. இருந்த போதிலும், வினோத் மேத்தாவுக்காக நான் அதை செய்திருப்பேன்; மகிழ்ச்சியாகவே. ஆனால் அவரோ எங்கோ மறைந்து போய் விட்டார். அவர் போயிருக்கக் கூடாது. அவருடன் நான் பேச வேண்டியிருக்கிறது.

தமிழில்: சம்புகன்

(நன்றி: வினவு)

2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!

கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.

மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.

2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.

பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.

எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.

அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:

“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)

பூஜ்யங்களின் எண்ணிக்கையைக் காட்டியே 2ஜி ஊழலைப் பரபரப்பூட்டும் செய்தியாக்கின ஊடகங்கள்.

ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.

இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)

ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.

கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.

“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.

“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ

இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”

(துக்ளக், 12.11.2014)

“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.

முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)

2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.

நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)

இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)

“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

– திப்பு

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014

(நன்றி: வினவு)

காவி மோடியின் பணியில் கார்ப்பரேட் மீடியா

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.

சி.என்.என்.– ஐ.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், கோதாவரி எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவின் விலையை அம்பானிக்கு உயர்த்திக் கொடுத்திருக்கும் காங்கிரசு அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார் ஒரு வல்லுநர். அந்த விவாதத்தில் பங்கேற்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மேற்படி வல்லுநருக்குப் படியளப்பவர் முகேஷ் அம்பானி என்ற உண்மையை அம்பலப்படுத்தி னார். “உங்கள் தொலைக்காட்சியே அம்பானிக்குச் சோந்தமானதுதானே, பிறகு உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று பிரசாந்த் பூஷண் கூற, அதுவரை நடுநிலையாகப் பேசுவது போல பாவ்லா காட்டி வந்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர், ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் பாணியில் கூச்சல் போட்டு பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல் தடுக்க வேண்டியதாயிற்று.

அதேபோல சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தான், “எனக்கு பத்திரிகைத் துறையைப் பற்றித் தெரியாதா? உங்கள் தொலைக்காட்சி நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று என்று என்னை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் தங்களை இருட்டடிப்பு செய்கின்றன, மோடியை பிரதமராக்கத் திட்டமிட்டு விளம்பரப்படுத்துகின்றன” என்று குற்றஞ் சாட்டித் தான் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது ஊடகங்களைத் தோலுரித்து வருகின்றனர். தனியார்மயத்தின் ஆதரவாளரான கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சார உத்தியாகத்தான் இதனைச் செய்கிறார் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடகங்களால் முடியவில்லை. “உங்களை இருட்டடிப்பு செய்வதாகக் கூறுகிறீர்களே, நாங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாவிட்டால், நீங்கள் இன்றைக்கு ஆளாகியிருக்க முடியுமா? உங்களைப் புகழ்ந்தால் இனிக்கிறது, விமர்சனம் செய்தால் வலிக்கிறதா” என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

அன்னா ஹசாரேயும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அவர்களது ஊழல் ஒழிப்பு இயக்கமும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களால்தான் திட்டமிட்டே ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டன. வேறு செய்தியே கிடையாது என்பது போலவும், இதைத்தவிர நாட்டில் வேறு மக்கள் போராட்டங்களே நடக்கவில்லை என்பது போலவும் அன்று ஊடகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆபாசக் கூத்துதான் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது மறுக்கவியலாத உண்மை.

அரவிந்த் கேஜ்ரிவாலையும் அன்னா ஹசாரேவையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அன்று விளம்பரப்படுத்தியதற்கு ஒரு நோக்கம் இருந்தது.

அன்று மத்திய இந்தியா முழுவதும் ஒரு அறிவிக்கப்படாத போரை இந்திய அரசு நடத்தி வந்த காலகட்டமாகும். கார்ப்பரேட் முதலாளிகளின் கனிமவளக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத்தான் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது பரவலாக அம்பலமாகியிருந்தது.

அதேசமயம், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களும் அம்பலமானதுடன், இந்த ஊழல்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் பாத்திரத்தை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கின.

(கடிகாரச் சுற்றுப்படி) மோடிக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக தி இந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட சித்தார்த் வரதராஜன்; ஓபன் மேகசின் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்ட அர்தோஷ் சிங் பால்; சன் டி.வி.யால் ஓரங்கட்டப்பட்டுள்ள வீரபாண்டியன்; சி.என்.என் ஐ.பி.என் நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்ட நிகில் வாக்லே.

இந்தச் சூழலில்தான் குறிப்பான எந்த ஊழலைப் பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியோ பேசாமல், தனியார்மயக் கொள்கைக்கும் ஊழலுக்கும் இடையிலான நேரடி உறவு பற்றியும் பேசாமல் பொதுவாக ஊழல் எதிர்ப்பு பேசிய அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக கார்ப்பரேட் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. அதிகார வர்க்க ஊழலால் அன்றாடம் பாதிக்கப்படும் ஆம் ஆத்மியையும் (எளிய மனிதனையும்) ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளி வர்க்கத்தையும் ஒரே தரப்பாக நிறுத்தி, இருவருமே ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஊழலை வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக காட்டிய இந்தத் தந்திரம் கேஜ்ரிவாலின் சொந்த சரக்கு அல்ல; உலக வங்கி தந்த சரக்கு.

பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது, காடுகள், நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டால் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் மக்களுக்குச் சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற பிரமையை சிவில் சொசைட்டி அமைப்புகள் என்றழைக்கப்படும் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலக வங்கி பரப்பி வந்தது. களத்தில் இறக்கப்பட்ட பல தன்னார்வக் குழுவினரில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். இதன் காரணமாகத்தான் அன்னாவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பேராதரவு வழங்கி, தனது ஊடகங்கள் மூலம் அதனை ஊதி ஊதிப் பெரிதாக்கி காட்டியது. அன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கேஜ்ரிவாலை விளம்பரப்படுத்தியதற்கான காரணம் இதுதான்.

வெறும் ஊழல் ஒழிப்பு முழக்கம் ஓட்டுக்களைப் பெற்றுத்தராது என்று புரிந்திருந்த கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய பின், மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு டெல்லியின் மின் கட்டண உயர்வையும், தண்ணீர் கட்டணத்தையும் எதிர்த்த நடவடிக்கைகளில் இறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தெருவிலிறங்கினார். கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேர்தல் அரசியலில் செல்வாக்கு பெறுவதுதான் என்ற போதிலும், இத்தகைய ‘வரம்பு மீறிய’ நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை என்பதால் கேஜ்ரிவாலை அராஜகவாதி என்று சித்தரிக்கத் தொடங்கின ஊடகங்கள்.

ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை என்பது உலக வங்கியின் முழக்கம்தான் என்ற போதிலும், ஊழல் ஒழிப்பு நாடகத்துக்கு கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், சிறந்த அரசாளுமைக்கு மோடியை ஒருமனதாகத் தெரிவு செய்து வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் தங்களது முதலாளிகளின் விருப்பத்தை மென்மேலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மோடிக்கெதிரான செய்திகளை எழுதக் கூடாது என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தங்களது செய்தியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவே போட்டன. இதனை மீறிய மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், தயவு தாட்சண்யமின்றித் துரத்தியடிக்கப்பட்டனர்.

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார்த் வரதராஜன், அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஊர்ஊராகச் சென்று மோடி நடத்திரும் ‘ஆவி எழுப்புதல் கூட்டங்கள்’ குறித்த செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்தது, சுப்பிரமணிய சாமியின் அறிக்கைகளைப் பிரசுரிக்க மறுத்தது, முகேஷ் அம்பானி குறித்த ஒரு அம்பலப்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது என்பன போன்ற காரணங்களுக்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல மோடியை அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்ட’ ஓபன் மேகசின்’ பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியரான அர்தோஷ் சிங் பால், பத்திரிகையின் உரிமையாளர்களான கோயங்கா குழுமத்தினரால் நீக்கப்பட்டிருக்கிறார்.

மோடியை அம்பலப்படுத்திப் பேசுவதைக் கைவிடவேண்டும் என சி.என்.என். – ஐ.பி.என். தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சகாரிகா கோஷுக்கும், அதே நிறுவனத்தின் மராத்திய சேனலின் ஆசிரியரான நிகில் வாக்லேவுக்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வளவு தூரம் போவானேன், மோடியை எதிர்மறையாக சித்தரித்த காரணத்துக்காக, வீரபாண்டியன் நடத்திவந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது சன் தொலைகாட்சி.

மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தற்போது இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் கருத்து. பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் தங்களது வெறிக்கும் தாராளமயக் கொள்கைகளைத் திணிக்கும் அவசரத்துக்கும் பொருத்தமான ஒரு பாசிஸ்ட் என்ற முறையில் அவர்கள் மோடியை முன்தள்ளுகிறார்கள். ‘திறமைசாலி’ என்று சொல்லி பத்தாண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை மார்க்கெட்டிங் செய்த அதே உத்திதான்.

கார்ப்பரேட்டும் பாசிஸ்ட்டும் இணைந்த இந்தக் கூட்டணி நடுநிலை முகச்சாயங்களைக் களைந்து விட்டு, தங்கள் நோக்கத்துக்கு ஒத்து வராத பத்திரிகையாளரை உடனே வெளியேற்றி விடுகிறது. இந்திய ஊடகத்துறையைப் பொருத்தவரை, அதனைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சி.என்.என். – ஐ.பி.என்., சி.என்.பி.சி., டிவி18 மற்றும் ஐ.பி.என். 7 உள்ளிட்ட மிகப் பிரபலமான 17 செய்தி ஊடகங்களும் அடக்கம்.

2008-ம் ஆண்டில் ஒ.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலுங்கு தேச கட்சியின் தீவிர ஆதரவாளரான ராமோஜி ராவுக்குச் சொந்தமான ஈநாடு(ஈ.டி.வி.) தொலைக்காட்சியில் சுமார் 2600 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் ஒளிபரப்பாகும் 12 ஈ.டிவி அலைவரிசைகளை ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தத் துவங்கியது.

பின்னர் 2012-ம் ஆண்டில் ராகவ் பாலின் நெட்வொர்க் 18 நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததன் மூலம் இரண்டு டஜன் முன்னணி ஆங்கில, இந்தித் தொலைக்காட்சி நிலையங்களை, அம்பானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முகேஷ் அம்பானி உதவுவதாக வாக்களித்திருந்த விசயம் நீரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகளின் மூலம் அம்பலமானது.

நிதி நிறுவன வலைப்பின்னல்கள் மூலம் அடையாளம் தெரியாத முறையில் முதலீடு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அம்பானி போன்ற தரகு முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ எந்தெந்த ஊடகங்களில் எத்தனை பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, தெகல்கா வார இதழின் முதலீட்டாளர்களில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மீதமுள்ள 4 முதலீட்டாளர்கள் யார் என்றே தெரியவில்லை. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 13,189 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கின்றனர். முன்னர் குஜராத் இனப்படுகொலை குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட தெகல்காவிடம், ஒரு பெண்ணை உளவு பார்ப்பதற்கு மோடி தனது உளவுத்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்த தொலைபேசிப் பதிவுகள் தரப்பட்ட பின்னரும், அது அவற்றை வெளியிடவில்லை. பின்னர் கோப்ரா போஸ்ட் என்ற இணையப் பத்திரிகை மூலம்தான் மோடியின் அந்த முறைகேடு அம்பலமானது.

மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்ட ஒரு பத்திரிகையிலேயே இத்தகைய திரைமறைவு வேலைகள் நடக்குமென்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோடியின் உளவுத்துறை பெண்ணைத் துரத்திய இந்த விவகாரம் குறித்தோ, குஜராத் வளர்ச்சி என்ற பித்தலாட்டம் குறித்தோ, மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தோ, ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் மோடி அலையை திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.

சுரங்கம், மின் நிலையங்கள், ஐ.டி. துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முதலாளிகள், பல்வேறு ஊடகங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் முறைகேடுகள் – கொள்ளைகள் குறித்த செய்திகளே வெளிவராமல் தடுத்து விடுகின்றனர். கெயில் குழாய் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு தொடங்கி தனியார் கல்விக் கொள்ளைக்கெதிரான போராட்டங்கள் வரையிலானவை இப்படித்தான் இருட்டடிப்பு செயப்படுகின்றன.

இது மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு ஊடகங்களுக்கும் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வழங்கி ‘பிரைவேட் டிரீட்டி’ என்றழைக்கப்படும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் தடுப்பது மட்டுமின்றி, இந்த ஊடகப் பங்குதாரர்கள் மூலம் பொய் – புனைசுருட்டுகளைப் பரப்பி, பங்குச்சந்தையில் தமது பங்குகளின் மதிப்பை இவர்கள் உயர்த்திக் கொள்கின்றனர் என்பது செபி அமைப்பாலேயே நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு.

வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்களுக்கு மக்களிடம் மதிப்பிருக்காது என்பதால், ஊடகங்களுக்குப் பணத்தைக் கொடுத்து, வெளியிட வேண்டிய செய்தியையும் எழுதிக் கொடுத்து, அவற்றை செய்தி போல வெளியிட வைக்கும் ‘பெய்டு நியூஸ்’ என்ற மோசடியினை 2009-ல் சாநாத் அம்பலமாக்கினார். அதன் பின்னர் பிரஸ் கவுன்சில் நடத்திய விசாரணையில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் சிக்கின. ஆனால், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட பிரஸ் கவுன்சில் இந்தக் கணம் வரை மறுத்து வருகிறது. இது மட்டுமல்ல, இனி காசு வாங்கிக் கொண்டு செய்தி போடமாட்டோம் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்குக்கூட பெரும்பான்மையான பத்திரிகை முதலாளிகள் தயாராக இல்லை என்று சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் (சி.என்.என். – ஐ.பி.என்.) .

தூர்தர்சன் தொலைக்காட்சியை ஆளும் கட்சிகள் தமது பிரச்சார சாதனமாக மாற்றிக் கொள்ளும் நிலையைத் தாராளமயக் கொள்கை மாற்றிவிடும் என்றும், தனியார் தொலைக்காட்சிகளிடையேயான போட்டி கருத்துலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடும் என்று கூறினார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். பிறகு சன், ஜெயா போன்ற தொலைக்காட்சிகள் கட்சி சார்பானவை என்றும் மற்ற தொலைக்காட்சிகள்தான் நடுநிலையாளர்கள் என்றும் பசப்பினார்கள்.

கட்சித் தொலைக்காட்சிகளின் பக்கச்சார்பு மக்கள் அனைவருக்கும் தெரியும். நடுநிலையாளர்கள் என்று தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையினர்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் ஆளும் வர்க்க கருத்துகளைப் பிரதிபலிப்பதில் கண்டிப்பான கற்பு நெறியாளர்களாக இருப்பதுடன், தங்கள் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுக்கும், தங்கள் வர்க்கத்தினரிடமிருந்தே ரேட்டு பேசி காசு வசூலிக்கும் விலை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணின் யோக்கியதை இதுதான்.

– கதிர்

(நன்றி: வினவு)

தெகல்காவின் மறுபக்கம்!

ராமன் கிர்பால். ‘தெகல்கா’வின் முன்னாள் செய்தியாளர். 2011-ம் ஆண்டு வரையிலும் அதில் பணிபுரிந்தவர். 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவா இரும்பு தாது ஊழல் குறித்து ராமன் கிர்பால் எழுதிய புலனாய்வுக் கட்டுரையை தெகல்கா வெளியிட மறுத்தது. இதைக் கண்டித்து வெளியேறிய அவர் www.firstpost.com என்ற இணையதளத்தில் இணைந்தார். அங்கு அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. இது ராமன் கிர்பாலின் பின்னணி.

மாறாக, ராமன் கிர்பால் அம்பலப்படுத்தும் தெகல்காவின் கார்ப்பரேட் தொடர்புகள் குறித்த செய்திகள் விளிம்பில் கிடக்கின்றன. இத்தனைக்கும் அவர் ஒன்றும் தனது முன்னாள் நிறுவனம் குறித்த காழ்ப்பில் கதையளக்கவில்லை. ஆதாரங்களுடன், ஆவணங்களுடன் எழுதுகிறார். பெண் செய்தியாளர் மீதான பாலியல் வன்முறை நடந்த ‘கோவா திங்– 2013′ விழாவின் அழைப்பிதழைப் பார்த்தாலே… தெகல்காவின் நன்கொடையாளர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளலாம். கோகோ கோலா முதல் மோடியின் டார்லிங் நிறுவனமான அதானி வரை அனைவரும் தெகல்காவின் புரவலர்கள். ராமன் கிர்பால் தனது கட்டுரைகளில் இவற்றை வெளிப்படுத்துகிறார். தெகல்கா என்ற நிறுவனம் எவ்வாறு, ‘மொரீசியஸ்’ பாணியிலான போலி நிறுவனங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்டது என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிக் கொண்டு வருகிறார். அது தெகல்கா என்னும் கார மிளகாயின் நமத்துப் போன மறு முனையாக இருக்கிறது.

தெகல்காவின் வீழ்ச்சியில் ஆதாயம் அடையத் துடிப்பது யார் என்பது வெளிப்படையானது. அது ஆதாயமா, இல்லையா என்பது பிறகு. முதலில் இது பழிவாங்குதல். ‘இந்து’ மனம் முதல், ‘தி இந்து’ இதழ் வரை தேஜ்பால் மீது பாய்ந்து குதறுவது இதனால்தான். அவர்கள் தெகல்காவின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை பின்னோக்கி விரிவுபடுத்தி, பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியது முதல் குஜராத் கொலையாளிகளின் வாக்குமூலம் வரை தெகல்காவின் அனைத்து புலனாய்வுகளும் பொய்யானவை என்று நிறுவ முயல்வார்கள். அல்லது, ‘தெகல்காவே ஒரு கிரிமினல். இவங்க என்ன எங்களை குற்றம் சொல்றது?’ என்று பந்தை இந்தப் பக்கம் தள்ளி விட்டு விட்டு சந்தேகத்தின் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். இவை எல்லாம் எதிர்மறை சாத்தியங்கள். நேர்மறையில்… இந்த இந்துத்துவவாதிகளும் கூட, தெகல்காவின் மீதான கார்ப்பரேட் குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த கோணத்தில் ராமன் கிர்பாலின் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஃபர்ஸ்ட்போஸ்ட்.காமில் அவர் எழுதிய கட்டுரையை தழுவி மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை கீழே:

*********

இனிவரும் நாட்களில் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே தெகல்காவின் கவலையாக இருக்காது. ஏனெனில் தருண் தேஜ்பாலும், ஷோமா சௌத்ரியும் மேற்கொண்ட பல சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் அவர்களை துரத்தப் போகின்றன. இவர்கள் தங்களிடம் இருந்த, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை, தங்களின் மற்றொரு நிறுவனத்திற்கு கற்பனை செய்ய முடியாத லாப விகிதத்தில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டியிருக்கின்றனர்.

10 ரூபாய் மதிப்புடைய தெகல்காவின் பங்குகள் 13,189 ரூபாய்க்கு கை மாற்றப்பட்டுள்ளன. தெகல்காவின் நிறுவன பங்குதாரர்கள், தங்கள் வசமிருந்த பங்குகளை அவசர, அவசரமாக இந்த விலைக்கு விற்றுள்ளனர். அப்படி விற்கப்பட்ட சமயத்தில் தெகல்காவின் நிறுவனமான அக்னி மீடியா பிரைவேட் லிமிட்டெட்டின் (தற்போது, ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெட்) மொத்த சொத்து மதிப்பு ‘நெகட்டிவ்’வில் இருந்தது. ஆனால் பங்கு விலை மட்டும் ‘எப்படியோ’ அதிகமாக இருந்தது. இப்படி 10 ரூபாய் பங்கை 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு கம்பெனி வெற்றி முகட்டில் சென்று கொண்டிருந்த போதுதான், தெகல்கா தன் ஊழியர்களுக்கு 2 மாதம் தாமதமாக ஊதியம் வழங்கியது என்கிறார் தெகல்காவில் ‘பீரோ சீஃப்’ ஆக பணிபுரிந்த ஹர்தோஷ் சிங்பால்.

தெகல்காவின் நிறுவனமான ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெடின் பெரும்பான்மையான பங்குகளை தருண் தேஜ்பாலின் குடும்பத்தினரே வைத்திருந்தனர். குறைந்த அளவு பங்குகள் வேறு சிலரது பெயரில் இருக்கின்றன. அந்த வேறு சிலர் யார்? ராம்ஜெத் மலானி (165 பங்குகள்), கபில் சிபல் (80 பங்குகள்), லண்டன் தொழிலதிபர் பிரியங்கா கில்லி (4,242 பங்குகள்) போன்றோர். ஆனால் கபில் சிபிலுக்கு தனது பெயரில் பங்குகள் இருப்பது அவருக்கேத் தெரியவில்லை.

‘‘தருண் தேஜ்பால், என் பெயரில் பங்குகளை விநியோகித்திருப்பது எனக்கே இதுவரை தெரியாது. நான் தெகல்காவுக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன். மற்றபடி பங்குகள் வாங்குவதற்காக எந்த விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து தரவில்லை” என்கிறார் கபில்சிபல். எனில், அவரது பெயரில் பங்குகள் எப்படி வந்தன? அவரது கையெழுத்தை போட்டது யார்? 2005–ஆம் ஆண்டில் இருந்து கபில்சிபில் பெயரில் 80 பங்குகள் இருக்கின்றன. ராம்ஜெத்மலானி பெயரில் உள்ள பங்குகளுக்கும் இதே கதைதான்.

வாங்கவே இல்லை. ஆனால் இவர்கள் பெயரில் பங்குகள் இருக்கின்றன. எப்படி? 2005-க்கு முன்பு, தெகல்காவை இணைய இதழில் இருந்து அச்சு இதழாக கொண்டு வர முயற்சித்த சமயத்தில், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நன்கொடைகள் பெற்றார் தேஜ்பால். வெளிப்படையான அறிவிப்பு ஒன்றையும் இதற்காக வெளியிட்டிருந்தார். அமீர்கான், நந்திதா தாஸ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களிடம் இருந்து ஆளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நன்கொடை பெற்று 2 கோடி ரூபாய் வரை நிதி சேகரித்துள்ளதாக அப்போது தேஜ்பால் அறிவித்தார். அந்த சமயத்தில் தெகல்காவுக்கு இருந்த நன்மதிப்பு, மற்றும் மாற்று ஊடகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பலரும் நிதி அளித்தனர்.

அதன் பிறகே தெகல்காவின் சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் துவங்கின. இந்த தெகல்கா கதையில் ஆறு முக்கிய முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பக்ருதீன் தஹிர்பாய் கொராக்கிவாலா, ஏ.கே. குர்து ஹோல்டிங், என்லைட்டன்டு கன்சல்டன்சி சர்வீசஸ், வெல்டன் பாலிமர்ஸ், ராஜஸ்தான் பத்ரிகா மற்றும் ராயல் பில்டிங்ஸ் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய ஆறு நிறுவனங்கள், தெகல்காவில் பெரும் பணத்தை முதலீடு செய்திருந்தன.

இப்போது ராஜஸ்தான் பத்ரிகா, கொராக்கிவாலா ஆகிய இரு நிறுவனங்களைத் தவிர மற்றவற்றைக் காணவில்லை. அவை எங்கே போயின? ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய தளத்தின் விசாரணையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் செயல்படும் இடம், யூகிக்க முடியாத மர்மப் பிரதேசங்களாக உள்ளன. பொதுவாக தெகல்காவின் முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்ததில் இருந்து இரண்டு ஆண்டுகள் செயல்படும்; பிறகு நஷ்டக் கணக்குக் காட்டி விட்டு காட்சியில் இருந்து அகன்று விடும். இது பொதுப் பண்பாக இருக்கிறது. இதைத்தான் ‘மொரிசியஸ் வகை’ நிறுவனங்கள் என்று அழைக்கிறார்கள். அதாவது, பெயர் தெரியாத, முகம் தெரியாத முதலீட்டாளர்களின் பணத்தை கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இவை.

இனி தெகல்காவின் சில பண பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம்…

தெகல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு, ஆனந்த் மீடியா, 10 ரூபாய் முக மதிப்புடைய 1,500 பங்குகளை ஒதுக்கியது. 2006 ஜூன் 14-ம் தேதி, ஷோமா சௌத்ரி தன்னிடம் இருந்ததில் 500 பங்குகளை, ஏ.கே. குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்தார். இதன்மூலம் அவருக்கு 66 லட்ச ரூபாய் கிடைத்தது. அதாவது 5 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்று அவர் ஈட்டியது 66 லட்ச ரூபாய்.

தருண் தேஜ்பாலின் மனைவியான கீத்தன் பாத்ரா, தன்னிடம் இருந்த 2,000 பங்குகளை ஏ.கே.குர்து நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் வீதம், மொத்தம் 2.64 கோடி ரூபாய்க்கு விற்றார்.

தருண் தேஜ்பாலின் சகோதரர் மிண்டி குன்வார் 1,500 பங்குகளை 2 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அப்பா இந்திரஜித் தேஜ்பால் ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அம்மா சகுந்தலா, ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும் விற்றார்கள்.

தருண் தேஜ்பாலின் சகோதரியும், தெகல்காவின் தலைமை செயல் அதிகாரியுமான நீனா டி சர்மா, 432 பங்குகளை அதே நிறுவனத்திற்கு, அதே விலையில் விற்றதில் 57 லட்சம் சம்பாதித்தார்.

தருண் தேஜ்பால் தன்னிடம் இருந்த பங்குகளை விற்பனை செய்யவில்லை. மாறாக, சங்கர் சர்மா, தேவினா மெஹ்ரா ஆகிய இருவரிடம் இருந்தும் 4,125 பங்குகளை வாங்கினார். இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவெனில், தருண் தேஜ்பால் இவர்களிடம் இருந்து, ஒரு பங்கு 10 ரூபாய் வீதம் வாங்கினார். ஆனால் அதே நாளில் அதே நிறுவனத்தின் பங்குகளை தேஜ்பாலின் உறவினர்கள் 13,189 ரூபாய்க்கு விற்றார்கள். இந்த வியாபார அற்புதங்கள் அனைத்தும் நடந்த தேதி 2006 ஜூன் 14.

தேஜ்பாலின் ரத்த உறவினர்களைத் தவிர்த்து, தெகல்காவின் பங்குகளை அதிகம் வைத்திருந்தவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பக்ருதின் ஷேக் தஹிர்பாய் கொராக்கிவாலா. 2005-ல் கோத்ரா புலனாய்வை வெளியிட்டு தெகல்கா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்த சமயத்தில் கொராக்கிவாலா, தெகல்காவில் 4.65 கோடி ரூபாயை முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு 19,326 பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனந்த் மீடியாவின் ஆண்டு நிதியறிக்கையின்படி 2006-ம் ஆண்டு, கொராக்கிவாலா ஒரு பங்கின் விலை 13,189 ரூபாய் வீதம், தன்னிடம் இருந்த அனைத்து பங்குகளையும் மொத்தம் 25.49 கோடி ரூபாய்க்கு ஏ.கே.குர்துவிற்கு விற்றிருக்கிறார். கொராக்கிவாலா 2011-ம் ஆண்டு தனது 93-வது வயதில் இறந்துபோனார். அவரது ரத்த உறவினர்களிடம் விசாரித்ததில், 25 கோடி ரூபாய் பணத்தை அவர் இறுதிவரை பெறவில்லை என்கிறார்கள். எனில், அந்தப் பணம் தெகல்காவுக்கு வழங்கப்பட்ட நன்கொடை என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

2006-ம் ஆண்டு தெகல்காவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் திடீரென காணாமல் போய்விட்ட அந்த ஏ.கே.குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனம் யாருடையது? இந்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) விவரங்களில் இப்படி ஒரு நிறுவனத்தையே காண முடியவில்லை. கூகுள் தேடலில் கூட Marg என்ற சென்னை நிறுவனத்தின் இயக்குநரான அருண்குமார் குர்து (Arun Kumar Gurtu) என்பவரின் பெயரை மட்டுமே காண முடிகிறது. இவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தெகல்கா பதிவுகளின்படி ஏ.கே.குர்து நிறுவனம் 22 ஜங்க்புரா ஏ, புது தில்லி என்ற முகவரியில் ஆரம்பத்தில் இயங்கி வந்தது. பிறகு எம்.ஜே ஷாப்பிங்க் சென்டர், 3 வீர் சாவார்க்கர் வளாகம், ஷகார்பூர், தில்லி-110092 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய இதழ் இந்த இரண்டு முகவரிகளையும் ஆய்வு செய்ததில் அங்கு இப்படி ஒரு நிறுவனமே இல்லை.

2007-ம் ஆண்டு ஏ.கே.குர்து நிறுவனம் தனது முதலீடுகளை என்லைட்டன்ட் கன்சல்டன்சி மற்றும் வெல்டன் பாலிமர்ஸ் நிறுவனங்களுக்கு நஷ்டத்துக்கு கை மாற்றியது. இதில் விநோதம் என்னவெனில் என்லைட்டன்ட் கன்சல்டன்சி நிறுவனமும் மேற்கண்ட அதே ஷகார்பூர் முகவரியில்தான் இயங்கியது. அதாவது விற்ற கம்பெனிக்கும், வாங்கிய கம்பெனிக்கு ஒரே முகவரி. இதில் இருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 2009-ல் என்லைட்டன்ட் கன்சல்டன்சியின் செயல்பாடுகள் தெகல்காவுடன் இணைக்கப்பட்டன. பிறகு 17 கோடி ரூபாய் நஷ்டக் கணக்குக் காட்டி என்லைட்டன்ட் கன்சல்டன்ஸியும் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

திரிணாமுல் ராஜ்யசபா எம்.பி.யான கே.டி.சிங்கின் ராயல் பில்டிங்ஸ் நிறுவனம் இப்போது தெகல்காவின் 66 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. (மொத்த முதலீடு 32 கோடி ரூபாய்). தருண் தேஜ்பால் குடும்பத்தினரிடம் 22 சதவிகிதத்திற்கும் குறைவான பங்குகளே இருக்கின்றன. தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் கே.டி.சிங் எந்நேரமும் ஆனந்த் மீடியாவை விட்டு வெளியேறலாம். ஒருவேளை அப்படி நடந்தால், அது தெகல்காவின் மரணப்பாதையாக இருக்கும்!

தமிழில்: வளவன்

மேலும் படிக்க

Firstpost India Tehelka business: Murky deals, profits for Tejpal family, Shoma
How Goa’s illegal ore miners are in league with CM Kamat

(நன்றி: வினவு)

சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!!

‘சொல்வதெல்லாம் உண்மை’ – இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

சொல்வதெல்லாம் உண்மைஅடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க” என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘ சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார்!

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர். கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

விஜய் டி.வி. ஷோக்கள்!

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு. ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும் தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

(நன்றி: வினவு)

‘பரதேசி’ : பாலா மற்றும் நாஞ்சில் நாடனின் மனிதத் தன்மை பற்றி ஒரு குறிப்பு

இது திரைப்பட விமர்சனமில்லை. மனிதாபிமானமும் செயல்திறனும் மிக்க ஒரு மருத்துவரான பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ (ஆங்கிலத்தில் Red Tea) நாவலை பாலாவும் நாஞ்சிலும் ‘பரதேசி’யாகப் படமாக்கியது பற்றி ஒரு குறிப்பு. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது அவை முற்றிலும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாத அளவிற்கு வெவ்வேறு புதிய வார்ப்புகளாகி விடுகின்றன என்பது அறிந்ததே. இரண்டு ஊடகங்களின் இலக்கணங்களும் வேறு வேறு. ஒரு நல்ல நாவல் மோசமான திரைப்படமாகவும், ஒரு மோசமான நாவல் மிகச் சிறந்த திரைக்காவியமாகவும் அமையும் வாய்ப்புண்டு. நாவலைத் திரைக்கதை ஆக்கும்போது பல மாற்றங்கள் தவிர்க்க இயலாதது என்கிற அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு ஒரே ஒரு கேள்வியை மட்டும் பாலா-நாஞ்சில் கூட்டின் முன் வைக்கிறேன்.

இப்படத்திற்கு விமர்சனம் எழுத வந்த பலரும் சுட்டிக்காட்டும் ஓரம்சம் குறித்த கேள்விதான் அது. என்ன தேவைக்காக நாவலில் வருகிற மனிதாபிமானம் மிக்க ஒரு அற்புதமான மருத்துவக் கதாபாத்திரத்தை, ஒரு மதம் மாற்றும் கிறிஸ்தவக் கோமாளியாக மாற்றினீர்கள்? எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமைத் தோட்டத் தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு பலசரக்குக் கடைக்காரனை (நாவலில் காளிச் செட்டி) ஒரு முஸ்லிமாகவும் மாற்றிச் சித்திரித்திருப்பது எதற்காக? இவற்றின் மூலம் கலாபூர்வமாகவோ அல்லது அறவியல் அடிப்படையிலோ என்ன சாதித்துள்ளீர்கள்?

நாவலில் அந்த டாக்டர் வேறு யாருமல்ல. பி.எச்.டானியல்தான் என்பதை வாசிக்கும் சிறு குழந்தையும் உணரும். 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் டாக்டராக, இயற்கையின்மீது தீராக் காதல் கொண்டவராக, சக ஊழியர்களுடன் சாதி, மத வேறுபாடு இல்லாமல் கனிந்து பழகுபவராக, தனது மருத்துவ ‘அதிகாரத்தை’ அதன் எல்லைக்குள் நின்று அப்பாவி மக்களின் நலனுக்குப் பயன்படுத்துபவராக, ஊழல் அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசும் மனசாட்சி உடைய மனிதராக, பெயர் ஒன்றைத் தவிர வேறு எந்த அம்சத்திலும் கிறிஸ்தவ அடையாளத்தைச் சுமக்காதவராக, இத்தனைக் கொடூரங்களுக்கும் மத்தியில் இன்னும் கூட மனிதத்தன்மை எஞ்சியுள்ளது என்பதன் அடையாளமாக நாவலில் வந்துபோகும் ஒரு பாத்திரத்தை இப்படி மாற்றுவதற்கு எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது?

1984ல் டெல்லியில் சீக்கிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளை நேரில் கண்ட எழுத்தாளர் அமிதவ்கோஷ் அந்த அனுபவம் குறித்து எழுதிய ஒரு கட்டுரையை முன்பொரு சந்தர்பத்தில் முகநூலில் எழுதியிருந்தேன். ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் அந்தக் கொடூரங்களுக்கெல்லாம் அப்பால் அங்கு சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து கசிந்த மனிதாபிமானமே தன்னை ஈர்த்தது எனக் கூறிய அமிதவ் அது எவ்வாறு தனது அடுத்த நாவலில் வெளிப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருப்பார். தன் கண் முன் எவ்வாறு இரு சீக்கியர்கள் கொலைக் கும்பல்களிடமிருந்து இந்துக்களால் காப்பாற்றப்பட்டனர் என அவர் விவரித்திருப்பதை வாசித்தபோது என் கண்கள் கலங்கின. ஆனால் நிச்சயமாகச் சொல்கிறேன் நாஞ்சில், பாலா நீங்கள் ஒருவேளை அதைப் படித்திருந்தாலும் கூட உங்களின் இரும்பு மனத்தில் நிச்சயம் அத்தகைய கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இன்னும் எஞ்சியுள்ள மனிதத்தை உமது சாதி, மத அடையாளங்களிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும் விடுபடாத மனங்கள் அடையாளம் காணாதது வியப்பில்லை. அடையாளம் காணாதது மட்டுமல்ல, உங்களின் வக்கிர மனம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் இங்கு வெளிப்பட்டுள்ளது. பாலாவின் அத்தனை படங்களிலும், நாஞ்சிலின் அத்தனை கதைகளிலும் இந்த வக்கிரத்தை அடையாளம் காட்ட இயலும்.

இத்தனைக்கும் அந்த நாவல் எந்த வகையிலும் கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிக்கும் நாவலல்ல. முழுக்க முழுக்க வெள்ளை ஏகாதிபத்தியச் சுரண்டலையும், அதற்கு உடன்பட்டு எடுபிடிகளாக இருந்து மேற்கொள்ளப்பட்ட கங்காணிக் கொடுமைகளையும் மனிதாபிமான நோக்கில் பதிவு செய்யும் ஒரு நாவல். பாலியல் சுரண்டல் உட்பட அத்தனை கொடுமைகளையும் செய்கிற வெள்ளை அதிகாரிகள் இருவரும் கிறிஸ்தவர்களே. சுரண்டப்படும் அப்பாவி அடிமைத் தொழிலாளிகள் அத்தனை பேரும் தலித்களே.

ஒரு நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர் என்பதெற்கெல்லாம் அப்பால் முதலில் நீங்கள் நல்ல மனிதர்கள்தானா என்பதுதான் இப்போது கேள்வி.