தமிழில் தேவர் சாதிப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்துதான் வந்திருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம். அதனாலேயே மேற்கண்ட விவாதத்தின் பின்னணியில் வைத்து இந்தப் படத்தைப் புரிந்துகொள்வது நமக்கு நலன் பயக்கும்.
விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் இப்போது வெளிவந்துவிட்டது. வழக்கமாக ஹாலிவுட் படங்கள் பல பாகங்களாக வெளிவரும்போது ஒவ்வொரு பாகமும் தன்னளவில் முழுமையான திரைக்கதையைக் கொண்டதாக இருக்கும். இதற்கு முற்றிலும் முரணாக எடுக்கப்பட்டிருந்தது பாகுபலி படம். பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தது. அதை இரண்டு பாகங்கள் என்று சொல்வதை விட இரண்டு எபிசோட்களாக வெளிவந்த ஒரு படம் என்றுதான் சொல்லவேண்டும். பாகுபலியின் முதலாம் பாகத்திற்கு மட்டும் ஒரு விமர்சனம் எழுதமுடியாது என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்ததன் காரணம் இதுதான். விஸ்வரூபம் அத்தகைய படமல்ல. விஸ்வரூபம் முதல் பாகமே தன்னளவில் முழுமையானதுதான். இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் முதலாம் பாகத்திலேயே விஸ்வரூபம் ஒரு ஒத்திசைவு கொண்ட முழுமையான திரைக்கதையாகத்தான் இருந்தது. அதனால்தான் இரண்டாம் பாகம் திரைக்கதை அழுத்தம் இல்லாத, வெறும் சாகசக் காட்சிகளை அடுக்கிய, கதைசொல்லலில் சில புதுமைகளைப் புகுத்திய ஒரு முயற்சியாக மட்டுமே எஞ்சிவிட்டது.
முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களில் காலம், வெளி ஆகிய பரிணாமங்களை கலைத்தும் நினைவுக்கும் நிகழ்காலத்துக்கும் மாறிமாறியும் சொல்லப்பட்டுள்ள இத்திரைக்கதையை விமர்சனத்தின் வசதிக்காக நேர்கோட்டில் அடுக்கி முதலில் தொகுத்துக்கொள்வோம். விஸாம் அஹ்மது காஷ்மீரி என்ற பெயர்கொண்ட கதாநாயகன் காஷ்மீரி முஸ்லிம் தந்தைக்கும் கதக் கலைஞரான தாய்க்கும் பிறந்தவன். இந்தக் காஷ்மீரித் தந்தை பற்றியோ தமிழ் மொழி பேசும் அவரது அம்மா பற்றியோ எந்தவொரு தகவலும் பெரிதாக படத்தில் கூறப்படவில்லை. குறிப்பாக இந்தக் காஷ்மீரி முஸ்லிம் தந்தை யார், எதனால் அவர் விஸாமின் தாயை விட்டுச்சென்று விடுகிறார், அவர் காஷ்மீரி என்று குறிப்பிடப்படுவதால் அவரது அரசியல் மற்றும் மதம்சார்ந்த கருத்துகள் என்னவாக இருந்தன, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தாய் (அவரை கதக் கலைஞராக காட்டியுள்ளதால்) முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவரா அல்லது இந்துக் குடும்பத்தில் பிறந்தவரா போன்ற தகவல்களெல்லாம் இல்லை. விஸாமின் தந்தையைக் குறித்து காட்சி வழியாகவோ வசனங்களின் வழியாகவோ எதையும் நம்மால் தெரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் ஒரேயொரு தகவல் முதல்பாகத்தில் சொல்லப்படுகிறது. அது விஸாமின் தந்தை ஒரு காஷ்மீரி முஸ்லிம் என்றும் விஸாம் பிறந்தவுடன் அவரது அம்மாவுக்குத் தலாக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார் என்றும் விஸாம் ஒமரிடம் கூறுகிறான். இந்தப் பின்னணி பற்றிய உசாவல் இருந்திருந்தால் இரண்டாம் பாகம் இன்னும் கூட வலுவான திரைக்கதை கொண்டதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் முதலாம் பாகத்தில் சந்தித்த சர்ச்சைகளைத் தவிர்க்கும் விதமாகவே இரண்டாம் பாகம் பெரிதும் அடையாளங்கள் சம்பந்தப்பட்ட குறியீடுகள், வசனங்கள், அது சார்ந்த பாத்திரவார்ப்பும் அவற்றின் அரசியலும் பெரிதாக இல்லாத சாகசப்படமாக வெளிவந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. வி-2 இல் உள்ள ட்ரைலரில் காட்டப்பட்டு சிறிய சர்ச்சையைக் கிளப்பிய காட்சியும் இந்தச் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது.
இவ்வாறு தந்தையால் புறக்கணிக்கப்பட்ட விஸாம் அஹ்மது காஷ்மீரி தனது கதக் பயிற்றுநரான அம்மாவுடன் வளர்கிறான். கிருஷ்ணர் வேடமிட்டு அவன் ஆடும் கதக் நடன அரங்கேற்றமும் நடக்கிறது. பின்னர் அவன் அவனது தாயின் ஆட்சேபத்தைப் பொருட்படுத்தாது இராணுவத்தில் போய் சேருகிறான். இதை அவனது தாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுபோன்ற விவரங்களை ஆங்காங்கே துண்டுதுண்டாக நாம் காண்கிறோம். இராணுவத்தில் சேரும் அவனை இந்திய அரசின் சர்வதேச உளவுத்துறையான RAW ஒரு இரகசியச் செயற்திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கிறது. அமெரிக்கர்கள் சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கும் ஆஃப்கன் தாலிபானுக்குள் ஊடுறுவி அவர்களின் விடுதலைக்கும், தாலிபானை வீழ்த்த அமெரிக்க அரசு அவர்களின் மீது நடத்தும் போருக்கும் உதவுவதும்தான் அச்செயற்திட்டம் ஆகும். இதற்கு முஸ்லிம் காஷ்மீரி தந்தையின் பின்னணியைக்கொண்ட விஸாம் பொருத்தமாக இருப்பான் என்று அவனைத் தேர்கிறார்கள். இதற்காக விஸாம் தன்னுடன் பணியில் இருந்த சக பெண் அதிகாரியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினான் என்ற நாடகத்தை வேண்டுமென்றே அரங்கேற்றி அவனது பதவியைப்பறித்துச் சிறைக்கு அனுப்புகிறார்கள். மேலும் சிறையில் இருந்து தப்பி அவன் எல்லை தாண்டிப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்துகொள்ள வழிவகுக்கிறார்கள். இதற்குப்பின் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்னல் ஜகன்னாதனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், விஸாம் ‘இந்தியாவின் பார்வையில் தீவிரவாதியாகவும், பாகிஸ்தானின் பார்வையில் மாண்புமிகு தீவிரவாதியாகவும்’ மாறிவிடுகிறான்.
இவ்வாறு தாலிபானுக்குள் ஊடுறுவிய விஸாம் அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவனான ஒமரின் நன்னம்பிக்கையைப் பெற்று அவர்களின் உள்வட்டங்கள் வரை இயங்கக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறான். அல்காயிதாவுக்கே பயிற்சி கொடுக்கும் அளவு வீரதீர சாகசங்களில் தேர்ச்சிபெற்றவனாக இருக்கிறான் விஸாம். ஒமரின் இல்லத்துக்குச் செல்வது, அவனது மகன் நாசருடன் விளையாடுவது, அவன் குடும்பத்துடன் கூட்டுப்புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று ஒமரின் வலதுகரமாக மாறுகிறான் விஸாம். இப்படத்தில் ஒமர் ஒரு கண் இல்லாதவனாகக் காண்பிக்கப்படுகிறான். இது ஒற்றைக்கண்ணனாகச் சொல்லப்படும் தாலிபான் தலைவர் முல்லா ஒமரை நினைவூட்டுகிறது. இங்கு விஸாமோடு இன்னொரு முஸ்லிமல்லாத இந்திய உளவாளியும் இம்தியாஸ் என்னும் பாத்திரத்தை ஏற்று அங்கு செல்கிறான். இருவரும் சேர்ந்து ராவுக்கும் சிஐஏவுக்கும் தாலிபான் பிடியில் உள்ள அமெரிக்கப் பிணைக்கைதிகள் இருக்கும் இடம், உசாமா பின்லேடன் வருகை தரவிருக்கும் ஜிஹாதிகளின் கலந்தாலோசனை எப்போது எங்கு நடக்கிறது ஆகியவை குறித்த தகவல்களை எல்லாம் அவ்வப்போது அனுப்புகிறார்கள்.
ஜிஹாதிகள் மற்றும் அவர்களுடன் உறவில் இருக்கும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தவ்ஃபீக் என்ற அரபிய உடை உடுத்தியிருக்கும் ஒரு செல்வந்தனும் அவனது தாயும் விஸாமுக்கு அறிமுகமாகிறார்கள். தவ்ஃபீக்கின் தாய் விஸாமிடம் தாயுள்ளத்தோடு நடந்துகொள்வதாகக் காட்டுகிறார்கள். செல்வந்தனான தவ்ஃபீக் ஜிஹாதி இல்லை, ஆனால் மிகவும் உபயோகமானவன் என்று ஒமர் விஸாமிடம் சொல்கிறான். இந்த தவ்ஃபீக் இரண்டு ஏக்கர்களில் ஓபியம் பயிரிட ஆரம்பித்து இப்போது இரண்டாயிரம் ஏக்கர்கள் வரை வைத்திருக்கிறான் என்று விஸாமிடம் கூறப்படுகிறது. இவ்வசனத்துக்குப் பிறகு ஓபியம் பயிரிடப்பட்ட வயல்வெளிகள் மங்களான இரவுவெளிச்சத்தில் காட்டப்படுகின்றன. இவ்வாறு தாலிபான் அரசு ஓபியம் பயிரிட்டு அதைக் கள்ளச்சந்தையில் விற்பதன் மூலம் தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் என்ற சித்தரிப்பைத் திரைப்படம் நிகழ்த்துகிறது. இத்தகைய வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தவ்ஃபீக் தனது நண்பனுக்கு ‘இந்த எளிய விவசாயியின் எளிய பரிசு’ என்று கூறி ஒரு சிறிய பாக்கெட் ஓபியத்தை பரிசளிக்கிறான். அதை மறுத்துவிடும் விஸாம் அதை தவ்ஃபீக்கின் பைக்குள்ளேயே சென்று வைத்துவிடுகிறான். பைக்குள் வைக்கும்போது சிஐஏ தங்களிடம் கையளித்திருக்கும் GPS கருவி ஒன்றையும் அந்த ஓபியம் பாக்கெட்டுக்குள் வைத்து மறைத்துவிடுகிறான். இந்த GPS கருவி தரும் சிக்னலை வைத்து அமெரிக்க ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்துகிறது. இந்த இரண்டாவது முறைத் தாக்குதலில் ஒமரின் குடும்பம் கொல்லப்பட்டதாக ஒமர் விஸாமினால் நம்ப வைக்கப்படுகிறான்.
இதன்பின்னர் தவ்ஃபீக்குக்கும் இன்னொரு ஜிஹாதிக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. தவ்ஃபீக்கின் பையில் ஏதோ ஒன்று இருப்பதாக அந்த ஜிஹாதி குற்றம்சாட்டுகிறான். பையைச் சோதிக்கும் ஒமர் அதிலிருக்கும் GPS கருவி மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஓபியம் பாக்கெட்டைக் காண்கிறான். இதனால் தவ்ஃபீக் துரோகம் செய்துவிட்டான் என்று குற்றம்சாட்டப்பட்டு அவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. தவ்ஃபீக் தனது தவறினால் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட்டான் என்று குற்றவுணர்வு கொள்கிறான் விஸாம். “நான் அந்தக்கருவியை எடுத்து அழித்துவிடச் சொன்னபோதே அதைச் செய்திருக்கலாமே? ஏன் நீ என்னுடைய கட்டளைகளுக்கு எப்போதுமே கீழ்ப்படிய மறுக்கிறாய். நம்மை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார்” என்று தனது சக உளவாளி இம்தியாஸைக் கடிந்துகொள்கிறான் விஸாம். அதற்கு இம்தியாஸோ, “இம்தியாஸ் என்பது எனது புனைப்பெயர்தான், எனது மதம் அல்ல” என்று பதிலுரைக்கிறான். இருந்தாலும் விஸாமின் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருந்த ஒமர் அவனைச் சோதித்தறிய அன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஒசாமா வருகிறார் என்று கூறுகிறான். ஒசாமா வருவதை சிஐஏவுக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து தப்பத் தயாராகிக்கொண்டிருக்கும் விஸாம் ஒமரிடம் கையும் களவுமாகப் பிடிபடுகிறான். ஆயினும் ஒமரைத் தாக்கிவிட்டு ஒரு துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடும் நிலையில் அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்புகிறான் விஸாம்.
இதற்குப்பிறகு நடப்பதெல்லாம் அமெரிக்காவிலும், லண்டனிலும், டெல்லியிலும் ஒமரின் குழுவினர் வைக்கும் வெடிகுண்டுகளும் அதை விஸாம் எவ்வாறு செயலிழக்கச்செய்து இந்த மூன்று நகரங்களையும் காப்பாற்றுகிறான் என்பதும்தான். படத்தில் இக்காட்சிகள்தான் நிகழ்காலத்தைச் சேர்ந்தவை. நியூயார்க்கில் ஒரு கதக் கலைஞனாக அறிமுகமாகிறான் விஸ்வநாத். ‘உன்னைக் காணாத நாள் ஒரு நாளில்லையே’ என்ற பக்தி ரசம் சொட்டக்கூடிய பாடலுக்கு தனது மாணவிகளோடு ஆடக்கூடிய காட்சிதான் படத்தின் தொடக்கக்காட்சிகள். கடவுளிடம் அடிபணிதலைக் கோராத, மாறாக பிரபஞ்சவடிவான கண்ணனுக்குள் சங்கமித்துவிடுவது குறித்து இராதை பாடும் பக்திப்பாடலாக அப்பாடல் அமைந்திருக்கிறது. பெண்பாலுக்குரிய அத்தனை நளினங்களுடனும் பாவனைகளுடனும் அப்பாடலுக்கு ஆடுகிறான் விஸ்வநாத்.
அவனது மனைவி நிருபமா ஒரு அணு விஞ்ஞானி. அவள் தீபக் நடத்தும் அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு கதக் கலைஞன் என்பதால் நடை மற்றும் பாவனையில் பெண்பால் குணாம்சம் அதிகமாக வெளிப்படும் விஸ்வநாத்தோடு அவளுக்கு நல்ல உறவு இல்லை. இதனால் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குடன் ஒரு காதல் உறவு ஏற்படுகிறது. இதன் காரணமாக குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் நிருபமா தன்னைப்போன்றே தனது கணவன் விஸ்வநாத்துக்கும் ஏதாவது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு துப்பறிவாளனை நியமிக்கிறாள். விஸ்வநாத்தைப் பின் தொடரும் அத்துப்பறிவாளன் விஸ்வநாத் தொப்பி அணிந்துகொண்டு ஒரு மசூதிக்குள் நுழைந்து தொழுவதைக் காண்கிறான். மேலும் அதைப் படம் எடுத்து நிருபமாவுக்கும் அனுப்புகிறான். இதை அறிந்துகொண்ட நிருபமாவும் அவளது காதலன் தீபக்கும் இதுகுறித்து விஸ்வநாத்துடன் விவாதிக்கிறார்கள். அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கும் தீபக் யாரெனில் அவன் பணத்துக்காக ஒமரின் ஆட்களுக்கு சீசியம் என்ற அபாயகரமான அணுக்கூறை விற்பனை செய்தவன். இவனிடமிருந்து வாங்கிய சீசியமை வைத்துதான் நியூயார்க்கில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறான் ஒமர். இந்நிலையில் தீபக் விஸ்வநாத்தின் வீட்டுக்கு ஒமரின் ஆட்களை வரவழைக்கிறான். அதிலொருவன் விஸ்வநாத்தை படம்பிடித்து ஒமருக்கு அனுப்புகிறான். இவன் தனது பழைய நண்பன் விஸாம் என்பதை அறிந்துகொண்ட ஒமர் அவனைக் கால்களில் சுட்டு, தான் வரும்வரை கொல்லாமல் வைத்திருக்கும்படி ஆணையிடுகிறான்.
அங்கு நடக்கும் உரையாடல்களும் முக்கியமானது. தனது பெயர் வினவப்படும்பொழுது சில முஸ்லிம் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்கிறான் கதாநாயகன். இதனால் கோபமுற்று அவனை அடிக்கும்பொழுது கிருஷ்ணா என்று கதறுகிறான். இதுபற்றிக் கேட்கும்பொழுது தான் ஒரு முஸ்லிம்தான், ஆனாலும் ஒரு கதக் கலைஞனும் கூட என விடைபகர்கிறான். இதற்குப் பிறகு விஸ்வநாத் விஸ்வரூபம் எடுத்து அவனைக் கட்டி வைத்திருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறான். இங்கிருந்து கதை துவங்குகிறது. தனது நம்பிக்கையை வென்று தனக்கே துரோகம் செய்து தனது குடும்பம் அழிக்கப்படுவதற்கும் காரணமான விஸாமைக் கொல்ல ஒமர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான். இவனது கொலைமுயற்சிகளிலும் தப்பித்துக்கொண்டு மூன்று வெவ்வேறு நகரங்களில் செய்யப்பட்ட குண்டுவெடிப்பு முயற்சிகளையும் தடுத்துக்கொண்டு இறுதியில் அந்த உண்மையை வெளிப்படுத்துகிறான் விஸாம். இறுதியில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒமரிடம் அவனது குடும்பம் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறான். அமெரிக்கத் தாக்குதலின் சமயத்தில் ஒமரின் குடும்பத்தை ஒத்த ஏராளமான தீவிரவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க இராணுவம் காப்பாற்றிய காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
ஷேக்ஸ்பியரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் கையேடுகளில் ஒவ்வொரு நாடகங்களிலும் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள், அவர்களது பணி மற்றும் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றை வரைபடமாகக் கொடுத்திருப்பார்கள். இத்தகையதொரு கையேடு ஒன்றில் Merchant of Venice என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கு வழங்கப்பட்டிருந்த பாத்திர வரைபடம் ஒன்றைக் கண்டேன். அதில் பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கிடையிலான உறவுகளோடு அவர்களின் மதமும் வழங்கப்பட்டிருந்தது. Merchant of Venice இன் பாத்திரங்களைப் பொறுத்த வரை அவர்களில் யார் யூதர்கள், யார் கிறிஸ்தவர்கள் என்று அறியாது அந்நாடகத்தைக் கண்டு ரசிக்க முடியாது.
அதுபோல விஸ்வரூபம் படத்தில் யார் முஸ்லிம்கள், யார் பார்ப்பனர்கள் என்று அறியாமல் அது பேசும் அரசியல் நமக்கு புரியாது. விஸ்வரூபம் படத்தின் மையக் கதாபாத்திரமான விஸாம் அஹ்மது காஷ்மீரி என்பவர் முதலில் பார்ப்பனக் கொச்சையில் தமிழ் பேசும், கதக் ஆடும் பார்ப்பன விஸ்வநாத்தாகவே அறிமுகமாகிறார். மேலும் படத்தின் முடிவில் பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்களின் பெயர்ப்பட்டியலில் ‘விஸாம்/விஸ்வநாத் – கமல்ஹாசன்’ என்றுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அணுவியல் விஞ்ஞானியும் விஸாமை விஸ்வநாத் என்று கருதி திருமணம் செய்துகொள்ளும் நிருபமாவும் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். விஸாமின் உயரதிகாரியாகவும் நிருபமாவின் மாமாவாகவும் வரும் கர்னல் ஜகன்னாத்தும் பார்ப்பனர். விஸாமுடன் சக உளவாளியாக வரும் அஷ்மிதா மயிலாடுதுறை பார்ப்பனர். ஏனையோர் வெள்ளைக் கிறிஸ்தவர்கள். இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் அரபி, பஷ்தூ, உருது, தமிழ், ஆங்கிலம் என்று வெவ்வேறு மொழிகளைப் பேசும் இஸ்லாமியர்கள் யாவரும் ஒன்று ஜிஹாதிகளாகவோ அல்லது ஜிஹாதுக்கு ஏதாவதொரு வகையில் உதவக்கூடியவர்களாகவோதான் இருக்கிறார்கள், முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தவிர. அவர்கள் அமெரிக்க வாழ்க்கை முறையை விரும்பக்கூடியவர்களாகவும், அவர்களின் கணவர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவர்களாகவுமே காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
ஒமரின் மனைவி கதீஜா தனது மகன் நாசரை டாக்டர் ஆக்க விரும்புகிறாள். ஆனால் அவளது கணவனோ ‘டாக்டர்களெல்லாம் ஜிஹாதி ஆகுறாங்க ஆஃப்கானிஸ்தான்ல’ என்று பேசுகிறான். ஒமர் தனது மகனின் கண்ணைக் கட்டி தோட்டாக்களை தடவிப்பார்த்து அது என்னவகை தோட்டா என்று கண்டறியப் பயிற்சி கொடுக்கிறான். ஆனால் ஒமர் சென்றபிறகு அவனது மனைவி தனது குழந்தையிடம் ஸ்டெதஸ்கோப் கொடுத்து டாக்டர் போன்று விளையாடச்செய்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்துதான் கதீஜா மற்றும் நாசரின் ஆசை நிறைவேறுகிறது. ஆக ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப்போர் என்பது கதீஜா மற்றும் நாசர் போன்ற ஓராயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் போரே. இங்கு ஆஃப்கனின் முஸ்லிம் ஆண்களிடமிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் இரட்சகர்களாக அமெரிக்க இராணுவம் காட்டப்படுகிறது. இத்தகைய ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும், உள்நாட்டில் குடியேறிய முஸ்லிம் சமூகங்களுக்கெதிரான வெறுப்பைப் பரப்பவும் எவ்வாறு பெண்ணுரிமை பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி சாரா ஃபாரிஸ் என்ற மார்க்சிய இடதுசாரி அறிஞர் ‘ஃபெமோநேஷனலிசம்: பெண்ணுரிமையின் பெயரால்’ (Femonationalism: In the name of Women’s rights) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஒமர் விஸாமின் பூர்விகம் குறித்து வினவும்பொழுதும் இந்தப் பிரச்சினை பேசப்படுகிறது. ஒமரிடம் தனக்கு காஷ்மீரி தெரியாது என்று சொல்லும் விஸாமிடம் பிறகு காஷ்மீரி என்று பெயர் வைத்திருக்கிறாயே என்று கேட்கிறான் ஒமர். அதற்கு விஸாம் தனது தந்தை ஒரு காஷ்மீரி என்றும் தாய் தமிழர் என்றும், தான் பிறந்தவுடனேயே தந்தை தனது தாய்க்கு தலாக் கொடுத்துவிட்டுப் பிரிந்துவிட்டதாகவும் கூறுகிறான். இது முத்தலாக் பற்றிய சமீபத்திய விவாதங்களோடு ஒத்துவருகிறது. மோடி அரசு தன்னை முஸ்லிம் பெண்களின் பாதுகாவலனாக முன்வைக்கிறது. முத்தலாக்கினால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தப்பிரச்சினையை நேர்மையாக அணுகும் தகுதி பிற போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இல்லையெனவும், அந்த நேர்மை இந்துத்துவ முகாமுக்கே இருக்கிறது எனவும் வாதிடுகிறது பாஜக. ராகுல் காந்தி சமீபத்தில் முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் நடத்திய கலந்தாலோசனையில் காங்கிரஸை முஸ்லிம் கட்சி என்று கூறியதாக ஒரு பொய்ச்செய்தி பரப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி மட்டும்தானா, முஸ்லிம் பெண்களுக்கானது இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இவ்வாறு இந்திய அளவில் முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் முஸ்லிம் ஆண்கள் X ஒடுக்கப்படும் பெண்கள் என்று மிகு எளிமைப்படுத்தி, இதனூடே வேறெந்த intersectionalities உம் இல்லாமல் ஒரு இருமையை கட்டமைத்து, முஸ்லிம் விரோத வலதுசாரி சக்திகளையே முஸ்லிம் பெண்களின் இரட்சகனாக கட்டமைப்பதே இந்த ஃபெமோ தேசியவாத அரசியலாகும்.
‘நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம்’ அரசியல் இப்படத்தில் எவ்வாறு சித்தரிக்கப்படிருக்கிறது என்பதையும் கேள்விக்குள்ளாக்குவது நலன் பயக்கும். இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேற்கண்ட நல்ல முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மேலாண்மைக் கருத்தியலை ஏற்பவர்களாகவும், ஏகாதிபத்தியத்தைச் சரிகாண்பவர்களாகவும் இருக்கும்போது ஏனைய எல்லா கெட்ட முஸ்லிம்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகக் காட்டப்படுவதோடு அவர்கள் எல்லோருமே எந்தவகையான அரசியல் வன்முறையையும் மேற்கொள்ளத் தயங்காதவர்களாகவும், அணுகுண்டு வெடிக்கவைத்து இலட்சக்கணக்கான சிவிலியன்களைச் சாகடிப்பதற்குத் தயங்காதவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இங்கு இஸ்லாமிய வைதீகம் என்பது நவீனத்துவ எதிர்ப்பு, அரசியல் வன்முறை, அழித்தொழிப்பு ஆகியவற்றோடு சேர்த்துப் பேசப்படும்பொழுது அவைதீகம் என்பது அரசு ஆதரவு நிலைப்பாடு, மேலாண்மைக் கருத்தியல்களை அகவயப்படுத்துதல் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது, ஒருவர் நல்ல முஸ்லிமாக நிரூபிக்கப்படாதவரை அவன் கெட்ட முஸ்லிம்தான். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் கெட்ட முஸ்லிம்களுக்கு எதிரான போரில் கலந்துகொண்டு தங்களது ‘நல்ல முஸ்லிம்’ தன்மையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மம்தானியின் வார்த்தைகளை அப்படியே தரவேண்டுமானால், “Unless proved to be “good”, every Muslim was presumed to be “bad”. All Muslims were now under obligation to prove their credentials by joining in a war against “bad Muslims”.
இத்தகைய சித்தரிப்பில் அரசியலற்ற வைதீக முஸ்லிம், அரசியல் வன்முறையை மறுக்கும் வைதீக முஸ்லிம், தேசிய-அரசுகளை ஏற்கும் மற்றும் தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்கும் முஸ்லிம்கள், அரசு சார்ந்த மாற்றத்தை மறுத்து தனிநபர் மாற்றத்தை மட்டுமே முன்வைக்கும் (தப்லீக் ஜமாத் போன்ற) மதப்பரப்புரை அமைப்புகள், பழமைவாதிகள், இஸ்லாமியச் சிந்தனையில் விமர்சன மரபை ஆதரிக்கும் அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான பொது விவாதங்கள் குறித்த நுண்ணுணர்வோடும் விமர்சனத்தோடும் இருக்கும் க்ரிட்டிகல் முஸ்லிம்கள், அரசு சார்ந்த மாற்றத்தை விழைந்தாலும் அதை வெறுமனே கருத்தியல் பிரச்சாரத்தின் மூலமாக மட்டுமேயல்லாமல் அரசியல் வன்முறையைப் பிரயோகிக்காத இஸ்லாமிஸ்ட் அமைப்புகள், இவ்வாறு எந்தப் பெரிய புரிதலும் இல்லாது ஆனாலும் ஒருவகை இஸ்லாமிய வாழ்க்கையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் ‘அன்றாட முஸ்லிம்கள்’ என்று இத்தனை வகையான வேறுபாடுகளுடனும், இதற்கு அப்பாலும் பல வேறுபாடுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை அடிப்படைவாத கெட்ட முஸ்லிம் X பன்மைத்துவ நல்ல முஸ்லிம் என்று பிரித்து அவர்களை ‘பிரதியாக்கம்’ (textualize) செய்வதுதான் அவர்களை மற்றமையாக்கம் செய்வதற்கான அடிப்படை. தமிழ்ச்சூழலில் முஸ்லிம் முற்போக்காளர்களாக அறியப்படுபவர்களும் இந்த இருமை எதிர்வைத் தொடர்ந்து கட்டமைத்துக்கொண்டே செல்கிறார்கள். ஒரு கல்விப்புலப் பிரதி சூஃபியிசத்தை உருவாக்கி அதற்குள் அடைபடாத முஸ்லிம்கள் எல்லோரையும் அடிப்படைவாதிகள் என்றும், எல்லா அடிப்படைவாதிகளும் ‘உறங்கு நிலை ஜிஹாதிகள்’ (sleeper cells) என்றும் தீர்க்கிறார்கள். இத்தகைய ‘முஸ்லிம் முற்போக்காளர்களை’ பார்ப்பன அறிவுற்பத்தி மையங்களும் முஸ்லிம் சமூகத்துக்கான தங்களது Native Informer களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தமிழ்ச்சூழலில் தலித் கருத்தியலாளர்கள், பெண் கருத்தியலாளர்கள் போன்று முஸ்லிம் முற்போக்காளர்களும் ஒரு கருத்தியல் தரப்பாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்த ‘முஸ்லிம் முற்போக்கு/சீர்திருத்த எழுத்து’ என்ற திணையே முஸ்லிம்களின் பிரச்சினைகளெல்லாம் அடிப்படையாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருக்கும் காரணங்களால் வருகிறது என்ற பார்ப்பனிய முற்சாய்விலிருந்துதான் வருகிறது. இத்தகைய அறிவுற்பத்தியானது முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக்காரணம் அவர்களேதான், முஸ்லிம் பிரச்சினை என்பது முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் நல்ல முஸ்லிம்கள் மற்றும் கெட்ட முஸ்லிம்களுக்கிடையிலான போராட்டம்; அதில் நல்ல முஸ்லிம்கள் வெல்வதற்கு பொதுச்சமூகம் உதவிகரமாக இருக்கவேண்டும் என்ற இந்த முற்சாய்வு பார்ப்பனியக் கருத்து மேலாண்மையிலிருந்துதான் வருகிறது. இத்தகைய கருத்து மேற்கத்திய லிபரல்களிடமும் இருப்பதை மஹ்மூத் மம்தானி தனது ‘நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்’ நூலில் சுட்டிக்காட்டுவார். முஸ்லிம் பிரச்சினை பிற பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டதும், ஒன்றிணைந்ததும்தான். அந்த வகையில் ஒரு முஸ்லிம் அறிவுஜீவி முஸ்லிம் நோக்குதளத்திலிருந்து இந்தியத் தேசியம், தேசிய அரசு, பார்ப்பனிய அரசியல், இந்திய-இந்து மையவாத அறிவுற்பத்தி ஆகியவை மீதான விமர்சனத்திலிருந்துதான் தொடங்க முடியும். அந்த விமர்சனத்தினூடே முஸ்லிம் சமூகத்திற்குள் சாதி, வர்க்க மற்றும் பாலின ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவுகளின் நோக்குதளங்களை அங்கீகரிக்கும் ஏற்பை முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாக்க இயலும். நிற்க.
முதலாம் பாகத்தில் முஸ்லிம் விரோதப் படம் என்று முஸ்லிம்களிடம் எதிர்ப்பைச் சம்பாதித்த கமல்ஹாசன், அதை சமநிலைப்படுத்தும் வகையில் மத்திய அரசில் பணிசெய்யும் ஒரு ஐயரைத் தேசத்துக்கு எதிராகத் தீவிரவாதிகளுக்கு உதவுபவராகக் காண்பித்துள்ளார் (பணத்துக்காக? எவ்வாறிருப்பினும் மதத்துக்காக இருக்காது, ஏனெனில் அவர் இஸ்லாமியர் அல்ல). அந்த அதிகாரி ஒருமுறை விஸாமிடம் “என்ன இருந்தாலும் நீ ஒரு முஸ்லிம்தானே” என்று கூறுவார். அதற்கு விஸாம் “நான் முஸ்லிம்தான். தேசத்தை நேசிக்கிற முஸ்லிம். நாட்டு மக்களுக்காக உயிரைக் கூடக் கொடுக்கத் தயாரா இருக்கிற முஸ்லிம். எந்த மதத்தையும் சேர்ந்தவனா இருக்கிறது தப்பில்லை, தேசவிரோதியா இருக்கிறதுதான் தப்பு” என்பார். இது முஸ்லிம்களுக்காகப் பேசுகிறது என்ற தொனி இருந்தாலும் அடிப்படையில் முஸ்லிம்களை மேலும் மற்றமையாக்கம் செய்வதாகவே இதுவும் அமைகிறது. முகநூலில் இண்டியன் லிபரல்ஸ் என்ற பக்கத்தில் ஒரு மீம்ஸில் “நாங்கள் அப்துல் கலாம் மாதிரியான முஸ்லிம்களை விரும்புகிறோம், அஜ்மல் கசாப் மாதிரியான முஸ்லிம்களைத்தான் வெறுக்கிறோம்” என்று சொல்லப்பட்டிருந்தது. இதுதான் இந்திய லிபரல் தன்னிலைகள் இயங்கும் முறைமை. இதனது தர்க்கபூர்வ நீட்சியாகவே இந்துத்துவ வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நல்ல முஸ்லிமைப் பிற கெட்ட முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட மதக் கடைப்பிடிப்பு சார்ந்த வேறுபடுத்திக்காட்டல்கள் நிறைய வருகின்றன. விஸாமின் வீட்டில் இருக்கும் வாமனரின் படத்திலிருந்து, ராதாவாக மாறி கண்ணனுக்கு உருகுவதிலிருந்து, அல்லாஹூ அக்பர் சொல்லிவிட்டு உடனேயே கிருஷ்ணா என்றும் அழைப்பது வரை நிறைய குறிப்புகள் வருகின்றன. முதலாம் பாகத்தின் இறுதிக்காட்சியில் வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் தீவிரவாதிகளும், அம்முயற்சியைத் தடுக்க இருக்கும் விஸாமும் தொழுகை நடத்துவது மாறி மாறிக் காண்பிக்கப்படும். விஸாம் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு FBI அதிகாரி சக அதிகாரியிடம் விஸாம் என்ன செய்துகொண்டிருக்கிறான் என வினவுவான். அதற்கு அந்த அதிகாரி “அவன் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்” என்ற பதிலுக்கு “கர்த்தரிடமா?”என்ற பதில் கேள்வி வரும். அதற்கு அந்த அதிகாரி “ஆம், அது அரபிக் வெர்ஷன் என்பது மட்டும்தான் ஒரே வேறுபாடு” என்று பதில் வரும். இங்கு நாம் கவனிக்கவேண்டியதெல்லாம் இதுதான். நவீன மதிப்பீடுகளை அகவயப்படுத்திக்கொள்ளாத எந்தவொரு இஸ்லாமியச் சிந்தனாமுறைமைகளையும் தீவிரவாதத்துக்கான potential ஐக் கொண்டதாக காண்பது. நவீன உலகின் அரசியல் வன்முறைகளுக்கான தோற்றுவாயாக மத நம்பிக்கையை, குறிப்பாக நவீன-எதிர்ப்பு மற்றும் நவீனத்தை அழித்தொழிக்கும் மனப்பான்மையும் கொண்டதாக இஸ்லாமிய நம்பிக்கையைக் காண்பதிலிருந்துதான் இத்தகைய சித்தரிப்புகள் வருகின்றன. இதை மறுத்துதான் மஹ்மூத் மம்தானி மேற்குறிப்பிட்ட நூலில், நவீனமே எவ்வாறு வன்முறையோடு பிறந்து தனது இருப்புக்கு வன்முறையையே சார்ந்திருக்கிறது என்று விளக்குவார்.
மேலும் இந்தப்படத்தில் ‘நீதிமிக்க போரிலிருந்து’ ‘தீவிரவாதத்தைப்’ பிரித்துக்காட்டுதல் எவ்வாறு நடக்கிறது என்பதும் முக்கியமான பகுதியாகும். தலால் அசத் தனது ‘தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் பற்றி’ (On Suicide Bombing) என்ற நூலில் இதுகுறித்து தெளிவாகப் பேசுகிறார். அந்நூலில் அவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலைப் பற்றி குறிப்பாக விவாதித்திருந்தாலும், தீவிரவாதம் குறித்த மேற்கத்திய பொது விவாதத்தையும் கோட்பாட்டுருவாக்கம் செய்கிறார். தீவிரவாதம் மற்றும் நீதிமிக்க போரை எவ்வாறு வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்வது, மற்றும் முன்னதுக்கு எதிராகப் பின்னதை ஏன் ஆதரிக்கவேண்டும் என்பது வால்ஸர் என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டை பிரச்சினைக்குட்படுத்துவதன் மூலமாக தனது கோட்பாட்டுருவாக்கத்தைத் தொடங்குகிறார் தலால் அசத். இவற்றுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளாக வால்ஸர் குறிப்பிடுவனவற்றுள் சில இவை: ‘தீவிரவாதத்தின் சாராம்சமே கண்டிக்கத்தக்கது, போரின் அதீதம்தான் கண்டிக்கத்தக்கது’, ‘தீவிரவாதிகள் கொன்றதை விட அதிகமான சிவிலியன்களைப் போரில் ஒரு இராணுவ வீரன் கொல்ல நேரலாம், ஆனால் அவன் அதற்காக மனம் வருந்துகிறான், அதுதான் அவனுக்கும் தீவிரவாதிக்குமான வித்தியாசம்’. இங்கு தீவிரவாதத்திற்கும் போருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடாக இராணுவ வீரனுக்குள் தோன்றும் குற்றவுணர்வைக் குறிப்பிடுகிறார் வால்ஸர். இதுபற்றிய வால்ஸரின் கூற்றை மேற்கோள்காட்டுவது பொருத்தமாக இருக்கும்: “அறவலிமை கொண்ட தலைவன் (Morally strong leader) யாரெனில் குற்றமற்றவர்களைக் கொல்வது எதனால் தவறு என்பதை அவன் அறிவான், அதனால் அவர்களைக் கொல்ல மறுப்பான், அவர்களைக் கொல்வதற்கு மீண்டும் மீண்டும் மறுப்பான், இறுதியாக வானமே இடிந்து விழக்கூடிய உச்சகட்ட நிலையில், தான் என்ன செய்யவேண்டுமோ அதைத் தன்னால் செய்யவே முடியாது என்ற நினைத்து, வேறு வழியில்லாமல் இறுதியாக அதைச் செய்துவிடுவான்.” இங்கு தீவிரவாதியையொத்த நடவடிக்கையில் ஈடுபடும் போர் வீரனின் “குற்றவுணர்ச்சி” அவனைத் தீவிரவாதியாக்காமல் “அறவலிமைகொண்ட தலைவன்” ஆக்குகிறது.
இப்படத்தின் நாயகனான விஸாம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ஏனைய தமிழ்சினிமா நாயகர்கள் போன்று ஒரு கொசுவை அடித்துக்கொல்லும் மன அமைப்போடு தீவிரவாதிகளை வேட்டையாடுவதில்லை. தனது கவனக்குறைவின் காரணமாக ஜிஹாதி அல்லாத தவ்ஃபீக் கொல்லப்படும்போது அதற்காகக் கண்ணீர் விடுகிறான். “நீ ஏன் நான் சொன்னப்பவே அந்தக் கருவியை அவன் பேக்கில் இருந்து எடுக்கல… அல்லாஹ் நம்மள மன்னிக்கவே மாட்டார்” என்கிறான். “நான் நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன்… நான் செத்தாலும் அழிக்கமுடியாத பாவம் என் நெத்தில எழுதியிருக்கு” என்று நிருபமாவிடம் உணர்ச்சிவசப்படுகிறான். சலீமைக் கொன்றுவிட்டு உணர்ச்சிபொங்க அவன் முகத்தைப் பார்க்கிறான். உமரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு கடைசி நேரத்திலும் அவனது மனமாற்றத்திற்காகப் பேசுகிறான். குறிப்பாக தவ்ஃபீக் ஜிஹாதி இல்லை என்று குறிப்பிடப்படுவதே இந்தக் குற்றவுணர்ச்சியை இன்னும் அழுத்தமாக நிகழ்த்துவதற்கே, இதன் மூலம் விஸாம் இன்னும் அறவலிமையோடு மிளிர முடியும். இங்கு வன்முறை தாண்டி அது எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது (குற்றவுணர்ச்சியுடனா, அது இல்லாமலா) என்பது இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான உரைகல் ஆகிறது. இவ்வாறு விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கான மேலாண்மைக் கருத்தியலின் மீது நின்று முஸ்லிம்களை மற்றமையாக்கும் அரசியலின் தமிழ் திரைச் சாட்சியாக உருவாகியிருக்கிறது.