Home Blog Page 4

பெரும்பான்மைவாதத்துக்குப் பலியான விகடன்

தற்போது விகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம் சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால் பத்திரிகையாளர்கள் பலர் கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

வணக்கம் சார்,

கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது.

தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.
எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ’வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாகப் எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.

நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.
எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.

மிகுந்த மன வருத்ததுடன்,
ர. முகமது இல்யாஸ்.
(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)
20/04/2020

‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!

ஜெய்தீப் அஹ்லாவத்தின் குரலில் தொடங்குகிறது ‘பாதாள் லோக்’.

”இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று உலகங்கள் இருக்கின்றன. கடவுள்கள் வசிக்கும் சொர்க்க உலகம்; மனிதர்கள் வசிக்கும் பூமி உலகம்; பூச்சிகளும் பிற ஊர்வனவும் வசிக்கும் பாதாள உலகம். இவை நமது புனித நூல்களில் இருக்கின்றன. ஆனால் நான் இதனை வாட்சாப்பில் படித்தேன்”.

இரவுநேர ரோந்துக்குச் செல்லும்போது, தனக்குக் கீழிருக்கும் காவல் அதிகாரியிடம் இதைச் சொல்கிறார் உயரதிகாரியான ஜெய்தீப் அஹ்லாவத். ஹாத்தி ராம் சௌத்ரி என்ற கதாபாத்திரம் அவருக்கு. சில்லறை வழக்குகளாலும், பணி உயர்வு பெற்ற தனது ஜூனியருக்குக் கீழ் பணியாற்றுவதாலும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. ஏதேனும் பெரிய வழக்கு கிடைத்துவிடாதா என்ற ஏக்கம். அப்படியாக அவருக்குக் கிடைக்கிறது ஒரு வழக்கு.

Paatal Lok poster

டெல்லியின் பாலம் ஒன்றில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நால்வரைத் துரத்திக் கைது செய்கிறது புலனாய்வுத் துறை. அந்தப் பாலம், ஹாத்தி ராம் சௌத்ரியின் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. வழக்கு விசாரணை அவருக்கு அளிக்கப்படுகிறது. நால்வரும் கைது செய்யப்படுகின்றனர். கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் கொலை செய்ய முயன்றதாகச் சுட்டிக்காட்டப்படும் நபர், தேசிய ஊடகம் ஒன்றின் மூத்த ஊடகவியலாளர், சஞ்சீவ் மெஹ்ரா. கடந்த கால ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் ஒன்றை வெளிக்கொண்டு வந்தவர். ஆதலால் அவர் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

வழக்கு விசாரணையைத் தொடங்குகிறார் ஹாத்தி ராம் சௌத்ரி. அவருக்கு உதவியாக இருப்பது, அவருக்குக் கீழ் பணியாற்றும் இம்ரான் அன்சாரி. ஐ.பி.எஸ் தேர்வுக்காகத் தயாராகும் அன்சாரி, தான் பணியாற்றும் இடத்தில், தான் முஸ்லிம் என்பதால் பல்வேறு விதமான பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார். விசாரணையின் கோணம், அரசுத் தரப்புக்குத் தோதாக அமையாததாலும், பல்வேறு குறைபாடுகளாலும் சி.பி.ஐக்கு மாற்றப்படுகிறது. ஹாத்தி ராம் சௌத்ரி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. சி.பி.ஐ தன் விசாரணையில், சஞ்சீவ் மெஹ்ரா கொலை முயற்சி வழக்கைப் பாகிஸ்தான் சதி என்று அறிவிக்க, தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளரான சஞ்சீவ் மெஹ்ரா இதனைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்கிறார். பிடிபட்ட நால்வரும் யார் என்பதைத் தேடி, ஹாத்தி ராம் சௌத்ரி பயணிக்கிறார். விடையைத் தெரிந்து கொண்டாரா என்பது மீதிக்கதை.

Paatal Lok

ஏறத்தாழ 7 மணி நேரங்கள் கவனம் சிதறவிடாமல், தொடர்ந்து பார்வையிடும் அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இதனை முன்னின்று எழுதியிருப்பவர் சுதீப் ஷர்மா. இவர் ஏற்கனவே எழுதிய திரைக்கதைகளான ’உட்தா பஞ்சாப்’, ‘NH10’, ‘சோன்சிரியா’ ஆகியவை இதே பாணியிலான கதைகள். ‘உட்தா பஞ்சாப்’ பஞ்சாப்பில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களைப் பற்றி பேசியது; ‘NH10’ ஆணவப்படுகொலையை முன்வைத்து நகர்ந்தது. ‘சோன்சிரியா’ இந்திரா காந்தி காலத்தில் மத்தியப் பிரதேசம் – பிஹார் எல்லையில் வாழ்ந்த கொள்ளைக்காரர்கள், சாதி, வன்கொடுமை முதலானவற்றைத் தொட்டது. வட இந்தியாவின் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியைத் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் சுதீப் ஷர்மா. அதன் நீட்சியாக, தற்போது வெளிவந்திருக்கிறது ‘பாதாள் லோக்’.

கடந்த காலங்களில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களுக்கான அரசியலைப் பேசத் தயங்கின. அரசு தலையீடு, சென்சார் பிரச்னை, வணிக சமரசங்கள் முதலானவை இதன் காரணிகளாக முன்வைக்கப்பட்டன. இணையம் உருவான பிறகு, இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இயக்குநர் அனுராக் காஷ்யப் கடந்த ஆண்டு, ஒரு பேட்டியில் “எனது தொழில் பெருகியதற்குக் காரணம், மக்கள் எனது திரைப்படங்களை இணையத்தில் டவுன்லோட் செய்ததால்தான்; எனது படங்கள் டவுன்லோட் செய்யப்படாமல் இருந்திருந்தால், நான் இந்தத் தொழிலில் இருந்திருக்க மாட்டேன்” என்றார். இணையத்தில் திரைப்படங்கள் பைரசி செய்யப்படக்கூடாது என்று பெரும்பான்மையான படைப்பாளிகள் கூறியபோது, இப்படியொரு கருத்தை அனுராக் முன்வைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஓ.டி.டி தளங்களுக்கான வணிகம் இந்தியாவில் பெருகிய பிறகு, அனுராக் உள்ளிட்ட படைப்பாளிகள் தணிக்கைக்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல், சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர். அதன் விளைவாகத் தற்போது பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் முதலானவை வெளிப்படையாக அரசியல் பேசி வருகின்றன.

Sacred Games

அனுராக் காஷ்யப் – விக்ரமாதித்ய மோட்வானே ஆகியோர் இயக்கிய ‘சேக்ரெட் கேம்ஸ்’ இதற்குத் தொடக்கமாக அமைந்தது. மும்பையின் நிலம், சமகால அரசியல் முதலானவற்றைத் தொட்ட கேங்க்ஸ்டர் கதை. அதன் இரண்டாம் பாகம் இன்னொரு படி மேலே சென்று, இந்திய அரசு நலன்களுக்காகப் பகடையாக்கப்படும் கேங்க்ஸ்டர், அவனைத் தீவிரவாதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்து சாமியார் என்ற கதையைப் பேசியது. ‘நெட்ஃப்ளிக்ஸ்’ தளத்தில் இந்தத் தொடர் வெளியான சில மாதங்களுக்குள், இதே பாணியில் இந்துத்துவ எதிர்ப்பை எதிர்கால டிஸ்டோப்பியன் உலகம் வழியாக முன்வைத்தன ‘கௌல்’, ‘லேலா’ ஆகிய தொடர்கள். ’அமேசான் ப்ரைம்’ தளம் அரசியலைத் தொட்டது, ‘தி பேமிலி மேன்’ தொடரின் வழியாக. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், வீட்டில் சாதாரணமாகவும், அலுவலகத்தில் மிகப்பெரிய உளவாளியாகவும் வாழும் ஒருவனின் கதை. காஷ்மீர், தீவிரவாதம் முதலானவற்றைத் தொட்டுச் சென்ற கதை. இவை அனைத்துமே, இந்திய அரசு என்னும் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகளை ஓரளவுக்குப் பேசியவை.

அதே வேளையில், அதிகார வர்க்கத்தின் முகங்களாக இருப்பவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளி, வழக்கு விசாரணை முதலானவற்றைக் கதைக்களங்களாக கொண்ட ‘டெல்லி க்ரைம்’, ‘பஞ்சாயத்’, ‘சோனி’, ‘She’ ஆகிய படைப்புகளும் சமீப காலங்களில் கவனம் பெற்றவை. இப்படியான இரண்டு தளங்களையும், நேர்த்தியாகக் கையாண்டு, திரைக்கதையில் ஆச்சர்யம் அளித்திருக்கிறது ‘பாதாள் லோக்’.

Paatal Lok

தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ‘The Story of my Assassins’ நூல் தான் இந்தத் தொடருக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இந்தக் கதையின் வழியாக, இந்தியச் சமூகத்தில் தலித்கள் மீதான சாதி ஆதிக்கம், முஸ்லிம்கள் மீதான கும்பல் படுகொலைகள், திருநங்கைகள் மீதான ஆணாதிக்க வன்கொடுமை முதலானவை எப்படி நிறுவனமயமாகியிருக்கின்றன என்பதையும், இதில் அரசு எப்படி தலையிடுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது இந்தத் தொடர். இந்திய அரசு இயங்குவதற்கும், தேர்தல் கட்சிகள் வெற்றி பெறுவதற்கும் (பாஜக குறித்து குறியீடுகள் உள்ளன), வட இந்திய ஊடகங்கள் மக்களிடையே தங்கள் இருப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் இஸ்லாமிய வெறுப்பு நிறுவனமயப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது ‘பாதாள் லோக்’.

உயர்சாதி – தலித், இந்து – முஸ்லிம், ஆணாதிக்கம் – பால்புதுமை, கிராமம் – நகரம் , ஆண் – பெண், மனிதன் – விலங்கு, அரசு – சாமான்யர்கள் முதலான பல்வேறு முரண்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன. தலித் வீட்டில் உணவருந்தி விட்டு, கங்கை நீரினால் கைகளைக் கழுவும் பார்ப்பன அரசியல்வாதி இதில் இருக்கிறார். கும்பல் படுகொலைகளையில் முதல் மகனை இழந்த பயத்தில், இரண்டாவது மகனை முஸ்லிமாக வளர்க்காதபோதும், அரசு அவனை ஜிஹாதியாக அறிவித்துவிட்டதே என்று வேதனைப்படும் முஸ்லிம் தந்தை இருக்கிறார். தான் திருநங்கை என்பதை வெளியில் கூறுவதற்கும், சமூகத்தால் தன்னை எப்படி அணுகும் என்று அஞ்சுபவர் இருக்கிறார். அதே வேளையில், திரைக்கதையிலும் அது பேசிய அரசியலிலும் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

சாதிய வன்முறை குறித்த காட்சியில் உயர்சாதி சீக்கியர்களைக் காட்டியிருப்பது, தலித் ஆண் பார்ப்பன பெண்ணை ஒடுக்குவதான சித்தரிப்பு முதலானவை சிக்கல்களாக வெளிப்பட்டன. இப்படியான பிரச்னைகள் சமூகத்தில் நிகழ்வது உண்மை என்றபோதும், பார்ப்பன மதத்தில் நிகழும் எண்ணிக்கையை விட மிகக் குறைவானவை. சீக்கிய சமூகம் இனப்படுகொலையை எதிர்கொண்ட சமூகம். ஓர் அரசைக் குற்றம் சாட்டும்போது, அதில் நிறுவனமயமாகியிருக்கும் பார்ப்பன நலன்களை ஒதுக்கி, அனைத்து சமூகங்களின் தலையிலும் பாரத்தை வைத்திருக்கிறது ‘பாதாள் லோக்’. மோடி பக்தரான விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இந்தத் தொடரைத் தயாரித்ததற்கான காரணம் இதில் புலப்படுகிறது.

Paatal Lok

ஹாத்தி ராம் சௌத்ரி கதாபாத்திரத்தைப் போலவே, சினிமா வாழ்க்கையைக் கொண்டவர் ஜெய்தீப் அஹ்லாவத். தனக்குக் கிடைத்த வாய்ப்பில், பின்னியெடுத்திருக்கிறார் ஜெய்தீப். ஊடகவியலாளர் சஞ்சீவ் மெஹ்ராவாக நீரஜ் கபி நடித்திருக்கிறார். ஓ.டி.டி காலங்களிலும் மாற்று சினிமாவிலும் வெளிப்படும் திறமையான நடிகர் நீரஜ் கபி. ’ஹத்தோடா’ தியாகியாக மிரட்டியிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. இந்தத் தொடரின் casting director இவர்தான்.

‘பாதாள் லோக்’ தொடரை இணையத்தில் இருக்கும் வலதுசாரி இந்துத்துவ ட்ரோல்கள், ஹிந்து ஃபோபியாவை உற்பத்தி செய்வதாகக் கூறி, புறக்கணிக்க அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். ‘சேக்ரெட் கேம்ஸ்’ தொடர் முதல் ஒவ்வொன்றிற்கும் அவர்களின் எதிர்வினை இதுவாகவே இருக்கிறது. இணையத்தில் இருக்கும் இந்துத்துவ எதிர்ப்புச் சந்தையை ஓ.டி.டி நிறுவனங்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ’ஓ.டி.டி தளங்கள் தங்களைத் தாங்களே தணிக்கை செய்துகொள்ள முன்வர வேண்டும்’ என்றார். Digital Content Complain Council என்ற அரசு அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி, படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்துத்துவ ட்ரோல்களின் எதிர்ப்பையும் மீறி, சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.

வெறுப்புப் பிரச்சாரம் செய்ததற்காக Zee News சுதிர் சவுத்ரி மீது வழக்கு

Zee news ஆசிரியர் சுதிர் சவுத்ரி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல் துறை.

சுதிர் சவுத்ரி கடந்த மார்ச் 11ம் தேதி Zee news தொலைக்காட்சியில் இஸ்லாம்-அச்சத்தை பரப்பும் வகையில் ஜிஹாதின் வகைகள் என விளக்கப் படத்துடன் செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில் புகார் எழுந்ததால், மத விரோதத்தைப் பரப்பியது, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில் கேரளாவின் கோழிக்கோட்டிலுள்ள காவல் நிலையமொன்றில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. ஜாமினில் வெளிவர முடியாத ஐபிசி 295 A பிரிவும் அவர் மிது போடப்பட்டிருக்கிறது.

காவல்துறைக்குப் புகாரளித்த அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் (AIYF) மாநிலத் துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான கவாஸ் கூறியதாவது, அந்த நிகழ்ச்சி மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும் அரசமைப்புக்கும் முரணாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கு அது எதிராக இருப்பதாகத் தெரிவித்தார்.

கவாஸ் மார்ச் 17 புகார் அளிபதற்கு முன்னர் AIYF வின் தலைமையிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு அப்புகாரை கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹெராவிடமும் அதன் நகலை கோழிக்கோடு காவல் ஆணையரிடமும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியதாகக் கூறினார்.

அவர் அளித்த புகாரில், இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களைக் குறிவைத்து ‘ஜிஹாத் விளக்கப்படம்’ போடுவதன் வழியாக வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியதோடு இரு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) வழிகாட்டுதல் 2 (ii) என்பது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது மதக்குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது சொற்களைப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று கவாஸ் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் FIR பதிவு செய்ததைத் தொடர்ந்து, ZEE நிர்வாகத்திடம் இருந்து, டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் இருந்து உட்பட தொடர் அழைப்புகள் வந்ததாகக் கூறியுள்ள அவர், புகார் அளித்ததன் பின்னணியில் உள்ள எனது நோக்கங்களையும் நான் ஏன் கேரளாவில் புகார் அளித்தேன் என்பதையும் கேட்டார்கள் என்றார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லாததால் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்க தயாராக இல்லை என்றும் கவாஸ் தெரிவித்தார்.

AIYF தலைவர் கூறும்போது, புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதும் அது பொதுவானது. ஒரு பார்வையாளர் அந்நிகழ்ச்சியுடன் முரண்பட்டால் அதற்கெதிராக அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யலாம். நான் கேரளாவில் வழக்கறிஞராக பணியாற்றுவதால் இங்கேயே புகார் தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.

`முல்க், ஆர்டிகிள் 15, தப்பட்!’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலும், போதாமையும்!

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேராதரவைப் பெற்று வருகிறது அனுபவ் சின்ஹாவின் ‘தப்பட்’. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படமும் இப்படியான வரவேற்பைப் பெற்றது. 2018ஆம் ஆண்டு வெளியான அவரது ’முல்க்’ திரைப்படமும் இதே வரிசையில் அமைந்திருந்தது.

மதம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வட இந்தியச் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அனுபவ் சின்ஹாவின் சமீபத்திய மூன்று திரைப்படங்களும் பேசின. இந்த மூன்று திரைப்படங்களுக்கு முன், ஷாரூக் கானை வைத்து ‘ரா ஒன்’ போன்ற கமர்சியல் மசாலா திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருந்த அனுபவ் சின்ஹா, தனது படைப்புகளில் அரசியல் பேசத் தொடங்கியது வரவேற்புக்குரியது.

அனுபவ் சின்ஹா ஒரு முஸ்லிம் அல்ல; ஆனால், அவரது ‘முல்க்’ இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைக் கண்டிக்கும் திரைப்படமாக அமைந்தது. அவர் தலித் அல்ல; ஆனால், அவரது ‘ஆர்டிகிள் 15’ உத்தரப் பிரதேசத்தில் வாழும் தலித்கள் மீதான சாதி இந்துக்களின் அடக்குமுறையைக் கண்டித்தது. அவர் ஒரு பெண் அல்ல; ஆனால், அவரது ‘தப்பட்’ இந்தியக் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்தது. இந்தியச் சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அவர் இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.

இயக்குநர் அனுபவ் சின்ஹா

2018ஆம் ஆண்டு வெளியானது ‘முல்க்’. ரிஷி கபூர், டாப்சி ஆகியோர் முன்னணி நடிகர்கள். வாரணாசியில் வாழும் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் உறுப்பினர் தீவிரவாதச் செயலில் ஈடுபட, அதுவரை நல்லிணக்கத்தோடு அந்தக் குடும்பத்தை அணுகிய பெரும்பான்மைச் சமூகம், மொத்த குடும்பத்தையும் தீவிரவாதிகளாகக் கருதத் தொடங்குகிறது. தங்கள் தேசப்பற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, அந்தக் குடும்பத்தின் மீது விழுகிறது. இதன் வழியாக, இந்தியச் சமூகத்தில் நிலவும் இஸ்லாமிய வெறுப்பைக் கண்டிக்கிறது ‘முல்க்’. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியைக் கதைக்களமாகக் கொண்டு, பாஜக ஆட்சியில் இப்படியான திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது நல்லிணக்கத்தை விரும்புவோரிடையே நம்பிக்கையை விதைத்தது.

2019ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ இந்தியா முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. தலித்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பாலிவுட் திரைப்படங்கள் பெரிதும் பேசியிராத சூழலில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில், படாவுன் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை நிகழ்வின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கூலி உயர்வு கேட்டதற்காக இரண்டு தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட, கிராமத்திற்குப் புதிதாக வரும் காவல்துறை அதிகாரி அந்த வழக்கின் பின்னணியை விசாரிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது ‘ஆர்டிகிள் 15’.

2020ஆம் ஆண்டு வெளியான ‘தப்பட்’, இந்தியக் குடும்பங்களில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசியது. உயர்சாதி எலைட் குடும்பம் ஒன்றில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதி. ஒருமுறை கோபத்தில் மனைவியைக் கணவர் அறைந்துவிட, அதனை எதிர்த்து விவாகரத்துப் பெறும் மனைவி என்ற ஒன்லைனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையில் வீட்டு வேலைக்காரப் பெண், பெண் வழக்கறிஞர், கதாநாயகியின் தாய், மாமியார், பக்கத்து வீட்டு சிங்கிள் பேரண்ட் பெண் முதலான பாத்திரங்களின் வழியாகவும் ஆணாதிக்கத்தை விமர்சனம் செய்திருந்தது ‘தப்பட்’.

‘தப்பட்’ படப்பிடிப்பில் நடிகை டாப்சி, இயக்குநர் அனுபவ் சின்ஹா

மேலோட்டமாகப் பார்க்கையில், இந்த மூன்று திரைப்படங்களும் பேசாப் பொருளைப் பேசியவை. இஸ்லாமோ ஃபோபியா குறித்தோ, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை குறித்தோ, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தோ பாலிவுட் திரைப்படங்கள் பேசாமல் இருந்ததன் விளைவாக உருவானவை இந்தப் படங்கள். அவற்றின் போதாமைகளாக, கதை நிகழும் களங்களும், அவற்றிற்கு இயக்குநர் முன்வைக்கும் தீர்வுகளுமே அமைகின்றன.

மூன்று திரைப்படங்களிலுமே ’எதிர்வினை’ என்ற அம்சத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ‘முல்க்’ படத்தில் ஷாஹித் தீவிரவாதியாகாமல் இருந்திருந்தால், இஸ்லாமிய வெறுப்பு அந்தக் குடும்பத்தைத் தீண்டாமல் இருந்திருக்குமா? ‘ஆர்டிகிள் 15’ படத்தில் கூலி உயர்வு கேட்டதற்காகத் தூக்கிலிடப்படுகின்றனர் தலித் சிறுமிகள். கூலி உயர்வு கேட்காமல் இருந்தால், சுரண்டலை நியாயப்படுத்திவிட முடியுமா? ‘தப்பட்’ படத்தில் அம்ரிதா அறையப்படாமல் இருந்திருந்தால், ஆணாதிக்கம் கேள்விக்குள்ளாகியிருக்குமா?

இந்தியாவில் 1947ஆம் ஆண்டு, அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டபோது, காவல்துறையின் பொறுப்பு ‘சட்ட ஒழுங்கு’ என்பதைக் காப்பதாக அமையப்பெற்றது. இந்தியாவில் ஒழுங்கு என்பது பார்ப்பனியம் நிகழ்த்தும் சுரண்டலில், ஆதிக்கத்தில், உருவாக்கும் வெறுப்பின் அடிப்படையில் இருக்கிறது. இந்த ஒழுங்கு மீதான எதிர்வினையே சட்ட ஒழுங்கை மீறுவதாக இருக்கிறது. இதன் வழியாக, அனுபவ் சின்ஹாவின் மூன்று திரைப்படங்களையும் புரிந்துகொள்ள முடியும்.

‘முல்க்’ போஸ்டர்

‘முல்க்’ திரைப்படம், முஸ்லிம் குடும்பங்களில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், தோன்றும் போதெல்லாம் எந்தக் காரணமும் இன்றி குண்டுவெடிப்பில் ஈடுபடுவதாகவும் காட்டியிருக்கிறது. மேலும், படம் முழுவதும் ‘நல்ல முஸ்லிம் – கெட்ட முஸ்லிம்’ என்ற வாதம் மென்மையாக முன்வைக்கப்படுகிறது. ‘நாம் – அவர்கள்’ என்ற இந்துத்துவக் கொள்கையைச் சாடும் அதே வேளையில், ’கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கொண்டாடாதீர்கள்!’ போன்ற கருத்துகளையும் முஸ்லிம்களிடம் கூறுகிறது. முஸ்லிம் குடும்பத்தின் தேசப்பற்றை நிரூபிக்க, அதே குடும்பத்தில் இந்துவாக வாழும் மருமகளும், வழக்கறிஞருமான ஆர்த்தி முகமது (டாப்சி) கதாபாத்திரத்தை நாடுகிறது அந்தக் குடும்பம்.

இவை அனைத்திற்கும் நீட்சியாக, நீதிமன்றம் ஓர் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில், நீதிமன்றங்கள் நிகழ்த்திய கால தாமதமான விசாரணைகளால் தன் பாதி ஆயுளை இழந்த முஸ்லிம்களைக் கண்டிருக்கிறது இந்தியச் சமூகம். உலக அரங்கின் கண்முன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தின் மீது, ராமர் கோயில் கட்டச் சொல்லித் தீர்ப்பளித்தது நீதிமன்றம். சிஏஏ விவகாரங்களில் நீதித்துறையின் மெத்தனம் நாம் அனைவரும் அறிந்தது. நீதிபதி லோயோ தொடங்கி, சமீபத்தில் டெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதி முரளிதர் வரை என்ன ஆனார்கள் என்பதும் வெளிச்சம். இந்த வேளையில், இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடச் சொல்கிறது அனுபவ் சின்ஹாவின் ‘முல்க்’.

’ஆர்டிகிள் 15’ திரைப்படமும் உயர்சாதியில் இருந்து வரும் மீட்பரைத் தேடுவதாக அமைந்திருக்கிறது. பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், அதன் வழியாக எழும் வன்முறைகளை மட்டுமே அது விமர்சனம் செய்கிறது. மேலும், உயர்சாதி மிட்பர் வரும் வரை, பாதிக்கப்பட்ட தலித்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியலை முன்வைத்து, மக்களைத் திரட்டும் பாத்திரமும் காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்டு, ‘உச்’ கொட்டுகிறது இந்தத் திரைப்படம். அரசுக் கட்டமைப்பின் அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் சாதிய வன்முறைகளை அரசியலமைப்பின் வழியாக நிறுத்தக் கோரி மன்றாடல் விடுக்கிறது ‘ஆர்டிகிள் 15’. இதனைத் தன் தோளில் போட்டு, சாக்கடையில் இறங்கி, தலித் சிறுமியைக் கையில் சுமந்துவந்து காக்கிறார் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா).

‘ஆர்டிகிள் 15’ போஸ்டர்

இந்தப் படம் குறித்த சர்ச்சைகளின்போது, இயக்குநர் அனுபவ் சின்ஹா ட்விட்டரில், “நான் பிராமணச் சமூகத்தை விமர்சிக்கவில்லை. எனது நண்பர்களில் பலரும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எனது மனைவியே பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான். அதனால் எனது மகனும் ஒருவகையில் பிராமண அடையாளம் கொண்டிருக்கிறான்” என்றார். பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், சாதிய வன்முறையை சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் கையாண்டிருக்கிறது ‘ஆர்டிகிள் 15’.

’தப்பட்’ அனுபவ் சின்ஹாவின் கடந்த திரைப்படங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆண் மீட்பர்களைப் பயன்படுத்தாதபோதும், அனைத்து பெண்களுக்குமான குடும்ப வன்முறை சிக்கலை எலைட் பெண்களின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேலைக்காரப் பெண்ணின் கதை கூட படத்தில் முழுமை பெறவில்லை. மேலும், குடும்ப வன்முறையை எதிர்ப்பது வரவேற்புக்குரியது என்றபோதும், அதனின் வேரான பார்ப்பனியத்தை அசைத்துப் பார்க்கவில்லை ‘தப்பட்’.

இந்தியாவின் பார்ப்பன அரசு-சமூகக் கட்டமைப்பில், பெண்களின் பங்கு என்பது வாரிசு பெறுவதும், அதன் மூலம் குடும்பத்தின் பெயரை, சாதியின் பெயரை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதாகவும் சுருக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்கால நடைமுறை என்பது இதுதான். ‘தப்பட்’ படத்தின் அம்ரிதாவோ, விவாகரத்து பெற்ற பின்பும், குடும்பத்தின் பெயரைக் காக்க குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்கிறார். இதன்மூலம், பார்ப்பன சமூகத்தின் ‘அடக்கமான பெண்’ வேடம் தானாக அவரை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேலும், வழக்கறிஞராக வரும் பெண் கதாபாத்திரம் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வெற்றிபெற்று வருவதாகக் காட்டப்பட்டு, மீண்டும் நீதித்துறையின் புனிதத்தைக் காப்பாற்றியிருக்கிறார் அனுபவ் சின்ஹா. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதே இந்தியாவின் நீதித்துறையின் பரிதாபத்திற்குரிய நிலைமை.

‘தப்பட்’ போஸ்டர்

அனுபவ் சின்ஹா ’கேசரி; ‘பாட்லா ஹவுஸ்’ முதலான இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் வெளியான காலத்தில் ‘முல்க்’ திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்கள் தொடாத சாதிய வன்முறை என்ற களத்தைத் தொட்டது அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிகிள் 15’. ‘கபீர் சிங்’ வெளியாகி வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெரும் காலகட்டத்தில், அவரின் ‘தப்பட்’ வெளியாகியிருக்கிறது. இந்தத் துணிச்சல் போற்றுதலுக்குரியது என்றபோதும், அவை முன்வைக்கும் தீர்வுகள் நேருவிய காலத்தைச் சேர்ந்தவை. பார்ப்பனியம் நாஜித்தனத்துடன் அரசு நிர்வாகத்திலும், சமூக யதார்த்தத்திலும் நிறுவனமயப்பட்டிருக்கும் காலத்தில் மக்கள் திரட்சியையும், அரசியல்மயப்படுவதையும், அதனால் நிகழவிருக்கும் பார்ப்பனிய ஒழிப்பையும் பின்னுக்குத் தள்ளுகின்றன. சமூகத்தில் நிலவும் இந்தப் பிரச்னைகள் குறித்து பேசப்படாததால், அவை வணிக ரீதியில் முக்கியத்துவமும் பெற்றுவிடுகின்றன.

`வரனே ஆவஷ்யமுண்டு’ – மலையாள சினிமாவின் பொறுப்பின்மையும் தமிழ் ட்ரோல்களின் எதிர்வினையும்!

கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது ‘வரனே ஆவஷ்யமுண்டு’. துல்கர் சல்மான் தயாரிப்பில், ஷோபனா, சுரேஷ் கோபி, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி முதலானோர் நடிப்பில், அனூப் சத்யன் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக வெளிவந்திருந்தது. பிப்ரவரி மாதம் வெளியானபோதும், ஏப்ரல் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானபோதும் சர்ச்சைக்குள்ளாகாத இந்தத் திரைப்படம், துல்கர் சல்மானின் ஒரு ட்வீட்டால் பெரும் சர்ச்சையை எதிர்கொண்டது. படத்தின் ஒரு காட்சியில், சுரேஷ் கோபி வளர்க்கும் செல்ல நாயின் பெயர் ‘பிரபாகரன்’ என்று சூட்டப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் ப்ரோமோவுக்காக துல்கர் சல்மான் வெளியிட்டதும் சர்ச்சை தொடங்கியது.

இணையத்தில் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து இயங்கும் நபர்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். நாய்க்கு மம்மூட்டியின் பெயரைச் சூட்டுமாறு ட்ரெண்டிங் செய்யப்பட்டது. தொடர்ந்து துல்கர் சல்மான் குறிவைத்துத் தாக்கப்பட்டார். இறுதியாக, துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டு, அந்த ட்வீட்டை அழித்தபோதும், அவர் மீதான தாக்குதல் தொடர்ந்தபடியே இருந்தது. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ சர்ச்சைக்குரிய திரைப்படமாக அந்தப் புள்ளியில் மாறியது.

திருமண வயதில் மகளைக் கொண்டிருக்கும் ஷோபனாவுக்கும், திருமணம் ஆகாத ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் கோபிக்கும் இடையிலான காதல் கதை. வயது முதிர்ந்தவர்களிடையிலான காதல் குறித்து கடந்த ஆண்டுகளில், ’சில்லுக் கருப்பட்டி’, ‘பவர் பாண்டி’ முதலானவை மேலோட்டமாகத் தொட்டுச் சென்றிருந்தன. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ அப்படியாக வெளியாகியிருந்தது. இதே கதைக்கருவை கொண்ட மற்ற படங்களைப் போலவே, இதுவும் எலைட் மனிதர்கள் குறித்த திரைப்படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் வாழும் மலையாளிகளின் கதையாக எழுதப்பட்டிருந்தது.

வரனே ஆவஷ்யமுண்டு

’நாட்டில் எவிடேயா?’ – சென்னையில் மலையாளிகளுடன் வாழ்ந்தால், இந்தக் கேள்வியை அடிக்கடி உங்களால் எதிர்கொள்ள முடியும். சென்னை முழுவதும் வாழும் மலையாளிகளின் மக்கள்தொகை மிகப்பெரிது. தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஈடில்லை என்றபோதும், மலையாளம் பேசும் கணிசமான மக்கள் சென்னை மாநகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கும், காஃபி ஷாப்புக்கும் செல்லும் மலையாளக் குடும்பம், பார்ப்பனர்களால் வாடகைக்கு விடப்படும் அபார்ட்மெண்ட் என்ற எலைட் அம்சங்களுக்கிடையில், சென்னையில் மருத்துவர், போக்குவரத்து ஆய்வாளர் முதலான கதாபாத்திரங்களும் மலையாளிகளாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். சேரியில் தங்கும் வேலைக்காரப் பெண்மணி கூட மலையாளம் பேசுகிறார். மேஜர் சுரேஷ் கோபி சண்டையிட்டு, தனது வீரத்தை வெளிப்படுத்துவதற்கும், அடி வாங்குவதற்கும், சென்னை பறக்கும் ரயில் பாலங்களின் ஓரத்தில் வாழும் சேரி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், தன்னால் முடியும் போதெல்லாம் தன்னைப் பெருமையாகப் ‘பட்டாளக்காரன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறது. ‘மனிதர்களைக் கொல்லும் அதிகாரம் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது; அதனால் ஒரு ராணுவ வீரன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன்’ என்று சொல்கிறார் சுரேஷ் கோபி. முதல் காட்சியில், ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி வைக்கப்படும் அந்தக் கதாபாத்திரம், இறுதிக் காட்சியில் ராணுவத்தில் பெற்ற பதக்கங்களுடன் அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் தருகிறது. தன்னை இந்திய ராணுவத்தின் பெருமைமிகு வீரனாக அடையாளப்படுத்தும் சுரேஷ் கோபி கதாபாத்திரம், தனது செல்ல நாய்க்கு வைக்கும் பெயர் – ’பிரபாகரன்’.

சென்னையைக் கதைக்களமாகவும், தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் கதாபாத்திரங்களாகவும் கொண்டுள்ள இந்தப் படத்தில் இப்படியான பெயர்சூட்டல் நிச்சயமாக வன்மமாகவே பார்க்கப்படும். மேலும், சுரேஷ் கோபி இதற்கு முன், விடுதலைப் புலிகள் குறித்த கதைகளில் நடித்தவர். இதில் இருந்துதான் இதனை அணுக முடியும்.

துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்

துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியபோது, ‘பிரபாகரா’ என்பது ‘பட்டணப் பிரவேஷம்’ என்ற 1988ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனம் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், 1988ஆம் ஆண்டு, இந்தியாவின் அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். ‘பட்டணப் பிரவேஷம்’ படத்தின் வில்லனின் பெயர், ‘பிரபாகரன் தம்பி’. இந்தப் பெயரில் இருக்கும் தம்பி என்பது, கேரளாவில் நாயர்களில் ஒரு சாதிப் பிரிவினரைக் குறிக்கிறது.

துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டபோதும், இது ‘வரனே ஆவஷ்யமுண்டு’ படக்குழுவினரின் பொறுப்பின்மையாகவே பார்க்கப்பட வேண்டும். ஒரு காட்சியில் ‘LDF வெல்லும்’ (சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி) என்றும், மற்றொரு காட்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றும் அரசியலைத் தொட்டுச் செல்லும் பாத்திரங்களை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

சமீப காலங்களில் திரைப்படங்களில் இடதுசாரி அரசியல் என்பது மக்களை அரசியல்படுத்தும் நோக்கில் இல்லாமல், கைத்தட்டல் பெறுவதற்கான அரசியல் நீக்கப்பட்ட பண்டமாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. துல்கர் சல்மான் நடித்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’, தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ‘ஜிப்ஸி’ முதலானவை இப்படியான திரைப்படங்கள். இதில், துல்கர் சல்மான் நடித்த ’காம்ரேட் இன் அமெரிக்கா’ படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டிருக்கும். தற்போது அவர் நடித்த மற்றொரு படத்தில், பிரபாகரனின் பெயர் இந்திய ராணுவ அதிகாரியின் நாய்க்குச் சூட்டப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவின் பழைய திரைப்படங்களின் பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவை. உதாரணமாக, ‘பட்டணப் பிரவேசம்’ வெளியான அதே காலத்தில் வெளியான ‘நாயகன்’ படத்தின் வேலு நாயக்கர். கமல்ஹாசனின் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா..’ வசனத்தைக் கைத்தட்டலுக்காகத் தற்போதைய திரைப்படங்கள் பயன்படுத்துவதைப் போல, ‘பிரபாகரா’ என்று நாய்க்குப் பெயர்சூட்டியிருக்கிறது இந்தப் படம். மலையாள இணைய உலகின் பிரபலமான மீம் வசனம் அது என்றும் கூறியிருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ்நாட்டில் நடைபெறும் கதை என்பதால், பொறுப்புணர்வு அதிகம் இருந்திருக்க வேண்டும்.

வரனே ஆவஷ்யமுண்டு

அதே வேளையில், துல்கர் சல்மான் மீது பொழியப்பட்ட வசவுகள் பி.ஜே.பியின் மாநிலங்களவை எம்.பியான சுரேஷ் கோபியின் பக்கம் திரும்பவில்லை. மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் கேரளாவுக்குட்பட்ட வனப்பகுதிகளில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த என்கவுண்டர் இருதரப்பு மோதலாக கேரள அரசால் அறிவிக்கப்பட்டபோதும், அது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதாக கேரளாவின் ஆளும் கூட்டணியில் அங்கம்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே குற்றம் சாட்டியது. சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரும் தமிழர்கள். கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான தோழர் மணிவாசகத்திற்கு இறுதி அஞ்சலி நிகழ்வை முன்னின்று நடத்தியதற்காகத் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறது மணிவாசகத்தின் தங்கையின் குடும்பம்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும், கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க முன்வராத தமிழ் ட்ரோல்களால் துல்கர் சல்மான் மீது எதிர்வினையாற்ற முடிந்தது. அவரை அடிபணிய வைக்க முடிந்தது.

திரைப் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு அமையப் பெற வேண்டும்; அதே வேளையில், இணைய ட்ரோல்களின் செலக்டிவ் எதிர்வினையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

கொரோனா: வீழ்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் ஊடகத்துறை!

மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை. இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.
News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: Newslaundry

தவறைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டால் கைது செய்வதா? – கோவை காவல்துறைக்கு ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம்

கோவையில் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதை ’மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்’ கண்டித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையிலிருந்து செயல்படும் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியன் என்பவரை கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாநகராட்சியைச் சேர்ந்த துணை ஆணையர் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாக வெளியான செய்தியையும் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ள சுந்தரராஜன், இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராகப் போராடுவதற்குத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று (23.04.2020) காலை, சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலஜியை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல், யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்குச் சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்துள்ளனர். இறுதியாக, இரவு 7 மணியளவில், ஜெரால்ட் மற்றும் பாலாஜியை விடுவித்துள்ள காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியனைக் கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பிற்கு இணையானது பத்திரிகையாளர்களின் பணி. ஏனென்றால், மக்களுக்குச் சேவை செய்வதற்காக பணியாற்றும் இந்தத் துறையினரின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்ப்பது பத்திரிகைத்துறை. அதேபோல், அவர்களில் யாரேனும் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பொறுப்பு பத்திரிகைத்துறைக்கு உள்ளது. அதனால்தான் பத்திரிகைத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கிறோம். ஒரு பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள இந்த நேரத்தில், பத்திரிகைத்துறை மிகவும் விழிப்புடன் செயல்பட்டால்தான், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் முழுமையாக அவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்படும். அதேநேரம், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் அரசு ஊழியர்களுக்கு, அரசு தரவேண்டிய அடிப்படையான விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்காதபட்சத்தில் அதையும் அரசுக்குச் சுட்டிக்காட்டும் பொறுப்பு பத்திரிகைகளையே சாரும்.

இதன் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டைச் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய ரேஷன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின்படி, தனது பணியைச் செய்த பத்திரிகையாளரைக் கைது செய்துள்ளது, அரசியல்சாசனத்தை மாதிக்காத செயலாகும். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயலாகும். அடிப்படையில் இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.

ஆகவே, சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது. சாம் ராஜா பாண்டியன் மீது மாநகராட்சி துணை ஆணையர் சுந்தரராஜன் கொடுத்துள்ள புகாரில் உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆகவே, அவரை விசாரித்து உண்மையை அறிய அரசு தரப்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். விசாரணை என்ற பெயரிலும், கைது நடவடிக்கையாலும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள சாம் ராஜா பாண்டியன், ஜெரால்ட், பாலாஜி ஆகியோருக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கோவிலில் ராமநவமி நாளென்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கியதாக வடமாநில வட்டாரங்களில் ஒரு செய்தி வைரலாக உலாவிக்கொண்டிருக்கிறது. இதற்காக ட்விட்டரில் #aabid_khan_ko_barkhast_karo (ஆபித்கானை பணிநீக்கம் செய்) என்ற ஹேஷ்டேக் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஊரடங்கின்போது ராஜ்குமார் மிஷ்ரா எனும் காவல் ஆய்வாளரே பூசாரியைத் தாக்கியுள்ளார்.

பூசாரியைத் தாக்கும் ராஜ்குமார் மிஷ்ரா [படம்: விஜய்குமார்]

இச்செய்தியிலுள்ள பொய்கள்:

1. ராமநவமி விழாவிற்கு பூசாரி தனியாக வழிபாடு செய்ய வந்தார்.
2. திடீரென்று காவல்துறையினர் அவரைத் தாக்கத் தொடங்கினர்.
3. பூஜை செய்யும் இடத்துக்கு காவலர்கள் காலனிகளுடன் வந்து அவமதித்தனர்.
4. இதற்கெல்லாம் உத்தரவிட்டவர் ரேவா எஸ்.பி. அபித்கான்.

ரேவாவின் ஐ.ஜி. சஞ்சல் சேகருடன் விசாரித்து இந்த விஷயங்களை லல்லண்டாப் தளம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

கோவிலில் கூடியிருந்த பெண்கள் [படம்: விஜய்குமார்]

உண்மை இதுதான்:

1. படத்தில் இருக்கும் நபர் ரேவாவின் எஸ்.பி. அபித்கான் அல்ல. அவர் அந்த இடத்திற்கே செல்லவில்லை.
2. புகைப்படத்தில் இருப்பவர் சிவில் லைன் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மிஷ்ரா.
3. பூசாரி கோவிலில் தனியாக இல்லை. பெண்கள் கூட்டம் கூடியிருந்தது எனத் தெரியவந்துள்ளது.

ரேவாவில் ஆஜ்தக் பத்திரிகையாளர் விஜய்குமார் கூறும்போது, இந்தக் கோவில் தேகா, பத்மதர் காலனியில் அமைந்துள்ளது. முன்பே மூன்று முறை கூட்டத்தைத் திரட்டக்கூடாது என பூசாரி உபேந்திர குமார் பாண்டேவிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில்தான், ஏப்ரல் 1ம் தேதி இந்த நிகழ்வு நடத்தப்பது தெரிகிறது என்றார்.

ரேவா நகரின் ஐ.ஜி. கூறும்போது, தற்போது இந்தக் கட்டுப்பாடு அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், மற்ற மத இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவித்தார். கோகர் மற்றும் பிச்சியாவின் இரண்டு மசூதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அங்கே 40-50 பேர் தொழுகைக்காக கூடியதற்காக 188 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி ஆபித்கான் தலைமையில் மசூதியில் இருந்து 36 பேரும், கல்லறையிலிருந்து 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்

பத்திரிகையாளராக இருந்து ’குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநரானவர் ராஜு முருகன். தனது ’ஜோக்கர்’ படத்துக்காக தேசிய விருது வரை பெற்ற அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள ’ஜிப்ஸி’ ஒரு நாடோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்தச் சமூக அமைப்பில் ஒரு நாடோடியாக அவன் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் பேசுவதன் வழியாக சாதி, மதம் கடந்து மனிதம் முக்கியம் என்று சொல்கிறது படம்.

அதில் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையிலான அவருடைய பதிவு ஒரு துணிச்சலான முயற்சி. அந்தக் கலவரத்தின் புகைப்பட சாட்சியாக இருக்கும் குதுபுத்தீன் அன்சாரியையும் அஷோக் மோச்சியையும் 2014ஆம் ஆண்டு கேரள சிபிஎம் கூட்டத்தில் ஒரே மேடையில் பேச வைத்தார்கள். ஜிப்ஸி படத்துக்கு அந்த நிகழ்வு ஓர் ஆதாரமான அங்கமாக இருக்கிறது.

இத்திரைப்படம் குறித்த நிறைகளைப் பலரும் பதிவு செய்துள்ளனர். நாம் இந்தக் கட்டுரையில் அது பேசும் அரசியலை விமர்சன நோக்கோடு அணுகுவோம்.

ஜிப்ஸியின் கதைக் கரு வித்தியாசமான ஒன்று. எனினும், பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக அதைத் திரைக்கதை ஆக்குவதை விடவும் இயக்குநர் படம் முழுக்க கருத்துரைக்க முயற்சித்திருப்பதால் பல இடங்களில் நமக்குப் பிரச்சார நெடியேறுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பிரச்சாரத் திரைப்படமாகவே அது இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் கஷ்மீரில் வன்முறை நடப்பது போன்ற காட்சி. அதில் மதப்பற்றுள்ள கஷ்மீரி முஸ்லிம் பெண் மற்றும் பண்டிட் இந்து ஆண் ஜோடிகள் (முஸ்லிம் பிரிவினைவாதிகளால்) கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை நாடோடி குதிரைக்காரரான சீனியர் எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் ஜிப்ஸி. சீனியரை போலவே சாதி, மத அடையாளங்கற்றவன் அவன்.

ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு நாடு முழுக்க அந்தக் குதிரைக்காரர் சுற்றித்திரிகிறார். ஜிப்ஸி இந்திய மொழிகளில், இசையில், பாடலில் கைதேர்ந்தவனாக வளர்கிறான். அவன் வாலிபனானதும் அவனுக்கான துணையைத் தேடிக்கொள்ளுமாறு அறிவுரைத்துவிட்டு மரணித்துவிடுகிறார் சீனியர். நாடோடியான ஜிப்ஸி தனது குதிரை சே உடன் நாகூர் போகும்போது, அங்கு சீனியர் சொன்னது போல ஒரு பெண்ணைப் பார்க்கிறார். உருது பேசும், பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் அவள். இப்படி காதல் கதை போலத் தொடங்கிய படம் அந்த முஸ்லிம் பெண், ’அடிப்படைவாதியான’ அவளுடைய தந்தையாலும் தன் சமூக சூழலாலும் எப்படியெல்லாம் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறாள் என்பதில் கவனம் குவிக்கிறது.

அந்த நிமிடத்திலிருந்து, முஸ்லிம்கள் குறித்து பொதுபுத்தியில் இருக்கும் அத்தனை தப்பெண்ணங்களையும் தொகுத்து காட்சிக்குக் காட்சி அடுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். வழக்கமாக திரைப்படங்களில் முஸ்லிம்களை எப்படி எதிர்மறையாகப் பொதுகுணப்படுத்துவார்களோ அவ்வாறே இப்படமும் செய்திருக்கிறது. அதையொரு பரப்புரை போல முன்னெடுத்து, திகட்டத் திகட்ட பார்வையாளர்களுக்குத் தந்திருக்கிறார் ராஜு முருகன்.

முஸ்லிம்களின் சமய, குடும்ப, சமூக வாழ்வு பற்றி குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் அரைகுறையாக ஹோம்வொர்க் செய்து எடுக்கப்பட்ட படம் இது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ் முஸ்லிம்கள் வாழும் நாகூரில் உருது முஸ்லிம் குடும்பம், அதிலும் மலையாள தொனியில் தமிழ்ப் பேசும் அப்பா! நாகூரில் பீஃப் பிரியாணி செய்யும் வழக்கமே கிடையாது. ஆனால், படத்தில் அந்தக் குடும்பம் இரவு உணவாக பீஃப் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறது! தொழுகையில் அல்லாஹு அக்பர் சொல்ல வேண்டிய இடத்தில் சுப்ஹானல்லாஹ் என்பது, திருமண விவாகரத்து நடக்கும்போது சந்தோஷமான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் ”மாஷா அல்லாஹ்” என்று சொல்வது, நபி மொழிகளைச் சொல்லும்போதெல்லாம் குர்ஆன் சொல்லுவதாகக் கூறுவது, தாலி சென்டிமன்டை கருகமணிக்குக் கூறுவது போன்ற அசட்டுத்தனம் கடும் அயற்சியைத் தருகிறது.

கிரிக்கெட், குடி, கூத்து என எல்லாவிதமான கேளிக்கைகளிலும் முஸ்லிம் ஆண்கள் திளைத்திருக்க, முஸ்லிம் பெண்கள் அடிமைகளாக வாழ்வது போல சித்தரிக்கிறது படம். தொழுகை, ஹிஜாப் உள்ளிட்ட இஸ்லாமிய அம்சங்களெல்லாம் முஸ்லிம் ஆண்களால் பலாத்காரமாக முஸ்லிம் பெண்கள் மேல் திணிக்கப்படுவதாக தம் முன்முடிவைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்திலுள்ள பல விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. படத்தின் தொடக்கம் முதலே ஜிப்ஸி மீது எவ்வித காரணமுமின்றி கதாநாயகி வஹீதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிப்ஸியின் குதிரை சே முஸ்லிம் இமாம் ஒருவரை உதைத்துவிடுகிறது. அதற்காக ஜிப்ஸிக்கு ’அந்த ஆட்களின்’ அமைப்போடு தொடர்பிருக்கிறதா, அவன் என்ன சாதி, எந்த மதம் என ஆய்வு செய்கிறார்கள் முஸ்லிம்கள். ’ஆய்வு முடிவு’ வரும் வரை தன் வீட்டுக் கொல்லைபுறத்தில் ஜிப்ஸியையும் அவரின் நண்பர்களையும் கட்டிப் போடச் சொல்கிறார் கதாநாயகியின் தந்தை.

அதன் பின் கதை எப்படி நகரும் என்பதை பார்வையாளர்கள் எளிதில் ஊகிக்க முடியும். காதல் பாடல், நடனம் என எல்லாம் செய்து கதாநாயகி வஹீதாவை எளிதாகவும் முழுமையாகவும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார் ஜிப்ஸி. எந்நேரமும் முரட்டுத்தனமாகவும் அன்பற்றவராகவும் இருக்கும் அப்பாவிடம் சிக்கித் தவிக்கும் வஹீதாவுக்கு ஜிப்ஸி மூலம்தான் சிரிப்பு, மகிழ்ச்சி என்பன கிடைக்கின்றன. ஒருநாள் அவள் தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்த ‘பாவத்துக்காக’ அவளைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுப்பார் அவளின் தந்தை. அந்தக் காட்சியில் வஹீதா மழையில் நனையும்போது, வில்லத்தனமான இசைப் பின்னணியுடன் எண்ட்ரீ கொடுப்பார் இரும்பு நெஞ்சம் கொண்ட அவர். அடுத்த காட்சியிலேயே அவளுடைய நிச்சயதார்த்தம் காட்டப்படும். அப்போது அந்த வில்லத்தனமான இசை அப்படியே சோகம் ததும்பும் இசையாகப் பரிணமிக்கும்.

கதாநாயகிக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கும் மணமகனின் தாய் அடுப்பங்கரையில் புழுங்கிக் கிடப்பதைக் காட்டி, கதாநாயகிக்கும் அதேவிதமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைக் குறியீடாக உணர்த்துவதன் வழியாக முஸ்லிம் பெண்கள் என்போர் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்று இந்தப் படம் நிறுவ முனைகிறது.

திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த வேளையில், அதில் விருப்பமில்லாத வஹீதா யாருக்கும் தெரியாமல் தன் காதலன் ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு திடீரென ஓடிப்போய்விடுகிறார். முஸ்லிம் பெண்கள் மூச்சு முட்டும்படியான ஒடுக்குமுறையின் கீழ் துன்புற்று வருவது போலவும், கிடைக்கும் முதல் வாய்ப்பில் தங்கள் குடும்பங்களைவிட்டு வெளியேறிவிடத் துடித்துக்கொண்டிருப்பது போலவும் ஒரு கருத்தை இப்படியான காட்சிகள் மூலம் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

முஸ்லிம் ஆண்கள் எதிர் முஸ்லிம் பெண்கள் எனக் கட்டமைப்பது, முஸ்லிம் ஆண்களை கொடூரர்களாகச் சித்தரிப்பது, அவர்களை அடிப்படைவாதி என்பது, அவர்களிடம் இருந்து முஸ்லிம் பெண்ணுக்கு இந்து ஆண்தான் விடுதலை தரவேண்டும் எனக் கொக்கரிப்பது போன்றவை இந்து தேசியவாதிகளின் அரசியல். அதற்குத் துணை போகும் வகையிலேயே ஜிப்ஸி படம் அமைந்துள்ளது. இது ராஜு முருகனிடம் இருக்கும் சிக்கல் மட்டுமல்ல சிபிஎம்காரர்களின் கண்ணோட்டத்திலேயே இருக்கின்ற சிக்கல். அதனால்தான், படம் இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷனாக வெளிவந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது. திரைப்படத்தின் இடைஇடையே குர்ஆனில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, பைபிளில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என ஜிப்ஸியும் ஒரு கேரள காம்ரேடும் பாடமெடுக்கும் மேதாவித்தனம் எரிச்சலூட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் கணவன்-மனைவியாக வாழும் ஜிப்ஸியும் வஹீதாவும் அங்கு இந்து தேசியவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். படுகொலைகள், பொருட் சேதங்கள், பாலியல் வன்கொடுமைகள் என எல்லா அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிடுகிறது அந்த கும்பல். ஜிப்ஸியின் குதிரை சே-வையும் தீயிட்டுக் கொலை செய்கிறது. அந்தச் சமயத்தில் கருவுற்றிருந்த வஹீதாவை ஓர் இந்து பக்திமான் காப்பாற்றுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைக் குழந்தையுடன் வஹீதாவை கேரளாவில் வசிக்கும் அவளின் தந்தையிடம் அவர் ஒப்படைக்கிறார். தன் மகள் ஓடிப்போனதால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக நாகூரில் இருந்து கேரளாவுக்குக் குடிபெயர்ந்திருப்பார் அந்த தந்தை.

ஓராண்டு கழித்து சிறையிலிருந்து நிரபராதி என்று வெளிவரும் ஜிப்ஸி தன்னுடைய மனைவியைத் தேடி கேரளாவுக்கே செல்கிறார். பெரும் வன்முறையைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டு தம் பெற்றோருடன் வசிக்கும் வஹீதாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்குச் செல்லும் ஜிப்ஸியை அவளின் தந்தை வசைபாடி திருப்பியனுவிடுவார். பிறகு, அங்குள்ள சிபிஎம் காம்ரேடுகளோடு சேர்ந்து ஜிப்ஸி அந்த ’அடிப்படைவாத’ தந்தையிடம் இருந்து பாவப்பட்ட அந்த கதாநாயகியை எப்படி மீட்கிறார் என்பதுதான் மீதிக் கதை. அதற்காக பாடலின் வழியாக ஜிப்ஸியும் காம்ரேடுகளும் ’புரச்சி’ செய்வது உச்சபட்ச நாடகத்தன்மையுடன் வெளிப்படும்.

கதையின் இறுதிப் பகுதியிலும் இஸ்லாமோ ஃபோபியா பிரச்சாரம் ஓயாமல் தொடர்கிறது. ஜிப்ஸியிடம் வஹீதாவின் தாய் சொல்லுவார், “அவள் வீட்டை விட்டுப் போனப்போ இந்தக் கதவுக்கு வெளியே அவளுக்காவது ஒரு உலகம் கிடைக்கும்னு சந்தோஷப்பட்டேன் பா”. இந்த வசனம் மூலம் இயக்குநர் என்ன சித்திரத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

முஸ்லிம் தீவிரவாதம் பற்றிய படங்களில்கூட, ஊறுகாயாகவேனும் ஒரு நல்ல பாய் காட்சிபடுத்தப்பட்டிருப்பார். இப்படத்தில் அதுவும் கிடையாது. இதற்கு முரணாக, ஜிப்ஸியின் அப்பா ஒரு சிவன் பக்தராக இருந்தாலும் தன் மனைவி இஸ்லாமைக் கடைப்பிடிக்க அனுமதிப்பார். அதேபோல, தீவிர ராம பக்தனாக வரும் ஆட்டோ ட்ரைவர் வஹீதாவைக் காப்பாற்றி கரையேற்றுவார். வஹீதா பாதிப்புக்குள்ளாகக் காரணமான இந்துத்துவரும் தவறை உணர்ந்து நல்ல மனிதனாகிவிடுவார். இவற்றையெல்லாம் தற்செயலானது என்று கடந்து செல்ல இயலவில்லை.

கேரளாவில் வஹீதாவை மீட்க ஜிப்ஸிக்கு உதவி செய்யும் காம்ரேட் ஒரு சந்தர்பத்தில், ”வேறெதாவது விஷயம்னா இறங்கி அடிச்சிருப்பேன். மதத்தை வெச்சு சென்சிடிவான அரசியல் பண்ணிடுவாங்க” என்பார். சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் வஹீதாவின் தந்தையை ”அடிப்படைவாதி” என்றுகூட ஓரிடத்தில் முத்திரை குத்துவார். அந்த இடத்தில் சிபிஎம்காரர்கள் தாம் என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடிப்படைவாதம் என்பது ஓர் அரசியல் சொல்லாடல். வைதீக (Orthodox) கிறிஸ்தவரையோ அல்லது யூதரையோ சட்டென அடிப்படைவாதி என யாரும் கூறிவிடுவதில்லை. அதுவே முஸ்லிம் என்றால் அடிப்படைவாதம் எனும் கடுமையான அரசியல் சொல்லாக்கத்தைக்கூட ரொம்ப ஈசியாக பயன்படுத்த முடிகிறது. Orthodox முஸ்லிம் என்றாலே அவனொரு செயலூக்கமுள்ள தீவிரவாதியாகக் கொள்ளப்படுகிறான் என்பதே இங்குள்ள சிக்கல். சிபிஎம் ஆட்கள் வைதீக பார்ப்பனர்களை இப்படிச் சொல்வார்களா என்பது சந்தேகமே.

குஜராத் இனப்படுகொலைக்கு இரு புகைப்படங்கள் சாட்சியாக இருப்பது போல, இப்படத்தில் நடைபெறும் உபி இனப்படுகொலைக்கு வஹீதா மற்றும் இந்துத்துவன் ஒருவனின் படங்கள் சாட்சியாக இருக்கும். அவர்கள் இருவரையும் ஒரு இசை மேடையில் சேர்ப்பார் ஜிப்ஸி. கடைசியில், மனநிலை சீராகி கதாநாயகி நாயகனுடன் இணைவதோடு படம் முடிகிறது.

இந்து எனும் வளையத்துக்குள் இருந்துகொண்டு பாதிக்கப்படும் முஸ்லிம் சமூகம் குறித்து தன் மனம் போன போக்கில், பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீட்பர் எனக் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே இப்படி சக்திமான்களாகக் கற்பனை செய்துகொள்ளும் முதிராப் பருவத்திலிருந்து வளர்ந்து எப்போது வயசுக்கு வருவார்கள் என்பதுதான் நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வி.

அகதிகளை மனிதாய நீக்கம் செய்யும் இரு சொல்லாடல்கள்

Immigrants

செய்திகள் வெளியிடும்போது மையநீரோட்ட ஊடகங்கள் (குறிப்பாக வடமாநில ஊடகங்கள்) பலசமயங்களில் இந்து தேசியவாதிகள் உருவாக்கித் தரும் சொல்லாடல்களை அப்படியே கையாள்கின்றன. இதன் விளைவாக முக்கியமான விவகாரங்கள் பலவற்றை மக்கள் இந்துத்துவ கதையாடல்களின் வாயிலாகப் புரிந்துகொள்வதற்கு வழியமைத்துத் தரப்படுகின்றது.

உதாரணத்திற்கு, சமீபத்தில் ஊடகங்கள் அதிகம் பயன்படுத்தும் ஊடுருவல்காரர்கள் (infiltrators) எனும் பதம் எவ்வளவு பாரபட்சமானது, விஷம் தோய்ந்தது எனப் பாருங்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கும் டெல்லிக்கும் குடிபுகுந்த இந்துக்களை அல்லது பிரிவினைக்குப் பின் இங்கு வந்த பஞ்சாபி இந்துக்களை இவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று அழைப்பதில்லை. ஆனால், வங்கதேச இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தது போலவே அங்கிருந்து முஸ்லிம்களும் இங்கு வந்து குடிபெயர்ந்தார்கள் என்றபோதிலும், முஸ்லிம்களை மட்டும் ஒட்டுமொத்தமாக “ஊடுருவல்காரர்கள்” எனும் வார்த்தையில் உள்ளடக்குகிறார்கள். இந்துக்களை “அகதிகள்” என்றழைக்கிறார்கள்.

ஊடுருவல்காரர்கள் எனும் சொல்லில் கடுமையான வன்மம் இருப்பதோடு, ஒரு தீய சக்தி வஞ்சகமாக இந்தியாவினுள் நுழைந்திருக்கிறது என்பது போன்ற மனப்பதிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அகதிகள் எனும்போது அம்மக்கள் பாதிக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட தரப்பினர் எனக் கொள்ளப்படுகிறது.

ஊடுருவல்காரர்கள் எனும் வார்த்தையை 80களின் பிற்பகுதியில் பாஜக பிரபலப்படுத்தியது என்கிறார் The Wire நிறுவன ஆசிரியரான சித்தார்த் வரதராஜன். மக்களின் அன்றாட உரையாடல்களில் இதுபோன்ற வார்த்தைகளைக் காண முடியும் என்றும் இவற்றின் பிரச்னைகளையோ அர்த்தங்களையோ யோசிக்காமல் இம்மாதிரி சொல்லாடல்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஊடுருவல்காரர்கள் என்பது போலவே “சட்டவிரோதக் குடியேறிகள்” (illegal immigrants) எனும் பதமும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பிரச்னைக்குரிய ஒன்று. அஸ்ஸாம், மேற்குவங்கம் தொடர்பான சமீபத்திய செய்திகளில் இந்தச் சொற்பிரயோகத்தை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். NRC, CAA குறித்த விவாதங்களிலும் இந்தச் சொல் தொடர்ச்சியாக இடம்பெறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பதம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

வாழ்வாதாரம் அல்லது தம் இருப்பு சார்ந்த தேவைகளுக்காக முறையான ஆவணங்களின்றி ஒரு நாட்டில் குடிபெயர்வோரைக் குறிக்க இந்தச் சொல் சரியானதன்று. இதுபோன்ற எதிர்மறை சொல்லாக்கங்கள் பொது மக்களைத் தவறான திசையில் வழிநடத்தக்கூடும்.

சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறுவது குடிபெயர்ந்தோர் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை எதிர்மறையாய் கட்டமைக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனும் உணர்வை மக்களிடம் உருவாக்குகிறது. குடிபுகுந்தோரை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிக் கூண்டிலேற்றி, அவர்களை மனிதாய நீக்கம் (Dehumanization) செய்கிறது. அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கவே இது வழிவகை செய்யும்.

சட்டவிரோதக் குடியேறிகள் என்பதைத் தவிர்த்துவிட்டு, ‘irregular’ அல்லது ‘undocumented’ எனும் பொருள்படும் சொற்களைப் பயன்படுத்துமாறு 2009ல் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அறிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதழ்கூட “அங்கீகரிக்கப்படாத குடியேறிகள்”, “முறையான ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர்” போன்ற சொற்களைக் கையாள்கிறது.

ஆனால், நம்மிடையே ஊடகங்கள் மட்டுமின்றி குடியுரிமைச் சட்டமும் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற சொல்லையே பாவிக்கிறது.