செய்திகள் வெளியிடும்போது மையநீரோட்ட ஊடகங்கள் (குறிப்பாக வடமாநில ஊடகங்கள்) பலசமயங்களில் இந்து தேசியவாதிகள் உருவாக்கித் தரும் சொல்லாடல்களை அப்படியே கையாள்கின்றன. இதன் விளைவாக முக்கியமான விவகாரங்கள் பலவற்றை மக்கள் இந்துத்துவ கதையாடல்களின் வாயிலாகப் புரிந்துகொள்வதற்கு வழியமைத்துத் தரப்படுகின்றது.
உதாரணத்திற்கு, சமீபத்தில் ஊடகங்கள் அதிகம் பயன்படுத்தும் ஊடுருவல்காரர்கள் (infiltrators) எனும் பதம் எவ்வளவு பாரபட்சமானது, விஷம் தோய்ந்தது எனப் பாருங்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கும் டெல்லிக்கும் குடிபுகுந்த இந்துக்களை அல்லது பிரிவினைக்குப் பின் இங்கு வந்த பஞ்சாபி இந்துக்களை இவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று அழைப்பதில்லை. ஆனால், வங்கதேச இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தது போலவே அங்கிருந்து முஸ்லிம்களும் இங்கு வந்து குடிபெயர்ந்தார்கள் என்றபோதிலும், முஸ்லிம்களை மட்டும் ஒட்டுமொத்தமாக “ஊடுருவல்காரர்கள்” எனும் வார்த்தையில் உள்ளடக்குகிறார்கள். இந்துக்களை “அகதிகள்” என்றழைக்கிறார்கள்.
ஊடுருவல்காரர்கள் எனும் சொல்லில் கடுமையான வன்மம் இருப்பதோடு, ஒரு தீய சக்தி வஞ்சகமாக இந்தியாவினுள் நுழைந்திருக்கிறது என்பது போன்ற மனப்பதிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அகதிகள் எனும்போது அம்மக்கள் பாதிக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட தரப்பினர் எனக் கொள்ளப்படுகிறது.
ஊடுருவல்காரர்கள் எனும் வார்த்தையை 80களின் பிற்பகுதியில் பாஜக பிரபலப்படுத்தியது என்கிறார் The Wire நிறுவன ஆசிரியரான சித்தார்த் வரதராஜன். மக்களின் அன்றாட உரையாடல்களில் இதுபோன்ற வார்த்தைகளைக் காண முடியும் என்றும் இவற்றின் பிரச்னைகளையோ அர்த்தங்களையோ யோசிக்காமல் இம்மாதிரி சொல்லாடல்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
ஊடுருவல்காரர்கள் என்பது போலவே “சட்டவிரோதக் குடியேறிகள்” (illegal immigrants) எனும் பதமும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பிரச்னைக்குரிய ஒன்று. அஸ்ஸாம், மேற்குவங்கம் தொடர்பான சமீபத்திய செய்திகளில் இந்தச் சொற்பிரயோகத்தை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். NRC, CAA குறித்த விவாதங்களிலும் இந்தச் சொல் தொடர்ச்சியாக இடம்பெறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பதம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
வாழ்வாதாரம் அல்லது தம் இருப்பு சார்ந்த தேவைகளுக்காக முறையான ஆவணங்களின்றி ஒரு நாட்டில் குடிபெயர்வோரைக் குறிக்க இந்தச் சொல் சரியானதன்று. இதுபோன்ற எதிர்மறை சொல்லாக்கங்கள் பொது மக்களைத் தவறான திசையில் வழிநடத்தக்கூடும்.
சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறுவது குடிபெயர்ந்தோர் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை எதிர்மறையாய் கட்டமைக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனும் உணர்வை மக்களிடம் உருவாக்குகிறது. குடிபுகுந்தோரை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிக் கூண்டிலேற்றி, அவர்களை மனிதாய நீக்கம் (Dehumanization) செய்கிறது. அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கவே இது வழிவகை செய்யும்.
சட்டவிரோதக் குடியேறிகள் என்பதைத் தவிர்த்துவிட்டு, ‘irregular’ அல்லது ‘undocumented’ எனும் பொருள்படும் சொற்களைப் பயன்படுத்துமாறு 2009ல் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அறிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதழ்கூட “அங்கீகரிக்கப்படாத குடியேறிகள்”, “முறையான ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர்” போன்ற சொற்களைக் கையாள்கிறது.
ஆனால், நம்மிடையே ஊடகங்கள் மட்டுமின்றி குடியுரிமைச் சட்டமும் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற சொல்லையே பாவிக்கிறது.