பிரதிலிபி எனும் பதிப்பகத்தின் யூ டியூப் சானல் பத்திரிகையாளர் பாரதி தம்பியிடம் நடத்திய சிறிய நேர்காணல் இது.
நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை:
- சமூகம் சார்ந்து எழுதக்கூடிய பத்திரிகையாளர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளும் முறை பற்றி
- சமூகம் சார்ந்த பத்திரிக்கையாளர், செயற்பாட்டளராக இருக்க வேண்டுமா என்பது பற்றி
- மக்களுக்காக எழுதும் கட்டுரைகளுக்கு தரவுகள் சேகரிப்பது குறித்து
- கட்டுரை எழுதுவதற்கு எழுத்தாளர் வைத்திருக்கும் டெம்ப்ளேட்
- கட்டுரையின் முடிவு அறைகூவலாக இருக்க வேண்டுமா என்பது குறித்து
- சமூகம் சார்ந்து எதும்போது நடுநிலைமையோடு எழுதுவது பற்றி
ஊடகங்கள் பெருகவிட்ட காலத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் பிரபலமாவதில்லை. அப்படி ஆனவர்களில் கணிசமானோர் பிற்போக்கு சக்கரவர்த்திகளாகவே இருக்கின்றனர். இது தனிப்பிரச்சினை.
மக்கள் நலன் சார்ந்து எழுதும் பத்திரிகையாளர்கள் பொதுவில் அரிது. அப்படியே அரிதாக நிலைபெற்று தொடர்ந்து எழுத முடியுமா என்பது அதனினும் அரிது. இது போக வேலை நிரந்தரமில்லாமல் இருப்பது, நிர்வாக அழுத்தங்கள், பொருளாதார பிரச்சினைகள் என்று ஒரு மக்கள் பத்திரிகையாளராக தமிழ்ச்சூழலில் நிலைபெறுவதில் பல தடைகள்.
எனினும் சிலராவது நம்பிக்கை அளிக்கின்றனர். மக்கள் நலனுக்காக எழுதுவது என்பது இயல்பாக இருக்க வேண்டும், பிரபலத்திற்காக எழுதக் கூடாது, அறிவுப்பகட்டை காட்டும் வண்ணம் எழுதக்கூடாது என்றெல்லாம் எளிய முறையில் விளக்குகிறார் பாரதிதம்பி.
சமூக மாற்றம் குறித்து களத்தில் பணியாற்றும் களப்பணியாளர் போல ஒரு பத்திரிகையாளர் எழுதுவதில் பணியாற்றுகிறார் என்கிறார் பாரதி தம்பி. எப்போதும் சமூகம் சார்ந்து சிந்திக்கும் போதுதான் எழுத்தில் அது இயல்பாக வரும்; மாறாக ஒரு எட்டு மணி நேர ஷிப்டில் மட்டும் சமூகம் சார்ந்து சிந்தித்தால் அப்படி எழுத முடியாது என்கிறார். இதை பிரபலம், புகழுக்காகவும் எழுத முடியாது என்று வலியுறுத்தவும் செய்கிறார்.
சமூகம் சார்ந்து ஒரு பத்திரிகையாளர் எழுதுவது என்பது உண்மையில் சமூக மாற்றம் வேண்டும் என்ற கருத்து இருக்க வேண்டும். அது தொடர்பான படிப்பு, கள அனுபவங்கள், முன்னோடிகளது அனுபவங்களை அறிதல் மூலம் அந்த பத்தரிகையாளர் தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்கிறார். நாம் என்ன கண்ணோட்டத்தில் எழுத விரும்புகிறோமோ அதற்கு தேவையான தரவுகளை தேடி எடுக்க முடியும் என்கிறார்.
இந்த நேர்காணலில் பத்திரிகையாளர்களின் நடுநிலைமை குறித்து அவர் விளக்குவது முக்கியமானது. மெரினா போராட்டத்தை ஒட்டி நடந்த போலீசு வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பத்தை எழுதும் போது இரு தரப்பில் அதாவது மீனவ மக்கள், போலீசு ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று எழுதுவதுதான் நடுநிலைமையா என்று கேட்கிறார் பாரதி தம்பி. அப்படி எழுதினால் அதுதான் வன்முறை என்று கூறுபவர் ஒரு விசயம், பிரச்சினையில் உண்மையை தெரிவிப்பதே நடுநிலை என்கிறார். வார்த்தையில் நடு என்று இருப்பதால் அது நடுநிலையாக எழுதுவது என்று பொருளல்ல என்கிறார்.
பாண்டே பள்ளியில் படித்த நெறியாளர்கள் நிகழ்ச்சி நடத்தும் போது சூரியன் எனும் நட்சத்திரமே இல்லை என்று பா.ஜ.கவினர் கூறுகிறார்களே அது பற்றி உங்களது கருத்து என்ன என்றெல்லாம் கேட்டு கொடுமைப்படுத்துவார்கள். ஒரு விசயத்தில் மக்கள் நலனோடு பார்ப்பதும், அதற்காக உண்மையைத் தேடுவதுமே ஒரு பத்திரிகையாளனின் கடமை. அதை விரும்பி செய்யும் போது அவர் ஒரு மக்கள் பத்திரிகையாளராக உருவெடுப்பார்.
இந்த நேர்காணலில் கட்டுரையை முடிக்கும் போது போராட அழைப்பு விடுப்பது குறித்த கேள்வி கொஞ்சம் சிறு பத்திரிக்கை வாடை அடிக்கிறது. ஒரு கட்டுரை படிக்கும் வாசகரை செயலுக்கு அழைக்கும் வண்ணம் அது ஆழமாகவம், ஈர்ப்பாகவும் இருப்பது சரியானதே. அதை பாரதி தம்பியும் பிரச்சார நெடியோடு முடிக்க வேண்டியதில்லை என்கிறார். உண்மையில் இப்படி செயற்கையாக எழுதும் போது உண்மையில் வாசகரை போராட தூண்ட முடியாது என்பதே சரியான பார்வையாக இருக்கும். மற்றபடி இந்த உலகில் அனைத்து எழுத்துக்களும் ஏதோ ஒரு பிரச்சாரத்திற்காகத்தான் எழுதப்படுகின்றன. பிரச்சாரங்களில் மலிவான பிரச்சாரம், உணர்வு- உணர்ச்சிப் பூர்வமான பிரச்சாரம் என்று பிரிக்கலாமே ஒழியி பிரச்சராமின்றி ஏதுமில்லை.
நேர்காணல் செய்பவர் கேட்ட கேள்விகளும் ஒரு திட்டமிட்ட டெம்பிளேட் வகையாகவே இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்து எழுதும் பத்திரிகையாளர்களுக்கு என்ன தடைகள் இருக்கும், உங்களது தனிப்பட்ட அனுபவம் என்ன, நிர்வாகத்தோடு முரண்பட்டால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. மாறாக நேர்மறையில் எப்படி எழுதுவீர்கள் என்று கொஞ்சம் “உன்னால் முடியும் தம்பி” வகையில் (இதுதான் கொஞ்சம் செயற்கையான பிரச்சாரம்) கேள்விகள் இருக்கின்றன.
இதையெல்லாம் பெரிய குறையாக சொல்லவில்லை. ஒரு மனிதன் அல்லது எழுத்தாளரிடம் அவர் நேர்மறையாக சாதித்ததோடு அந்த நேர்மறையை தடுக்க முனைந்த எதிர்மறைகள் குறித்து கேட்க வேண்டும் என்றும் கோருகிறோம். ஏனெனில் நேரடியாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முதலாளிகள்தான் இன்றைய ஊடக முதலைகளாக இருக்கும் போது அந்த முரண்பாட்டை ஒரு பத்திரிகையாளர் எப்படி உணர்கிறார் என்று கேட்பது தேவையல்லவா?
குறைகள் போக இந்த சிறிய நேர்காணல் ஒரு இளம்பத்திரிகையாளருக்கு ஒரு எளிய கையேடாக இருக்கும். சமரசமின்றி எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும்.
(நன்றி: வினவு)