24×7களின் உண்மை முகம்!

செய்தி தொலைக்காட்சிகளின் வியாபார போட்டி எந்த எல்லை வரை போகும்? கீழே உள்ளது கடந்த வார உதாரணம்…

அமெரிக்காவின் போனிக்ஸ் (Phoenix) நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு தம்பதியினர் சாப்பிட்டுக்கொண்டிருக்க… அவர்களின் காரை ஒருவன் திருடிக்கொண்டு போகிறான். விஷயம் அறிந்து அவர்கள் போலீஸுக்குத் தகவல் சொல்கின்றனர். போலீஸ் காரை துரத்துகிறது. போலீஸை நோக்கி திருடன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே செல்கிறான். திடீரென வானத்தில் ஒரு ஹெலிகாப்டரும் இந்த சேஸிங்கில் இணைந்துகொள்கிறது. அந்த ஹெலிகாப்டர், Fox News சேனலின் லைவ் வாகனம்.

அந்த பரபரப்பான திருடன் & போலீஸ்’ காட்சியை மேலும் பரபரப்புக் கூட்டி, ஹெலிகாப்டரில் இருந்தபடியே லைவ் செய்கிறார் தொகுப்பாளர் ஷெப்பர்டு ஸ்மித். செப்டம்பர் 28 காலை 11 மணிக்கு கார் திருடு போன அடுத்த ஒரு மணி நேரத்தில் இது நடக்கிறது. லைவ் என்பதால் பார்வையாளர்கள் ஒரு ஆக்ஷன் படத்துக்கான த்ரில்லுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இடையிடையே விளம்பர இடைவேளைகளும் உண்டு. ஏறத்தாழ 90 நிமிடங்களை கடந்து கலிபோர்னியா எல்லையில் ஒரு பாலைவனத்தில் திருடன் ஓட்டிய கார் நிற்கிறது.

பின்னால் துரத்திச் சென்ற போலீஸ் வாகனம் சற்று எச்சரிக்கையுடன் வண்டியை நிறுத்த… காரில் இருந்து இறங்கிய திருடன் முன் பக்கம் போகிறான். “என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை.. நமக்கு நெர்வஸா இருக்கு..’” என பதற்றத்துடன் விவரித்துக்கொண்டிருக்கிறார் ஸ்மித். யாரும் எதிர்பாராத வகையில், திருடன் துப்பாக்கியை தன் தலையில் வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறான். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் திரையில் விரிந்த உடனேயே, சட்டென நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டு விளம்பர இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளை முடிந்ததும், ‘நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று சொன்னார் ஸ்மித். சேனல் நிர்வாகமும், “லைவ் என்பதால் காட்சிகள் 5 முதல் 10 விநாடிகள் தாமதமாகவே வந்து சேரும். அதனால் எங்களால் அப்படி நடக்கும் என யூகிக்க முடியவில்லை. பார்வையாளர்கள் மன்னிக்க வேண்டும்’” என்று சொல்லியிருக்கிறது. இந்தக் கூற்றுக்கு பின்னே உண்மை இல்லை என்பதை ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஹெலிகாப்டரில் இருந்து துரத்துவதும் போலீஸ்தான் என்று நினைத்து பீதியடைந்து அந்த திருடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்’ என்ற கோணத்தில் பார்த்தால் இந்த தற்கொலையில் ஃபாக்ஸ் நியூஸுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இதைக் கடந்து, அனைத்தையும் பரபரப்பான செய்தியாக’ மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் வியாபாரப் போட்டியைதான் நாம் இங்கே பேச வேண்டும். மேலே உள்ள ஃபாக்ஸ் நியூஸ் டி.வி.யின் லைவ் நிகழ்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது.

ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஏ.எக்ஸ்.என்., ஸ்டார் வோர்ல்டு, டிஸ்கவரி, ஹிஸ்டரி உள்ளிட்ட பல ஆங்கில சேனல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக வருகின்றன. அவை அனைத்தும் அந்தந்த நாட்டு காவல்துறையின் கூட்டணியுடனேயே படம் பிடித்து ஒளிபரப்பப்படுகின்றன. கற்பனை பொழுதுபோக்கில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதால், அரசாங்கமும், தனியார் தொலைகாட்சிகளும் கூட்டாக உழைத்து மக்களுக்கு இத்தகைய உண்மையான அதிரடிக் காட்சிகளை வழங்கி வருகின்றன.

அப்படி வழங்கப்பட்ட சேவை’களில் ஒன்றுதான் 1998-ல் நடந்த டேனியல் ஜேம்ஸின் லைவ் தற்கொலை. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த டேனியல் 40 வயதை கடந்துவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு எய்ட்ஸ், கேன்ஸர் உள்ளிட்ட பல நோய்கள் இருந்தன. டேனியல், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். நோய்களுக்கு சிகிச்சை எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை. அவர் HMO (Health maintenance organization) என்ற நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். அது ஒரு ப்ரீபெய்டு சர்வீஸ். பணம் இருக்கும் வரைதான் சிகிச்சை. மேற்கொண்டு சிகிச்சை தேவை எனில் ‘டாப்&அப்’ செய்ய வேண்டும். டாப்-அப்புக்கு டேனியலிடம் பணம் இல்லை. ஆகவே அவருக்கு சிகிச்சையும் இல்லை.

நோய்களின் கொடுமையில் சிக்கி துயருற்ற டேனியல், வேதனையின் உச்சத்தில் இருந்த ஒரு நாள்… தன் காரை ஒரு தெருவில் நிறுத்திவிட்டு துப்பாக்கியை வெளியே எடுக்க… ஏரியா பரபரப்பானது. பாதைகள் அடைக்கப்பட்டு போலீஸ் வந்தது. தொலைகாட்சிகளில் ‘லைவ்’ தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் எடுபடவில்லை. அவர் காருக்குள் ஏறிக்கொன்டு தீ வைத்துக்கொண்டார். உடம்பு எங்கும் எரியும் தீயுடன் வெளியில் விழுந்து உருண்டு புரண்டார். பிறகு தன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அனைத்தும் ‘லைவ்’ செய்யப்பட்டது.

***

1980-ல் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் துவங்கிய சி.என்.என்&தான் உலகின் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். அதைத் தொடர்ந்து மீடியா முதலை ரூபர்ட் முர்டோச்சால் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் துவங்கப்பட்டது. பிறகு இந்த 24×7 அலை உலகம் எங்கும் ஒரு மேனியாவாக பரவி செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகின. தம்ழிநாட்டில் சன் நியூஸ்தான் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். இப்போது புதிய தலைமுறை, என்.டி.டி.வி. இந்து, கலைஞர் செய்திகள், ராஜ் நியூஸ், கேப்டன் நியூஸ், ஜெயா ப்ளஸ், ஜிடி.வி.எஸ்.பி.வி’வி, சத்யம் டி.வி. போன்றவையும் இணைந்திருக்கின்றன. விரைவில் பாலிமரில் இருந்தும், தினமலரில் இருந்தும் ஒவ்வொரு நியூஸ் சேனல்கள் வரப்போகின்றன. ஏ.சி.சண்முகம் ‘வானவில்’ என்ற பெயரில் ஒரு செய்தி சேனல் கொண்டு வரப் போகிறார். ஆக, தமிழ்நாட்டில் மட்டுமே பன்னிரண்டு, 24×7 செய்தி தொலைகாட்சிகள்.

இந்திய அளவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்தியில் 32 நியூஸ் சேனல்கள், அஸ்ஸாமி மொழியில் 19, ஆங்கிலத்தில் 19, கன்னடத்தில் 7, மலையாளத்தில் 10, மராத்தியில் 7, ஒரிய மொழியில் 8, தெலுங்கில் 25 என நாடு முழுவதும் செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கின்றது. இவை அனைத்தும் சாட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கை மட்டுமே. அந்தந்த மாவட்ட, வட்டார அளவில் வரும் லோக்கல் சேனல்களையும் கணக்கில் கொண்டால் இந்திய செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடலாம். இவர்கள் அத்தனை பேருக்கும் எல்லா நாளும், எல்லா நேரமும் எப்படி செய்தி கிடைக்கும்? “ஒரு நாள் நியூஸ் கிடைக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?’” என ஊடகங்களில் பணிபுரிபவர்களிடம் அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. இது ஒரு சுவாரஸ்யமான விடைக்கான கேள்விதான்.

ஒரு பொருளை, ஒரு ரசனையை, ஓர் உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நுகர்ந்து அதை சக்கையாக்கிவிட்டு, அடுத்ததை நோக்கி நகர்வதே நுகர்வுக் கலாச்சாரத்தை பரப்பி வரும் உலகமயத்தின் பண்பு. இது கொள்கையின் குணம் மட்டுமல்ல… அதை அனுபவிக்கும் மக்களின் குணமாகவும் மாறுகிறது. உதாரணமாக, உச்சகட்ட விளம்பரங்களுடன் வெளியிடப்பட்டு ஒரே வாரத்தில் முடிந்தவரை கல்லா கட்டும் சினிமாக்கள், தன்னிடம் இருப்பது நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும் புதிய மாடல் செல்போனை வாங்க அலையும் மக்கள்… என இரு உதாரணங்கள் சொல்லலாம். இதன் சாரத்தை செய்தி தொலைகாட்சிக்கும் நீட்டிக்க முடியும். ஆற அமர உட்கார்ந்து ஆய்வு செய்து உண்மையை கண்டறிவது எல்லாம் அவர்களுக்கு தேவை இல்லாதது. அந்த நேரத்தில் மக்களை பார்க்க வைக்க ஒரு காட்சி பதிவு வேண்டும். அது நித்தி-ரஞ்சி வீடியோவாக இருக்கலாம். சிவகாசி வெடிவிபத்தாக இருக்கலாம். அவர்களை பொருத்தவரை அது பிரைம் டைம் புல்லட்டின் பரபரப்பு மட்டுமே. மக்களும் இந்த ‘பெட்டிக்கு வெளியே’ சிந்தித்து அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதால் இந்த வியாபாரம் தொய்வின்றி தொடர்கிறது.

உண்மையில், அனைத்தையும் அந்தந்த நேரத்து பரபரப்பாக மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் இந்த வியாபாரப் போட்டி, இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். 24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை. யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும். கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்டு, ஒவ்வொரு டி.வி. ஸ்டுடியோவிலும் இரண்டிரண்டு பேர் அமர்ந்துகொண்டு… தங்கள் முகங்களை மிகுந்த பதற்றத்துடன் மெயின்டெய்ன் செய்து… நடிகர் திலகங்களாகவே மாறி விடுகின்றனர்.

ஒரு சராசரி மனிதனை அறைக்குள் பூட்டி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்தி தொலைகாட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர் நாடே கடும் பதற்றத்தில் பற்றி எரிவதாகதான் நினைத்துக் கொள்வார். அந்த அளவுக்கு இந்த செய்தி தொலைகாட்சிகள், ஒட்டுமொத்த தேசமும் பதற்ற நிலையில் இருப்பதை போல செயற்கையான தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன. டைம்ஸ் நவ்வில் அருணாகோஸ்சுவாமியும், சி.என்.என்.ஐ.பி.என்’னில் ராஜ்தீப் சர்தேசாயும் கொடுக்கும் சவுண்டுக்கு இந்நேரம் புரட்சி முடிந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மக்களின் நலனில் இருந்து அல்லாமல் ஒரு சண்டை படத்தின் விறுவிறுப்புடன் மட்டுமே செய்திகளை வழங்குகின்றனர். ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. அதனால்தான் கூடங்குளம் லைவ் காட்சிகளின் விளம்பர இடைவேளையில் “உலகத்தரம் மிக்க எஸ்.ஆர்.எம். ஹாஸ்பிட்டலின்’” மேன்மை குறித்து முரண்படாமல் பார்க்க முடிகிறது. “ஸ்பைஸ் ஜெட் பயணக் கட்டண தள்ளுபடி”யை மனம் குறித்துக்கொள்கிறது.

எண்ணிக்கையில் பெருகிவிட்ட இந்த செய்தி சேனல்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’ கொடுக்க வேண்டிய நிர்பந்தம். ‘மற்ற டி.வி.யை விட நாங்கதான் பெஸ்ட்’ என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் பிரஸ் மீட்டின் போது மைக் நீட்டுவதில் அடித்துக் கொள்வதில் இருந்தே இது தொடங்குகிறது. கோரமான மும்பை தாக்குதலின் போது இந்திய சேனல்கள் அனைத்தும் பற்றி எரியும் ஹோட்டலின் முன்பு நின்றபடி, அந்த வன்முறை காட்சிகளை பரபரப்பான சண்டை படத்தை போல வர்ணித்ததை கண்டோம். அத்தனை பேரும் மறக்காமல், ‘ஒன்லி ஆன் ….. டி.வி.’ என்று கூச்சமே இல்லாமல் இழவு வீட்டில் பெருமை தேடுவதில் குறியாய் இருந்தார்கள்.

இப்படி முதலில் செய்திகளை தருவதில் போட்டிப் போடும் இவர்கள், உண்மையை தருவதில் போட்டிப் போடுவது இல்லை. கூடங்குளத்தில் காவல்துறையின் அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயப்படுத்துவதில்தான் இவர்களிடையே போட்டியேத் தவிர, மக்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளியே கொண்டு வருவதில் அல்ல. இலங்கையில் நடந்த இன அழிப்பின் போதும் இதுதான் நடந்தது. இந்திய அயலுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ‘இலங்கையா…? அது எங்கேயோ ஆப்பிரிக்கா பக்கத்துலல்ல இருக்கு’ என்பது மாதிரிதான் நடந்துகொண்டன ஊடகங்கள். இல்லாத செய்திகளை ஊதிப் பெரிதாக்கும் 24 நேர செய்தி தொலைகாட்சிகள் எதுவும் இலங்கை இன அழிப்பை கண்டுகொள்ளவே இல்லை.

வேளச்சேரி ஐந்து பேர் என்கவுண்டர் முதல் தஞ்சாவூர் தமீம் அன்சாரி கைது வரை அனைத்து பிரச்சினைகளிலும் போலீஸுக்கும், அரசாங்கத்துக்கும் பி.ஆர்.ஓ. வேலை பார்ப்பதையே முதன்மை பணியாக செய்கின்றன செய்தி தொலைகாட்சிகள். சுருங்கச் சொன்னால் இவர்களின் போட்டி எல்லாம் ஆளும் வர்க்கத்துக்கு யார் அதிகமாக அடிபணிந்து சேவகம் செய்வது என்பதில்தானே ஒழிய, மக்களின் நலன் அல்ல. ஆனாலும் இந்த ஜனநாயகத்தின் நான்காவது தூண்களுக்கு நடுநிலை வேடம் போட வேண்டிய அவசியம் இருப்பதால், அவ்வப்போது கோட்டை தாண்டி வந்து இந்தப் பக்கம் வந்து நான்கு வரி டயலாக் பேசிக்கொள்வார்கள். ஊடகங்களின் இந்த விழாக்கால சமூக அக்கறை’யில் மனம் மகிழும் காரியவாத போராளிகள் பலர், இவர்களின் பச்சையான வியாபாரத்துக்கு கொள்கை சாயம் பூசுகின்றனர்.

உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் இடைவிடாமல் ஊடகங்களில் வெளிக்கொண்டு வர வேண்டிய மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகளின் துரோகங்கள், அழிக்க வரும் அந்நிய முதலீடு, பாடாய்படுத்தும் பவர் கட், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கேஸ், மளிகை, வீட்டுவாடகை, கல்வி கட்டணம், மருத்துவச் செலவுகள், ரியல் எஸ்டேட், பொருளாதார மோசடிகள், வரதட்சணை, சாதி, அதிகரிக்கும் வேலைநேரம், சீரழியும் சுற்றுச்சூழல்… என அனுதினமும் ஆயிரமாயிரம் புதிய பிரசிச்னைகள் மக்களை அச்சுறுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படைகளை மறைத்து வெறுமனே சென்சேஷனாக மாற்றுவதை மட்டும் சேனல்கள் செய்து வருகின்றன.

இந்த தொலைகாட்சிகள் ஏன் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது இல்லை என்ற கேள்விக்கு அவற்றின் உரிமையாளர் யார் என்று பார்த்தால் விடை தெரிந்துவிடும். தனியார் கல்வியில் பெரும் சூறையாடலையே நிகழ்த்தும் எஸ்.ஆர்.எம். குழுமம், ‘புதிய தலைமுறை’’யின் முதலாளி. கட்சியிலும், ஆட்சியிலும் கொள்ளையடித்த மக்கள் பணத்தில் உருவானதே ‘சன் நியூஸ்’’. ரியல் எஸ்டேட் ஊழல் குற்றச்சாட்டால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம், ‘ஜிடி.வி.எஸ்.பி.வி’வி’யின் உரிமையாளர். கிறிஸ்தவ மக்களிடம் இயேசுவின் பெயரை சொல்லி சுரண்டும் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் ‘சத்யம் டி.வி’’யின் முதலாளி. இப்படி அனைத்து ஊடக உரிமையாளர்களுமே சுரண்டு கொழுத்த பண முதலைகள்தான். இவர்கள் தங்களின் சுரண்டல் முகத்தை மறைத்துக்கொள்ளவும், ஊழல் பணத்தை பாதுகாக்கவும், பெருக்கவுமே ஊடகத் தொழிலை செய்கிறார்களே அல்லாமல் மக்களின் நலன் சார்ந்து அல்ல!

மேலும் படிக்க:

As It Followed a Car Chase, Fox News Showed a Suicide
Man Kills Self as City Watches
Health maintenance organization
இந்திய 24×7 லைவ் தொலைக்காட்சிகள்

(நன்றி: வினவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.