ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமர்வில் இன்னொரு விவாதத்திற்குரிய அம்சமாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேச்சு அமைந்தது.
பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்து தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன என்றும் காவி தீவிரவாதத்தைப் பரப்புகின்றன என்றும் அவர் கூறினார். மேலும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்தக் குற்றங்களுக்காக சிறுபான்மையினர் மீது அவர்கள் பழிபோடுகிறார்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பிற்குக் காரணமாகிய இந்தக் குற்றச்சாட்டு ஊடகங்களின் பரவலான கவனத்தைப் பெற்றது. ஷிண்டே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் ; சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் வருத்தம் தெரிவிப்பதோடு ஷிண்டேவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றெல்லாம் இந்துத்துவ அமைப்புகள் முன்வைத்த நிபந்தனைகள் முக்கியச் செய்திகளாக நாளிதழ்களில் இடம்பெற்றன.
நாட்டின் உள்துறை அமைச்சர், தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைப்பதற்குத் தடையில்லை என்றபோதும், தனக்கே உரித்தான பொறுப்போடும் நிதானத்தோடும் உண்மைகளை அவர் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். மேற்கூறிய குண்டு வெடிப்பு வழக்குகளில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தொடர்புடையவர்களாக இருப்பதும் இந்தச் சதிச்செயல்கள் அவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதும் வெளிப்படையாக அறியப்பட்ட உண்மைகள் தான். ஆனால், இவற்றின் அடிப்படையில் அந்த இயக்கங்களின் மீது எந்த நடவடிக்கையும் தற்போது தொடங்கியிராத நிலையில், ‘காவி தீவிரவாதம்’ பரவுவதாக மேடையில் மட்டும் எச்சரித்தது விமர்சனத்திற்குரியது என்பதில் ஐயமில்லை. எனினும், இந்த அம்சத்தை மட்டும் பூதாகரப்படுத்தி அமைச்சரின் எச்சரிக்கையை முற்றிலுமாய் புறந்தள்ளிவிட முடியாது என்பதற்கு வரலாறு சாட்சி. பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பலமுறை விசாரணைக்கு உள்ளானதும் தடைசெய்யப்பட்டதும் நினைவிற்குரியது.ஆனால் ‘நடுநிலை’ என்ற போர்வையில் இயங்கும் நமது செய்தி ஊடகங்களில் சில தமக்கான பொறுப்புணர்வுகளையும் சமூக அக்கறைகளையும் குறித்து சற்றேனும் கவலைப்படாமல், தமது ‘இந்துத்துவ’ அரசியல் பற்றை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டுள்ளன.
சனவரி 22 ஆம் தேதி தினமணியிலும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் எழுதப்பட்ட தலையங்கம் கிட்டத்தட்ட ஒரே கருத்தையே வலியுறுத்தி ஷிண்டேவின் பேச்சை வன்மையாகக் கண்டித்தன.‘ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு’ ‘தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டார்’ ‘ஓட்டுக்காக நாட்டையே பலிகொடுத்துவிட்டார்’ என்றெல்லாம் கொந்தளித்த தினமணி, ஷிண்டேவின் கூற்று உண்மையென்றால் அந்த அமைப்புகளை ஏன் தடை செய்யவில்லை என்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதுகுறித்துப் பேசி நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியது. மேலும்,
“பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகிறது என்றுதான் இந்திய அரசு கூறிவருகிறதே தவிர, முஸ்லீம் தீவிரவாதிகளை அனுப்புகிறது என்று தவறிக்கூட கூறியதில்லை. இந்தியப் பத்திரிக்கைகளும் கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர அவர்களது பெயர்களைக் கொண்டு அவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை” என்று ஆதங்கப்பட்டது.
இந்தக் கருத்துக்களோடு உடன்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், மேலும் சில கருத்துக்களை முன்வைத்து ஆத்திரப்பட்டது. சம்ஜவுதா, மாலேகான், மெக்கா குண்டுவெடிப்பு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன; குற்றவாளிகளை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என்று கூறியதோடு ஒரு அமைப்பில் யாரோ ஓரிருவர் செய்த குற்றத்திற்காக அந்த அமைப்பையே குற்றம் சாட்டுவது தவறானது மட்டுமின்றி நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அறிவுறுத்தியது.
23 ஆம் தேதி வெளிவந்த தினத்தந்தி தலையங்கம், ‘ஷிண்டேவின் பேச்சு வெறும் வாயை மென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் வாயில் அவல்போட்டது போல் ஆகிவிட்டது’ என்று கூறி தினமணி, எக்ஸ்பிரசோடு கைகோர்த்து.
ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறிய ஒரு எச்சரிக்கையை, ஏதோ அப்பழுக்கற்ற புனிதர்களின் மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழி என்பதைப் போல இந்த ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்க இயலாதது. ஷிண்டே கூறிய இந்தக் கருத்து (குண்டுவெடிப்பில் தொடர்பு) ஏதோ சி.பி.ஐ விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவல் மட்டுமன்று ; மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, முஸ்லீம் மக்களைக் குறிவைத்துத் தாக்கிய ஒரு பயங்கரவாதச் செயல் என்பது இதுவரையிலுமான விசாரணைகளால் வெளிப்படையாக அறியப்பட்ட ஒன்று.
இந்த வன்முறைகள் குறித்து வாய்திறக்காமல், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல், இந்தக் குற்றத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்று மடக்குவதும் வழக்கு நிலுவையில் உள்ளபோது அதைக்குறித்து பேசுவது நீதிமன்ற அவமரியாதை என்று கதையளப்பதும் அபத்தமான ஊடகத்தந்திரம். அப்படிப் பார்த்தால், பாபர் மசூதி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே பா.ஜ.க ‘கரசேவகர்கள்’ மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்களே அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அயோத்தியில் ‘ரெடிமேடாக’ ஒரு ராமர் கோவிலைத் தயாரித்து கண்காட்சி நடத்துகிறார்களே இது அவமதிப்பு இல்லையா? இவற்றையெல்லாம் கண்டித்து வைத்தியநாதன் என்றைக்கேனும் தலையங்கம் எழுதியிருக்கிறாரா??
அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை? ஏன் இன்னும் சாகடிக்கவில்லை என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிண்டிக்கொடுக்கும் தினமணி, நூற்றுக்கணக்கான முஸ்லீம்களையும் இந்துக்களையும் பலிவாங்கிய மும்பை கலவர வழக்கின் முதன்மைக் குற்றவாளி பால் தாக்கரே தான் என்று ஶ்ரீ கிருஷ்ணா கமிஷன் கூறியபின்பும், சாகும்வரை தாக்கரே கைது செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று ஒருநாளேனும் கேட்டிருக்குமா??
ஷிண்டேவின் வெறும் வாய் வார்த்தைக்கே வானத்திற்கும் பூமிக்குமாய் குதிக்கும் இந்த ஊடகங்கள், ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இறப்பதற்கும் அகதிகளாய் அலைவதற்கும் பிஞ்சுக் குழந்தைகள் அனாதைகளாய் நிற்பதற்கும் காரணமான அத்வானி, மோடி வகையறாக்களின் மீது இப்படிக் கடுஞ்சொற்களை உதிர்த்துத் தலையங்கம் தீட்டியிருக்கின்றனவா?? இவர்களெல்லாம் நாட்டின் தலைவர்களா என்று இகழ்ந்திருக்கின்றவா??
மதத்தின் அடிப்படையில் ‘முஸ்லீம் தீவிரவாதம்’ என்று யாரும் சொல்வதில்லை, எனவே ‘இந்து தீவிரவாதம்’ என்று சொல்வது தவறு என்கிறது தினமணி. முஸ்லீம் தீவிரவாதம் என்று பேச்சளவில் கூறாமல் இருக்கலாம். ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லீம்கள் தான் என்ற கருத்து இந்திய அளவில் உருப்பெற்றிருப்பது மறுக்க முடியாதது. மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகளில் எல்லாம் இந்துக்கள் தொடர்புடையவர்களாக இருந்தபோதும் அச்சம்பவம் நடந்தபோது கேட்பாரின்றி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்ப்பட்டார்கள்.
2007 ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன், விசாரணைக்கு முன்பாகவே இது பாகிஸ்தானின் சதிச்செயல் என்று ‘கண்டுபிடிக்கப்பட்டது’. ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு (2007) நிகழ்ந்தவுடன், இந்த சதிச்செயல் ‘ஹர்கத் – உல் – ஜிகாத் – இஸ்லாம்’ என்ற அமைப்பால் நடத்தப்பட்டது என்று ஹைதராபாத் போலிஸ் முன்முடிவெடுத்தது. 26 முஸ்லீம்களைக் கைது செய்து ஆறுமாத காவலில் வைத்து கட்டாயப்படுத்திக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்தது. சி.பி.ஐ.யின் விசாரணைக்குப் பின்பு தான் இது இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாதச் செயல் என்பது கண்டறியப்பட்டது. இதேபோல் மாலேகான் குண்டுவெடிப்பு (2006) நடந்தபோதும், சம்பந்தமே இல்லாமல் ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். உள்துறை அமைச்சரின் பேச்சிற்கு ஆதாரம் கேட்கும் ஊடகங்கள், முஸ்லீம்கள் மீதான கைது நடவடிக்கைகள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடந்தன என்று இதுவரையிலும் கேள்வி எழுப்பியதுண்டா?
உண்மைச் செய்திகளை ஒளிவுமறைவின்றி வெளியிடுவதைப்போல காட்டிக்கொள்ளும் தினத்தந்தி, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்கள், ஷிண்டேவின் கருத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு, அவரது கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரத்தை வெளியிட்ட மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங்.கின் பேட்டியை வெளியிடாமல் மூடிமறைத்தன. தனது பேட்டியில் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்களாகவும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாகவும் இருந்த 10 பேரின் பெயரை அவர் வெளியிட்டிருந்தார். தினமணி, இந்து, டெக்கன் கிரானிக்கல் ஆகிய நாளிதழ்கள் இந்தச் செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தன.
அறங்களையும் நடுநிலைத்தன்மைகளையும் கைவிட்டு இப்படி ஒருபக்கச் சார்பெடுக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் இந்து நாளிதழின் தலையங்கம் சற்று வேறுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சர் ஆதாரங்கள் இல்லாமல் இப்படி ஒட்டுமொத்தமாய் ஒரு அமைப்பைக் குற்றம் சாட்டுவதும் இதன்மீதான தீவிர நடவடிக்கைகள் எடுக்காமல் வாயளவில் பேசுவதும் தவறு என்று சுட்டிக்காட்டிய அத்தலையங்கம், ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்ற சொல்லைப் போலவே ‘இந்து தீவிரவாதம்’ என்ற சொல்லும் ஏற்கமுடியாதது என்று கூறியது. மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகளில் (மெக்கா, மாலேகான்) விசாரணைக்கு முன்பாக அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைச் சந்தேகித்துச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த குற்றவாளிகள் மீது விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லாமல், பிரச்சினையை இப்படி அரசியல் ஆக்குவதால் எந்தப் பலனும் இல்லை என்றும் சொல்லியிருந்தது.
அதேவேளை, பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தவிட முடியாது என்றும் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தீவிரவாதப் படுகொலை என்பது இந்துத்துவக் கொள்கைகளால் வளர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே, காந்தியின் மீது நிகழ்த்தியதுதான் என்றும் எடுத்துரைத்தது. மேற்குறிப்பிட்ட நாளிதழ்கள், இந்துத்துவ அமைப்புகளின் மீது வெளிப்படையாக அறியப்பட்ட குற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ளாமல், முழுக்க முழுக்க அவர்களுக்குச் சார்பாக நின்ற நிலையில், ஒப்பீட்டளவில் இந்து நாளிதழ் நடுநிலைத் தன்மையோடு விளங்குவது அறியத்தக்கது.
இதேபோல் டெக்கன் கிரானிக்கல் இதழின் செய்தியும் வேறுபட்டிருந்தது. ஷிண்டேவின் கருத்துக்கள் மீது எந்த விமர்சனமும் இல்லாமல் வெளிவந்திருந்த அச்செய்தி, ஷிண்டேவின் கருத்து உளவுத்துறையினரால் அளிக்கப்பட்ட உறுதியான ஆதாரம் என்று வலியுறுத்தியது. வெடிபொருட்கள் தயார் செய்வது, ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று உளவுத்தகவல் கூறுவதாகவும் காவி பயங்கரவாதிகளிடமிருந்து வந்த மிரட்டல் முடிவடைந்துவிட்டது என்று யாரேனும் நினைத்தால் அது தவறானது என்று உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாகவும் செய்தி வெளியிட்டது.
மேற்கூறியவற்றில் இருந்து, தினமணி, தினத்தந்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்கள் நடுநிலைப் போர்வையில் இந்துத்துவச் சார்பை வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.
மேலும் பார்க்க
தேசத் துரோகம்!
Do not give terror a colour, fight the evil
Think before you talk