சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘லால் சலாம்’ ஃபர்ஸ்ட் லுக் பெரியளவில் ட்ரால் செய்யப்பட்டு வருகிறது. ‘சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என போஸ்டரில் குறிப்பிட்டுள்ள இந்தப் படத்தை ரஜினியின் மகள் ஐஷ்வர்யா இயக்குகிறார். ‘லால் சலாம்’ என்ற இடதுசாரி முழக்கம், போராட்டங்களின் குறியீடு. இடதுசாரிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு தரப்பிடம் இருந்து இடதுசாரி அடையாள சினிமா வெளிவருவதை கவனமாகவே அணுக முடியும். சரி.. இங்கே நாம் பேசவிருப்பது அதைப் பற்றியல்ல.
ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நேரு உருவாக்கிய தொழில் நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள், காங்கிரஸ் கனவு கண்ட இந்தியா – இதெல்லாம் சுமார் ஒரு தலைமுறைக்கு மட்டுமே செல்லுபடியாகும் விஷயங்களாக இருந்தன. தொடக்கத்தில் இந்திய விடுதலையை மையப்படுத்திய பாலிவுட், 1950-60களில் இந்திய ஒற்றுமை பற்றியும், மேற்குக்கு எதிரான இந்திய கலாச்சாரப் பெருமை, கிராமம் Vs நகரம் – கலாச்சார மாற்றம் – பாரத கலாச்சாரமே சிறந்தது போன்ற வகைமை கொண்ட திரைப்படங்கள்.. அதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் இதே போன்ற திரைப்படங்களுக்கும் வரவேற்பு இருந்தாலும், திராவிட இயக்கத்தின், குறிப்பாக திமுகவின் சினிமாவே மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது.
எழுபதுகள்.. இந்திய சுதந்திரம் குறித்த கனவை மட்டுமே கண்ட தலைமுறை ஒருபக்கம்.. மறுபக்கம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி.. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த கோபமும் சினிமாவில் வெளிப்பட்டது. சலீம்-ஜாவேத் கூட்டணி எழுதிய திரைக்கதைகள் பாலிவுட்டில் பெரு வெற்றி பெற்றன. ’கோபக்கார இளைஞன்’ – ஆங்க்ரீ யங் மேன் என்றழைக்கப்படும் கதாபாத்திரங்களில் இந்தியில் கோலோச்சினார் அமிதாப் பச்சன். அதே திரைக்கதைகள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, தமிழ் சினிமாவில் ரஜினி உழைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். ரஜினியின் அறிமுகத்திற்கும், உழைக்கும் மக்களின் நாயகனாக, ‘கோபக்கார இளைஞனாக’ மாறியதற்கும் இடையிலான காரணிகள் ரஜினியின் முந்தைய ஸ்டைலான ஆணாதிக்க வில்லன் வேடங்கள். அதுகுறித்து மற்றொரு முறை விரிவாக பார்க்கலாம்…
எண்பதுகள்.. வட இந்தியாவில் பாஜக உருவாகியிருந்தது.. ராமஜென்மபூமி விவகாரம் ஊதிபெருக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சலிம் – ஜாவேத் திரைக்கதைகளில் பெரும்பாலும் இரண்டு நாயகர்கள் இருப்பார்கள்.. ஒருவர் வழிதவறுவதும், மற்றொருவன் திருத்துவதும்.. ஒருவன் துரோகம் செய்வதும், மற்றொருவன் சவாலை வெல்வதும் எனப் பெரும்பாலும் இரண்டு நாயகர்கள் இருக்கும் திரைப்படங்கள் உருவாகின.. இவை ஒரே இந்தியாவில் இருந்து பிரிந்த இரண்டு பிரிவுகளைக் குறிக்கும் கூட்டு மனசாட்சிகளாக இருந்தன.. தமிழில் இத்தகைய படங்களில் ரஜினி நடித்தார்.. பிறகு அதுவே அவரது படங்களின் பேட்டர்னாக மாறியது.. இதை ‘தளபதி’, ’அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘பணக்காரன்’, ‘வேலைக்காரன்’ போன்ற அவரது படங்களில் பார்க்க முடியும்.. ’அண்ணாமலை’ 1991ல் வெளிவந்தது.. அதில் தான் கோயில் போன்று கருதும் அண்ணாமலையின் வீடு இடிக்கப்படும் காட்சியும், சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வெவ்வேறு நிகழ்வுகளாக இருக்கலாம்; ஆனால் அயோத்தி ரத யாத்திரையின் உச்சகட்ட காலத்தில் கோயில் போன்ற வீட்டை நண்பனின் துரோகத்திற்குப் பலிகொடுத்து, பிறகு சவால்விட்டு வெற்றிபெறுபவராக நடித்திருப்பார் ரஜினி.
ஒரு கலைப்படைப்பு உருவாகும் களத்தை அது சமூகத்தில் இருந்தே எடுத்துக் கொள்கிறது.. சமூக நிகழ்வுகள் படைப்பாளிகளைக் கடுமையாக பாதிக்கின்றன.. அரசியலற்ற படைப்பாளியாக இருந்தாலும், சமூக நிகழ்வுகள் அவர் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை அவரது படைப்புகள் வெளிப்படுத்தும்; அவரது படைப்புகளில் அத்தகைய பொருள் எதுவும் இல்லையென்றாலும், மக்களே அதனை அவரவர் சமூக வாழ்க்கையில் இருந்து பொருள்படுத்திக் கொள்வர். ஒரு கலைப்படைப்பு சமூகத்தின் கூட்டு நினைவைப் பதிவுசெய்வதையும், அதன் கூட்டு மனநிலையைப் பிரதிபலிப்பதாக இயங்குவதைப் பல ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். சினிமாவும் இதில் விதிவிலக்கு கிடையாது. சினிமா கூட்டு அனுபவத்தை உருவாக்குகிறது; கூட்டு அடையாளத்தை உருவாக்குகிறது; அன்பையும், வெறுப்பையும் இந்த அனுபவத்தின் வழியாக, அனுபவம் உருவாக்கும் அடையாளத்தின் வழியாக வெளிப்படுத்துகிறது.
ரஜினி ஏற்கனவே ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் முஸ்லிமாக நடித்திருப்பார். ‘தீ’ படத்தில் ‘786’ என்று எழுதப்பட்டிருக்கும் அடையாளப் பட்டையும், முஸ்லிம் நண்பர் கதாபாத்திரமும் இடம்பெற்றிருக்கும். ‘படிக்காதவன்’ படத்தில் ரஜினியை வளர்க்கும் நாகேஷ் இஸ்லாமியராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் – இவையெல்லாம் இந்தி சினிமாவில் இருந்து எடுக்கப்பட்டவை. ’பாட்ஷா’ ரஜினியின் மொத்த கரியரையும் மாற்றியது, ஜெயலலிதாவுடனான உரசல் ரஜினியை அரசியலுக்குத் தள்ளிய காலகட்டம் அது. ’பாட்ஷா’ படத்தின் டைட்டில் தொடங்கி, படத்தின் மையக்கரு வரை இந்து-முஸ்லிம் ஒற்றுமை பேசியிருப்பார் ரஜினி. ஏற்கனவே ‘தளபதி’ படத்தில் இஸ்லாமிய வீட்டின் மரணம் ஒன்றில் முன்னணி ஆளாக ரஜினி கலந்துகொள்ளும் காட்சியும் உண்டு.
ரஜினியின் படங்களிலேயே பெரிதும் புரிந்துகொள்ளப்படாதது ‘பாபா’. கமல் ஹாசன் தனது அரசியல் நிலைப்பாட்டை ‘ஹே ராம்’ படத்தில் வெளிப்படுத்திய பிறகு, ரஜினி அதனை ‘பாபா’ மூலமாக செய்தார். ’பாபா’ ரஜினியின் மொத்த ஆன்மிக அரசியலையும் பேசியது. கலாச்சார மீட்பு, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றோடு ஆத்திகத்தையும், ஆன்மிகத்தையும் தமிழ்நாட்டின் அரசியல் கைகொள்ள வேண்டும் எனப் பேசியது ‘பாபா’. அதில் டெம்ப்ளேட் முஸ்லிம் கதாபாத்திரமாக நடிகர் கிட்டி நடித்திருப்பார். ரஜினி அவரோடு சேர்ந்து ‘அல்லா அருணாச்சலா’ என்ற காய்கறி கடையில் பணியாற்றுவார்.. அடுத்தடுத்த படங்களில் சின்ன சின்ன வேடங்கள் என்றாலும், ‘கபாலி’ படத்தில் ஜான் விஜயின் அமீர் கதாபாத்திரம், ‘காலா’ படத்தில் ஹூமா குரேஷியின் ஜரீனா கதாபாத்திரம் ஆகியவை ரஜினியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமை டெம்ப்ளேட் போர்வையில் தலித் – முஸ்லிம் ஒற்றுமையைப் பேசியிருந்தது. ‘பேட்ட’ படம் Fanboy சம்பவம் என்ற பெயரில், முஸ்லிம் நண்பன், இந்துத்துவ அரசியல்வாதி வில்லன் என சைலண்டாக அதே ரஜினியின் ஒற்றுமை அரசியலைப் பேசியிருந்தது.
தன்னை பாஜக ஆள் என மக்கள் கருதுவதால் ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாயாகவும், ‘ஜெய் பீம்’ இயக்குநர் டீ.ஜே.ஞானவேலுடன் இணையும் படத்தில் ஓய்வுபெற்ற முஸ்லிம் காவல் அதிகாரியாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. படம் வெளியான பிறகு தான் இவற்றின் உண்மைத் தன்மை தெரிய வரும்.. ரஜினி தன்னை மதச்சார்பற்றவராக முன்னிறுத்திக் கொள்ள கடும் முயற்சிகளை எடுத்தாலும், ’பாபா’ காலகட்டம் முதலே அவரது அரசியல் தேர்வு பாஜகவாகவே இருக்கிறது. பாஜகவின் முஸ்லிம் விரோத அரசியல், ஆர்.எஸ்.எஸ் அமைப்புப் பின்னணி முதலானவை ரஜினிக்குப் பெரிதும் பிரச்னையாக இல்லாமல் இருப்பதோடு, அவர் பேசும் மத ஒற்றுமை அரசியலைக் கணக்கில் கொள்ளும் போது, அது பெரும்பான்மைவாத மதச்சார்பின்மையாகவே தென்படுகிறது. அதனைத் தன் திரைப்படங்களில் தனது இமேஜுக்காக ரசிகர்களை ஈர்க்க அவர் வைத்துக் கொள்ளலாமே தவிர, முஸ்லிம்களின் அடிப்படை பிரச்னைகள் பற்றி அவரால் வாய் திறந்து பேசவே முடியாது; பேசவும் மாட்டார்.
உழைக்கும் மக்களைப் பார்வையாளர்களாகக் குறிவைத்த ரஜினி படங்கள், சமகாலத்தில் தலித் அரசியல் பேசின. தொடர்ந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. ரஜினியின் ஆன்மிக அரசியலில் ‘அல்லா – அருணாச்சலா’ என்ற இருமையை அவர் பேசுவது வரவேற்கத்தக்கது என்ற போதும், அவரது சார்பு பாஜகவுடனே இருந்திருக்கிறது. ஜெயலலிதாவைக் குறிவைத்த ‘படையப்பா’ ஒருபக்கம் அவரது தனிப்பட்ட பிரச்னைகளை மையப்படுத்தியது என்றாலும், ‘அண்ணாமலை’யில் வினுச்சக்கரவர்த்தியை மிரட்டும் காட்சி, ‘படையப்பா’ படத்தின் நாசர் கதாபாத்திரத்தின் குணம், ‘பாபா’ படத்தில் ‘ராமசாமி’ எனப் பெயரிடப்பட்ட ஆஷிஷ் வித்யார்த்தி, ‘சிவாஜி’ படத்தின் வில்லன்களாக வரும் அரசியல்வாதிகள் என அவரது வில்லன்கள் பெரும்பாலும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ‘சிஸ்டத்தை மாற்றுவேன்’ என அவர் சூளுரைத்தது பெரிய அரசியல் மாற்றங்களை உருவாக்குவதல்ல; திராவிடக் கட்சிகளை அகற்றுவது தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே சமூக நீதி, இட ஒதுக்கீடு முதலானவற்றின் வழியாக திராவிட இயக்கம் பிரசாரம் மேற்கொள்ளும் போது, ரஜினியின் ஆன்மிக அரசியல், திராவிட இயக்கத்தின் பணிகளை வெறும் ஆத்திகம் – நாத்திகம் என்று சுருக்கவதோடு சரிசெய்து கொள்ள பார்க்கிறது. பெரியார் பிறந்த நாளைச் சமூக நீதி நாள் என அனுசரிக்கப்படும் காலகட்டத்தில், ரஜினி பெரியாரை ராமரின் விரோதி என அழைத்தார்.
சமகால சமூகத்தில் ஒரு திரைக்கலைஞன் – ஸ்டார் – என்பவர் மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்றவரால் மட்டுமே உருவாக முடியும். இந்த நம்பிக்கையைத் தீர்மானிப்பதில் ஸ்டார் நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையும், திரைப்பட கதாபாத்திர வாழ்க்கையும் பெரிதும் கைகொடுக்கிறது. சமகாலத்தில் பெரியார் எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு ஆத்திகம் என்பது பாஜகவின் புகலிடமாகவே அமையும் என்பதன் மாபெரும் உதாரணம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!