நகைச்சுவை என்பது அவரவர் எல்லையைப் பொறுத்தது. இதில் தமிழ்ச் சமூகத்திற்குப் புதிதான ‘டார்க் ஹியூமர்’ என்ற வடிவம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பலராலும் பகடி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சினிமாவிலும் இந்த வடிவம் இடம்பெறத் தொடங்கிவிட்டது. டார்க் ஹியூமரோடு தொடர்புபடுத்திப் பேசும் அளவிற்கு இயக்குநர்களும் அதனைத் தமது ஸ்டைலாக பாவிக்கத் தொடங்கிவிட்டனர். இதிலிருந்து மாறுபட்டு, டார்க் ஹியூமரின் ஒரு பகுதியாக Dank கலாச்சாரம் நேரடியாக புண்படுத்துவதுதான் நகைச்சுவை என்ற பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் நீட்சிதான் Temple Monkeys, Plip plip, ஷும்மி வண்ணக் காவியங்கள், ஃபயாஸ் ஹுசைன் போன்ற இணையப் படைப்பாளிகள்.
Dank கலாச்சாரத்தின் மூலமாக நகைச்சுவை என்பதை மற்றமையாக்கலுக்கான கருவியாக வலதுசாரிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்துகின்றனர். இதில் நகைப்புக்கு உள்ளாக்கப்படுவோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள், பெண்கள், பால்புதுமையினர் ஆகியோராகவே இருக்கின்றனர். உலகம் முழுவதும் இணையத்தில் பிரபலமான இந்தக் கலாச்சாரத்தை வட இந்தியாவில் தலித்துகள், பழங்குடிகள், பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகும் பெண்கள் முதலானோரை இழிவுபடுத்த பார்ப்பன, உயர்சாதி இளைஞர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
கலாச்சார ரீதியாக பொதுப்புத்தியில் பரவியிருக்கும் தகவல்களின் அடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மைக்கு இடமளிக்காமல் ஒரு மீமாகவோ, இரண்டு வரி ’நகைச்சுவையாகவோ’ மாற்றுவதும் அதற்குச் சிரிப்பதும் இந்த வடிவத்தின் முக்கியமான கூறு. உதாரணமாக, ‘இட ஒதுக்கீடு’ குறித்த வன்மம், பெரியார் பற்றிய அவதூறு, இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ வெறுப்பு, புலம்பெயர்ந்தவர் மீதான அவதூறு முதலானவை பொதுப் புத்தியில் ஏற்கனவே நீடிப்பவை. அதனை சந்தைப்படுத்திக்கொள்கிறது இந்த Dank கலாச்சாரம். இதன்மூலமாக, அதிகாரத்தை எதிர்த்த முந்தைய கால நகைச்சுவை வடிவங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதிகாரமற்ற சமூகங்களும் அவர்களின் தலைவர்களும் நகைப்புக்குரியவர்களாக மாற்றப்படுகின்றனர்.
மீம்கள் புதியதொரு மொழிபோல இயங்குகின்றன. எழுத்துகளுக்குப் பதிலாக படங்கள். ஒவ்வொரு படத்திற்கும், அதில் இருக்கும் நபரின் உணர்வுக்கும் இடையிலான பல்வேறு பொருள்கள் ஒரு மீமை உருவாக்குகின்றன. ஒரு எழுத்தை அறியாமல் ஒரு மொழியைப் படிக்க முடியாது என்பதைப் போல, அந்தந்த வடிவேலு காமெடியைத் தெரியாமல் மீம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இது இணையத்தின் புதிய மொழியாக இயங்குகிறது. இதன் நீட்சிதான் இணையப் புழக்கத்தில் எழும் சொற்கள்.
ஃபயாஸ் ஹுசைனின் கோவை காமெடி, தற்போதைய நாடார் மேட்ரிமோனி காமெடி முதலானவை இணையத்தில் உருவாகியிருக்கும் லிபரல் தலைமுறையினர் பயன்படுத்தும் மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. அவர் இஸ்லாத்தையும் தமிழ் இணைய உலகத்திற்கே உண்டான பிரத்யேக ‘மொழியில்’ கிண்டலடித்திருக்கிறார். தற்போது பெரியாரையும் கிண்டல் செய்திருக்கிறார். அது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. சொல்லப்பட்டது Dank காமெடி என்பதால் ஃபயாஸ் தரப்பில் ’இது ஜோக்; சீரியஸ் அல்ல’ என்று விளக்கம் தெரிவிக்கப்படுகிறது. இது வெறும் காமெடியனுக்கும், மனம் புண்பட்ட பெரியார் ஆதரவாளர்களுக்கும் இடையிலான பிரச்னையாக இருந்திருந்தால் கடந்து சென்றிருக்க முடியும். Dank என்பதன் அடிப்படையே அதுதான். ஆனால் இதனைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பு அருவெறுப்பானதாக இருக்கிறது.
முஸ்லிம் பெயர் கொண்ட பெண் – முஸ்லிம் பெயர் கொண்ட ஆண்கள் இடையிலான நடந்த ஸ்க்ரீன்ஷாட் பஞ்சாயத்து, தலைப்போ விலாசமோ இல்லாமல் இன்னாரின் மனைவி என அச்சடிக்கப்பட்ட மதரஸா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ், தற்போது Dank அளவுகோல்களில் இருந்தே பெரியாரை கிண்டல் செய்த முஸ்லிம் காமெடியன் — இவை சமீப வாரத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு சாரார் பேசிய விவகாரங்கள். இவற்றை மையமாக வைத்து இஸ்லாமிய வெறுப்பு கடுமையாகப் பரப்பப்பட்டதைக் காண முடிந்தது. Harmless நகைச்சுவை என்ற பெயரில் இந்துப் பொதுப்புத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய மதக் கோட்பாடு குறித்த தவறான விளக்கங்கள்/மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் கட்டமைக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பு ஆகியவை இணையும் புள்ளி என்பது இதுதான்.
இத்தனை நாள்களாக பேசுபொருளாகாத ஃபயாஸ் ஹுசைனின் மத அடையாளம் இன்று பேசுபொருளாவதும், விமர்சிக்கப்படுவதும் எதன் பெயரால்? பெரியாரின் பெயராலா அல்லது இந்துப் பொதுப் புத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பெயராலா?
பெரியார்-மணியம்மை திருமணம், இட ஒதுக்கீடு, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் முதலான அனைத்திலுமே ஆதரவு, எதிர்ப்பு ஆகிய நிலைப்பாடுகளை இரண்டு வரிகளில் பேசியோ, மீம் பதிவிட்டோ பாராட்டு பெற்று அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல முடியாது. அவை குறித்த ஆழமான விவாதங்கள், உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை முழுமையாக அணுகாமல் நக்கல் செய்யும் அனைத்துமே சோம்பேறித்தனமான படைப்புகள் என்பதையும், பாசிச மற்றமையாக்கலின் பகுதி என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
எந்த நேரத்திலும் எந்த கண்டெண்ட் கிடைத்தாலும் அதன் வழியாக முஸ்லிம்களை, இஸ்லாத்தை, ‘பச்ச சங்கிகளை’ கிண்டல் செய்வது, ’தமிழ்நாட்டில் எங்களால்தான் நீ பாதுகாப்பாக இருக்கிறாய்’ என்று மீட்பர் வேடம் போடுவது, மோடியைப் போல முஸ்லிம் அபலைப் பெண்களை முஸ்லிம் ஆண் தடியர்களிடம் இருந்து காப்பாற்றக் கிளம்புவது என்று பாசிசத்தின் மற்றமையாக்கலை சங்கிகளோடு இணைந்து செய்துகொண்டிருக்கின்றனர் தம்மைத் தாமே பெரியாரிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் சாதி இந்து நாத்திகர்கள்.
இத்தனை நாள்களாக ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில் வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்த Dank கலாச்சாரம் இன்று தன் கையையே கடிக்கும்போது, அதிலும் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறது சாதி இந்து நாத்திகத் தரப்பு. கருத்துச் சுதந்திரம், சமூகப் பொறுப்பு முதலான விவாதங்கள் கலை தோன்றிய காலம் முதலே இருந்துவருகின்றன. ஒரு படைப்பாளியிடம் இவை இரண்டையுமே அதீத அளவில் விட்டுவிடக் கூடாது என்பதே நம் விருப்பம்.