’குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன்’ என்ற நபிமொழியை பூமி வெப்பமடைதலின் பின்னணியில் ஜும்ஆ பயானில் இமாம் பேசிக் கொண்டிருக்கிறார். பள்ளிவாசலின் ஹவுஸ் பகுதியில் ஒளு செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு மற்றொருவனுக்கும் கடுமையான சண்டை நிகழ்கிறது. பேசிக் கொண்டிருக்கும் இமாம் பள்ளிக்கு வெளியில் வந்து, இருவரையும் சமாதானம் செய்து ஒரே வாகனத்தில் அனுப்பி வைக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். இப்படியான ஒரு காட்சியோடு தொடங்குகிறது ’தல்லுமாலா’. (காட்சி இணைக்கப்பட்டுள்ளது)
’தல்லுமாலா’ என்பது ’சண்டைகளின் பாட்டு மாலை’ என்பதைக் குறிக்கிறது. பெரிதாக கதை என்று எதுவுமின்றி, வெறும் சண்டைகளால் மட்டுமே நிரம்பியிருந்தாலும், இந்தத் திரைப்படம் அது உருவாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காகவும், அதன் உள்ளடக்கத்திற்காகவும் பெரிதும் போற்றப்படுகிறது. மலையாள சினிமாவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும், இகழ்வானதாகவும் கருதப்பட்ட மேற்கு மலபார் பகுதிகளின் வட்டார மொழி, இசை முதலானவற்றை ஸ்டைலாக மாற்றி, சமகால இளைஞர்களின் விருப்பத் திரைப்படமாக, ’கல்ட்’ அந்தஸ்து பெற்றிருக்கிறது ’தல்லுமாலா’.
’தல்லுமாலா’ திரைக்கதையையும், சில பாடல்களையும் எழுதியுள்ள முஹ்சின் பெராரி ஏற்கனவே ’சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ’ஹலால் லவ் ஸ்டோரி’ முதலான திரைக்கதைகளை எழுதியவர். இதன் தொடர்ச்சியில் அணுகும் போது, ’தல்லுமாலா’ முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதாக அமைகிறது. இந்த மூன்று திரைப்படங்களுமே அடிப்படையில் வழக்கமாக சினிமாவில் தென்படும் முஸ்லிம்களின் சித்தரிப்புக்கு நேரெதிராகவும், முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளிருந்து எழும் குரல்களாகவும் வெளிப்பட்டுள்ளன. சமூக விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், கடுங்கோட்பாட்டுவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு வந்த முஸ்லிம்களை மனிதாயப்படுத்தும் பணியை இந்தத் திரைப்படங்கள் சிறப்பாக செய்திருக்கின்றன.
’தல்லுமாலா’ படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்கள் முஸ்லிம்கள் என்ற போதும், ’மாமனிதன்’, ’நீர்ப்பறவை’ முதலான படத்தில் வரும் அப்பழுக்கற்ற பாத்திரங்கள் போலவோ, ’விஸ்வரூபம்’ தொடங்கி ’பீஸ்ட்’ வரையிலான தீவிரவாதிகளாகவோ இல்லாமல், சமகால இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றனர். சிகரெட் புகைப்பதும், மது அருந்துவது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களைச் செய்யும் இந்தக் கதாபாத்திரங்களை அதே திரைக்கதையில் இஸ்லாமிய அடிப்படையில் அறிவுறுத்தும் காட்சிகளும் இதில் உண்டு. மாட்டுக்கறியைப் போற்றுவது, இறைச்சிக்காக விற்கப்படும் எருமை மாட்டுக்குத் தேன் மிட்டாய் வழங்கி வருத்தம் கொள்வது என வழக்கமான இஸ்லாமியர் சித்தரிப்புகளை உடைத்து நொறுக்கியிருக்கிறது ’தல்லுமாலா’. தாயைத் தாக்கிய மகனை அடிக்கும் கதாநாயகனை ’இஸ்லாமிய அடிப்படைவாதி’ என்று விமர்சகர்கள் அழைத்தால் அதனை நிச்சயமாக வரவேற்கலாம்.
இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் பெரும்பாலும் வடக்கு கேரளாவின் இஸ்லாமிய மரபுவழி இசையை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் வரிகளிலும் இறைவனை வேண்டுவது, இறையை நினைவூட்டுவது, இஸ்லாமிய மரபுகளின் வழியாக நிகழ்வுகளை அணுகுவது முதலானவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளாவின் கலாச்சாரத்தில் வளைகுடா நாடுகளால் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றத்திற்கான சின்னங்களும் இந்தத் திரைப்படம் முழுவதும் நிறைந்துள்ளன.
சமீபத்தில் இந்தியில் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ’ஜுண்ட்’, தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ முதலான திரைப்படங்களின் வரிசையில், இயக்குநர் காலித் ரஹ்மானின் ’தல்லுமாலா’ படத்தை வைக்க முடியும். நவதாராளவாதப் பொருளாதாரத்தின் காலகட்டத்தில் ஏறத்தாழ அனைத்து சமூகங்களைச் சேர்ந்த தற்போதைய இளைஞர்கள் தங்கள் உடைகள், பேச்சு, வாழ்க்கை முறை முதலானவற்றில் மேற்கின் அடிப்படையில் வாழ்கின்றனர். வழக்கமாக சினிமாவில் தலித்துகள், முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் முறையில் இருந்து முழுமையாக மாறி, முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள கலாச்சார மாற்றங்களின் பிரதிநிதிகளாக, ’நவீனம்’ என்பதை முழுமையாக வாழ்க்கையில் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ’தல்லுமாலா’ முழுவதும் வண்ணங்களாலும், கொண்டாட்டங்களாலும் நிரம்பியிருக்கிறது. மலபாரின் பொன்னானியில் சமகால முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை முறை இத்தனை கொண்டாட்டங்களோடு நிறைந்திருக்கும் என்பதை எந்தத் திரைப்படமும் பேசவில்லை.
’தல்லுமாலா’ கதையின் இளைஞர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்கொள்பவர்கள்; வளைகுடா நாடுகளின் பாதிப்பும் அவர்களின் கலாச்சாரத்தில் இடம்பெறுகிறது. இதனோடு, தமிழ் சினிமா அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இத்தனை கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டாலும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்களை விட்டு நீங்காத பண்பையும் ’தல்லுமாலா’ காட்சிகளின் மூலமாகவும், இசையின் மூலமாகவும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
திரைப்படத்தின் அரசியல் ஒருபக்கம் இருக்க, இப்படியொரு கதை எழுத்தாக மாறுவதும், அந்த எழுத்தைக் காட்சியாக மாற்றுவதும் மிக மிக சவாலானது. இருந்தும், மிக சுவாரஸ்யமான கதையாகவும், தொழில்நுட்ப ரீதியில் பெரும் பாய்ச்சலாகவும் உருவாகியிருக்கிறது ’தல்லுமாலா’. பள்ளிவாசலில் ஒளு செய்யும் போது வரும் சண்டைக் காட்சி, தியேட்டரில் நிகழும் பெரும் யுத்தம் போன்ற சண்டைக் காட்சி, நகரும் எஸ்.யூ.வி காருக்குள் நிகழும் சண்டைக் காட்சி, திருமணத்தில் மாப்பிள்ளையே இறங்கி அடிக்கும் சண்டைக் காட்சி என படம் முழுவதும் ’தல்லு’ மட்டுமே நிரம்பியிருந்தாலும், அனைத்து காட்சிகளுமே மலைக்க வைக்கின்றன.
1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் பிரபல இயக்குநர் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான ’ஃபைட் க்ளப்’ படத்தின் மையப்புள்ளியை ’தல்லுமாலா’ படத்திற்கும் பொருத்தலாம். சமகால ஆண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்களின் விளைவாக உருவாகும் வெற்றிடத்தை நிரப்ப சண்டையிடுதல் என்பது பயன்படும். வீழும் ஆண்மையின் சின்னமாகவும் அது கருதப்படும். ’தல்லுமாலா’ அதே பாணியில், வடக்கு மலபாரின் இளைஞர்களின் கதையைப் பேசுகிறது; இறுதிக் காட்சியில், கதாநாயகன் கதாநாயகியிடம் தான் மேற்கொள்ளும் சண்டைகளுக்காக கெஞ்சுவதோடு, தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுவதாக படம் முடிவடைகிறது. மேலும், தான் மேற்கொண்ட சண்டையால் புகழ்பெறும் கதாநாயகன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், எழுத்தாளர் ஒருவர் அவனை அவமானப்படுத்தும் போது, தற்கால இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் உரை ஒன்றைப் பேசுவார். அதுவும் இந்த வெற்றிடத்தை வெளிப்படையாக காட்டும் இடங்களுள் ஒன்று.
’தல்லுமாலா’ முழுவதுமாக சண்டையும், வன்முறையும் இருந்தாலும் அவை அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறை பகையாக மாறாமல், தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் நபர்கள் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நண்பர்களாக மாறிவிடுகின்றனர். பெரும்பாலான சண்டைகள் சுயமரியாதைக்காகவே நிகழ்வதாக காட்சியமைக்கப்பட்டுள்ளன; ஆனால் இந்த சுயமரியாதை வெறும் வறட்டு கௌரவம் மட்டுமே என்பதைப் படத்தின் பெண் கதாபாத்திரங்கள் ஆங்காங்கே நினைவூட்டுகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும், அது பேசும் பொருளுக்காகவும், ’தல்லுமாலா’ புதியதொரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இந்தப் பாய்ச்சலின் பின்னணியில் இயக்குநர் காலித் ரஹ்மான் இருந்தாலும், அதன் மீதான பெரிய பங்கு, படத்தின் எழுத்தாளர் முஹ்சின் பெராரிக்கு இருக்கிறது. ’தல்லுமாலா’ உருவாக்கப்பட்டிருக்கும் விதம் படம் பார்க்கும் அனுபவத்தைப் பல மடங்கு பெருக்குகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனக்குக் கிடைத்த தேசிய விருதைப் பெற மறுத்த முஹ்சின் பெராரி, தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித் கலைத்துறையில் செய்து கொண்டிருக்கும் கலகத்திற்கு நிகராக மலையாள சினிமாவில் கலகம் செய்து வருகிறார். ’தல்லுமாலா’ தந்திருக்கும் வெற்றியை அவரது அடுத்தடுத்த படைப்புகளும் அவருக்குத் தரட்டும்!
– ர. முகமது இல்யாஸ்