`முல்க், ஆர்டிகிள் 15, தப்பட்!’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலும், போதாமையும்!

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேராதரவைப் பெற்று வருகிறது அனுபவ் சின்ஹாவின் ‘தப்பட்’. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படமும் இப்படியான வரவேற்பைப் பெற்றது. 2018ஆம் ஆண்டு வெளியான அவரது ’முல்க்’ திரைப்படமும் இதே வரிசையில் அமைந்திருந்தது.

மதம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வட இந்தியச் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அனுபவ் சின்ஹாவின் சமீபத்திய மூன்று திரைப்படங்களும் பேசின. இந்த மூன்று திரைப்படங்களுக்கு முன், ஷாரூக் கானை வைத்து ‘ரா ஒன்’ போன்ற கமர்சியல் மசாலா திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருந்த அனுபவ் சின்ஹா, தனது படைப்புகளில் அரசியல் பேசத் தொடங்கியது வரவேற்புக்குரியது.

அனுபவ் சின்ஹா ஒரு முஸ்லிம் அல்ல; ஆனால், அவரது ‘முல்க்’ இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைக் கண்டிக்கும் திரைப்படமாக அமைந்தது. அவர் தலித் அல்ல; ஆனால், அவரது ‘ஆர்டிகிள் 15’ உத்தரப் பிரதேசத்தில் வாழும் தலித்கள் மீதான சாதி இந்துக்களின் அடக்குமுறையைக் கண்டித்தது. அவர் ஒரு பெண் அல்ல; ஆனால், அவரது ‘தப்பட்’ இந்தியக் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்தது. இந்தியச் சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அவர் இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.

இயக்குநர் அனுபவ் சின்ஹா

2018ஆம் ஆண்டு வெளியானது ‘முல்க்’. ரிஷி கபூர், டாப்சி ஆகியோர் முன்னணி நடிகர்கள். வாரணாசியில் வாழும் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் உறுப்பினர் தீவிரவாதச் செயலில் ஈடுபட, அதுவரை நல்லிணக்கத்தோடு அந்தக் குடும்பத்தை அணுகிய பெரும்பான்மைச் சமூகம், மொத்த குடும்பத்தையும் தீவிரவாதிகளாகக் கருதத் தொடங்குகிறது. தங்கள் தேசப்பற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, அந்தக் குடும்பத்தின் மீது விழுகிறது. இதன் வழியாக, இந்தியச் சமூகத்தில் நிலவும் இஸ்லாமிய வெறுப்பைக் கண்டிக்கிறது ‘முல்க்’. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியைக் கதைக்களமாகக் கொண்டு, பாஜக ஆட்சியில் இப்படியான திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது நல்லிணக்கத்தை விரும்புவோரிடையே நம்பிக்கையை விதைத்தது.

2019ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ இந்தியா முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. தலித்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பாலிவுட் திரைப்படங்கள் பெரிதும் பேசியிராத சூழலில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில், படாவுன் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை நிகழ்வின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கூலி உயர்வு கேட்டதற்காக இரண்டு தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட, கிராமத்திற்குப் புதிதாக வரும் காவல்துறை அதிகாரி அந்த வழக்கின் பின்னணியை விசாரிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது ‘ஆர்டிகிள் 15’.

2020ஆம் ஆண்டு வெளியான ‘தப்பட்’, இந்தியக் குடும்பங்களில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசியது. உயர்சாதி எலைட் குடும்பம் ஒன்றில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதி. ஒருமுறை கோபத்தில் மனைவியைக் கணவர் அறைந்துவிட, அதனை எதிர்த்து விவாகரத்துப் பெறும் மனைவி என்ற ஒன்லைனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையில் வீட்டு வேலைக்காரப் பெண், பெண் வழக்கறிஞர், கதாநாயகியின் தாய், மாமியார், பக்கத்து வீட்டு சிங்கிள் பேரண்ட் பெண் முதலான பாத்திரங்களின் வழியாகவும் ஆணாதிக்கத்தை விமர்சனம் செய்திருந்தது ‘தப்பட்’.

‘தப்பட்’ படப்பிடிப்பில் நடிகை டாப்சி, இயக்குநர் அனுபவ் சின்ஹா

மேலோட்டமாகப் பார்க்கையில், இந்த மூன்று திரைப்படங்களும் பேசாப் பொருளைப் பேசியவை. இஸ்லாமோ ஃபோபியா குறித்தோ, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை குறித்தோ, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தோ பாலிவுட் திரைப்படங்கள் பேசாமல் இருந்ததன் விளைவாக உருவானவை இந்தப் படங்கள். அவற்றின் போதாமைகளாக, கதை நிகழும் களங்களும், அவற்றிற்கு இயக்குநர் முன்வைக்கும் தீர்வுகளுமே அமைகின்றன.

மூன்று திரைப்படங்களிலுமே ’எதிர்வினை’ என்ற அம்சத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ‘முல்க்’ படத்தில் ஷாஹித் தீவிரவாதியாகாமல் இருந்திருந்தால், இஸ்லாமிய வெறுப்பு அந்தக் குடும்பத்தைத் தீண்டாமல் இருந்திருக்குமா? ‘ஆர்டிகிள் 15’ படத்தில் கூலி உயர்வு கேட்டதற்காகத் தூக்கிலிடப்படுகின்றனர் தலித் சிறுமிகள். கூலி உயர்வு கேட்காமல் இருந்தால், சுரண்டலை நியாயப்படுத்திவிட முடியுமா? ‘தப்பட்’ படத்தில் அம்ரிதா அறையப்படாமல் இருந்திருந்தால், ஆணாதிக்கம் கேள்விக்குள்ளாகியிருக்குமா?

இந்தியாவில் 1947ஆம் ஆண்டு, அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டபோது, காவல்துறையின் பொறுப்பு ‘சட்ட ஒழுங்கு’ என்பதைக் காப்பதாக அமையப்பெற்றது. இந்தியாவில் ஒழுங்கு என்பது பார்ப்பனியம் நிகழ்த்தும் சுரண்டலில், ஆதிக்கத்தில், உருவாக்கும் வெறுப்பின் அடிப்படையில் இருக்கிறது. இந்த ஒழுங்கு மீதான எதிர்வினையே சட்ட ஒழுங்கை மீறுவதாக இருக்கிறது. இதன் வழியாக, அனுபவ் சின்ஹாவின் மூன்று திரைப்படங்களையும் புரிந்துகொள்ள முடியும்.

‘முல்க்’ போஸ்டர்

‘முல்க்’ திரைப்படம், முஸ்லிம் குடும்பங்களில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், தோன்றும் போதெல்லாம் எந்தக் காரணமும் இன்றி குண்டுவெடிப்பில் ஈடுபடுவதாகவும் காட்டியிருக்கிறது. மேலும், படம் முழுவதும் ‘நல்ல முஸ்லிம் – கெட்ட முஸ்லிம்’ என்ற வாதம் மென்மையாக முன்வைக்கப்படுகிறது. ‘நாம் – அவர்கள்’ என்ற இந்துத்துவக் கொள்கையைச் சாடும் அதே வேளையில், ’கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கொண்டாடாதீர்கள்!’ போன்ற கருத்துகளையும் முஸ்லிம்களிடம் கூறுகிறது. முஸ்லிம் குடும்பத்தின் தேசப்பற்றை நிரூபிக்க, அதே குடும்பத்தில் இந்துவாக வாழும் மருமகளும், வழக்கறிஞருமான ஆர்த்தி முகமது (டாப்சி) கதாபாத்திரத்தை நாடுகிறது அந்தக் குடும்பம்.

இவை அனைத்திற்கும் நீட்சியாக, நீதிமன்றம் ஓர் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில், நீதிமன்றங்கள் நிகழ்த்திய கால தாமதமான விசாரணைகளால் தன் பாதி ஆயுளை இழந்த முஸ்லிம்களைக் கண்டிருக்கிறது இந்தியச் சமூகம். உலக அரங்கின் கண்முன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தின் மீது, ராமர் கோயில் கட்டச் சொல்லித் தீர்ப்பளித்தது நீதிமன்றம். சிஏஏ விவகாரங்களில் நீதித்துறையின் மெத்தனம் நாம் அனைவரும் அறிந்தது. நீதிபதி லோயோ தொடங்கி, சமீபத்தில் டெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதி முரளிதர் வரை என்ன ஆனார்கள் என்பதும் வெளிச்சம். இந்த வேளையில், இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடச் சொல்கிறது அனுபவ் சின்ஹாவின் ‘முல்க்’.

’ஆர்டிகிள் 15’ திரைப்படமும் உயர்சாதியில் இருந்து வரும் மீட்பரைத் தேடுவதாக அமைந்திருக்கிறது. பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், அதன் வழியாக எழும் வன்முறைகளை மட்டுமே அது விமர்சனம் செய்கிறது. மேலும், உயர்சாதி மிட்பர் வரும் வரை, பாதிக்கப்பட்ட தலித்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியலை முன்வைத்து, மக்களைத் திரட்டும் பாத்திரமும் காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்டு, ‘உச்’ கொட்டுகிறது இந்தத் திரைப்படம். அரசுக் கட்டமைப்பின் அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் சாதிய வன்முறைகளை அரசியலமைப்பின் வழியாக நிறுத்தக் கோரி மன்றாடல் விடுக்கிறது ‘ஆர்டிகிள் 15’. இதனைத் தன் தோளில் போட்டு, சாக்கடையில் இறங்கி, தலித் சிறுமியைக் கையில் சுமந்துவந்து காக்கிறார் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா).

‘ஆர்டிகிள் 15’ போஸ்டர்

இந்தப் படம் குறித்த சர்ச்சைகளின்போது, இயக்குநர் அனுபவ் சின்ஹா ட்விட்டரில், “நான் பிராமணச் சமூகத்தை விமர்சிக்கவில்லை. எனது நண்பர்களில் பலரும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எனது மனைவியே பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான். அதனால் எனது மகனும் ஒருவகையில் பிராமண அடையாளம் கொண்டிருக்கிறான்” என்றார். பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், சாதிய வன்முறையை சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் கையாண்டிருக்கிறது ‘ஆர்டிகிள் 15’.

’தப்பட்’ அனுபவ் சின்ஹாவின் கடந்த திரைப்படங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆண் மீட்பர்களைப் பயன்படுத்தாதபோதும், அனைத்து பெண்களுக்குமான குடும்ப வன்முறை சிக்கலை எலைட் பெண்களின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேலைக்காரப் பெண்ணின் கதை கூட படத்தில் முழுமை பெறவில்லை. மேலும், குடும்ப வன்முறையை எதிர்ப்பது வரவேற்புக்குரியது என்றபோதும், அதனின் வேரான பார்ப்பனியத்தை அசைத்துப் பார்க்கவில்லை ‘தப்பட்’.

இந்தியாவின் பார்ப்பன அரசு-சமூகக் கட்டமைப்பில், பெண்களின் பங்கு என்பது வாரிசு பெறுவதும், அதன் மூலம் குடும்பத்தின் பெயரை, சாதியின் பெயரை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதாகவும் சுருக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்கால நடைமுறை என்பது இதுதான். ‘தப்பட்’ படத்தின் அம்ரிதாவோ, விவாகரத்து பெற்ற பின்பும், குடும்பத்தின் பெயரைக் காக்க குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்கிறார். இதன்மூலம், பார்ப்பன சமூகத்தின் ‘அடக்கமான பெண்’ வேடம் தானாக அவரை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேலும், வழக்கறிஞராக வரும் பெண் கதாபாத்திரம் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வெற்றிபெற்று வருவதாகக் காட்டப்பட்டு, மீண்டும் நீதித்துறையின் புனிதத்தைக் காப்பாற்றியிருக்கிறார் அனுபவ் சின்ஹா. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதே இந்தியாவின் நீதித்துறையின் பரிதாபத்திற்குரிய நிலைமை.

‘தப்பட்’ போஸ்டர்

அனுபவ் சின்ஹா ’கேசரி; ‘பாட்லா ஹவுஸ்’ முதலான இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் வெளியான காலத்தில் ‘முல்க்’ திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்கள் தொடாத சாதிய வன்முறை என்ற களத்தைத் தொட்டது அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிகிள் 15’. ‘கபீர் சிங்’ வெளியாகி வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெரும் காலகட்டத்தில், அவரின் ‘தப்பட்’ வெளியாகியிருக்கிறது. இந்தத் துணிச்சல் போற்றுதலுக்குரியது என்றபோதும், அவை முன்வைக்கும் தீர்வுகள் நேருவிய காலத்தைச் சேர்ந்தவை. பார்ப்பனியம் நாஜித்தனத்துடன் அரசு நிர்வாகத்திலும், சமூக யதார்த்தத்திலும் நிறுவனமயப்பட்டிருக்கும் காலத்தில் மக்கள் திரட்சியையும், அரசியல்மயப்படுவதையும், அதனால் நிகழவிருக்கும் பார்ப்பனிய ஒழிப்பையும் பின்னுக்குத் தள்ளுகின்றன. சமூகத்தில் நிலவும் இந்தப் பிரச்னைகள் குறித்து பேசப்படாததால், அவை வணிக ரீதியில் முக்கியத்துவமும் பெற்றுவிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.