‘ஆஸாதியும், விடுதலையும் ஒன்றுதானே சார்?’ – ‘அமரன்’, ‘விடுதலை’ ஆகிய திரைப்படங்களை முன்வைத்து… – ர.முகமது இல்யாஸ்.

கடந்த நவம்பர் மாதம் கனடா நாட்டின் க்வெல்ஃப் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் இணைய வழியில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தமிழ் சினிமாவின் சமகால திரை நாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை ஒப்பிட்டு ஆய்வுக்கட்டுரை ஒன்றை வாசித்தேன். விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்து, ஒரு ஆண் நட்சத்திரம் பெண் வேடம் தரிப்பது என்பது நாயக பிம்பத்தைத் தலைகீழாக்கும் செயல் என்ற அடிப்படையில் அந்த ஆய்வை மேற்கொள்ளுமாறு எனது மேற்பார்வையாளரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வின் போக்கில், சிவகார்த்திகேயனும் ‘ரெமோ’ படத்தில் பெண் வேடம் தரித்திருக்கிறாரே என்ற எண்ணம் மேலோங்க, இருவரும் ஒரே சமயத்தில் (2013க்குப் பிறகு) நாயகர்களாக மாறியவர்கள்; இருவருக்குமே தொலைக்காட்சி பின்புலம் இருப்பது (விஜய் சேதுபதி – நாளைய இயக்குநர்; சிவகார்த்திகேயன் – விஜய் டிவி) போன்ற காரணிகளால் இருவரையும் ஒப்பிடுவது தவிர்க்கவியலாதது ஆகியது. அந்த ஆய்வின் மையக்கருத்தாக, இரண்டு நட்சத்திரங்களுமே பெண் வேடம் தரிப்பதன் மூலமாக, தமது நாயக பிம்பத்தை வேறொரு பரிணாமத்தில் – குறிப்பாக, சிவாஜி கணேசன், கமல் ஹாசன் முதலான ‘Class heroes’ வகைமைக்குள்ளும் தம்மைப் பொருத்திக் கொள்ள விரும்புவதைக் குறிப்பிட்டும், இருவரின் பெண் வேடங்களுமே சமூகத்தில் வெவ்வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய் சேதுபதி பெண் வேடம் தரிப்பதன் மூலமாக, நாயக பிம்பத்தைத் தலைகீழாக மாற்றுகிறார். மேலும், தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வை, குழந்தையின் கண் வழியாக பாலின அடையாளங்களைப் புரிந்துகொள்வது என நிலவும் சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட அவரது நடிப்பு பயன்படுகிறது. அதே வேளையில், சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படத்தில் பெண் வேடம் தரிப்பது, அந்தப் படத்திற்குள்ளே அவரை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங்குவதோடு அல்லாமல், ‘ஹாட் நர்ஸ்’ என்று செவிலியர்களைப் பாலியல் பண்டங்களாக கருதும் பண்பையும், ‘காதல்’ என்ற பெயரில் பெண்களைப் பின்தொடர்வது, துன்புறுத்துவது முதலான தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பாலியல் அத்துமீறல்களை ஹீரோயிசம், நகைச்சுவை என்ற பெயரில் மீண்டும் நிலைநிறுத்துவதையும் சுட்டிக்காட்டி, இந்த அடிப்படைகளிலேயே இந்த இருவரின் நாயக பிம்பங்களும் செயல்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரு துருவ பொருள்களைத் தமிழ்ச் சமூகத்தில் உற்பத்தி செய்யும் நாயகர்களாக விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் ஆகியோரை ‘விடுதலை-2’, ‘அமரன்’ ஆகிய திரைப்படங்களை அணுகுவதற்காகவும் இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன்.

’அமரன்’ காஷ்மீர் மக்களின் போராட்டங்களையும், விடுதலை முழக்கங்களையும் எதிரிகளாகச் சித்தரிப்பதன் வழியாக, ஒரு காதல் கதையையும், அதனால் ஏற்பட்ட பிரிவின் வலியையும் பேசுகிறது. ‘விடுதலை’ இரண்டு பாகங்களிலும் மூன்று காதல் கதைகள் மையமாக இடம்பெறுகின்றன – குமரேசனின் காதல் (சூரி), பெருமாளின் காதல் (விஜய் சேதுபதி), கருப்பனின் காதல் (கென் கருணாஸ்) ஆகியவை. அந்தக் காதல் கதைகளின் வழியாக, சாதிய சமூகத்தின் சிக்கல்களும், அரசுக் கட்டமைப்பின் நடைமுறைகளும், இடதுசாரி செயற்பாட்டாளர்களின் சொல்லப்படாத வாழ்க்கை முறையும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகின்றன. இதில் ’அமரன்’ படத்தில் சித்தரிக்கப்படும் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி ஆகியோர் இடையிலான உறவும், ‘விடுதலை 2’ படத்தில் காட்டப்படும் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியர் ஆகியோர் இடையிலான உறவும் யதார்த்த வாழ்வில் இருந்து எடுக்கப்பட்டு, திரைக்கதைகளாக மாற்றப்பட்டதாக திரைக்குழுவினர் தங்கள் நேர்காணல்களில் தெரிவித்திருக்கின்றனர். இவர்களிடையே காதல் உருவாவது, காதலின் பிரிவு, சமூகத்திற்காக ஆண்கள் இருவரும் மேற்கொள்ளும் பெருந்தியாகம், தம் இணையைச் சமூகத்திற்காக பலிகொடுத்த பிறகான பெண்களின் துயரம் முதலானவை இந்தக் கதைகளின் கருப்பொருளாக இயங்குகின்றன. அவை அளிக்கும் காட்சியின்பமும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே படத்தின் கதைக்களத்தின் புறநிலையை (objective) அகநிலையோடு (subjective) இணைத்துக் கொள்கின்றன.

’அமரன்’ முகுந்த் வரதராஜன் (உண்மையான நபரைக் குறிப்பிடவில்லை; இந்தக் கட்டுரை முழுவதுமே சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தை மட்டுமே குறிப்பிடுகிறது; இந்து ரெபெக்காவுக்கு இதுவே பொருந்தும்) இந்து ரெபெக்கா இடையிலான காதல் இந்தியத் தேசத்தின் மகிமையைப் பறைசாற்றும் ‘உதாரணக்’ காதலாகத் திகழ்கிறது. இருவருக்கும் மதம், மொழி, வாழும் மாநிலம் ஆகியவை வெவ்வேறானவையாக இருக்கின்றன. இருவரையும் இணைக்கும் பாலமாக காதல் என்ற உறவு இருக்கிறது. அதுவே ‘இந்தியா’ என்ற தேசத்தின் உதாரணமாக மாறுவதோடு, இருவரும் மேற்கொள்ளும் ‘தியாகம்’ தேசத்திற்கானதாக இருக்கிறது. மணிரத்னம் ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய திரைப்படங்களிள் பயன்படுத்திய அதே உத்தி இங்கு மீண்டும் இந்துத் தேசியச் சூழலில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட காஷ்மீரைக் கையகப்படுத்தும் ஒன்றிய அரசின் நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

‘விடுதலை 2’ பெருமாள் – மகாலட்சுமி இடையிலான காதலும் வர்க்க வேறுபாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தாலும், அது ‘அமரன்’ போல இரண்டு மதங்களையும் உள்ளடக்கிய திருமணச் சடங்குகளைக் காட்டாமல், சுயமரியாதைத் திருமணத்தைக் காட்சிகளாக மாற்றுகிறது. ‘இணையர்’, ‘தோழர்’ என்ற சொற்களை மைய நீரோட்ட சினிமாவில் அறிமுகப்படுத்துகிறது. அதற்கு ஓர் கருவியாக விஜய் சேதுபதியின் புதிய நாயக பிம்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் மாநில சுயாட்சி பறிப்பு நடவடிக்கைகளின் காலகட்டத்தில், முதலாளித்துவ ஆதரவு அரசுகள் இயங்கும் விதம், அன்றாடம் காவல்துறையின் அராஜகத்தை நேரில் காணும் மக்களின் எண்ணவோட்டம், காலனிய நீட்சியாக இயங்கும் அதன் தன்மை, சாதிகளை அரசுக் கட்டமைப்பு பயன்படுத்த மேற்கொள்ளும் உத்தி முதலான பல பொருள்களைத் தொட்டிருக்கிறது ‘விடுதலை பாகம் இரண்டு’.

’அமரன்’ படத்திற்காக தனது உடல் வடிவமைப்பு முழுவதுமாக மாற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் அறிவிப்பு, ப்ரொமோஷன் தொடங்கி எங்கும் எதிலும் சிவகார்த்திகேயனின் தினவெடுத்த தோள்களும், துப்பாக்கிகளும் இடம்பெறுகின்றன. ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ‘அமரன்’ ப்ரொமோஷனுக்காக வந்த போது, போட்டியாளர்களுடன் சேர்ந்து இந்தியத் தேசியக் கொடியை நெஞ்சில் ஏந்தியிருந்தார் சிவகார்த்திகேயன். சட்டப்படி தேசியக் கொடியை இத்தகைய வர்த்தகத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்பதால் நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது, அந்தக் கொடி மறைக்கப்பட்டிருந்தது. ’அமரன்’ பாடல் வெளியீட்டு விழாவில் நிஜமான இந்து ரெபெக்கா ஜார்ஜை மேடையேற்றி, அவரை சாய் பல்லவி போல, ‘முகுந்தே’ எனக் கூற வைத்து மகிழ்ந்துகொண்டது ‘அமரன்’ படக்குழு. மறைந்துபோன ராணுவக் காரரின் உடலையும், அவரது மனைவியின் ஏக்கத்தையும் வைத்து இந்திய ராணுவத்திடம் முழுமையாக ஒப்புதல் பெற்ற திரைப்படமாக உருவாகியிருந்தது ‘அமரன்’.

ஒரு நாகரிக சமூகத்தில், போர் எதிர்ப்புப் படங்கள் வெளிவருவதும் வரவேற்பைப் பெறுவதும் அந்தச் சமூகத்தின் வளர்ச்சியையும், கூட்டு எண்ணவோட்டத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்திருக்கும், சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ பெரும் தோல்வி அடைந்ததற்கு அதன் ஒட்டாத காமெடி காரணமாக இருந்தாலும், அது இப்படியான தேசியம் கடந்த காதல் என்ற பேசுபொருளை மையக்கருத்தாக முன்வைத்திருந்தது. ‘அமரன்’ அதற்கு நேர்மாறாக, ஒரு ராணுவக் காரரின் வாழ்க்கையை, காஷ்மீர் என்பது பப்ஜி விளையாட்டில் வரும் களம் போல சித்தரித்து, அதில் ’ஆசாதி’ முழக்கங்களிடும் மக்களை எதிரிகளாகக் காட்டியிருந்தது. எந்த நேர்மையும் இல்லாமல், விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையையும், ஒன்றிய அரசின் பிழையான அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி நிற்க வைக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் வாழ்க்கையையும் வெறும் சுவாரஸ்யத்தின் பொருட்டு, அறிமுகக் காட்சியின் ஒரு ஆக்‌ஷன் சீன், இண்டெர்வல் ப்ளாக்கில் ஒரு மனித உரிமை மீறல் சீன் மூலமாக ஹீரோயிசத்தை நிறுவுவது, இறுதியில் இந்தியத் தேசியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெருந்தியாகம் ஒன்றின் வழியாக பார்வையாளர்களின் பரிவைக் கோருவது எனப் போர், வன்முறை முதலானவற்றைக் கொண்டாட்டக் களிப்பாக மாற்றியிருக்கிறது ‘அமரன்’. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் போர் என்பது தவறு – இந்து ரெபெக்கா போன்றோர் நம் சமூகத்தில் மிகச்சிறிய வயதில் விதவைகளாக மாறுகிறார்களே என்ற சிந்தனையை உருவாக்குவதற்குப் பதிலாக, காஷ்மீரில் ‘தீவிரவாதிகளைக்’ கொல்ல நமக்கு மேலும் பல முகுந்த் வரதராஜன்கள் உருவாக வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கிறது.

இந்தியளவில் கும்பல் படுகொலைகள், சர்வதேச அளவில் லைவ்வில் நிகழ்த்தப்படும் பாலஸ்தீன இனப்படுகொலை, அன்றாடம் நிகழ்த்தப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், செய்தித்தாள்களில் இடம்பெறும் அதீத விவரனையுடம் கூடிய குற்றச்செயல்கள் முதலானவை சமீப காலங்களில் மக்களை வன்முறையை இயல்பாக்கம் செய்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில், யதார்த்தத்தில் வன்முறைக்குப் பழகிய மக்களின் கூட்டு மனதைத் திருப்திப்படுத்த திரைப்படங்களில் வன்முறை என்பது மிகச் சாதாரண ஒன்றாக மாறியிருக்கின்றன. வெற்றிமாறன் அதனைத் தொடர்ந்து தன் திரைப்படங்களில் ஓர் கருவியாக பயன்படுத்தி வருகிறார்.

‘அமரன்’ போல அல்லாமல், ‘விடுதலை’ சீருடைப் பணியாளர்களின் மனவோட்டத்தைப் பேசுகிறது; ’யாருக்காக நாம் இதைச் செய்கிறோம்?’ என்ற கேள்வியை அவர்களிடையே உருவாக்குகிறது. அந்தக் கேள்விக்கான விடையைப் பார்வையாளர்களோடு இணைந்து தேட முயல்கிறது. இடதுசாரி ஆயுதப் போராட்டங்கள் தோன்றுவதற்கான காரணத்தைப் பேசுவதோடு, விஜய் சேதுபதியின் பெருமாள் கதாபாத்திரம் மூலம் ஆயுதம் ஏந்துவது சரிதானா என்ற மனதின் தடுமாற்றத்தையும் பேசுகிறது. இருதரப்பில் இருந்து அவரவர் நியாயங்களைப் பேசுவதோடு, தன்னுடைய நிலைப்பாட்டையும் முன்வைக்கிறது ‘விடுதலை’. ‘அமரன்’ போல கருப்பு, வெள்ளையில் உலகத்தைக் காணாமல், ‘விடுதலை’ மக்களின் பக்கம் நிற்கிறது. ஒரு திரைப்பட இயக்குநர் வெறும் கதையாக்கம், திரைப்பட இயக்கம் மட்டுமல்லாமல் மனித உணர்வுகள், அரசியல் வரலாறு, சமகால அரசியலில் தமது படைப்பின் இடம் எதுவாக இருக்கும் முதலான அனைத்தையும் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு படங்களின் ஒப்பீடும் நமக்கு உணர்த்தும்.

‘அமரன்’ படத்தைத் தமிழ்நாட்டில் சங்கி ஹிந்து, சமூக நீதி ஹிந்து, இந்தியத் தேசிய ஹிந்து, தமிழ்த் தேசிய ஹிந்து, தலித் ஹிந்து எனப் பெரும்பாலான தரப்புகள் அனைத்துமே வரவேற்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் வகிக்கும் ‘இந்தியா கூட்டணி’ குறித்தோ, காஷ்மீரின் சுயாட்சி ஒன்றிய அரசால் பறிக்கப்படுவது குறித்தோ எந்தக் கவலையும் இல்லாமல், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க ‘அமரன்’ படத்தை வரவேற்றிருந்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவனையும், இடதுசாரிக் கட்சிகளையும் தவிர அனைத்து அரசியம் தரப்பும் ‘அமரன்’ படத்தைப் பாராட்டியிருந்தன. விடுபட்ட இந்தத் தரப்புகள் ‘விடுதலை’ படத்தைக் கொண்டாடின. வெற்றிமாறனையும், விஜய் சேதுபதியையும் பாராட்டியிருந்தன.

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற ஹீரோ இமேஜ் தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களை வில்லன்களாக்கவும், இஸ்லாமிய அடையாளங்களை மற்றமையாக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில், ’ஹீரோ’ என்பதன் இலக்கணத்தைத் தலைகீழாக்கும் விஜய் சேதுபதியின் இமேஜ் எம்ஜிஆர் காலகட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறது; சமகாலத்தில் வரலாற்றில் மறைக்கப்பட்ட முகமற்ற இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது. முதலாவது, பொதுப்புத்தியை கூராக்கிறது; இரண்டாவது, பொதுப் புத்தியை மீளாய்வு செய்வதற்காக எத்தனித்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ’அமரன்’ படத்தில் ‘விடுதலை’ (ஆசாதி) என்ற சொல்லை வில்லன்களின் முழக்கமாகவும், ‘விடுதலை’ படத்தின் தலைப்பிலேயே விடுதலை என்பதன் தத்துவ விளக்கமாகவும் பேசப்பட்டிருப்பதை, திரைப்படங்களாக விநியோகித்து, கல்லா கட்டியிருக்கிறார் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததைப் பேசுவோர் இதையும் கொஞ்சம் கவனிப்பார்கள் என நம்புவோம்.

  • ர. முகமது இல்யாஸ்

1 COMMENT

Leave a Reply to Shajan Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.