லப்பர் பந்து: சாதிய உரையாடலின் பிரதிபலிப்பும் எல்லையும்! – மு. அப்துல்லா

1

’லப்பர் பந்து’ படம் இந்தாண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறது. நேர்த்தியான கதைக்களமும் மக்கள் வாழ்க்கையோடு நெருக்கமும் கொண்டிருந்தால் மக்கள் கைவிடமாட்டார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் திரையரங்கு கொண்டாட்டத்தில் நிரம்பியிருந்தது. இந்திய/தமிழ் மனதின் கிரிக்கெட் நினைவுகளை நம் நேரடி புவியியல் பரப்பில் நிகழ்த்தி நாம் கடந்துவந்த வாழ்வைத் தொட்டதன் மூலம் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

குறிப்பாக, இப்படத்தின் தனித்துவமாகப் பார்க்க வேண்டியது அதன் புவியியல் நெருக்கம். சென்னை அல்லது ஓரளவிற்குத் தமிழ்நாட்டின் தென்மண்டல நிலம், மொழியைக் கையாண்ட அளவிற்கு வடமத்திய பகுதிகளும், டெல்டா வாழ்வியலும் தமிழ் சினிமாவில் கவனப்படுத்தப்படவில்லை. அந்தளவில் லப்பர் பந்தின் காட்சிகள் புதுமையாக இருந்தது. டெல்டா சமவெளியின் பசுமைக்கு நடுவே விளைச்சலற்ற நிலங்களும், ஆங்காகே கைகோர்க்கும் சிறுநகர (Town) புழக்கங்களும் மெனக்கெடாமல் காணமுடிகிறது. இதே டெல்டா குறியீட்டோடு பின்பு வந்த மெய்யழகனில் இப்புவியியல் வலிந்து திணிக்கப்பட்டதாக தெரிந்தது.

வயல்வெளிக்கு அருகருகே இருக்கும் திடல்களாகத் தொடரும் ரியல் எஸ்டேட், பூக்கடை, பழக்கடை, பேருந்து நிறுத்தம் என நிகழும் உரையாடல்கள் என்ற நிலத்தின் மனிதர்கள் நமக்கு சில சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள். நாயகிக்கு இங்கு பாட்டியை ஆயா என்பதே இயல்பு, இந்த உலகியேயே தான் அதிகம் நேசிக்கும் தந்தையை அது, இது என்று அஃறிணையிலேயே அழைக்கிறார், பதிலுக்கு கெத்துக்கு தன் மகள் என்றும் ‘பாப்பா’தான், அன்புவுக்கு ‘துர்கா புள்ள’ என்றே பலசமயம் இருக்கிறார், தன் அப்பாவோடு கிரிக்கெட் விளையாடும் பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு மட்டுமே அவர் எந்தச் சம்பிரதாயமும் இல்லாத வெறும் துர்கா. டெல்டா மண்டலத்தில் பெரும்பான்மையினர் மத்திய கிழக்கு அரபு வாழ்வைச் சார்ந்திருப்பதை அடிக்கடி நியாபகப்படுத்துகிறது ‘துபாய்’ குறிப்பு.

பல நேரங்களில் எல்லோரும் கைலியோடு (லுங்கி) திரிகிறார்கள். வீட்டிற்கு பரோட்டோ பார்சல் வாங்க வருவது முதல், அணிக்கான நோட்டிஸ் ஜெராக்ஸ் அடிக்கப் போவது வரையிலான அவர்கள் அன்றாடங்களினூடே முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த கதைக்களத்தின் வழி ‘லப்பர் பந்து’ கையாண்ட சாதிய உரையாடல் பல வரவேற்புக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியது.

2

படத்தின் நாயகன் அன்பு தலித் பின்புலமுடையவர். தந்தை அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால் ஓரளவு பொருளாதாரத் தன்னிறைவு கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவருக்கு கண்முன்னே பார்த்து வளர்ந்த ஊர் கிரிக்கெட் டீமில் ஆடவேண்டும் என்ற ஆசை. ஒரே சாதி அல்லது ஒரே படிநிலை என்று நம்பும் சாதிக் குழுமங்களால் ஆன ஊர் அணியில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இருந்தும் அன்புக்கு தம் அணியின் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை. தாம் அந்த அணிக்காக விளையாடப் போவதில்லை என்றாலும் அதை என்றும் தனது அடையாளமாகக் கொள்கிறான்.

ஒருகட்டத்தில், சொந்த அணி என்று கருதிய சாதிக் குழுமம் அன்புக்கு முன் இரண்டு வாய்ப்புகளைத் தருகிறது. நேரடியாக அணிக்கு எதிராக மோதி அணியைக் கைப்பற்றிக்கொள், தோற்கும்பட்சத்தில் தன் வாழ்வாகக் கருதும் கிரிக்கெட்டை மறந்துவிடு என்கிறது அந்த கட்டளை. அணிக்கு எதிராக விளையாடி அணியை வென்றெடுக்க முடிவு செய்கிறான் அன்பு. தன்னுடைய சாதியைக் காரணம் காட்டி தன்னை ஒதுக்கிவந்த அணி, கடைசியில் தன்னை தோற்கடிக்கத் தன்னைப் போல் உள்ள பலரை அணியில் சேர்த்துக்கொள்கிறது. அதாவது, தலித் ஒருவனைப் புறக்கணித்துவந்த சாதிக் குழுமம் அவனை நேரடியாகத் தோற்கடிக்க தம்முள் சில தலித்துகளைக் கொண்டு வெற்றியைச் சாதிக்கும் சமரசத்திற்கு வருகிறது. முள்ளை முள்ளால் எடுக்கிறது.

இந்த சமரசம் அன்பை வெகுவாக பாதிக்கிறது. தான் இல்லையென்றால் என்ன, தான் எதற்காகப் போராடிக்கொண்டிருந்தேனோ அது நடந்துவிட்டது. தன்னைப்போல் பலருக்கு அந்த குழுமத்தில் இடம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வோடு வெற்றியை விட்டுத் தருகிறான். தொடர்ந்து, அந்த சாதியக் குழுமத்திற்குள் மற்றவர்கள் நிலைப்பெறுகிறார்கள்.

3

லப்பர் பந்து படம் பலராலும் கொண்டாடப்பட்டாலும் குறிப்பிடும்படியான விமர்சனங்களும் எழுந்தது. அதில் முதன்மையானதாகப் பேராசிரியர் டி. தருமராஜின் விமர்சனத்தைப் பார்க்கலாம். ‘தலித்துகள் விஷயத்தில் நாம் எங்கே தவறு செய்கிறோம்?’, ‘அரசியல் தலித்தைப் பாமரனாக்கும் தந்திரம்!’ என்ற தலைப்பிலான இரண்டு பதிவுகள் இப்படம் தொடர்பான அவரின் விமர்சனத்தையும் நமக்கு ஒரு மாற்றுப் பார்வையையும் வழங்குகிறது. இரண்டு விஷயங்களிலும் அரசியல் தலித்துகளை இடைநிலை சாதியினர் அணுகும் விதம் ஏமாற்றத்தைத் தருவதோடு கோபத்தை ஏற்றப்படுத்துகிறது என்று தொட்டுக் காட்டுகிறார்.

அன்பு எனும் அரசியல்மயப்பட்ட தலித், ஏதும் அறியாத அடையாள தலித்துகளுக்காக (Tokens) தனது வெற்றியை விட்டுக் கொடுப்பதுடன், தொடர்ந்து களமாடுவதற்கான வாய்ப்பையும் தியாகம் செய்கிறான். இந்தப் படம் அதிகம் வரவேற்கப்பட்டதன் மூலம் இந்த தியாகம் ‘எல்லோருக்குமே இனிக்கிறது’ என்கிறார் தருமராஜ். படத்தின் இயக்குநர் ஒரு தலித் அல்லாதவர் (அவரே ஒப்புதல் அளிக்கிறார்). அவர் தலித்துகளுக்குத் தியாகி பட்டம் கொடுத்துத் தீர்ப்பெழுதுகிறார். இது ஒருவகையில் நிலவும் ஆண்டைகளின் ஆதிக்கத்தை அப்படியே தக்க வைக்கிறது. தலித்துகளை ஏமாற்றுகிறது. இறுதியாக, ‘அந்தப் போட்டி, விளையாட்டின் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் கடந்து, சமூக அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்று மாறி விட்டதை உணர்ந்த தலித்துகள் இப்படியொரு தியாகத்தைச் செய்வார்கள் என்று எப்படி உங்களால் இன்னமும் நம்ப முடிகிறது?’ என்று தலித் அல்லாதவர்கள் சறுக்கும் இடத்தை கேள்வி கேட்பதாக அமைந்துள்ளது ‘தலித்துகள் விஷயத்தில் நாம் எங்கே தவறு செய்கிறோம்?’ பதிவு.

அரசியல் தலித்தின் தியாகத்தை அறமாகவோ அல்லது யதார்த்தப் பாடமாகவோ போதிப்பதன் மூலம் தலித் அரசியல் முடிவு இப்படித்தான் அமையும் என்று ஒரு படிப்பினையை வழங்குகிறார் இயக்குநர். பாலக்குமரன் ஜெராக்ஸ் கடையில் காளி வெங்கட்டிடம் ‘எஸ்சி பிரண்ட்’ என்றுப் பேசும் வசனத்தைப் போலவே ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற பார்வையே அவர்கள் அரசியலை நீர்த்துப்போகவும், சமாதானத்திற்கான தூதுவாகவும் சுருக்க முடிகிறது என்று தருமராஜ் கருதுவதாகப் புரிந்துகொள்கிறேன். இதனை ‘வக்கிரமானது’ என்று அவர் குறிப்பிடுகிறார். தலித்துகளின் ஏஜென்சியை தலித் அல்லாதவர்கள் இன்னும் கவனமாக அணுக வேண்டும், தனதாக்கி தீர்வு சொல்லிவிடக் கூடாது எனும் பட்சத்தில் இந்தப் பதிவை பார்க்கலாம்.

பேராசிரியர் தருமராஜின் இரு பதிவுகளும் படத்தின் முடிவை மையமிட்டதாகவே இருக்கிறது. படத்தின் முடிவு என்பதைத் தாண்டி முடிவிற்குப் பிறகு பின் சேக்கையாகச் சேர்க்கப்பட்ட ஒரு காட்சியின் விளக்கத்திற்கு எதிர்வினை ஆற்றுவதாக உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ படத்தின் அரசியலை மொத்தமாகச் சிதறடித்ததாக அக்காட்சி அமைந்தது.

4

லப்பர் பந்து பற்றி மற்றொரு குறிப்பிடும்படியான விமர்சனம் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துடையது. ‘பொது எதிரி என்னும் கற்பிதம்’ என்ற அவர் பதிவு, இரு குழுக்களிடையேயான சாதிய முரண்கள் எவ்வாறு பொது எதிரியைக் காரணம் காட்டி பேசப்படாமல் மறைக்கப்படுகிறது அல்லது பொது எதிரியைக் கைகாட்டியே இரண்டு குழுக்கள் மீது எவ்வாறு பெயரளவிற்கான தீர்வு சுமத்தப்படுகிறது என குறிப்பிடுகிறது. சாதியப் பிரச்சனைகளுக்கு எதிராக தலித்துகள் பக்கத்திலிருந்து வரும் குறைந்தபட்ச செயற்பாடு மற்றும் நீதிக் கோரலை ‘பார்ப்பனியம் எனும் பொது எதிரியை’ காரணம் காட்டி இடைநிலை சாதிகள் இல்லாமல் செய்கின்றன. இந்த ‘சுமூக’ தீர்வுக்கான தார்மீக பொறுப்பைக் கூட விட்டுக்கொடுக்கும் தலித்துகளுக்கு வழங்காமல் பொதுவாக பொது எதிரி பக்கம் திருப்பி விடுகிறார்கள். லப்பர் பந்து இதை உடைத்ததது மட்டுமில்லாமல் பொறுப்பைத் தலித்துகளின் கையில் கொடுத்துள்ளதாகக் கவனப்படுத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

இப்பதிவுக்கான நேரடி உதாரணமாக இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை எடுத்துக்கொள்ளலாம். தலித் vs இடைநிலை சாதி ஆதிக்கம் என்றிருந்த கிரிக்கெட் மற்றும் பொருளாதார உறவுகள் போன்ற வாழ்வியல் முரண்கள் ‘பார்ப்பனியம்’ என்ற பொது எதிரியைக் காட்டி கைவிடப்படும். ஆனால், அந்த கிரிக்கெட்டில் தோன்றும் பெயரளவிலான ஒற்றுமை அனைத்திலும் கிடைத்ததாக அர்த்தம் கிடையாது. உதாரணத்திற்கு, பெண்கள் போன்ற திருமண உறவு குறித்து ராஜேஷுக்கு (சாந்தனுக்கு) இருக்கும் தொடர் நெருக்கடியோடே ‘ப்ளூ ஸ்டார்’ முடிந்தது.

எத்தனை காலத்திற்குத் தலித்துகள் தியாகிகளாகவே இருப்பார்கள் என்ற தருமராஜ் பதிவை ஏற்கும் ஸ்டாலின் ராஜாங்கம் தான் படத்தோடு உடன்படும் மற்றொரு மாற்றுப் பார்வையை வழங்குகிறார். அதுபோல், படத்தின் திரைமொழியிலிருந்து வேறு சில பார்வைகளைத் தொடலாம் என நினைக்கிறேன்.

5

அன்புக்கு இயல்பாகச் சாதி குறித்த தன்னுணர்வு உள்ளது. ‘காலனி வாத்தியார் மகன்’ எனும்போது, சிறுவயதிலேயே கோபத்துடன் ‘வாத்தியார் மகன்’ என்றுக் கூறி மறுக்கிறான். தன்னை அணியில் எதற்காக ஒதுக்குகிறார்கள் என்றும் தெரிகிறது. இருந்தும், தனது ஊர் அணியைப் பெருமிதமாகச் சுமக்கிறான். எங்கும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேங்கிறான். குறிப்பாக, அணிக்காகத் தனது காதல் வாழ்வை விட்டுக்கொடுக்கும் சண்டையில் (Interval Fight) ஈடுபடுகிறான். அவனைப் பொறுத்தவரை தாம் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் அணியில் தற்போதிருக்கும் ஒருசிலரே தவிர, அந்த அணியே அல்ல. மொத்தத்தில், ஊர் அணியோடு தமக்கிருக்கும் மாறாத நினைவேக்கமே அதற்காகத் தன்னை தியாகம் செய்யும் அளவிற்கும் செல்கிறது.

இதனை நடைமுறையில் தமிழ்நாட்டின் திராவிட அரசியலோடு பொருத்திப் பார்க்கலாம். திராவிட இயக்கத்தின் தொடக்கப் பங்களிப்பாளர்கள் எனும்பட்சத்தில் அதனை தனதாக உரிமைக் கொண்டாடுகிறார்கள் தலித்துகள். அவர்களின் இன்றைய நிலை என்ன? காலப்போக்கில், குறிப்பாகச் சமகாலத்தில் திராவிட அரசியலில் அவர்களின் இடம் என்னவாக இருக்கிறது?.. போன்றவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது லப்பர் பந்து.

இதில் காளி வெங்கட்டின் கையறுநிலையை (dilemma) இயல்பாக ஆங்காங்கே மிச்சமிருக்கும் பெரியாரிய சிந்தனையாளர்களோடு ஒப்பிடலாம். அவர்களுக்குத் திராவிட அரசியலின் தேர்தல் இயந்திரத்தையும் விட முடியாது, தலித்துகளுக்கான நியாயமான இடத்தையும் நிறைவேற்ற முடியாது. கீழிருந்து (தலித்துகளிடமிருந்து) அவர்களுடனான கொள்கை உறவுக்கு என்றும் மரியாதை இருக்கும். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் அவர்களை நடைமுறைக்கு ஒவ்வாதவர்கள், கொள்கை வேறு தேர்தல் அரசியல் களம் வேறு என்று பயங்கர புள்ளிவிவரங்களைக் கூறி தூக்கி எறிவார்கள். இங்கு அன்பு போன்றவர்களின் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, ஒருகாலத்திலிருந்த அந்த இயக்கங்களின் அடிப்படை சாராம்சமும் புறக்கணிக்கப்படுகிறது.

இந்த இடத்தில் அன்பு தனித்து எழவேண்டிய தேவை இயல்பாகிறது. தனது பழைய ஏக்கத்துடனும், அதற்கு உடன்பாடான காளி வெங்கட், பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரையும் ஒன்றுதிரட்டி களம் காண்கிறான். ஆனால், அன்புவின் அரசியல் எழுச்சியை உதிரிகளான அடையாள அன்புக்களை வைத்தே வீழ்த்துகிறது அந்த மரபான அணி. படத்தின் முடிவு இதைத்தான் கற்பிக்கிறது.

இதற்குப் பிறகுத் தனது அவசியமற்ற திரை மொழிக்காகப் பொருளையும் சேர்த்துக் குழப்பிவிட்டார் இயக்குநர். இப்படத்தின் மிகப்பெரும் பலவீனம் இறுதிக் காட்சிக்குப் பின் சேர்க்கையாக (Post Climax) வரும் அந்த விளக்கம். அன்பு அணி தோற்றத்தோடு படம் முடிந்திருந்தால் திரையாக்கத்திலும் எடுத்துக்கொண்ட பொருளிலும் முழு நிறைவு பெற்றிருக்கும். ஆனால், படத்தின் முடிவை சாதாரண விளையாட்டு வெற்றி/தோல்வியாக முடிக்க விரும்பாத இயக்குநர் கொடுத்த நியாயம் திரை அனுபவமாகவும் தோல்வி எனலாம்.

இங்கு இயக்குநர் பேசிய கருத்திற்கு மாறாக வலிந்து எதையும் திணிக்க நான் முயலவில்லை. இயக்குநரே ஒப்புக்கொள்வது போல் முன்பு ஒரு புரிதலிலிருந்து தற்போது ஒரு புரிதலுக்கு வந்திருக்கிறார். அவர் நேரடியாக இதில் தொடர்புபட்டவர் அல்ல என்பதால் பரிசீலனைக்கு உட்பட்டவர். அதன் தவறுகள் தன்னைச் சாரும் என்கிறார். சாதி குறித்த தொடர் உரையாடல்களின் ஒரு பிரதிபலிப்பாக அவர் இப்படத்தை வழங்கியிருக்கிறார். சாதிய பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வை அவர் கொடுக்கவில்லை என்பதைவிட அவர் எல்லை அதுதான் என்று நிறுத்தலாம். ஏனெனில், பின் சேர்க்கையாக வந்த அந்தத் தீர்வை தவிர்த்துப் பார்த்தால் தமிழ்நாடு இடைநிலை சாதி (OBC) அரசியலைக் கூடுமானவரை நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறது படம். இதற்காக, ஸ்டாலின் ராஜாங்கத்தைவிடப் பேராசிரியர் தருமராஜையே நான் துணைக்கு அழைக்கிறேன்.

6

‘கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?’ என்ற தலைப்பில் 2019-ம் ஆண்டு அக்டோபரில் இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் பேராசிரியர் தருமராஜ். முதலில், தலித் இலக்கியம் என்பது போல் தலித் சினிமா என்று வகைப்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. ஏனெனில், அவை தமிழ் சினிமாவின் வழக்கமான சாகச வீர நாயகனைப் பிரதியெடுக்கிறதே தவிர விடுதலை அரசியலைப் பேசவில்லை. தலித்துகளை வெகுளியாகவும் அதேபோல் முரடனாகவும் சித்தரித்த புராணங்களைத் தமிழ் சினிமா ரஜினியையும் தனுஷையும் வைத்துச் செய்வது அவருக்கு உடன்பாடில்லை.

மாறாக, தலித்துக்களின் வன்முறை என்பது கையறுநிலையின் வெளிப்பாடு எனும் தருமராஜ் ‘சாதியக் கொடுமைகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் சினிமாக்களில் செய்வதுபோல ரசித்து ருசித்துச் செய்யப்படுவதல்ல’ என்கிறார். சாதியப் பிரச்சனைகளுக்குத் திரையில் தீர்வைத் தேடாதீர்கள் என்று அழுத்தமாகப் பதிவு செய்யும் பேராசிரியர், ‘ஒடுக்கப்பட்டவனை நாயகனாக முன்னெடுப்பதே ஒரு அரசியல் நடவடிக்கை, மிகவும் சிக்கலான சாதி போன்ற பிரச்சினைகளை, எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல், பழக்கதோஷத்தால் செய்துகொண்டிருக்கும் வெகுஜனங்களை நோக்கியே ஒரு கலை வடிவம் பேச விரும்புகிறது’ என்ற அதிகபட்ச எல்லையை வரையறுக்கிறார்.

காலா, கபாலி போன்ற தலித் நாயகர்கள், குறிப்பாகத் திரையில் அவர்களின் வன்முறை என்பது நிலவும் சமூக ஒழுங்கை தலைகீழாக்குகிறது என்று பலர் பேசிவந்த விஷயம் அன்று தருமராஜ் அவர்களுக்கு உவப்பானதாக இருந்துள்ளது. ஆனால், தாமதமாகவேனும் லப்பர் பந்து பற்றிய விமர்சன குறிப்பில் இவ்வாறு கூறுகிறார், ‘காலா, கபாலி போன்ற டான் படங்கள் நமது அடியாட்கள் தாதாக்களாக உருமாறிய கதையையே விவரித்தன. இப்படி ஏற்கனவே நாம் நிர்மாணித்திருந்த ஒடுக்கப்பட்டவர் பற்றிய ‘மாதிரி’ வடிவங்களை நகைப்புக்குள்ளாகும் அல்லது தலைகீழாக்கும் வேலையையே தலித் படங்கள் செய்து வந்தன. நமது எல்லா தந்திரங்களும் தகர்ந்து போயின என்பது தான் உண்மை. இந்த உண்மைகளை எதிர்கொள்ளத் தெரியாமல், இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை..’

  • மு. அப்துல்லா.

மேற்கோள் காட்டிய பதிவுகளை முழுமையாக படிக்க

https://www.facebook.com/share/p/24DjEsEc1ry242jY/

https://www.facebook.com/share/p/24DjEsEc1ry242jY/

https://www.facebook.com/share/p/24DjEsEc1ry242jY/

https://www.hindutamil.in/news/opinion/columns/520784-where-they-are-defeated.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.