’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் – வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது. அரசல் புரசலாக கேள்விப்பட்ட விவகாரங்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது இந்தக் குழு.
தேர்தல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலானோரை மிரட்டுவது, அவர்களின் தொழில்முறை எதிரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவது, தேர்தல் கட்சிகளுக்கான நரேட்டிவ் உருவாக்கி வெகு மக்களிடையே பரப்புவது ஆகிய பணிகளைச் செய்து வந்தவர்களுள் சிலர் தற்போது அம்பலப்பட்டிருக்கின்றனர். இந்தப் பழக்கம் ஏற்கனவே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் தொடர்ந்து இருந்து வந்தாலும், தற்போது மாற்று ஊடகம் என மக்களின் நன்மதிப்பைப் பெற்று இருக்கும் யூட்யூப் சேனல்கள் இதில் சிக்கியுள்ளன. யூட்யூப் மூலமாக செய்தி வெளியிடும் நபர்கள் செய்தியாளர்கள் அல்ல; அவர்கள் கண்டெண்ட் உருவாக்குபவர்கள் மட்டுமே. இந்த விவகாரம் பூதாகரமாகியிருப்பது தமிழ்நாட்டின் இதழியல் சூழல் உண்மைக்குப் பிந்தைய நிலையை அடைந்திருப்பதாக, அதாவது Post-truth என அழைக்கப்படும் காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக அடைந்திருப்பதை உறுதி செய்கிறது.
பணம் பெற்றுக் கொண்டு செய்திகள் வெளியிடுவது, போலிச் செய்திகளைப் பரப்புவது, தனது விருப்பத்திற்குரிய அரசியல் தலைவர் குறித்து மக்களிடையே செய்திகளின் மூலமாக பிரசாரம் செய்வது முதலானவை செய்தி ஊடகங்கள் தொடங்கப்பட்ட காலம் முதலே இருந்து வருகின்றன. ஆனால் முன்பு எப்போதும் இல்லாததை விட தற்போதைய இணைய சூழலில் செய்திகளை (அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், லைஃப்ஸ்டைல் முதலான அனைத்தும்) வெகுமக்கள் அதிகளவில் நுகரத் தொடங்கியுள்ளனர், மேலும், இணையம் உருவாக்கியிருக்கும் வெளி என்பது அனைவரையும் கண்டெண்ட் உருவாக்குபவர்களாக மாற்றியிருக்கிறது. இதில் எத்தனையோ சாதக அம்சங்கள் இருக்கின்றன. வெகுஜன மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களால் வெளியிட முடியாத செய்திகள் பலவற்றை இணைய ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் காலப்போக்கில் அவற்றிலும் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது நாம் காணும் இந்த இடத்தில் வந்து நிற்கின்றன. இங்கு உண்மைக்குப் பிந்தைய நிலை – ’போஸ்ட் ட்ரூத்’ – என்பதை போலிச் செய்திகளைப் பரப்புவதோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. பாதி உண்மைகள், மாறுபட்ட தகவல்கள், பொய் எனத் தெரிந்தே பார்வையாளர்களின் விருப்பு, வெறுப்பை மட்டுமே நம்பி அவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் தகவல்கள் முதலானவை மூலமாக பொது மக்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்துவதே ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ எனக் கணிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மக்களின் ஆதரவைப் பெற்றது முதலான சர்வதேச விவகாரங்களில் இந்த ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக இந்தியாவிலும் கறுப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்தி கறுப்புப் பணத்தை ஒழித்ததாகக் கூறியதையும், அதனை ஊடகங்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை ‘நரேட்டிவ்’ ஒன்றை உருவாக்கி ’எது உண்மை?’ என்ற கேள்வியே எழாமல் செய்ததையும் பார்க்க முடியும்.
தற்போது மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வீடியோக்களில் சிக்கியுள்ள நபர்களில் முக்கியமானவர்கள் பாஜகவின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்; கிஷோர் கே சுவாமி, ’ஆதன் தமிழ்’ மாதேஷ், சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி முதலான நபர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் தற்போதைய நிலை குறித்த ‘நரேட்டிவ்’ உருவாக்குவதில் முதன்மை நபர்களாக இருக்கின்றனர். அய்யப்பன் ராமசாமி, முக்தார் போன்ற நபர்கள் நேரடியாக நேர்காணல்கள் மூலமாக தங்களைப் பிரபலப்படுத்துவதையும், எதிரில் அமர்ந்திருப்போரை ‘மாட்டி விடுவதையும்’ தாண்டி எந்தக் கொள்கையையும், மக்கள் அரசியலைப் பேசும் நபர்களாகவும் இருப்பதில்லை. உமா மகேஷ்வரன் போன்ற நபர்கள் தாம் ஒரு கட்சியின் ஆதரவாளரைப் போல காட்டிக்கொண்டே, இன்சைடர்களாக இருந்தபடி, இந்த அரசியல் கிசுகிசுகளுக்கு கண்டெண்ட் தருவதற்குக் காசு பெறுகிறார்கள்.
அரசியல் களம் என்பது கொள்கை என்பதைக் கடந்து ’பாப்புலிசம்’ எனப்படும் தனிநபர் வழிபாட்டை மையமாகக் கொண்ட ஜனரஞ்சகவாதமாக உருவெடுத்துள்ள காலகட்டத்தில், பாப்புலிசத்தை மக்களிடையே வளர்க்கவும், தனிநபர் வழிபாட்டிற்கான வெகுமக்களின் இசைவைப் பெறுவதற்கும் இத்தகைய ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ செய்திகள் பெரிதும் பயன்படுகின்றன. ஒரே கட்சிக்குள் இருக்கும் நபர்கள் தம்மைப் பிறரை விட முன்னிறுத்திக் கொள்ள செய்யும் உள்கட்சி அரசியல், எதிர்க்கட்சி மீதான போலி பிம்பம் உருவாக செய்யும் அரசியல், தனது இமேஜை வளர்க்க அரசியல்வாதிகள் பரப்பும் தகவல்கள் முதலான பல்வேறு வகையிலான ‘செய்திகள்’ இந்த வகைமையின் கீழ் இடம்பெறுகின்றன. ’இதுதான் யதார்த்தம்; இப்படித்தான் அரசியல் செய்ய முடியும்’ என்று இதனை ஆதரிப்பவர்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த உரையாடலில் மக்களுக்கான இடம் என்பதே இல்லை. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகள் இதில் பேசுபொருளாக மாறாமல் ’எதிரிகள்’ உருவாக்கப்படவும், மக்களைக் காக்கும் ‘ரட்சகர்கள்’ தோன்றுவதற்கும் மட்டுமே இங்கு நரேட்டிவ் உருவாக்கப்படுகின்றது. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. மதன் ரவிச்சந்திரனின் வீடியோக்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிழல் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, நாம் தமிழர் கட்சியின் சீமான் முதலானோர் இத்தகைய ஒத்திசைவு ஏற்பட மேற்கொண்ட பணப்பரிமாற்றங்கள் அம்பலப்பட்டிருக்கின்றன.
ஆளுங்கட்சியான திமுக இதில் இடம்பெறவில்லை என்ற போதும், இன்று ’நரேட்டிவ்’ உருவாக்குபவர்களுள் அம்பலப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் திமுக எதிர்ப்பை ’நடுநிலை’ என்ற பெயரில் பேசியவர்கள். இடதுசாரி ஊடகங்கள் தங்களை ‘மாற்று’ எனவும், காட்சி ஊடகங்களில் பாஜக அழுத்தம் இருப்பதை அம்பலப்படுத்தி அவற்றில் இருந்து வெளியேறி தனியாக யூட்யூப் சேனல்கள் தொடங்கியோரும் தொடர்ச்சியாக ‘பாஜக எதிர்ப்பு – திமுக ஆதரவு’ என்ற நிலையில் மட்டுமே நிற்பதைப் பயன்படுத்தி, மக்களின் இசைவை அறுவடை செய்து கொண்ட நபர்கள் சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி போன்றோர். திமுகவின் மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட விவகாரம், பொன்முடி முதலான மூத்த அமைச்சர்களின் சாதி ஆணவப் பேச்சுகள், வேங்கைவயல் விவகாரத்தைத் திமுக அரசு அணுகிய விதம் முதலான சில செய்திகளை உதாரணங்களாகக் கொண்டு, இந்த ‘மாற்று’ ஊடகங்களின் வெளியான செய்திகளின் எண்ணிக்கையைத் தேடினால் சொற்பமாகவே இடம்பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிடத்தையே இத்தகைய ‘போலி அரசியல் விமர்சகர்கள்’ பயன்படுத்திக் கொள்கின்றனர். இடதுசாரி மாற்று ஊடகங்கள் பாப்புலிசத்திற்கும், வாரிசு அரசியலுக்கும் ஊதுகுழல்களாக செயல்படத் தொடங்கியதும், பாஜக மட்டுமே தற்போதைய பிரச்னை என்ற நிலைப்பாட்டின் வழியாக மக்களின் அரசியலை மறந்ததும் நம் காலத்தின் துயரம். போஸ்ட் ட்ரூத் யுகமாக நம் முன் நிற்கும் சாபம்.
அரசியல் கிசுகிசு தகவல்களின் வழியாக நரேட்டிவ்களை உருவாக்குபவர்கள் சமகால புதிய இணைய ஊடகங்கள் மட்டுமல்ல. பாரம்பரியமாக தமிழ்நாட்டில் பெரும் ஊடக நிறுவனங்களாக, அச்சு ஊடகத்தில் இருந்து வந்த நிறுவனங்கள் கூட இந்தப் பணியை லாவகமாக செய்கின்றன. சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி போன்றோரின் நேர்காணல்களைப் ‘போலி’ எனத் தெரிந்தே, தங்கள் பிராண்ட் பெயரைப் பாழாகவும் கூடாது என்றும், அதே வேளையில் லாபமும் வேண்டும் என்றும் வெவ்வேறு பெயர்களில் இயங்கும் பாரம்பரிய ஊடகங்களும் இருக்கின்றன. பாரம்பரியத்திற்கு ஒரு சேனல், பொய் மூலமாக லாபத்திற்கு ஒரு சேனல் என்று வைத்துக் கொண்டாலும் வீடியோவின் பின்னணியில் பேக் கிரவுண்ட் கூட மாற்றாமல் இருக்கும் இத்தகைய சேனல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. அவை குறித்தும் விரைவில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வெளிவரலாம்.
நேர்காணல்களை எடுக்கும் அய்யப்பன் ராமசாமி, முக்தார் போன்றோரின் தொனியே மக்களின் அரசியலையோ, கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இல்லை. உதாரணமாக, அர்ஜூன் சம்பத் போன்ற பாசிஸ்ட்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம் என்ற சூழலில், அவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கிறார் அய்யப்பன் ராமசாமி. ‘எங்கள் மனம் புண்படுகிறது’ என்று எதற்காகவோ சொல்லும் அர்ஜூன் சம்பத்திடம், ‘புண்படுவது நெஞ்சா.. இல்ல…?’ என்கிறார். இன்ஸ்டாகிராம் தளத்தில் தன்னை விட அதிக ஃபாலோவர்களைக் கொண்ட ‘செலிபிரிட்டி’களைக் குறிவைக்கிறார். முக்தார் போன்றோரின் லட்சணங்களை நாம் பேச வேண்டியதே இல்லை. ’டெவில்ஸ் அட்வகேட்’ என்ற பாணியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தன் மேதமையை நிரூபிப்பது, மக்களுக்கான இதழியல் என்பதில் இருந்து விலகி தனிநபர் ஆராதனையை முன்னிறுத்துவது ஆகியவற்றை மேற்கொண்டு வருவதோடு,. இதன் மூலமாக ஓர் அஜெண்டாவை உருவாக்குவதும், அது தற்போது அம்பலப்பட்டிருப்பதும் கண்கூடு.
ஸ்டிங் ஆபரேஷன் குறித்த வெவ்வேறு வகையிலான நிலைப்பாடுகள் ஊடக உலகிலேயே இருக்கிறது. அந்த விவாதம் தற்போதைய விவகாரத்திற்குப் பொருந்தாது என்றே கருதுகிறேன். எனினும், இதனை வெளியிட்டிருக்கும் மதன் – வெண்பா ஆகிய இருவரும் இதே வீடியோவில் சவுக்கு சங்கரை ‘சாதாரண குமாஸ்தாவின் மகன்’ என்றும், தாங்கள் இருவரும் காவல்துறையின் அதிகாரிகளின் குழந்தைகள் என்றும் பெருமிதத்துடன் கூறிக் கொள்வதும் கவனத்திற்குரியது. இது அதிகார வர்க்கத்தினரிடையிலான பிரச்னையின் மூலமாக உருவாகியிருக்கலாம்; சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தை பாஜகவிற்குள் அண்ணாமலை எதிர்ப்பாளரான வினோஜ் செல்வம் ஏவியிருப்பதாகவும், மாதேஷ் சிக்கிக் கொண்டதாகவும் கூறி, தம்மைத் தாமே விடுவித்துக் கொள்கிறார். எனினும், அவரது யோக்கியதை அனைவருக்கும் தெரிந்ததே.
தமிழ் ஊடகச் சூழல் பொது மக்களிடையே இசைவை ஏற்படுத்த தவறான தகவல்களைப் பரப்புவதும், பாப்புலிச அரசியல் – (மோடி முதல் உதயநிதி வரை யாரும் விதிவிலக்கல்ல) உண்மைக்குப் பிந்தைய நிலை (போஸ்ட் ட்ரூத்) இங்கு உருவாகியிருப்பதையும் இந்த வீடியோக்கள் உறுதிசெய்திருந்தாலும், இவை மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் முனை மட்டுமே.. இன்னும் வெளிவர வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
- ர. முகமது இல்யாஸ்.