தமிழ் சினிமாவில் சென்னையைக் களமாகக் கொண்டு வெளியான திரைப்படங்கள் ஏராளம். அதே வேளையில் சென்னையில் வாழும் மனிதர்களின் அசலான வாழ்க்கை முறையைப் பதிவு செய்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘விட்னெஸ்’. முழு திரைப்படமும் சென்னை நகரத்தை ஒரு முன்னணிக் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறது. இந்த நகரத்தின் மிக முக்கிய பிரச்னை ஒன்றை பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் தீபக் ‘விட்னெஸ்’ திரைப்படத்தின் மூலம் சமகால அரசியல் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார்.
சென்னையின் அடையாறு பகுதியின் அபார்ட்மெண்டில் ஒன்றில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க நிர்பந்திக்கப்பட்டு, கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் தாயின் கதை ‘விட்னெஸ்’. இந்த ஒற்றை வரியில் அடையாறு அபார்ட்மெண்ட்களில் வாழ்பவர்கள் யார், இந்தப் பிரச்னை தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு என்ன, உயிரிழந்த இளைஞனின் வாழ்க்கை எப்படிப்பட்டது, நீதிகேட்கும் தாயின் அன்றாடம் எப்படியிருக்கிறது, நீதி கேட்கும் முறைகள் எப்படியிருக்கின்றன, நீதி கிடைத்ததா என அனைத்தையும் அலசி ஆராய்கிறது இந்தத் திரைப்படம். மகனை இழந்து அதிகாரத்தின் கதவைத் தட்டும் தாயாக தோழர் ரோஹிணி, அதே அபார்ட்மெண்டில் வாழ்பவரும், இறந்த இளைஞனுக்காக சாட்சி சொல்ல முன்வருபவருமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், கம்யூனிஸ்ட் அமைப்பின் களச் செயற்பாட்டாளராக தோழர் செல்வா முதலானோர் முன்னணி நடிகர்களாக நடித்திருக்கின்றனர்.
ஒரு ஆவணப்படத்தைப் போல, மிகவும் இயல்பான ‘கேண்டிட்’ காட்சிகளாக ‘விட்னெஸ்’ இயக்கப்பட்டிருப்பது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது. வழக்கமான ’துன்பியல்’ காட்சிகளைச் சேர்ப்பதற்கும், மீட்பர் கதாபாத்திரங்களின் மூலமாக ’நீதி’ பெற்று தருவதற்கும் திரைக்கதையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிக்கிறது ‘விட்னெஸ்’. வழக்கமான பாணி திரைப்படங்களைக் கடந்து, புனைவையும், யதார்த்தத்தையும் இணைக்கும் புள்ளியாக அமைக்கப்பட்டிருக்கும் படத்தின் இறுதிக் காட்சி இந்தப் படைப்பின் நேர்மைக்கு சான்று.
மக்கள் பிரச்னைகளைப் பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் தேர்தல் அரசியல் கட்சிகளையும், கட்சிகளைச் சேர்ந்த தனிநபர் வில்லன்களையும் முன்னிறுத்துவதோடு சுருங்கி விடுகின்றன. ‘விட்னெஸ்’ அந்த சட்டகங்களுக்குள் அடங்காமல் சாதிய அமைப்பைப் பாதுகாப்பதில் அரசுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை நீக்க அரசுக் கட்டமைப்புக்கு இருக்கும் மெத்தனத்தை மிக ஆழமாக சாடுகிறது ‘விட்னெஸ்’. மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அபார்ட்மெண்ட் அக்ரஹாரங்களில் வாழும் பார்ப்பனர் அல்லாதோர் மீதான பாகுபாடு, நகரங்களில் இருந்து விரட்டப்பட்டு நகரத்திற்கு வெளியே வாழ விதிக்கப்பட்ட மக்களின் நிலை, உழைக்கும் மக்களின் வாழ்வு குறித்து அரசுக் கட்டமைப்பிற்கு இருக்கும் அலட்சியப் போக்கு முதலானவற்றை அம்பலப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். இவை எதுவுமே பிரச்சாரத்தைப் போல சொல்லப்படாமல், கதையோட்டத்தின் வழியாக சொல்லப்படுவதால் படம் பேச முன்வந்துள்ள கருத்து நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை இன்றியமையாதது என்ற போதும், சமகால அரசியல் சினிமா இயக்குநர்களின் படைப்புகள் திராவிட அரசியலுக்கு அப்பால், தலித் மக்களின் உரிமைகள், நவதாராளமயத்தால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முதலானவற்றைப் பேசுபொருளாக மாற்றி வருகின்றனர். எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இந்தப் போக்கை ’பின் திராவிட சினிமா’ என்றழைக்கிறார். திராவிடக் கட்சிகளின் பெருநகரங்கள் குறித்த கொள்கை, கழிவுநீர், தூய்மைப் பணிகள் தொடர்பான தனியார்மயக் கொள்கைகள் முதலானவை நகரங்களின் தலித் மக்களையும், பிற உழைக்கும் சாதிகளைச் சேர்ந்த மக்களையும் கடுமையாக பாதித்திருக்கின்றன. இதனை நேரடியாக பேசாதிருந்தும், நம் சமூகத்தில் நிலவும் அரசுக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது ‘விட்னெஸ்’. ’ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை விதைத்திருந்த போதும், ‘விட்னெஸ்’ விமர்சனத்தில் நீதித்துறையும் தப்பவில்லை.
படத்தின் போஸ்டர்களில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடம்பெற்றிருந்தது, ட்ரைலர் உணர்த்திய கதை முதலானவற்றின் மூலமாக அவர் வழக்கின் சாட்சியாக இருப்பதால் படத்தின் தலைப்பு ‘விட்னெஸ்’ எனச் சூட்டப்பட்டிருப்பதாக தோன்றியது. படம் முடிந்த பிறகு, அதன் தலைப்பு உணர்த்தும் மற்றொரு செய்தி புலப்பட்டது. இந்த சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல் கடக்கும் சாட்சிகள் யார்?
நாமே தான்.
‘விட்னெஸ்’ திரைப்படம் டிசம்பர் 9 அன்று SonyLIV தளத்தில் வெளியாகிறது.
– ர. முகமது இல்யாஸ்.
லிட்னஸ் படத்தை மிக அருமையான முறையில் அணுகி எழுதப்பட்டுள்ள கூர்மையான மதிப்புரை…. உங்கள் மீதான மதிப்பைக் கூட்டுகிறது….
இயக்குநர் தீபக் , ஒளிப்பதிவாளர் ஃபிளோமின்ராஜ் இருவரும் என்னிடம் தமிழ் பயின்றவர்கள் என்ற சின்னப் பெருமிதத்தில் உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக
.