சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் “கோவில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் ஹிந்து தலையங்க பகுதியில் வெளிவந்துள்ள சுப்ரமணியசாமியின் கட்டுரை முன்வைக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகள்:
1. அரசு நிர்வாகத்தின் ஊழல் காரணமாக கோயில் சொத்துக்கள் , பொக்கிஷங்கள், அதிகாரிகள் அரசியல்வாதிகளால் கொள்ளையாடிக்கப்படுகின்றது. அதனால் அரசு நிர்வாகத்திடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும்
2. இந்து கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வந்தது போல் தேவாலயங்களையும் மசூதிகளையும் ஏன் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை? அங்கெல்லாம் ஊழல் இல்லையா?
பார்க்க: Freeing temples from state control
இந்த பிரச்சனைக்கு தீர்வாக அரசு கட்டுபாட்டில் உள்ள அணைத்து கோவில்களையும் மீட்டெடுக்கப் போகிறேன் என்று சூளுரைத்துள்ளார் சுப்ரமணிய சாமி.
முதல் பிரச்சனையான தமிழக அரசின் ‘இந்து சமய அறநிலைய துறை’ நிர்வாக சீர்கேடு, ஊழல் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் கோவில் நிலங்களின் வாடகை வசூல் செய்வதில் உள்ள சிக்கல், சம்பள குளறுபடி என சில உதாரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நமக்கு எழும் கேள்வி ரூ.304 கோடி வாடகை வசூலிக்கவேண்டிய அரசு நிர்வாகம் லஞ்ச சீர்கேட்டில் சிக்கி வெறும் ரூ. 36 கோடிதான் வசூலிக்கிறது என சுட்டிக்காட்டும் சு.சாமி, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருந்தபோது கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.37,000 என தாக்கல் செய்த நிலையில் அது அரசு நிர்வாகத்திற்கு சென்ற பிறகு ஒரு கோடியைத் தாண்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?
சு. சாமியின் உண்மையான அக்கறை அரசு நிர்வாக சீர்கேட்டால் வருவாய் இழப்பு, நன்கொடையில் வரும் வருமானம் மடைமாற்றப்படுகிறது, கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கபடுகிறது, என்பதாக இருந்தால் அதை சீர்செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு எதிராக வழக்குத் தொடுதிருக்கலாமே. ஏன் அதைச் செய்யவில்லை?
கட்டுரையில் ஓர் இடத்தில்கூட கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்தபோது தீட்சிதர் அல்லாதவர் / தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்படுவதைக் குறித்தோ, அணைத்து தரப்பு பக்தர்களுக்கும் ஆலயத்தில் சமஉரிமை மறுக்கபடுவது குறித்தோ இதை தீட்சிதர் நிர்வாகம் எப்படி சரிசெய்யும் என்று எந்த பதிவும் இல்லை.
சிதம்பரம் கோயிலை மீட்க 2009ல் சு.சாமி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு அரசியல் சாசன பிரிவு 26 மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பகுதி 107 தீக்சிதர்களின் வாரிசுகளுக்கு கோவில் நிர்வாக உரிமையில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்கிற சட்ட அடிப்படையில் தீட்சிதர்களுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது.
ஆட்சியைப் பொருத்து காட்சி மாறும் என்பதற்கு உதாரணமாக அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற 2006ல் திமுக அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தினுடைய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள ஏனைய கோவில்களை மீட்பேன் என சு.சாமி சூளுரை இடுகிறார்.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் அதன் தலைவர்கள் நடராஜர் கோவில் பீரங்கியால் தகர்க்கப்படும் என்று அறிவித்ததாகவும், ஆனால் அது கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் இந்து மதத்தின் மீது எழுந்துள்ள செல்வாக்கின் மூலம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுரையில் ஒரு பத்தி வருகிறது.
“இந்தியா ஒளிர்கிறது, குஜராத் மிளிர்கிறது, இளைஞர்கள் மத்தியில் மோடி அலைவிசுகிறது” என இது போன்ற எண்ணிக்கை அடிப்படையில் அளவிடப்படாத வாசகங்களை சு.சாமி மேடையில் பேசலாம். ஆனால் ஹிந்து பத்திரிக்கை தன் தலையங்கப் பகுதியில் இதுபோன்ற பரப்புரைகளை அனுமதிக்கலாமா?
கோவில் பொக்கிஷங்களான கல்வெட்டுகள், சிலைகளுக்கு வர்ணம் பூசுவது போன்ற சீரமைப்பு பணிகளில் போதிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஈடுபடுத்தபடுவதில்லை என்ற குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நாம் ஏற்கிறோம்.
இரண்டாவதாக ஒரு சமத்துவ அரசு தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும் விட்டுவிட்டு ஏன் இந்துக் கோவில்களை மட்டும் நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இது, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதுபோல் மேல் சாதி இந்து மாணவர்களுக்கும் கொடு என்பது போன்ற தட்டையான வாதம்.
சு. சாமி முன்வைக்கும் ஊழல் குற்றசாட்டின் யதார்த்த நிலைமை என்ன? நடைமுறையில் நிலங்களை குத்தகை எடுத்த உரிமையாளர்கள் அதை உள்குத்தகைக்கு விடுகிறார்கள். கோவில் நில பத்திரங்களோ, சான்று ஆவணமோ அசல் பயனாளர்கள் பெயரில் இல்லாத சூழ்நிலையில் நிலத்தை மேம்படுத்த வங்கி கடன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதே போல், சிறுபான்மையினர் மத நிறுவனங்களை அரசின் கட்டுபாட்டில் உள்ள வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது.
சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தில் அரசு நிர்வாகம் தலையிடாதவாறு அரசியல் சாசனம் உறுதி செய்திருப்பது சு.சாமிக்குத் தெரியாததா என்ன? இருந்தும் முறைகேடாகச் செயல்படும் சிறுபான்மை மத நிறுவனங்களை நீதிமன்றம் முன் கொண்டு வருவதன் மூலம் சமதர்மவாதிகளின் முகத்திரை கிழியும் என்று கட்டுரை முடிகிறது. நிர்வாக சீர்கேடு என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி எல்லா இந்து கோயில் உரிமையையும் குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் கீழ் கொண்டு வருவேன் என்ற உள்நோக்க விஷமக் கருத்தை வெளியிட்டு இருப்பதன் மூலம் தி ஹிந்து புதிய editorialன் முகத்திரை கிழிகிறது.
சில வருடம் முன்பு இந்து நாளிதழை நிர்வகிப்பதில் ராம் – ரவி இடையே குடும்பச் சண்டை உச்சகட்டத்துக்குப் போக அதை சாமாளிக்க சித்தார்த் வரதராஜன் அவர்களுக்குத் தேவைப்பட்டார். செய்திகளை முந்தி தருவதில் தொலைக்காட்சி ஊடகங்களின் கடும் போட்டியைச் சமாளிக்க வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் நாளிதழ் வடிவமைப்பு மாற்றம், opinion, feature, உள்ளூர்ச் செய்திகள், தேர்தலுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களைத் தவிர்ப்பது, கட்டுரையாளர் தேர்வில் பன்முகத்தன்மை என பல்வேறு மாற்றங்களை சித்தார்த் வரதராஜன் செய்தார்.
குடும்பச் சண்டை தீர்ந்த பிறகு சித்தார்த் வரதராஜனை வெளியேற்ற ராம் – ரவி சகோதரர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. தி ஹிந்துவின் editorial கொள்கைக்கு விரோதமாகச் செயல்பட்டார், நரேந்திர மோடியின் புகைப்படத்தை முதல் பக்கச் செய்திகளில் வெளியிட சித்தார்த் மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறி பதவி விலக வைத்துவிட்டு எடிட்டரும் நாமே பதிப்பாளர், உரிமையாளரும் நாமே என அக்டோபர் 2013ல் மாற்றம் கொண்டு வந்தனர்.
கடந்த 3 மாதங்களில் தி ஹிந்துவில் வெளியான செய்திகளைக் கவனிக்கும்போது மோடி, பாஜக, தெஹல்கா தேஜ்பால் தொடர்பான செய்திகளில் முதல் பக்க முக்கியத்துவம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. சங்கராச்சாரியார் விடுதலை ஆன மறுநாள் ஹிந்து முழுபக்க அளவில் கேள்வி பதில் விளம்பரப் பேட்டியை வெளியிட்டது. சங்கரமட விளம்பரத்தின் தலைப்பு, “Dharma has prevailed; Truth has won”. தலையங்கத்தின் தலைப்பு “A complete vindication”.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று கண்டறியப்படாத நிலையில் “தர்மம் ஓங்கியது; உண்மை வென்றது”. “நேர்மை முழுமையாக நிலைநாட்டப்பட்டது” என்று தலையங்கம் வெளியிடலாமா? ஒரு கேள்விகூட பிறழ் சாட்சி பற்றியோ, நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான CD பற்றியோ இல்லாமல் மக்களை persuade செய்யும் வகையில் இருந்த அந்தப் பேட்டியை வெளிடுவதுதான் புதிய editorial கொள்கையா என்று ராம் – ரவி தான் விளக்க வேண்டும்.
தீர்ப்பு வெளியான தினம் பெரியவர் மௌன விரதம் என பத்திரிக்கையாளர்களின் சங்கடமானக் கேள்விகளைத் தவிர்க்க இந்தப் பேட்டி எப்போது எடுக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. ஒரு வேலை தீர்ப்பு தங்களுக்குத்தான் சாதகமாக வரும் என முன்னரே தயார் செய்த பேட்டியா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
சித்தார்த் தலைமை நிர்வாகியாக இருந்த காலத்தில் சு.சாமி தனக்கு coverage கொடுக்க மறுக்கிறார் என்ற காரணத்திற்காக அவர் இந்தியக் குடியுரிமை அல்லாத வெளிநாட்டவர் எடிட்டராக இருக்க முடியாது என்ற பொதுநல வழக்குத் தொடர்ந்ததையும், எடிட்டராகச் செயல்பட இந்தியாவில் வசித்தால் போதும் குடிமகனாக இருக்க அவசியம் இல்லை என அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டத்தையும் சித்தார்த் தி ஹிந்துவில் இருந்து விலகிய பிறகு தேஹல்காவுக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டுவது இங்கு நினைவு கூரத்தக்கது.
பார்க்க: Yes, There Is Bitterness. ‘The Hindu’ Was On The Cusp Of Something Great: Varadarajan
தீக்கதிர்
தீக்கதிர் நாளேடு “சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா?” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கம் அந்த வழக்கை அ.தி.மு.க. அரசு எவ்வாறு நடத்தியது என்பது பற்றியோ, அரசு வழக்கறிஞர் எவ்வாறு செயல்பட்டார் என்பது பற்றியோ, அந்தத் தலையங்கத்தில் குற்றமாகக் கூறாமல், வழக்கை நடத்துவதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன் வரவேண்டும் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது.
சன் நியூஸ்
அடுத்து தொலைக்காட்சி ஊடகங்களில் இந்த பிரச்னை எப்படி கையாளப்பட்டது என்று சுருக்கமாக பார்ப்போம். தீர்ப்பு வெளியான அன்று சன் நியூஸ் ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் தீட்சிதர் தரப்பில் பேசிய பாஜக பிரமுகர் நடராஜர் கோவில் சொத்தின் முழு உரிமை தீட்சிதர்களுடையது, அது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
எதிர் தரப்பில் பேசிய திருமாவளவன், கோவிலில் பூஜை செய்யும் உரிமை தீட்சிதர்களின் வாரிசுகளுக்கு இருப்பதை வேண்டுமானால் ஏற்கலாம், கோவிலின் வழிப்பாட்டு உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால் கோவில் சொத்துக்களை நிர்வகிக்க தீட்சிதர்கள் உரிமை கோர முடியாது. அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று வாதிட்டார்.
திருமாவளவனின் கருத்து மத வழிப்பாட்டு உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்ற இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 26 மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பகுதி 107 உறுதிசெய்யும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அனைவருக்குமான சமத்துவ உரிமையையும், கோவில் வரவு செலவுகளைக் கண்காணிக்க உறுதி செய்யும் முக்கியக் கருத்தை பதிவு செய்தார்.
புதியதலைமுறை
‘சென்ற மாதம் புதியதலைமுறை தொலைக்கட்சி ‘நேர்படப் பேசு’ விவாத நிகழ்ச்சியில் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பங்கேற்றவர்கள் வருமாறு.
செந்தில்நாதன் – தமிழக அரசு வழக்கறிஞர்
சத்திவேல்முருகன் – ஆகம அறிஞர்
ராமசுப்ரமணியன் – சமூக ஆர்வலர்
ராமமூர்த்தி – பாஜக வழக்கறிஞர்
நேரடி விவாத நிகழ்ச்சிகள் மக்களை ஈர்க்க முக்கியக் காரணம் இருதரப்பினருக்குமான கருத்து மக்களைச் சென்றடைகிறது, கருத்தில் உள்ள உண்மையைப் பங்கேற்பாளரின் உடல்மொழி காட்டிகொடுத்து விடுகிறது. அதே நேரத்தில் விருந்தினர்கள் வாதிடும் கருத்துக்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதில் சிக்கல்கள் உள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போது வாதாடிய செந்தில்நாதன், தீட்சிதர்களின் தொடர் முறைகேடு காரணமாகவே 1987ல் எம்.ஜி.ஆர். சிதம்பரம் கோவிலுக்கு அரசு சார்பில் நிர்வாக அதிகாரியை நியமித்தார் என வாதிட்டார். மேலும் ஆகம அறிஞர் சத்திவேல்முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க ஆபரங்களை தீட்சிதர்கள் உருக்கி முறைகேடு செய்த குற்றச்சாட்டுக்கு சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியத்திடம் முறையான பதில் இல்லை.
அந்த வகையில் பாஜக ராமமூர்த்தி HRCE ஊழலுக்கு மாற்றாக தீட்சிதர்கள் நிர்வகிக்கும் கோவில் சொத்துக்களை யார் தணிக்கை செய்வது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. சமூக ஆர்வலர் என அடையாளப்படுத்தபடும் ராமசுப்ரமணியன், கோவில் தீட்சிதர் கையில் போவதால் ஏற்படும் சமஉரிமை மறுப்பு, பற்றி கருத்து முன்வைக்காமல் எந்த ஊடக நெறியும் இல்லாமல் ஆகம அறிஞர் சத்திவேல்முருகனை பேசவிடாமல் தொடர்ந்து இடைமறித்து அவரும் பாஜக பிரமுகரைப் போல பேசி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு மணிநேர விவாத நிகழ்ச்சியில், ராமசுப்ரமணியன் முதல் 20 நிமிடங்கள் ஊழல், நிர்வாக குளறுபடி பற்றி விவாதிக்காமல் நிரூபிக்க முடியாத புராண கட்டுக்கதைகளை முன்வைத்து கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என வாதிட்டார். பாஜக வழக்கறிஞர் ராமமூர்த்தியும் சு.சாமியைப் போலவே HRCE ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து பேசினார். ஊழலை முன்னிறுத்தி ஆம் ஆத்மி மக்கள் செல்வாக்கை பெற்றது போல ஊடகங்களில் ஊழலை முன்னிறுத்தி மற்ற சமூக நீதி உரிமைகளை புறம்தள்ளிவிடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது போலும்.