தினமலர்: மலிவு விலையில் மனுதர்மம்!

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. (சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை).

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு (இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும்) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். (இந்த ஆண்டு இரண்டாம் பரிசு)

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் (பள்ளியிறுதி மாணவி) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. (சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை (அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர்) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. (இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை).

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா?” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் (அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக). அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர். ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. (சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா).

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் (பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள்? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ”இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது? மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு (தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

(நன்றி: வினவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.