கடந்த நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து முக்கியமான பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர். ‘எல்லோருக்குமான ஊடகங்கள், ஊடகங்களில் பெண், மோதல் பகுதிகளில் செய்தி சேகரிப்பு, ஊடகங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், தெலங்கானா’ என்று பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றி வரும் கல்பனா ஷர்மா, அம்மு ஜோசப் போன்ற சீனியர்கள், சர்வதேச கவனிப்புக்குட்பட்ட அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் ரோஹினி மோகன், நேஹா தீக்ஷித் போன்ற ஊடகவியலாளர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கினர். நிகழ்வின் தொடக்க அமர்வில் எல்லோருக்குமான ஊடகங்கள் தலைப்பில் சிறுபான்மையினர், சாதியம் (தலித்), ஆதிவாசிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் சுதிப்தோ மோண்டல் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் ‘இந்திய ஊடகங்களில் சாதியம்’ குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயராணி ஆற்றிய உரை தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. கருத்தரங்கில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த உரையை thewire.in இணையதளம் பிரசுரித்துள்ளது.
ஜெயராணி தமிழில் எழுதிய அந்த உரையை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஊடகக்களத்தில் பத்திரிகையாளராக செயலாற்றி வருகிறார். சாதியம், தலித்கள், சிறுபான்மையினர், பாலின சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். சாதியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து விருதுகளை வென்றது.
இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசிய கருத்தரங்கில் ஜெயராணி ஆற்றிய உரையின் முழு வடிவம்:
பொறுப்புமிக்க ஊடகவியலாளர்களாக நாம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கற்பனை செய்து பார்க்கலாம். இனி இந்திய ஊடகங்கள் அனைத்தும் சாதிய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து பிரசுரிக்கவும் ஒளிபரப்பவும் வேண்டும் என திடீரென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்? இச்சட்டத்தை மீறுகிற அல்லது மதிக்காத ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு எமர்ஜென்சி நிலை உருவாகிறது. கற்பனை தானே! செய்து பார்ப்போம். நொடிக்கு நொடி பிரேக்கிங் செய்தியாக ஒரு தீண்டாமைக் கொடுமையை அம்பலப்படுத்த நேரிடும்; நிமிடத்துக்கு நிமிடம் சாதி அடிப்படையிலான பாலியல் வன்புணர்ச்சியை விவரிக்க வேண்டி வரும்; நாள்தோறும் நடந்தேறும் சாதிய வன்முறைகளை அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். 24×7 ஒளிபரப்ப அவ்வளவு செய்திகளுக்கு எங்கே போவது என மிரளவே வேண்டாம். ஏனெனில் இந்நாட்டில் இந்த கொடுமைகள் அனைத்தும் இப்போதும்… இதோ நான் இந்த உரையை நிகழ்த்தும் இந்நொடிகூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின், ‘மாற்றங்களுக்கு உட்படாத’ புள்ளி விவரம் என்ன சொல்கிறதெனில் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் இரண்டு தலித்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் நமக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பிரேக்கிங் செய்தி கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். எக்ஸ்க்ளூசிவ் என பிராண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தை மாஸ்க் செய்தோ மாஸ்க் செய்யாமலோ (தலித் பெண் என்றால் பெரும்பாலும் மாஸ்க் செய்ய வேண்டிய தேவையே உருவாவதில்லை) காட்டிக்கொண்டே இருக்கலாம். ஒரு நாளில் இரண்டு தலித்கள் கொலை செய்யப்படுகின்றனர்; இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எனவே டி.ஆர்.பிக்கும் பரபரப்புக்கும் சரிவே ஏற்படப் போவதில்லை. போர்ன் வீடியோக்களில் உணரும் கிளுகிளுப்பை விட இந்த நிஜ கொடூர வன்முறைக் காட்சிகளில் பரவசத்தை விதைக்கும்/தேடும் கெடு வாய்ப்பான காலகட்டத்தில் இந்த சரக்கு நன்றாகவே விற்பனையாகும். இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்திருந்து தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வரை, தலித்களுக்கான வாழ்வியல் நீதிகள் ஆதிக்க சாதியினரின் கரங்களால் பஞ்சாயத்துகளில் எழுதப்படும் அவலம் தொடர்கிற வரை சாதிய அத்துமீறல் குறித்த செய்திக்கு ஒருபோதும் தட்டுப்பாடு வந்துவிடாது.
எனவே நமது கற்பனைப்படி அப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டால் புதிய செய்தியை உடைத்து உடைத்து சேனல் ஜாம்பவான்களின் கைரேகை அழிந்துவிடும். பாகிஸ்தானுடன் போரை ஊக்குவித்து போர் அறைகளை உருவாக்கியது போல சாதிக்கலவர அறை, வன்கொடுமை அறை, வன்புணர்ச்சி அறை, தீண்டாமை அறை, பசு பாதுகாப்பு அறை, கர் வாப்ஸி அறை என பல்வேறு அறைகளை உருவாக்கி புதிய புரட்சியை அவை உண்டாக்கிவிடும். இந்நாட்டில் சாதி ஆதிக்கம் எத்தனை மோசமாக நிலை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள அப்படியொரு சூழல் உருவாக வேண்டும். இல்லையெனில் யானையை தொட்டுப் பார்த்த பார்வையற்றவர்களின் நிலை போல நம் கண்ணில் படுவதும் காதில் விழுவதும் மட்டுமே சாதியக் கொடுமைகளின் ஒட்டுமொத்த அளவு என்ற நம் (மூட) நம்பிக்கைக்கும் அலட்சிய மதிப்பீட்டுக்கும் முடிவே கிடைக்காது.
நாம் நம் கற்பனையை முடித்துக் கொண்டு நிஜத்துக்கு திரும்புவோம்!
இந்தியாவின் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடகங்களும் அலுக்கவோ, சலிக்கவோ முடியாத அளவுக்கு ஒரு செய்திச் சுரங்கமாக, அள்ளக் குறையாத ‘அட்சயப் பாத்திரமாக’ சாதிய அத்துமீறல்கள் நொடிக்கு நொடி நடந்து கொண்டிருக்கையில் இன்றைய ஊடகங்கள் அவற்றுக்குத் தந்திருக்கும் இடமென்ன? ஒரு நாளின், ஒரு வாரத்தின், ஒரு மாதத்தின், ஓர் ஆண்டின் செய்தி தொகுப்பில் எத்தனை சதவிகிதம் சாதிப் பிரச்னைக்காக ஒதுக்கப்படுகிறது? ஒவ்வோர் ஆண்டும் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 10-20 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கொலை செய்யப்படும் தலித்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நியாயம் இங்கே நிலைநிறுத்தப்பட்டிருக்குமானால் சம அளவில் ஊடகங்களில் அவற்றுக்கான இடமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏன்? ஏனென்றால், இந்த சமூகம் எவ்வாறான சாதியப் படிநிலையைக் கொண்டிருக்கிறதோ, பெரும்பான்மைச் சமூகம் எத்தகைய சாதிய சிந்தனையில் ஊறிப் போயிருக்கிறதோ அதேதான் ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களிடமும் நிலவுகிறது. நீதியின் பொருட்டு கம்பீரமாக நிற்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சாதியின் பொருட்டு சிதைவுற்று சரிந்து கிடக்கிறது.
தமிழில் ஊழிக்காலம் என ஒரு சொற்றொடர் உண்டு. அப்படியெனில் உலகம் அழியும் காலமென்று பொருள். ஓர் ஊடகவியலாளராக இந்த ஊடகக்காலத்தை ஊழிக்காலமென்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் இச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் எதிர்மறையாக அவை கட்டுப்படுத்துகின்றன. இங்கே என்ன நடக்க வேண்டும், இன்று நான் எதை பற்றி பேச வேண்டும், ஒரு விஷயம் குறித்து எவ்வாறு நான் சிந்திக்க வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும், எதை நான் உண்ண வேண்டும், எதை நான் வாங்க வேண்டும் என தனி மனிதர்களின் மூளையை இயக்குவதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மையை சிதறடித்து அதிகார நியாயங்களுக்கு உட்பட்ட ஒருமுகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு நாள் விடியலிலும் அவை விதைப்பதுதான் இச்சமூகத்தின் அறுவடைப் பொருளாகிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவை எழுதுவதுதான் எல்லாவற்றுக்குமானத் தீர்ப்பாகிறது.
அரசின், ஆளும் வர்க்கத்தின், அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குரலாக இருந்து உயர நின்று தனி ராஜ்ஜியம் நடத்தும் மைய நீரோட்ட ஊடகங்கள் எளியவர்களுக்கானவை அல்ல, ஒடுக்கப்பட்டோருக்கானவை அல்ல, சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளுக்கானவை அல்ல. மிக நிச்சயமாக அவை தலித்களுக்கானவை அல்ல. மைய நீரோட்ட ஊடகங்களின் உரிமையாளர்களாக காட்சி / அச்சு பாரபட்சமின்றி ஏறக்குறைய 95 சதவிகிதத்துக்கும் மேல் ஆதிக்க சாதியினரே உள்ளனர். 70-80% வரை அவற்றின் முக்கியப் பொறுப்புகளை ஆதிக்க சாதி ஆண்கள் வகிக்கின்றனர். இந்தியா ஊடகங்களில் ஒரு சதவிகிதம் கூட முடிவெடுக்கும் அதிகாரத்தை தலித்கள் கொண்டிருக்கவில்லை. ஊடகங்களுக்குள் பன்முகத் தன்மை கொலை செய்யப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நியாயத்தையும் இடத்தையும் அவற்றிடம் எவ்வாறு பெற முடியும்? ஆங்கில ஊடகங்களில் குறிப்பாக பத்திரிகைகளில் அரிதாகவேனும் சாதி எதிர்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மொழிவாரி ஊடகங்களில் அதற்கான சாத்தியம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக கல்வி பெற்று வரும் தலித்களுக்கு அவர்களது, குடும்பச் சூழல், வளர்ந்து வந்த சமூகச் சூழல், நிறம், ஆங்கிலம் என பல விஷயங்கள் தடையாக இருப்பதால் மொழிவாரி ஊடகங்களில்தான் தஞ்சமடைகின்றனர். ஆனால், அங்கே அவர்கள் கவுரவமாக நடத்தப்படுவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, எழுதுவதற்கான வெளியோ பிற ஆதிக்க சாதியினர் அளவுக்கு வழங்கப்படுவதில்லை. ஊடகத்துறையில் பத்தாண்டு கால அனுபவம் பெற்றிருந்த நிலையில் நான் பணிபுரிந்த செய்திச் சேனலில் எனது சம்பளம் வெறும் ரூபாய் 18,000 தான். ஒரு டெய்லி ஷோவுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். என் வேலைக்கான நன்மதிப்பையும் பெற்றிருந்தேன். ஆனால், ஊதிய உயர்வுக்கான நேரம் வந்தபோது, எனக்கு ஒரு நூறு ரூபாய் கூட உயர்வளிக்கப்படவில்லை. என்னை விட அனுபவமும் வேலைப் பளுவும் குறைந்த எனது சக ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது. காரணம் அவரது சாதி. என் ஜூனியரின் சம்பளம் அப்போது ரூபாய் 40,000. இதுதான் ஊடகங்களில் சாதியத்தின் பங்களிப்பு. இந்த சூழலால் வருமானத்துக்காக தன்னை முடக்கிக் கொள்வது அல்லது ஊடகத்துறையை விட்டே போய்விடுவது என இரண்டே வாய்ப்புகள்தான் தலித் ஊடகவியலாளர்கள் முன் இருக்கின்றன.
15 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்பில் இதழியல் மாணவியாக எனது பல்கலைக்கழக பத்திரிகையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களின் கூலி உயர்வு போராட்டம், அதை தொடர்ந்த அரச பயங்கரவாதம் குறித்து எழுதினேன். 17 தலித்கள் கொல்லப்பட்ட கொடுமை அது. எனது கட்டுரையால் சஸ்பெண்ட் செய்யப்படும் நெருக்கடிக்கு ஆளானேன். எனது அந்த முதல் கட்டுரை தந்த அனுபவத்தால் சாதியை புரிந்து கொள்ளவும் தலித் மக்களின் துயரங்களை ஓர் ஊடகவியலாளராக வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் பேராவல் கொண்டேன். ஆனால் வேலை நிமித்தமாக மைய நீரோட்ட ஊடகங்களுக்கு வந்து சேர்ந்த போது, அங்கிருந்த சூழல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மொழிவாரி ஊடகங்களில் சமூக அரசியல் சார்ந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வேண்டாத விஷயமாகப் பார்க்கப்பட்டது. கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டாலே ஒழிய சாதியப் பிரச்னைகளுக்கு மைய நீரோட்ட ஊடகங்களில் இடம் கிடைப்பதே இல்லை. எடிட்டோரியல் போர்டில் நான் கொடுத்த ஐடியாக்கள் எல்லாம் குப்பைக்குப் போயின. என்னை ஓர் அதிகப்பிரசங்கியாகப் பார்க்கும் சூழல் உருவானது.
பத்திரிகையாளராக வேலையைத் தொடங்கியிருந்த சில மாதங்களில் ஒரு பெண்கள் பத்திரிகையில் செய்தியாளராக பணியில் அமர்ந்தேன். பல்வேறு சவால்களுக்கிடையில் சிறப்பாக செயல்படும் ஊராட்சித் தலைவிகள் குறித்து ஒரு தொடர் எழுதலாம் என ஒரு ஐடியாவை கொடுத்தேன். பெண்கள் பத்திரிகைக்கு உவப்பில்லாத தலைப்பிது என பல முறை நிராகரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊராட்சித் தலைவிகளின் பட்டியலை தயார் செய்துகொண்டு முதலில் சந்திக்க வேண்டிய ஐவரை தேர்ந்தெடுத்து அதில் முதல் நபராக காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவியான மேனகாவை சந்திக்க முடிவு செய்தேன். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என அப்போது எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணாக அவர் சந்திக்கும் சவால்களை கேட்க போன இடத்தில் அவர் ஆதிக்க சாதியினரால் தான் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்து விரிவாகப் பேசினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தன்னை அமரவிடாமல் அவர்கள் தடுப்பதாகக் குறிப்பிட்டார். பதவியிலிருந்து விலகும்படி தொடர்ச்சியானக் கொலை மிரட்டல்கள் வருவதால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஆனால் தனக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் முழுவதும் மேனகாவின் சவால்கள் குறித்து எல்லா தகவல்களையும் சேகரித்து முடித்து அலுவலகம் திரும்பினேன். மறுநாளே அதை கட்டுரையாக எழுதி எடிட்டரிடம் கொடுத்தேன். ஆனால் அந்த கட்டுரை ஒரு பெண்கள் பத்திரிகையில் இடம் பெறும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் சமையல் குறிப்புகள் எழுதி வர தொடர்ச்சியாக நிர்பந்திக்கப்பட்டேன். கடுமையான மன உளைச்சலில் வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணியபடியே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது மாலை பத்திரிகைகளின் போஸ்டர்களில் என்னை மயக்கமுற செய்யும் செய்தியைக் கண்டேன். ’பஞ்சாயத்துத் தலைவி படுகொலை’. கைகள் நடுங்கத்தான் செய்தித்தாளை வாங்கினேன். நான் பயந்தது சரிதான். மேனகா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்தவரை அரிவாளால் வெட்டிக் கொன்றிருந்தார்கள்.
அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு நேரே எடிட்டரிடம் போய் சண்டை போட்டேன். எந்த வகையில் என் கட்டுரை அதன் தகுதியை இழந்தது என கேட்டேன். அதற்கு அவர் தேவையில்லாமல் பதட்டமடையாமல் அவர் எனக்கிட்ட சமையல் குறிப்பு அசைன்மெண்ட்டை செய்து முடிக்கும்படி கட்டளையிட்டார். அலுவலக அனுமதியில்லாமல் அன்றிரவே ஊரப்பாக்கம் சென்று மேனகாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். மருத்துவமனையில் அவரது சடலத்தைப் பார்த்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நான் வேலை செய்த அதே குழுமத்திலிருந்து வந்த புலனாய்வு பத்திரிகை எடிட்டரிடம் மேனாகாவை பேட்டி கண்ட விஷயத்தைக் கூறி பிரசுரிக்குமாறு கேட்டேன். அது அன்றைய நாளின் பரபரப்புச் செய்தி என்பதால் இறுதிப் பேட்டி என அதை வெளியிட்டார்கள். அதன் பின்னர் என்னால் அங்கு பணிபுரிய முடியவில்லை. எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன். எனக்கு வேலையும் வேண்டும், ஆனால் நான் விரும்புகிற வகையில் சாதி எதிர்ப்பு இதழியல் பணியையும் செய்ய வேண்டும்…இரண்டும் ஓரிடத்தில் சாத்தியப்படாது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் சிறு பத்திரிகைகளை எனக்கானக் களமாக மாற்றிக் கொண்டேன். சாதி ஒழிப்பை ஒற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தலித் முரசு என்ற இதழோடு என்னை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். வெவ்வேறு புனைப்பெயர்களில் மைய நீரோட்ட ஊடகங்களில் பதிய சாத்தியப்படாத சாதியப் பிரச்னைகளை வெளிப்படையாக எழுதும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொண்டேன். 15 ஆண்டுகளாக நான் தலித் முரசு இதழில் எழுதியக் கட்டுரைகள் தான் ஜாதியற்றவளின் குரல் என்ற தொகுப்பாக தற்போது வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இது என் தனிப்பட்டக் கதை. ஆனால் இந்த வாய்ப்பும் சூழலும் என்னைப் போல எல்லோருக்கும் அமைந்துவிடாது. மைய நீரோட்ட ஊடகங்களில் செய்தியாளராக இருந்த வரை ஒவ்வொரு எடிட்டோரியல் மீட்டிங்கில் நிராகரிக்கப்பட்டாலும் நான் சாதிய அத்துமீறல்கள் குறித்து ஐடியாக்களை முன் வைப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தேன். ஆனால் யார் என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒரு பத்திரிகையாளராக குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டுமென்ற விதியை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். ஆனால் பொதுவாக தலித் ஊடகவியலாளர்கள் சாதிப் பிரச்னைகள் குறித்து எழுதவோ பேசவோ விழைந்தால், அது சுயசாதி மோகத்திலிருந்து வருவதாக சக ஊடகவியலாளர்களால் திரிக்கப்படுகிறது. உண்மையில், தலித்களுக்கு சாதி குறித்து பெருமிதம் கொள்வதற்கு ஒரு சின்னப் புள்ளி அளவிற்கான நியாயம் கூட இல்லை. சாதி என்பது அவர்கள் மீது திணிக்கப்பட்ட பேரிழிவு. சாதிய அத்துமீறல்கள் குறித்து எப்படியாவது பதிவு செய்துவிட வேண்டுமென நினைப்பது தலித் ஊடகவியலாளர்களின் சாதி எதிர்ப்பு மனநிலையின் விழைவே தவிர, சுயசாதிப் மோகமல்ல. இந்த பழிக்கு அஞ்சி என்னுடன் பணிபுரிந்த தலித் ஊடகவியலாளர்கள் பொதுவான அரசியல் நிகழ்வுகளில் காட்டுகிற ஆர்வத்தை சாதிப் பிரச்னைகளில் காட்டத் தயங்கினர். பலர் தமது அடையாளத்தையே மறைத்து ஒளித்து அதனால் உண்டாகும் மன உளைச்சலோடு முடங்கினார்கள். தலித்கள் சுதந்திரமாக பணி செய்கிற அளவிற்கான சமத்துவச் சூழல் ஊடக அலுவலகங்களில் இன்றும் கூட உருவாகவில்லை என்பது அவமானகரமானது.
தலித் ஊடகவியலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சாதிய அத்துமீறல்கள் ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில் அவர்கள் ஊடக அலுவலகங்களுக்கு வெளியே அதை நிகழ்த்துகிறவர்களின் ரத்த உறவாக இருக்கின்றனர். தி ஹூட் இணைய இதழுக்காக ஊடகவியலாளர் அய்ஜாஸ் அஷ்ரப் ஊடகங்களில் தலித்களின் நிலை குறித்து ஆய்வு செய்து விரிவானக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், தலித்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட தமது சமூகத்தின் நிலையை ஊடகப் பணியின் மூலம் வலுவாக்கும், தம்மை சூழ்ந்துள்ள சாதியப் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறார். மேலும் ஆங்கில ஊடகங்களை விட இந்தி மற்றும் பிற மொழிவாரி ஊடகங்களில்தான் தலித்கள் அதிகளவில் பணி செய்வதாகவும் ஆனால் அவர்கள் மீது அதிகளவிலான பாகுபாடு காட்டப்படுவதாக குறிப்பிடுகிறார். இதனால் வேலைப் பாதுகாப்போ வளர்ச்சிக்கான உத்திரவாதமோ இல்லாதததால் ஒருகட்டத்தில் ஊடகப் பணியை துறந்து ஏதேனும் ஒரு அரசு வேலையில் அவர்கள் தஞ்சமடைவதை உறுதி செய்கிறார். தலித் ஊடகவியலாளர்களின் பொருளாதாரப் பின்னணி இந்த முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.
அய்ஜாஸ் இந்த ஆய்வை மேற்கொண்ட சமயத்தில் என்னை தொடர்பு கொண்டார். அப்போது நான் ஒரு லைப் ஸ்டைல் இதழில் எடிட்டராக இருந்தேன். அவர் மீண்டும் மீண்டும் நம்ப முடியாமல், லைப் ஸ்டைல் இதழின் ஆசிரியராக ஒரு தலித் ஊடகவியலாளர் இருப்பது குறித்து ஆச்சர்யத்தோடு குறிப்பிட்டார். அப்போது இருந்த தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக என்னால் அவரது ஆய்வுக்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஆனால் அய்ஜாஸின் ஆச்சர்யம் என்னை வியப்புறச் செய்யவில்லை. ஏனெனில் ஒரு லைப் ஸ்டைல் இதழிலோ பெண்கள் இதழிலோ எடிட்டராவது என்னை பொறுத்தவரை எளிதானது. ஆனால் 15 ஆண்டு காலம் நான் சமூக அரசியல் சார்ந்த செய்தியாளராகக் களப்பணி ஆற்றியிருக்கிறேன் ஆனால் அடுத்த பத்தாண்டுகளிலேனும் சமூக அரசியல் சார்ந்த செய்திப் பத்திரிகையில் எடிட்டராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை. நான் இதை எனது எதிர்மறை எண்ணத்திலிருந்து சொல்லவில்லை. சமூக எதார்த்தத்திலிருந்தே முன் வைக்கிறேன். ஒரு தலித் ஊடகவியலாளரின் கைகளில் சமூக அரசியல் சார்ந்த பிரச்னைகளை வெளிக் கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைக்கும் துணிவு இன்னும் இச்சமூகத்திற்கு வரவில்லை. ஏனெனில் மிக வெளிப்படையாக சாதிய அத்துமீறல் குறித்த சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு நபரிடம் அப்படியொரு பொறுப்பு கொடுக்கப்படுமெனில் இச்சமூகத்தின் சாதி ஆதிக்கம் மைய நீரோட்டத் தளத்தில் அம்பலப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2006 ஆம் ஆண்டு நடந்த கயர்லாஞ்சி படுகொலை நாம் அறிந்ததே. இரு தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சியை, அதை தொடர்ந்த சித்ரவதைகளை ஊரே கொண்டாட்டத்தோடு நிகழ்த்திய அக்கொடுமை ஏன் நிர்பயா வழக்கைப் போல, பிற உயர்சாதி பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைப் போல தலைப்புச் செய்தியாகவில்லை, கவனத்தைப் பெறவில்லை? செய்தி அல்லாத, பிரச்னை அல்லாத விஷயங்களை எல்லாம் கத்திக் கூவி செய்தியாக்கும் ஊடகங்களுக்கு இந்த நாகரிக காலத்திலும் தொடரும், கையால் மலமள்ளும் இழிவு குறித்தோ, பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு சமைக்க மறுக்கும் தீண்டாமை குறித்தோ, நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தலித்களின் குடியிருப்புகள் குறித்தோ எந்த அக்கறையும் இல்லை. முதல் பக்க செய்தியாகும் தகுதியை இது போன்ற செய்திகள் என்றென்றைக்குமாக இழந்து நிற்கின்றன. உலகின் எந்த மூலையிலேனும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடைபெற்றால் அதை கண்டித்துக் கதறும் ஊடகங்கள் தன் சொந்த நாட்டில் தினம் தினம் சாதியின் பெயரால் நடந்தேறும் இனவெறித் தாக்குதல் குறித்து துளியளவும் அக்கறைப்படுவதில்லையே ஏன்? 2001 ஆம் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாட்டில் சாதியத்தை இனவெறியாக அங்கீகரிக்க வேண்டி ஐ.நாவிடம் தலித் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த இந்திய அரசு, சாதி எங்களது உள்நாட்டு பிரச்னை நாங்களே பார்த்துக் கொள்வோம் என பதில் அளித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மூர்க்கம் குன்றாமல், மனித உரிமைகள் அனைத்தையும் சிதைத்து இந்திய மண்ணில் பிறக்கிற ஒவ்வொரு தலித் குழந்தையின் முதுகிலும் குத்தப்படும் அடிமை முத்திரையை இன்றும் ஓர் உள்ளூர் பிரச்னையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது எத்தனை அயோக்கியத்தனம்?
தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானத் தீண்டாமை முறைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இரட்டை டம்ளர் முறை தொடங்கி கவுரவக் கொலை சாதிவெறியின் உக்கிரம் இத்தனை முன்னேறிய காலத்திலும் மட்டுபடவில்லை. நமது கிராமங்கள் இன்றும் ஊராகவும் சேரியாகவுமே பிரிந்து கிடக்கின்றன. அவற்றில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஆயிரமாண்டு ஒடுக்குமுறையின் நீட்சி என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். கல்வி கற்க விருப்பம் கொண்டதற்காக, நல்ல உடை அணிய முற்பட்டதற்காக, இருசக்கர வாகனம் வைத்ததற்காக, செருப்பு அணிந்ததற்காக, அடிமை வேலைகளை செய்ய மறுத்ததற்காகவெல்லாம் அவர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். மரணத்தை விட கொடிய தண்டனைகளை மனித உரிமைகள் குறித்த ஓர்மை அதிகரித்திருக்கும் இந்நாட்களில் அனுபவிக்கிறார்கள். தமிழகத்தின் திண்ணியத்தில் தனது கட்டளைக்கு அடிபணிய மறுத்த இரு தலித் ஆண்களின் வாயில் மலத்தைத் திணித்தார் ஓர் ஆதிக்கசாதிப் பெண். இத்தனை வன்மம் நிறைந்த சாதி அதே தன்மையோடு தலைமுறைகளுக்கு கைமாற்றப்படும் போது அதை எப்படி உள்ளூர் பிரச்னையாக நாம் சுருக்கிவிடவோ, ஒதுக்கிவிடவோ முடியும்? சாதி என்பது சிவில் பிரச்னை அல்ல. அதுவொரு தேசிய அவலம். தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் கொடிய நோய். ஆனால் சாதிய அத்துமீறல்கள் தனிநபர்களுக்கிடையிலான குற்றச் சம்பவங்களாக, வெறும் நிகழ்வுகளாக சுருக்கப்படுகின்றன. தேசிய ஊடகங்கள் மட்டுமல்ல உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை பெறும் வலு அவற்றுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.
ரோஹித் வெமூலாவின் கடிதம் ஆங்கிலத்தில், கவித்துவமான மொழி நடையில் இல்லையென்றால் அவரது (தற்)கொலை தேசிய ஊடகங்களில் இத்தகைய கவனத்தைப் பெற்றிருக்குமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. ரோஹித் வெமூலாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்த அய்யாறு என்ற இளைஞரும் சாதியின் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஒரு கடிதத்தோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். பஞ்சாயத்து அலுவலகத்தில் ப்யூனாக வேலை செய்த அய்யாறுவை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி பஞ்சாயத்து தலைவரான சாந்தி மற்றும் அவரது கணவரால் நிர்பந்திக்கப்பட்டார். தனது தற்கொலைக் குறிப்பில், ’’பயம் என்பது சிறுதுளி விஷம்’’ என குறிப்பிடுகிறார் அய்யாறு. ஆனால் ரோஹித்தின் மரணம் உண்டாக்கிய பரபரப்பில் ஒரு சதவிகித்தைக் கூட அய்யாறுவின் மரணம் கிளப்பவில்லை. ஏனெனில் அய்யாறுக்கள் அடிக்கடிக் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நம்மைப் போன்ற சாமானியர்களால். கிராமங்களில் சாதி இந்துக்களால் சேரிகளில் உழலும் தலித் மக்கள் படும் துன்புறுத்தல்களை எந்த ஊடகமும் பரபரப்பாக்குவதில்லை. அதுவொரு அத்துமீறலாகவே யாருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதற்கெதிராக எதிர்வினையாற்றுகிற அளவுக்கு நாம் தூண்டப்படுவதில்லை. ரோஹித்தின் கடிதத்தில் இச்சமூகம் உணர்ந்த அநீதியை அய்யாறுவின் கடிதத்தில் உணரவில்லை. ஏன் இப்படியொரு கடிதம் எழுதப்பட்டு அய்யாறு தற்கொலை செய்து கொண்டதே பலருக்கும் தெரியாது. அய்யாறு சொல்வது போல ஆண்டாண்டுகாலமாக தலித்கள் சுமக்கும் பயமானது சிறுதுளி விஷமே. அதுவே அதிகரிக்கும் போது பலதுளிகளாகி, பெருங்கடலாகிறது. இந்த பயமானது அய்யாறு என்ற தனி நபர் தன் வாழ்நாளின் எதிர்கொண்ட பயமன்று. பல நூற்றாண்டுகளாக தலைமுறைகளுக்கு கைமாற்றப்பட்டு அய்யாறுவிடமும் சேர்க்கப்பட்டது. தன் சாவின் மூலமாக அய்யாறு அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு போகிறார். சுதந்திர இந்தியாவில் நடந்த பல புரட்சிகளில், மாற்றங்களில் குறைந்தபட்சம் தலித் மக்கள் மனதிலிருந்து இந்த பயம் கூட போக்கப்படவில்லையே. இதில் ஊடகவியலாளர்களாக நமது பங்கும் பொறுப்பும் தான் என்ன?
ஊடகங்களின் இரக்கத்தை/கவனத்தைப் பெற தலித்கள் எதில் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்? சாதிய படுகொலைகளை ஊடகங்கள் எதிர்க்கின்றன என்றால் ஏன் ரோஹித் இடத்தில் அய்யாறு வைக்கப்படவில்லை? நாம் என்று அய்யாறுக்களின் கடிதத்தை படிக்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று அய்யாறுக்களின் பலிகளுக்கு நியாயம் கேட்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று நம்மை போன்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களை எதிர்க்கத் தொடங்குகிறோமோ அன்றுதான் ஊடகங்கள் தன் சொந்த உடலில் படிந்த அழுக்கை கழுவத் தொடங்கியிருக்கின்றன என்று அர்த்தம்.
இந்திய நாட்டில் ஓர் ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதியாக நான் கருதுவது சாதித் துறப்பு. ஆம், ஊடகப் பணிக்கு வருவோர் பல விதமான சமத்துவத்தையும் கடைபிடிக்கும் போது சாதியத்திலும் அதை செயல்படுத்த வேண்டும். அதாவது ஜாதியற்றவர்களாக, தீவிர சாதி எதிர்ப்பாளர்களாக இயங்க வேண்டும். பாலின சமத்துவத்தை ஆண்கள் கடைபிடிக்க வேண்டுமென நாம் விரும்புவதை போல, சாதி இழிவை வேரறுக்கும் நற்செயலில் ஆதிக்க சாதியினர் பங்கெடுக்க வேண்டுமென தலித் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, சாதிய அத்துமீறல்களை பதிவு செய்ய வேண்டுமானால் ஒரு தலித் ஊடகவியலாளர் வேண்டுமென கருதும் போக்கு நிலவுகிறது. சாதி ஒழிப்பில் தலித்கள் தான் ஈடுபட வேண்டுமென கருதுவது பாலின சமத்துவத்தை பெண்களிடம் கடைபிடிக்கச் சொல்லுவது போல வேடிக்கையானது.
நமது செய்தி அறைகளில் தலித்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். அதன் வழியே அவர்களது துயரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது எப்படி சாத்தியப்படும்? எத்தனை ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தியலைக் கொண்டுள்ளனர்? அரசு ஊடகங்களிலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாத போது தனியார் நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஊடகவியலாளர்களுக்கு என இயங்கும் அமைப்புகள் தமது உரிமைகளுக்கான கோரிக்கைகளுடன் சரியான பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதையும் தமது கடமையென கொள்ள வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் மீது செலுத்தப்படும் பாகுபாட்டை கண்காணிப்பது அதன் மீதான நடவடிக்கையை உறுதி செய்வது என நம்பிக்கையை விதைக்க வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் சுய மரியாதையோடும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையிலான ஊடகக் களத்தை உறுதி செய்து தரும் பொறுப்பை இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (NWMI) மாதிரியான அமைப்புகள் முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும்.
முதல் தலைமுறையாக கல்வி கற்று, ஆயிரமாண்டு அடிமை வாழ்வின் அத்தனை மனக் குமுறல்களை புறந்தள்ளி, ஆங்கிலம் கற்று, நேர்த்தியாக உடையணிந்து ஒரு சக மனிதராக ஊடக அலுவலகங்களுக்குள் நுழைந்து, அங்கே நிலவும் பாகுபாடுகளை சமாளித்து, வருமானத்திற்காக அந்த வேலையையும் தக்க வைத்து இதற்கிடையில் சாதிய அத்துமீறல்களையும் பதிவு செய்ய வேண்டுமெனில் அது எத்தனை சவாலானது? அய்ஜாஸின் ஆய்வு முடிவுகள் இந்த நெருக்கடியைதான் அம்பலப்படுத்துகின்றன. ஊடகங்களுக்குள் தலித்கள் சுதந்திரமாக செயல்படும் இந்த மாற்றம் நடக்க இன்னும் சில தலைமுறைகள் கடக்க வேண்டியிருக்கலாம்.
அதுவரை மைய நீரோட்ட ஊடகங்களிலும் தேசிய ஊடகங்களிலும் தலித்களுக்கான இடமே இருக்கப் போவதில்லை. அந்த வெற்றிடத்தை சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட தலித் அல்லாத சக ஊடகவியலாளர்களால் மட்டுமே நிரப்ப முடியும். நாம் வாழ்கிற இந்நாட்டை சாதியற்றதாக மாற்ற வேண்டிய பொறுப்பு முதன்மையாக தலித் அல்லாதவர்களுடையது. ஒரு குற்றத்திற்கும் வன்கொடுமைக்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள, ஆதிக்கம் குடிகொண்டிருக்கும் ஊர்களை விட்டு அவர்கள் அடிமைத்தனத்தின் புழுதிப் படர்ந்த சேரிகளுக்குள் காலடி வைக்க வேண்டும். அங்கே நிலவும் ஒடுக்குமுறைகளும் சாதிய அழுத்தங்களும் வறுமையும் உங்கள் கண்களுக்கு பட வேண்டுமானால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருக்க வேண்டும். ஆம் என் இறுதி கோரிக்கை இதுதான். நீங்கள் ஓர் ஊடகவியலாளராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருந்தே ஆக வேண்டும். ஏனென்றால் சாதியில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டவராக மாறும் போது, இங்கே நான் எதற்காக பேசிக் கொண்டிருக்கிறேனோ அந்த அற்புதம் நிகழும். நிச்சயமாக நிகழும். என்றோ ஒருநாள்.