வசூல் ராஜா, The Body Snatcher படங்களும் மனித சடலங்களும்! – 19ம் நூற்றாண்டு மருத்துவத்தின் இருண்ட பக்கம்!

‘வசூல்ராஜா’ படத்தில் ஒரு காட்சி உண்டு. கமல் ஏதேதோ தகிடுதத்தம் செய்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிடுகிறார். ஒரு நாள் பயிற்சி வகுப்பில் ஒரு சடலத்தைச் சுற்றி மாணவர்கள் அனைவரும் குழுமியிருப்பர். ஆசிரியர் அவ்வுடலை அறுத்து மாணவர்களுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி விளக்குவார். கூட்டத்தைத் தாண்டிப் பார்க்க முயலும் கமல் “கூட்டமாக இருப்பதால் எதையும் பார்க்க முடியவில்லை” என்று சொல்ல, உடனே ஆசிரியர் “உனக்கு வேணும்னா நீ தனி ஒரு பாடிய கொண்டு வந்துக்கோ” என்று சொல்வார். கெத்தாக அந்த இடத்தை விட்டு நகரும் கமல் உடனே பிரபுவுக்கு ஃபோன் போட்டு தனக்கு ‘ஃபிரஷ்’ஷாக ஒரு சடலம் வேண்டும் என்று கேட்பார்.

‘ஏழை இந்தியா’வைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜப்பான் இளைஞரைப் பார்த்தவுடன், “அண்ணே. இம்போர்டட் பாடி” என்று அவரை அடித்துத் தூக்கிக் கொண்டு வருவார் பிரபு. நல்ல வேளை, காமெடிப் படம் என்பதால் பார்த்து ஏதோ சிரிக்க முடிகிறது. சும்மா அடித்து மட்டும் தூக்கிக் கொண்டுவரப்படும் அந்த ஜப்பானியர் மருத்துவமனையில் திடீரென விழித்து அனைவரையும் துரத்திக் கொண்டு ஒரு களேபரத்தை ஏற்படுத்த, படத்தில் அப்பகுதி சுபமாக முடிகிறது.

Vasool Raja MBBS (2004)

நாம் எளிதாகக் கடந்துபோன இக்காட்சியும் அதன் உள்ளடக்கமும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பல்வேறு கொடூரக் கொலைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்தக் காலகட்டத்தையே கலக்கியது, பர்க் மற்றும் ஹேரின் கொலைகள். இக்கொலைகளுக்குச் செல்லும் முன் ஐரோப்பாவில் நிகழ்ந்த கலை, அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சி பற்றியும், அவற்றிற்குத் தடையாக அமைந்த நிறுவன மதங்கள், நம்பிக்கைகள் ஆகியவை பற்றியும் அறிவது அவசியம்.

ஐரோப்பியக் கலை பற்றிப் பேசும்போதெல்லாம் மறுமலர்ச்சிக் காலத்து ஓவியங்களும் சிற்பங்களும் நம் மனக்கண் முன் எழும். மைக்கலேஞ்சலோ, ரஃபேல், டாவின்சி போன்றோர் பெரும்புகழ் பெற்று பல துறை வித்தகர்களாகத் திகழ்ந்தவர்கள்; இவர்கள் அக்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைகள் ஆவர். அவர்களது படைப்புகள் விதந்தோதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதுவரை இருந்த ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணப்பெறாத முப்பரிமாணத்தை இவர்களது கலைப் படைப்புகள் வெளிக்கொண்டு வந்தன.

முப்பரிமாண உலகை இரு பரிமாணச் சட்டகமான ஓவியத்தில் கொண்டு வரும் முயற்சியில் அதுவரை காணப்பெறாத ஆழம் என்னும் அம்சத்தை மறுமலர்ச்சிக் காலத்து ஓவியங்களில் காணலாம் (Depth Effect – கோம்பிரிச்சின் நூலும் ஜான் பெர்கரின் ‘Ways of Seeing’ என்னும் ஆவணப்படமும் இது பற்றி மிகத் தெளிவாக விளக்கும்). மேலும் மனித உடல்களை மிகச் சரியான அளவைகளோடு முதன்முதலில் சித்தரித்தவைகளாக இப்படைப்புகள் முன்னிறுத்தப்படுகின்றன. மைக்கலேஞ்சலோவின் சிற்பங்களில் மனித உடல்கள் அதன் அத்தனை அம்சங்களுடனும் நுணுக்கங்களுடனும் திகழ்வது பற்றி கலை விமர்சகர்களும் அவரது இரசிகர்களும் குறிப்பிடுவர்.

Anatomy Lesson by Dr. Willen van der Meer (1617) by Michael Jansz Van Mierevelt

15, 16-ம் நூற்றாண்டுகளில் மருத்துவத் துறை கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. மனித உடல்கள் மீது நிகழ்த்தப்பெற்ற சோதனைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. உடற்கூறியல் (Anatomy) துறை அதிவேகமாக வளர்ச்சிபெற்றது. புனிதமும் தீமையும் (Sacred and Evil) ஒன்றுடன் ஒன்று இணைந்தது. சாத்தான் அல்லது லூசிபர் வீழ்ச்சியுற்ற ஒரு தேவதை எனும் உருவாக்கத்தை இதன் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். பிதாவின் செல்லப் பிள்ளை புனிதமற்ற எல்லாவற்றையும் உருவகித்து நிற்கிறான். அதுபோல உயிர் நீங்கிய உடல் ஒரே நேரத்தில் புனிதத்தின் குறியீடாகவும் தீமையின் உருவகமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் கல்லறைகளின் புனிதம் மற்றும் புனிதமற்ற தன்மை காப்பாற்றப்பட்டுக்கொண்டே வருகிறது.

இறந்த பிறகு மனித உடல்கள் கிறித்தவ மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. வேறொரு உலகத்துக்கு அவ்வுடலைத் தாங்கியோர் செல்ல இதன்மூலம் வழியேற்படுத்தப்படுகிறது. உடல் பற்றிய இந்தப் புனிதத்தை மறுமலர்ச்சி காலக் கலைஞர்களும் அறிவியலாளர்களும் மீறுகின்றனர். உடற்கூறியல் என்ற துறை கொஞ்சம் கொஞ்சமாக இக்காலத்தில் வளர்ச்சி பெறுகிறது. மிருகங்களின் உடல்களில் அதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் போதவில்லை என்று மருத்துவ அறிஞர்கள் மனித சடலங்களில் ஆய்வு செய்தனர். மனித சடலங்களின் மீது ஆய்வு செய்ய கிறித்தவம் அனுமதிக்காததால் அவர்கள் கல்லறைக்குச் சென்று அங்கு புதைக்கப்பட்டிருக்கும் உடலைத் தோண்டியெடுத்து அவற்றை ஆய்வு செய்யத் தொடங்குகின்றனர். இதனால் மருத்துவத் துறையில் பல்வேறு வகையான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. மறுமலர்ச்சிக் கால ஓவியங்களும் சிற்பங்களும் மனித உடல்களைத் தெளிவாகச் சித்தரிப்பதற்கு ஏதுவாக அமைந்த பின்னணி இதுவே. மைக்கலேஞ்சலோவும் டாவின்சியும் மருத்துவர்களைப் போலவே கல்லறைகளைச் சிதைத்து உடல்களைத் திருடி அதில் ஆய்வு செய்து தங்களது கலையை அமைத்தனர் என்று கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லறையைச் சிதைத்து உடல்களைத் திருடும் இந்தப் போக்கு மக்களுக்கும் மதத்துக்கும் அரசுக்கும் பேரச்சம் விளைப்பதாய் இருந்தது. அக்காலத்தில் மதங்களும் அரசுகளும் சந்தித்த சவால்கள் எண்ணிறந்தவை. சீர்திருத்தக் கிறித்தவத்தின் வருகையால் கத்தோலிக்கம் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். போர்களால் அரசுகள் கலக்கமுற்றிருந்த காலம். இந்தப் போக்கினால் கலக்கமடைந்த பல ஐரோப்பிய அரசுகள் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக ஏழை எளியோர், ஆதரவற்றோர், ஏதிலிகள், தற்கொலை செய்தோர், சிறையில் மரித்தோர் என்று கேட்க ஆளில்லாதவர்களது உடல்களை வழங்கின. உடல்கள் மீதும் உயிர்கள் மீதும் அரசு கொண்டுள்ள உரிமையின் அடிப்படையிலேயே அதன் இறையாண்மை கட்டமைக்கப்படுகிறது. அறிவியல் மருத்துவத் துறைகளின் வளர்ச்சிக்கு அரசு அளிக்கும் இந்த ‘தான’த்தில் அதன் இறையாண்மை வெளிப்படுகிறது. ஆனாலும் இந்த ‘தானம்’ வளர்ந்து வந்த மருத்துவத் துறைக்குப் போதவில்லை. அதனால் பல வண்டியோட்டிகளிடம் மருத்துவர்கள் இரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டனர். புதிதாகப் புதைக்கப்பட்ட பிணத்தை இரவோடு இரவாக தோண்டியெடுத்துக் கொண்டு வர வேண்டும். அதற்குத் தகுந்த சன்மானத்தை மருத்துவர்கள் இவ்வண்டியோட்டிகளுக்கு வழங்குவர். இவர்கள் Body Snatchers என்றும் Resurrection Men என்றும் அழைக்கப்பட்டனர். இதனால் கலக்கமடைந்த மக்கள் கல்லறைகளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்களையும் கல்லறைகளைக் கண்காணிப்பதற்கு காவலர்களையும் நியமித்தனர். அதற்கு வசதியில்லாத மக்களுக்கு வேறு வழியில்லை. அப்படியே விட்டுவிட வேண்டியதுதான். இதில் இனக்குழுவும் வர்க்கமும் ஆற்றிய பங்கு முக்கியமானது. அமெரிக்காவில் கறுப்பினத்தோரின் கல்லறைகளும் பூர்விக அமெரிக்கர்களின் (Native Americans – செவ்விந்தியர் / பழங்குடி இந்தியர் / பூர்விக இந்தியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) கல்லறைகளுமே அதிகம் சிதைக்கப்பட்டன. வெள்ளை இனத்தோரின் கல்லறைகள் கொள்ளையடிக்கப்பட்டால் அது பெரும்பாலும் வசதியற்ற ஏழை உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தோரின் கல்லறைகளே சிதைக்கப்பட்டன. காரணம் அக்காலத்தில் வெவ்வேறு இனத்தோருக்கு தனித்தனிக் கல்லறைகள் அமைக்கப்பட்டதுதான். நம்மூரில் சாதிக்கொரு கல்லறை என்பது போல ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களிலும் வசிப்பிடமும் கல்லறைகளும் காலம் காலமாகப் பிரித்துவைக்கப்பட்டே வந்தன.

Original caption: Picture shows body snatchers stealing a corpse from the grave. Undated engraving. BPA2# 1023. — Image by © Corbis

நிற்க. இது ஒரு புறம். நவீன காலத்துக்கு வருவோம். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கில்தான் நமது கதை நிகழ்கிறது. ஏற்கனவே சொன்னதுபோல உடல்களுக்கான தட்டுப்பாட்டால் கல்லறையைச் சிதைத்து உடல்களைத் திருடுதல் மிக முக்கிய வணிகமாக வளர்ச்சி பெற்றது. இராபர்ட் நாக்ஸ் (Robert Knox 1791-1862) என்னும் மருத்துவர் ஹாரி மற்றும் பர்க் ஆகிய இரண்டு நபர்களிடம் சடலங்களைப் பெற்றுக்கொண்டு வந்தார். ஹேர் ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கு இறந்த சிலரை நண்பரான பர்க் உதவியுடன் நாக்ஸின் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு சென்று விற்றார். இந்த வணிகத்தின் மூலம் அவர்கள் ஈட்டிய வருவாயினால் உந்தப்பெற்ற பின்னர் எளிய மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர். கிட்டத்தட்ட பதினாறு பேரைக் கொலை செய்துள்ளனர். இதில் ஒரு கிழவியும் அவளது சிறு பேரனும் அடக்கம். முதலில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மனிதர்களை தனது வீட்டுக்குள் அழைத்துவந்து அவர்களுக்கு விஸ்கி ஊற்றித் தருவார்கள். அவர்களுக்கு நன்கு போதையேறிய பின்னர் பர்க் தனது கைகளால் அவர்களது மூக்கையும் வாயையும் பொத்திக் கொல்வார். இக்கொலைகள் நடந்த பிறகு உடல்களை நாக்ஸ் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்வர். அங்கு அவ்வுடல்களை உருத்தெரியாமல் பகுதி பகுதியாக வெட்டி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார் நாக்ஸ். இத்தனையிலும் நாக்ஸ் தமக்கு எதிலும் பங்கில்லாதது மாதிரியே இவர்களிடம் இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டார். ஒரு கொலையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் இவ்விருவரைக் கைது செய்த காவலர்கள் இவர்கள் கூறிய சம்பவங்களைக் கேட்டு உறைந்தனர். ஹேர் அப்ரூவராக மாறிவிட்டார். பர்க்குக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அக்காலத்தையே கலக்கிய மிகப்பெரும் சம்பவமாகவும் மிகப்பெரும் விசாரணையாகவும் இது இருந்தது. மரண தண்டனைக்குப் பின்னர் பர்க்கின் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது எலும்புக்கூடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் இன்றும் பொதுப்பார்வைக்கு அவரது எலும்புக்கூடு கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இராபர் நாக்ஸ் எவ்வித தண்டையையும் சந்திக்காமல் தப்பித்து விட்டார். அவரது பதவியும் புகழும் இக்கொடுங் குற்றத்தில் அவரது பங்கு நிரூபிக்கப்படாததாலும் அவர் எந்தவித தண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டார்.

இதன் அடிப்படையில் Treasure Island நாவல் புகழ் ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson) 1884-இல் ‘The Body Snatchers’ என்று ஒரு சிறுகதையை எழுதினார். அதில் ஒரு காட்சியில் இராபர் நாக்ஸ்-இன் மருத்துவ மாணவர்கள் இருவர் ஒரு மதுக்கூடத்துக்கு வந்து க்ரே என்பவருடன் பேசிக்கொண்டிருப்பர். அதில் ஒரு மாணவருக்கு க்ரே ஏற்கனவே பரிச்சயமானவர். அம்மாணவருக்கு க்ரேவைச் சுத்தமாகப் பிடிக்காது. அப்போது க்ரே ‘’Hear him! Did you ever see the lads play knife? He would like to do that all over my body’ என்று தன்னை வெறுக்கும் மாணவரைக் காட்டி இன்னொரு மாணவரிடம் சொல்வார். அதைப் பார்த்து சிரிக்கும் அந்த மற்றொரு மாணவர் ‘We medicals have a better way than that. When we dislike a dead friend of ours, we dissect him’ என்று சொல்வார். அதைப் பார்த்து அந்த மாணவர் பொருள் பொதிந்த பார்வையை வழங்குவார். ஒரு கட்டத்தில் அந்த சிறுகதை இயற்கைக்கு அப்பாற்பட்ட (supernatural) ஒரு கதையம்சத்தை எடுக்கும்.

The Body Snatcher (1945)

இக்கதையை சற்று உருமாற்றி The Body Snatchers என்ற ஒரு திரைப்படம் 1945ல் எடுக்கப்பட்டது. ஃப்ராங்கன்ஸ்டைனின் அரக்கனாக (Frankenstein’s Monster) நடித்துப் புகழ் பெற்ற போரிஸ் கர்லாஃப் இப்படத்தில் க்ரே கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். 1931ல் வெளிவந்த ஃப்ராங்கன்ஸ்டைன் படத்தைப் போலவே இப்படத்திலும் திகிலூட்டும் வண்ணம் ஒளியும் நிழலும் அமைக்கப்பெற்றிருக்கும். சிறுகதையிலும் சரி படத்திலும் சரி நாக்ஸ் கதையும் பர்க் மற்றும் ஹேர் கொலைகள் பற்றியும் மீண்டும் மீண்டும் குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். இராபர்ட் நாக்ஸ் Mr. K என்று கதைகளில் குறிக்கப்பெறுவார். ஆங்கிலத்தில் Burke என்றொரு வினைச்சொல் இந்தச் சம்பவங்களினால் உருவானது. மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்தல் என்பது அச்சொல்லின் பொருளாகும். ஒருவர் செய்த கொடுஞ்செயல் ஒரு வினையையே சுட்டி நிற்கும் நிலையை அடைந்திருக்கும் அளவு ஆங்கிலச் சமூகத்தில் இத்தாக்கம் நிலவியது. இச்சம்பவத்துக்குப் பின்னர் ஆங்கிலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றுள் முதன்மையானது மருத்துவர்களுக்குத் தேவையான சடலங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகும். பின்னர் கொடுஞ்செயல் செய்பவர்களுக்குத் தண்டனையாக அக்காலத்தில் வழங்கப்பெற்ற Dissection and Display – அதாவது இறந்த குற்றவாளி உடலில் அறுவை சிகிச்சை செய்து பின்னர் அவரது எலும்புக்கூடுகளைப் பொதுப்பார்வைக்கு விடுவது தவிர்க்கப்பட்டது.

ஃபூக்கோ தனது Discipline and Punish-இல் கூறுவது போல் தண்டனைகள் மென்மையாக்கப்பட்டு ஒழுக்கவிதிகள் கூர்மையாக்கப்பட்டன. ஒழுக்கமே தண்டனையாகத் திரிந்தன. ’வசூல்ராஜா’ திரைப்படத்தில் நடந்த அந்த காமெடிக் காட்சி நமக்குப் பெரியளவிலான தாக்கத்தை உண்டாக்காததற்கு முக்கியக் காரணம், அவ்விடத்தில் சடலமாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘மற்றமை’ என்னும் அடையாளத்தை ஏற்றிருப்பதாலேயே ஆகும். ஒருவேளை ‘ஏழை இந்தியா’வைப் படம் பிடிக்க வந்தவருக்குப் பதில் ‘ஏழை இந்தியா’வைச் சார்ந்தவர் யாரேனும் சடலமாக்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் நமது எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?

இறந்த உடல் எப்போதும் மற்றமையாக்கப்பட்டே வந்துள்ளது. அதே சமயம், அந்த உடல் உயிருடன் இருக்கும்போதே மற்றமையாக்கப்படும் பட்சத்தில் அதனை மாய்ப்பதும் எளிமையாகிவிடுகிறது.

-மா.க.பாரதி
ஆய்வு மாணவர்,
அசோக பல்கலைக்கழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.