இது திரைப்பட விமர்சனமில்லை. மனிதாபிமானமும் செயல்திறனும் மிக்க ஒரு மருத்துவரான பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ (ஆங்கிலத்தில் Red Tea) நாவலை பாலாவும் நாஞ்சிலும் ‘பரதேசி’யாகப் படமாக்கியது பற்றி ஒரு குறிப்பு. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது அவை முற்றிலும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாத அளவிற்கு வெவ்வேறு புதிய வார்ப்புகளாகி விடுகின்றன என்பது அறிந்ததே. இரண்டு ஊடகங்களின் இலக்கணங்களும் வேறு வேறு. ஒரு நல்ல நாவல் மோசமான திரைப்படமாகவும், ஒரு மோசமான நாவல் மிகச் சிறந்த திரைக்காவியமாகவும் அமையும் வாய்ப்புண்டு. நாவலைத் திரைக்கதை ஆக்கும்போது பல மாற்றங்கள் தவிர்க்க இயலாதது என்கிற அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு ஒரே ஒரு கேள்வியை மட்டும் பாலா-நாஞ்சில் கூட்டின் முன் வைக்கிறேன்.
இப்படத்திற்கு விமர்சனம் எழுத வந்த பலரும் சுட்டிக்காட்டும் ஓரம்சம் குறித்த கேள்விதான் அது. என்ன தேவைக்காக நாவலில் வருகிற மனிதாபிமானம் மிக்க ஒரு அற்புதமான மருத்துவக் கதாபாத்திரத்தை, ஒரு மதம் மாற்றும் கிறிஸ்தவக் கோமாளியாக மாற்றினீர்கள்? எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமைத் தோட்டத் தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு பலசரக்குக் கடைக்காரனை (நாவலில் காளிச் செட்டி) ஒரு முஸ்லிமாகவும் மாற்றிச் சித்திரித்திருப்பது எதற்காக? இவற்றின் மூலம் கலாபூர்வமாகவோ அல்லது அறவியல் அடிப்படையிலோ என்ன சாதித்துள்ளீர்கள்?
நாவலில் அந்த டாக்டர் வேறு யாருமல்ல. பி.எச்.டானியல்தான் என்பதை வாசிக்கும் சிறு குழந்தையும் உணரும். 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் டாக்டராக, இயற்கையின்மீது தீராக் காதல் கொண்டவராக, சக ஊழியர்களுடன் சாதி, மத வேறுபாடு இல்லாமல் கனிந்து பழகுபவராக, தனது மருத்துவ ‘அதிகாரத்தை’ அதன் எல்லைக்குள் நின்று அப்பாவி மக்களின் நலனுக்குப் பயன்படுத்துபவராக, ஊழல் அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசும் மனசாட்சி உடைய மனிதராக, பெயர் ஒன்றைத் தவிர வேறு எந்த அம்சத்திலும் கிறிஸ்தவ அடையாளத்தைச் சுமக்காதவராக, இத்தனைக் கொடூரங்களுக்கும் மத்தியில் இன்னும் கூட மனிதத்தன்மை எஞ்சியுள்ளது என்பதன் அடையாளமாக நாவலில் வந்துபோகும் ஒரு பாத்திரத்தை இப்படி மாற்றுவதற்கு எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது?
1984ல் டெல்லியில் சீக்கிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளை நேரில் கண்ட எழுத்தாளர் அமிதவ்கோஷ் அந்த அனுபவம் குறித்து எழுதிய ஒரு கட்டுரையை முன்பொரு சந்தர்பத்தில் முகநூலில் எழுதியிருந்தேன். ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் அந்தக் கொடூரங்களுக்கெல்லாம் அப்பால் அங்கு சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து கசிந்த மனிதாபிமானமே தன்னை ஈர்த்தது எனக் கூறிய அமிதவ் அது எவ்வாறு தனது அடுத்த நாவலில் வெளிப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருப்பார். தன் கண் முன் எவ்வாறு இரு சீக்கியர்கள் கொலைக் கும்பல்களிடமிருந்து இந்துக்களால் காப்பாற்றப்பட்டனர் என அவர் விவரித்திருப்பதை வாசித்தபோது என் கண்கள் கலங்கின. ஆனால் நிச்சயமாகச் சொல்கிறேன் நாஞ்சில், பாலா நீங்கள் ஒருவேளை அதைப் படித்திருந்தாலும் கூட உங்களின் இரும்பு மனத்தில் நிச்சயம் அத்தகைய கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இன்னும் எஞ்சியுள்ள மனிதத்தை உமது சாதி, மத அடையாளங்களிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும் விடுபடாத மனங்கள் அடையாளம் காணாதது வியப்பில்லை. அடையாளம் காணாதது மட்டுமல்ல, உங்களின் வக்கிர மனம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் இங்கு வெளிப்பட்டுள்ளது. பாலாவின் அத்தனை படங்களிலும், நாஞ்சிலின் அத்தனை கதைகளிலும் இந்த வக்கிரத்தை அடையாளம் காட்ட இயலும்.
இத்தனைக்கும் அந்த நாவல் எந்த வகையிலும் கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிக்கும் நாவலல்ல. முழுக்க முழுக்க வெள்ளை ஏகாதிபத்தியச் சுரண்டலையும், அதற்கு உடன்பட்டு எடுபிடிகளாக இருந்து மேற்கொள்ளப்பட்ட கங்காணிக் கொடுமைகளையும் மனிதாபிமான நோக்கில் பதிவு செய்யும் ஒரு நாவல். பாலியல் சுரண்டல் உட்பட அத்தனை கொடுமைகளையும் செய்கிற வெள்ளை அதிகாரிகள் இருவரும் கிறிஸ்தவர்களே. சுரண்டப்படும் அப்பாவி அடிமைத் தொழிலாளிகள் அத்தனை பேரும் தலித்களே.
ஒரு நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர் என்பதெற்கெல்லாம் அப்பால் முதலில் நீங்கள் நல்ல மனிதர்கள்தானா என்பதுதான் இப்போது கேள்வி.