1
‘Fascism attempts to organize the newly created proletarian masses without affecting the property structure which the masses strive to eliminate. Fascism sees its salvation in giving these masses not their right but instead a chance to express themselves. The masses have a right to change property relations; Fascism seeks to give them an expression while preserving property. The logical result of Fascism is the introduction of aesthetics into political life. The violation of the masses, who Fascism, with its Fuhrer cult, forces to their knees, has its counterpart in the violation of an apparatus which is pressed into the production of ritual values.’
-Walter Benjamin, “The Work of Art in the Age of Mechanical Reproduction,” 1935
வால்டர் பெஞ்சமின் எழுதிய இந்த வரிகளோடு தொடங்குகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ‘பிம்பச்சிறை’. எம்.ஜி.ஆர் என்னும் சினிமா நட்சத்திரம் வெகுமக்கள் கலாச்சாரத்திலும், தமிழக அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிப்பதன் வழியாக, தமிழ்ச் சமூகத்தில் ஒரு நடிகர் திரைப்படங்களில் உருவாக்கப்பட்ட ஹீரோ பிம்பத்தையும், திரைக்கு வெளியே நன்கு கட்டமைக்கப்படும் பிம்பத்தையும் பயன்படுத்தி மக்களைச் சிறைப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ‘பிம்பச்சிறை’. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி படுகொலை, உலகமயமாக்கல், மண்டல் கமிஷன், தொண்ணூறுகளில் நிகழ்ந்த இந்துப் பெரும்பான்மைவாதத் திரட்சி அரசியல், பாபர் மசூதி இடிப்பு, சாதிய வன்கொடுமைக் கலவரங்கள், தலித் இயக்கங்களின் எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, குஜராத் இஸ்லாமியர் இனப்படுகொலை, ஈழத்தமிழர் இனப்படுகொலை, காவிரி நதிநீர் விவகாரம், மோடியின் வளர்ச்சி, ஜெயலலிதா மரணம், கலைஞர் மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், மாநில உரிமைகள் இழப்பு, நீட் விவகாரம், சூழலியல் சார்ந்த பிரச்னைகள் எனப் பலவற்றைக் கடந்த பிறகு, தமிழக அரசியல் சூழல் மீண்டும் பிம்பங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தனது முதல் பேச்சிலேயே தனது தற்போதைய எதிரியாக திமுகவைக் குறித்திருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பிஜேபி ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, திமுகவை நேரடியாக எதிர்க்கும் புதிய சக்தியாக தன்னை வரித்துக் கொள்ளும் முயற்சியை விஜயின் இந்த உரையில் காண முடிகிறது. திமுகவின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் என்று கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சாதித்த பிறகு, உதயநிதி vs விஜய் என பிம்ப அரசியலுக்குள் சிக்கியிருக்கிறது தமிழக அரசியல்.
தென்னிந்தியாவில் காலனிய கால சினிமாவில் பெரும்பாலும் புராணக் கதைகளே சொல்லப்பட்டாலும், அவை இந்தியத் தேசியக் கருத்தாக்கங்களை, குறிப்பாக காலனிய எதிர்ப்புக் குறியீடுகளை மக்களிடையே விதைத்தன. காலனிய வெளியேற்றத்திற்குப் பிறகு, சினிமாவின் இந்தப் பண்பை திராவிட இயக்கம் கைப்பற்றிக்கொண்டது. ஒன்றிய அரசால் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட, திராவிட இயக்கம் தமிழ் அடையாளத்தை சினிமா மூலமாக கட்டமைக்கத் தொடங்கியது. திராவிடர்/தமிழர் வீழ்ச்சி, தமிழர் பெருமிதம், தமிழ்ப் பெண்ணின் கற்பொழுக்கம் முதலானவை திரைப்படங்களில் காட்சிகளாகின. 1956 மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, இந்தியத் தேசிய அடையாளத் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் பிரச்னைகள் என்னவென்பதும், அவற்றை திரைக்களத்திற்குள் ’தமிழ்’ நாயகன் மூலமாக தீர்த்துக்கொள்ளும் கதையாடல்களின் காரணமுமாகவே அதே நாயகனை தங்கள் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் தேடியதாகக் குறிப்பிடுக்கிறார் திரைப்பட ஆய்வாளர் மாதவ பிரசாத்.
ஒரு தேசியம் கட்டமைக்கப்படுவதில் இலக்கியங்கள், ஊடகங்கள், சினிமா ஆகியவற்றிற்குப் பெரும் பங்குண்டு. இந்தியத் தேசியத்திற்கு எதிராக தமிழ் அடையாளத்தை உற்பத்தி செய்வதில் திராவிட இயக்கத் திரைப்படங்கள் வெற்றிகரமாக இருந்திருக்கின்றன. அண்ணா, கலைஞர் முதலான கருத்தியல் தெளிவுகொண்ட ஆளுமைகளால் தம் கருத்தை வெளிப்படுத்த முயன்றாலும், திரையில் இருந்த பிம்பமான எம்ஜிஆர் 1970களில் திராவிட இயக்கம் உருவாக்கியிருந்த வெகுஜன மக்கள் திரட்சியை ஏறத்தாழ அதே கொள்கை முழக்கங்களுடன் சுரண்டத் தொடங்குகிறார். கலைஞர் கருணாநிதி எம்ஜிஆரின் இடத்தில் தன் மகன் மு.க.முத்துவை நிரப்ப முயன்றதும் இந்த மக்கள் திரட்சியை வெல்லும் நோக்கில்தான். எம்ஜிஆரின் ஆட்சிக் காலம் முழுவதும் திராவிடக் கொள்கை நீர்த்துப் போகத் தொடங்கியதோடு, முழு சர்வாதிகார ஆட்சியாகவும் வெளிப்பட்டது. பின்னாள்களில் ஜெயலலிதா இதே பாதையில் பயணித்தார். இந்த இருவரின் ஆட்சிக் காலங்களை ’பாசிஸ்ட் ஆட்சி’ என வர்ணிக்கும் அளவிலான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உண்டு.
இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பை ஒப்பிடுகையில், திராவிட இயக்கம் வெகுஜன மக்களை ஈர்க்கும் பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன. எனினும், அவை பெரும்பாலும் நிலவும் அமைப்புமுறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகளாக மட்டுமே சுருங்கிக்கொண்டதால், மக்களின் அன்றாடப் பிரச்னைகளில் பெரிதளவில் மாற்றம் ஏற்படாதது 1980களின் கலைப் படைப்புகளில் வெளிப்பட்டன. எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற திரைப்பட இயக்குநர்கள் பத்தாண்டுக்கும் மேலான திராவிட இயக்க ஆட்சியை விமர்சித்தனர். 1980களில் எம்ஜிஆரின் ஆட்சியை விமர்சித்து, எஸ்.ஏ.சந்திரசேகரோடு ‘இது எங்கள் நீதி’, ’நீதிக்குத் தண்டனை’ ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதினார் கலைஞர் கருணாநிதி. இந்தக் காலகட்டத்தில், இத்தகைய திரைப்படங்களின் வழியாக உருவான மற்றொரு நாயக பிம்பம் விஜயகாந்த். அவரது அரசியல் வருகை, அதன் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை வேறொரு தனிக்கதை.
தமிழ் சினிமாவின் உள்ளடக்கம், அதை மக்கள் உள்வாங்கும் தன்மை முதலானவை ஒட்டுமொத்தமாகவே ஆண் மையவாதம், தமிழ் அடையாளப் பெருமிதம், தொண்ணூறுகளுக்குப் பிறகு இந்திய அடையாளப் பெருமிதம், சிறுபான்மையினர், ஒடுக்கப்படும் சமூகங்களின் மற்றமையாக்கல் முதலானவற்றை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும் அவற்றின் உச்சமாக, பிம்பங்களை தலைவர்களாக மாற்றும் பண்பை மேற்கொண்டிருக்கிறது. கல்வியறிவு பெறாத மக்களை மனதில் கொண்டு இந்த விவகாரத்தை இதுவரை அணுகினாலும், இதுவரை ஒரு எம்ஜிஆர் திரைப்படத்தையும் திரையரங்கத்தில் கண்டிராத, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் பிறந்த தலைமுறையினர் விஜய் பின்னால் திரண்டிருப்பதும், உதயநிதி படத்தை பாக்கெட்டில் வைத்தபடி வலம்வருவதும் தமிழ்ச் சமூகத்தின் சமகால அரசியலின் துன்பியல் யதார்த்தமாக மாறியிருக்கின்றன.
2
நடிகர் விஜய் கலைஞரை எதிர்த்தோ, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தோ தீவிர அரசியலில் இறங்கவில்லை. திமுகவின் அதிகாரத்தின் திறவுகோல் ஏறத்தாழ உதயநிதி ஸ்டாலின் கையில் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆக, விஜய் எதிர்க்கப் போவது உதயநிதியைத்தான். உதயநிதி கல்லக்குடியின் தண்டவாளத்தில் தலையை வைத்துப் போராடிய கலைஞரோ, மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடக்குமுறைக்குள்ளான மு.க.ஸ்டாலினோ அல்ல. தன் குடும்பச் சொத்தாக மாற்றியமைக்கப்பட்ட திமுக என்னும் முதலாளித்துவக் கட்சியை, அதன் நவீன பண்ணையார் மனோபாவங்களோடு வாரிசுரிமையால் பெற்றிருப்பவர் உதயநிதி. அவரது பிரபல்யமும் சினிமா மூலமாக கடந்த பத்தாண்டுகளாக வளர்க்கப்பட்டவை.
எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த் பாணியில் விஜயை தொண்ணூறுகளில் அரசியல் சீற்றம் கொண்ட மாணவர் – இளைஞர் என்ற பிம்பத்தோடு அறிமுகப்படுத்தினாலும், விஜய் பிற இயக்குநர்களின் காதல் திரைப்படங்களால் அறியப்படத் தொடங்கினார். எம்ஜிஆர் பின்காலனியத் தமிழ்ச் சமூகத்தின் முகமாக, நாயக பிம்பமாக வளர்க்கப்பட்டார் என்றால், விஜய் நவதாராளமயத் தமிழ்ச் சமூகத்தின் முகமாக வளர்ந்தார். தொடர்ந்து அவரது ஆக்ஷன் திரைப்படங்களின் மூலமாக தனது பிம்பத்தை அநியாயத்தை எதிர்க்கும் முகமாக கட்டமைத்து வந்ததோடு, குடும்ப அமைப்புமுறையில் பெரும்பாலும் தனது ‘அண்ணன்’ பாத்திரங்களின் வழியாக தனது பிம்பத்தை வளர்த்துக்கொண்டார்.
2017ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மீண்டும் டெல்லிக்கும் தமிழ் அடையாளத்திற்கும் இடையிலான முரண்களை வீதிக்கு இழுத்துவந்தன. இந்தக் காலகட்டத்தில் உதயநிதி அரசியலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாதவ பிரசாத் கூறியதைப் போல, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நிலையை விமர்சித்து ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்தார் விஜய். தன்னை ‘தளபதி’ என்று அறிவித்துக்கொண்டதில், ‘இளைய தளபதி’ என்ற பெயரில் ரஜினியின் இளைய வடிவமாகத் தன்னை முன்னிறுத்தியவர் தற்போது ‘தளபதி’ என்று தம்மை எம்ஜிஆரைப் போல முன்னிறுத்த தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான். இதன் தொடர்ச்சியாகவே, தமிழ் அடையாளத்தை மையமாகக் கொண்டு தம்மை தமிழ் மண்ணின் வெற்றி மகனாக கட்டமைக்கவும், தனது கட்சியையும் அதே கண்ணோட்டத்தில் மக்களிடம் முன்னிறுத்தும் அரசியலை மேற்கொண்டுவருகிறார் விஜய்.
மேலும், விஜயின் நட்சத்திரத் தன்மை என்பது ஒரு exclusive விதமாக உருவாவது. ஒரு மன்னர் தனது அரண்மனையின் மாடத்தில் நின்று மக்களைக் காண்பதைப் போல விஜய் தனது பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார். இணையத்தின் காலகட்டத்திலும், விஜய் தனது இருப்பை வெளிக்காட்டும் இடங்கள் மிகக்குறைவு. இந்த exclusive தன்மை காரணமாகவே ரசிகர்கள் அவரது படங்களை முண்டியடித்துக் காண்கின்றனர். அவரது ஆடியோ லான்ச் தவிர வேறு எங்கேயும் அவர் கடந்த பத்தாண்டுகளில் பெரிதாகப் பேசவில்லை என்னும்போது இயல்பாகவே இங்கே ஒரு டிமாண்ட் உருவாகிறது; ரசிகர் மனம் அவரது இருப்பை பொக்கிஷமாகக் கருதி தேடுகிறது. அரசியல் சூழலில் இத்தகைய exclusivenessக்கு இடமில்லை என்பதோடு, தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டிய சூழலும் விஜய்க்கு உருவாகும். இது அவரது பிம்பத்தில் பெரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
2000களில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் வழக்கமான ஹீரோக்களை விலக்கியது. விஜய்க்கு இந்தக் காலகட்டத்தில் பல படங்கள் பெரும் தோல்வியைத் தழுவின. திமுக அரசு வழங்கிய இலவச தொலைக்காட்சியின் காரணமாக, டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் வெகுபிரபலமாகின. தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து சினிமாவுக்கு மாறிய நடிகர் சந்தானம், பிற்காலத்தில் ‘நாளைய இயக்குநர்’ புகழால் விஜய் சேதுபதி, விஜய் டிவி புகழால் சிவகார்த்திகேயன் முதலானோர் உருவாகவும் இந்தத் திடீரென பரவலாக்கப்பட்ட தொலைக்காட்சி நுகர்வு காரணமாக அமைந்தது. அப்படி, சந்தானம் புகழ்பெறத் தொடங்க, அவரோடு இணைந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார் உதயநிதி. 1997ல் ’கல்கி’ இதழில் ‘மேயர் மகன்’ என்ற தலைப்பில் வெளியான அவரது பேட்டியில், ‘மிகப்பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும்; அரசியல் ஆசை அறவே இல்லை’ என உதயநிதி குறிப்பிட்டிருந்தாலும், 2006ஆம் ஆண்டுக்குப் பிறகான திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவின் வெற்றிகரமாக தயாரிப்பாளராக உயர்ந்தார். அதன்பிறகு, நடிகராக தலைகாட்டத் தொடங்கினார்.
கலைஞருக்கு அறிமுகம் தந்த ‘பராசக்தி’ வெளிவந்த மரபில், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உதயநிதியின் அரசியலற்ற தன்மையைக் காட்டியது. நவதாராளமயக் கால இளைஞனாக உதயநிதி, பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்த அவரது நண்பராக சந்தானம், பெண்களை வம்பாகப் பின்தொடர்ந்து காதல் தொல்லையில் ஈடுபடுவது, பெண் வெறுப்புப் பாடல்கள், டாஸ்மாக் கொண்டாட்டப் பாடல் முதலான அன்றைய காலகட்டத்தின் ‘காமெடி’ படத்திற்கான எல்லாமும் இருந்ததால் வெற்றிப்படமாக அமைந்தது. அவரது அடுத்தடுத்த படங்களும் அத்தகையவே என்றாலும், அரசியலுக்கு வருவதற்கு முன்பும், பின்பும் சற்றே அரசியல் சாய்வு கொண்ட திரைப்படங்களில் நடித்தார் உதயநிதி.
உதயநிதியின் அரசியலற்ற திரைப்படங்களில் பெரும்பாலும் வேலையில்லாத இளைஞனாகவே அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தன. அவரது அரசியல் திரைப்படங்களான ‘நெஞ்சுக்கு நீதி’, ‘கலகத்தலைவன்’, ‘மாமன்னன்’ ஆகியவை அவரை சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையும் ஹீரோவாக முன்னிறுத்தின. ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாமன்னன்’ ஆகியவை அருந்ததியர்களின் மீதான கவுண்டர் சாதி வன்முறையை முன்வைத்தன. கொங்கு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவால் கவரப்படும் கவுண்டர் வாக்குகளுக்கு எதிராக அருந்ததியர் வாக்குகளைக் கவர உதயநிதி இந்தத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட தலித் எழுச்சித் திரைப்படங்களில் இருந்து விலகியே இருந்திருக்கிறார் விஜய்.
கலை இலக்கியமும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்றார் கலைஞர். உதயநிதியும், விஜயும் இந்தக் கருத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மறுத்திருக்கின்றனர். சமீபத்தில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களிடம் பேசியபோது, சினிமாவில் அரசியல் கறார்தன்மையோடு இருக்க வேண்டியதில்லை என்ற பொருள்படப் பேசியிருந்தார் விஜய். இருவருமே இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்களோடு தொடர்புடையவர்கள். ஒருவர் நடித்தார்; மற்றொருவர் தயாரிப்பு, விநியோகம் முதலானவற்றை மேற்கொண்டார்.
விஜய், உதயநிதி இருவருமே திரைப்பிரதிகளுக்குள் மக்களுக்கான தீர்வை அளித்தவர்களாக இருக்கின்றனர். ’கத்தி’ விஜயும், ‘கலகத்தலைவன்’ உதயநிதியும் கார்ப்பரேட் வில்லன்களை எதிர்த்திருந்தாலும், யதார்த்தத்தில் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களாகவே அறியப்படுகின்றனர். உதயநிதியின் இறுதிப் படத் தலைப்புகளான ‘நெஞ்சுக்கு நீதி’, ‘கலகத்தலைவன்’, ‘மாமன்னன்’ ஆகியவை திமுகவுக்கு நெருக்கமான, அதிகாரத்திற்கு நெருக்கமான சொற்கள். விஜய் தன்னை ‘தளபதி’ என்றழைப்பதையும், திரைப்பிரதிகளுக்குள் தன்னை எம்ஜிஆராக சித்தரித்துக்கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திரை பிம்பங்களில் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே தமது ‘சினிமா’ முகத்திற்கும், ‘உண்மை’ முகத்திற்கும் இடையிலான இடைவெளியைப் பெருமளவில் குறைப்பதோடு, மக்கள் பிம்பச்சிறைகளில் சிக்கிக்கொள்ள முதன்மைக் காரணங்களாக அமைகின்றன.
3
பாசிசம் குறித்த வால்டர் பெஞ்சமினின் கூற்றை மேலே குறிப்பிட்டிருந்தேன். இயந்திர வளர்ச்சியின் காலகட்டத்தில் கலைப் படைப்பின் பணி என்ன என்பதை பெஞ்சமின் விளக்கும் புகழ்பெற்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை அந்த வரிகள். நவீன காலத்தில் ஒருபக்கம் தனிமனிதன் தொடர்ந்து உழைப்பில் ஈடுபடுவதும், மறுபக்கம் வெகுஜனத் திரட்சி ஏற்படுவதும் ஒரே தொடர்நிகழ்வின் பகுதி எனக் கூறும் அவர், பாசிசம் என்பது இத்தகைய புதிதாக உழைப்புச் சக்தியில் இணைந்த மனிதர்களுக்கு அவர்தம் நீக்க விரும்பும் வேறுபாடுகளைக் களையாமல், குறிப்பாக தனியுடைமையைக் களையாமல், வெகுமக்கள் திரள வழிசெய்கிறது. இங்கு உண்மையான பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியலில் அழகியல் கூறுகள் இடம்பெறச் செய்யப்படுகின்றன. சினிமாவைப் போல, அரசியல்வாதிகளுக்கும் தற்காலத்தில் பின்னணி இசை, மாஸ் என்ட்ரீ, ramp walk முதலானவை சேர்க்கப்படுவது இத்தகைய தனிநபர் வழிபாட்டை முன்வைத்துதான் எனப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய வழிபாட்டை வால்டர் பெஞ்சமின் பாசிசத்தின் தர்க்க ரீதியான முடிவு எனக் கொள்கிறார்.
திராவிட இயக்கம் இந்தியத் தேசியத்தோடும், இந்துத் தேசியத்தோடு கடந்த காலங்களில் நட்பு, பகை ஆகிய இரண்டு வகையிலான உறவையும் கொண்டிருந்தாலும், வட இந்தியாவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலை எழ அனுமதிக்கவில்லை. மேலும், கடந்த 50 ஆண்டுகளில், தமிழகச் சாதிகள் பெருமளவில் உருமாறியிருக்கின்றன. நவதாராளமயம் தமிழகப் பொருளாதாரச் சூழலில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. திராவிட மாடல் இந்தியாவின் பிற மாநிலங்களோடு, குறிப்பாக மோடியின் குஜராத் மாடலோடு ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாகத் தெரிகிறது. எனினும், திராவிட மாடல் மூலமாக தமிழ்ச் சமூகம் முன்னேறியதைப் போலவே, திமுகவின் முதலாளிகள் – கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், தொலைக்காட்சி சேனல்கள் நடத்துவோர் முதலான தரப்பினர் பெரும் செல்வந்தர்களாக மாற வழிசெய்திருக்கிறது. ஆக, திராவிட மாடல் என்பது முழுமையாக ‘பொருளைப் பொதுவாக்கும்’ முயற்சி அல்ல.
தற்போதைய உதயநிதி தலைமையிலான திமுக ஜெயலலிதாவின் அதிமுகவைப் போல உதயநிதியை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்றக் கூட்டங்களில் புகழ்பாடுவதை அரசியலாகக் கருதுகிறது. வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை திமுக தொடர்ந்து எதிர்கொண்டாலும், திமுகவின் தற்போதைய கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் வாரிசுகளாகவே இருக்கின்றனர். வாரிசு அரசியலை நிறுவனமயப்படுத்தி ஜனநாயக வாயிலை அடைத்திருக்கிறது திமுக. The Rule of the Commoner என்று 1967ல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைக் குறிப்பிடும் அறிஞர்கள், இன்று அதே சொல்லைப் பயன்படுத்தி ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைக் குறிப்பிட முடியுமா என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.
அரசியல் களத்தில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் என்று பிரசாரம் செய்து 2021ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த மூன்று தலைவர்களுக்கும் நேரெதிரான நடவடிக்கைகளை ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்டது. விஜய் தற்போது தனது கட்சிக்கான கொள்கைத் தலைவர்களை அறிவித்தாலும், நடைமுறையில் அவராலும் இப்படித்தான் இயங்க முடியும். இத்தகைய பாப்புலிஸ்ட் தலைவர்களால் இவ்வளவுதான் ஈடுபட முடியும் என்னும் போது, இங்கே குறியீட்டு அழகியலுக்காக இவர்கள் முன்வைக்கும் தலைவர்களின் அரசியல் கொள்கைகள் நீர்த்துப் போகின்றன. ’பராசக்தி’ எழுதிய கலைஞர்தான், தன் இறுதிக் காலத்தில் வாக்கு வங்கிக்காக ‘பொன்னர் சங்கர்’ என்ற சாதியத் திரைப்படம் எடுத்தார். வெகுஜனக் கவர்ச்சி அரசியல் கொள்கைகள் நீர்த்துப் போனால் இத்தகைய மோசமான விளைவுகளே ஏற்படும். உண்மையில் மக்களுக்காகப் போராடாமல், சிறை செல்லாமல் ஒரு தலைவன் உருவாவது நவதாராளமயக் காலத்தில் போராட்டம் என்னும் எதிர்ப்பு வடிவத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை.
நவதாராளமயத்தின் பிரச்னைகளையும், தமிழ்நாட்டு அளவில் இந்துத்துவத்தின் வளர்ச்சியையும் தடுப்பதற்கான செயல்திட்டங்கள் இந்த இருவரிடமும் இல்லை என்பது வெளிப்படை. மேலும், பெரியாரியம், அம்பேத்கரியம் முதலான பொதுவான கொள்கைகள் என இருதரப்பினரும் கூறிக்கொண்டாலும், பெரியாரையும், அம்பேத்கரையும் மக்களிடையே கொண்டுசெல்வதைவிட, விஜயையும் உதயநிதியையும் மக்களிடையே கொண்டுசெல்வதில் இருதரப்பினரும் முக்கியத்துவம் காட்டப் போகின்றனர். ஆக, இங்கே கொள்கைகள் இரண்டாம்பட்சமாக இருப்பதோடு, தனிநபர் வழிபாடு அதீதமாக மாறுவதே பாசிசத்தின் அறிகுறி. இந்த அணுகுமுறையை விஜய் – உதயநிதி ஆகிய இருவரையுமே புரிந்துகொள்ளப் பயன்படுத்தலாம்.
உதயநிதி, விஜய் ஆகிய இருவருக்குமே தத்தமது பிம்பங்களை உருவாக்குவதிலும், அவற்றை ஊதிப் பெருக்குவதிலும் செலவிடப்படும் ஆற்றலைவிட, அவர்கள் முன்வைக்கும் கொள்கைகள் பரப்பப்படுவதன் ஆற்றல் குறைவு., இது அதிகார உறவுகளிலோ, வர்க்க முரண்பாடுகளிலோ எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை என்னும்போது, இவையிரண்டுமே பாசிசத்தின் சாயல் கொண்ட பிம்பங்களே என வரையறுக்கலாம்.
பாசிசத்தின் கூறுகள் இத்தகைய தனிநபர் உற்பத்தியில் இடம்பெற்றிருந்தாலும், இந்திய அளவில் இந்துத் தேசிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையும் கணக்கில் கொள்ளும்போது, கொள்கைகள் பெரியளவில் நீர்த்துப் போயிருந்தாலும், தமது இருப்புக்காகவாவது கொள்கை வழியிலான எதிர்ப்பை திமுக மேற்கொண்டுவந்தது. இனி, அந்த இடத்தை தவெகவும் பிடித்துக்கொள்ள முயலும். மீண்டும் தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகள் சுழற்சி முறையில் இயங்குவது இந்துத்துவப் பாசிசத்தை சற்றே மட்டுப்படுத்த முடியும். அது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகம் போன்ற பின்காலனியச் சமூகங்களில் மைய நீரோட்டத் தேசியத்தால் மற்றமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் அரசியல் அதிகாரம் நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இத்தகைய இருகட்சி முறையில் அதிகம். இத்தகைய சாதகங்களும் இந்த இருமையில் உண்டு. யதார்த்ததில் இந்த சாதகங்கள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.
தமிழக அரசியலில் கருணாநிதி vs எம்ஜிஆர் என்ற இருமை, கருணாநிதி vs எம்ஜிஆர் என்று இருந்த நிலையில், தற்போது உதயநிதி vs விஜய் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இந்த இடைவெளியில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும் மீண்டும் பிம்பங்களுக்குள் சரணடைந்து தேக்கமடைந்திருக்கிறது தமிழக அரசியல்.
-ர. முகமது இல்யாஸ்
உதயநிதி vs விஜய் என தமிழக அரசியல் சூழல் மாறும் பட்சத்தில் உதயநிதிக்கு புதிதாய் வரும் விஜய் எவ்வளவோ பரவாயில்லை என மக்கள் நினைக்கலாம் தானே….!
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் துன்பியல் யதார்த்தத்தை எதிர்கொள்ள தமிழகம் தயாராக வேண்டியது தான்.