உண்மைக்குப் பிந்தைய உலகில் செய்திகளை உற்பத்தி செய்யும் ஊடகங்கள்! – ‘Photo Card’ செய்திகளுக்கு எதிராக – மு. அப்துல்லா

’பீஸ்ட்’ பட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் நெல்சனுக்கு நேர்காணல் ஒன்றை அளித்தார் ‘நடிகர்’ விஜய். ’பத்தாண்டுகளுக்கு மேலாக ஏன் எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை?’ என்று நெல்சன் கேட்டதற்கு விஜயின் பதில் முக்கியமானது. ‘நான் ஒரு கேள்விக்குப் பதிலளித்த விதம் வேறு, அது எழுத்தில் வெளியானபோது கடுமையான மிரட்டல் தொனியிலிருந்தது. நாம் இந்த மனநிலையில் பேசவில்லையே என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதுபோல் ஒவ்வொரு பேட்டியையும் மக்களுக்குப் புரியவைக்க முடியாது என்பதால் பேட்டி கொடுப்பதையே நிறுத்திவிட்டேன்’ என்றார் விஜய்.

சொல் வழக்கில் உள்ள கருத்துகள், அச்சில் வரும்போது மாற்றமடைகின்றன. சாதாரண உரையாடலை அப்படியே எழுதிவிட முடியாது. ஆதலால், அச்சில் தேவையானது /தேவையற்றது என்று வெட்டி, சுருக்கி முறைப்படுத்தும் உரிமையை அச்சு ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. விஜய் சொன்ன காரணம் சாதாரணமானது. ஆனால், அந்தக் கருத்து இன்றைய சூழலுக்கு அவசியம்.

பாரம்பரியமான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பொதுவாக ஆசிரியர் குழுவும், மரபான நிலைப்பாடுகளும் உண்டு. ஒரு செய்திக்குப் பொறுப்பேற்பது, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவது, கண்காணிப்புச் செய்வது ஆகியவை இருக்கும். செய்தி வெளியிடும் முன்பு அதை மேற்பார்வையிடுவது ஓரளவு நடைமுறை. ஆனால், டிஜிட்டலில் அது தேவையில்லை என்று அவர்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

ஊடகவியலில் சமூக ஊடகம் செய்தது கலகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அரசியல்வாதிகளைத் தாண்டி அரசு இயந்திர ஆதரவு, தேசிய நலன், சினிமா கிசுகிசு போன்றவற்றை நேரடியாகக் கேள்வி கேட்டிருக்கிறது சமூக வலைத்தளம். பூமர்த்தனமான செய்தித் தலைப்புகள் தொடங்கி பிற்போக்குச் சொற்பிரயோகங்கள் வரை உடனுக்குடன் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளன. ஊடகங்கள் பேச மறுத்த செய்திகளைப் பேசியது, ஊடகங்களை முழுக்கக் கண்காணிப்புக்குள் வைத்திருந்தது ஆகியவை முக்கிய அம்சங்கள். சமூக வலைத்தளத்தின் இத்தகைய எதிர்ப்பியக்கம், பன்மைத்துவப் பார்வைக்கு ஒரு காரணம் — அது எந்த நிறுவனத்தையும் சாராத உதிரிகளின் களம்.

இந்தச் சாதகமே மற்றொரு நிலையில் பல பொய்ச் செய்திகளையும், வெறுப்புப் பிரச்சாரங்களையும் ஊக்குவிக்கிறது. தனிநபர் பயன்பாடு கடந்த சமூக வலைத்தளச் சந்தை அல்காரிதம், ஒரு குறிப்பிட்ட பரப்புக்குள் அனைத்தையும் உயிர்த்திருக்கச் செய்கிறது. ஒரு தனிநபர் பகிரும் செய்திக்கு அவர் பொறுப்பானவர் அல்லர். அதன் உண்மைத் தன்மையை ஆராயும் அவசியம் அவருக்கில்லை. அவர் அந்தச் செய்தியில் உடன்பாடு கொண்டார்; பகிர்ந்தார். செய்தியின் தோற்றுவாய் தொடங்கி அது ஏற்படுத்தும் விளைவுகள்பற்றி சமூக வலைத்தளங்களும் கவலைப்படாது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களுக்குள் வரும் கட்டமைப்பு ரீதியான பொது ஊடகங்கள் தங்கள் செய்திகளை முறைப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு செய்தியை எவ்வாறு வழங்க வேண்டும், பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை அளவிடுதல் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஊடகங்களை விமர்சிக்க ஒரு சமூகக் கணக்குக்கு எந்தளவு உரிமை உள்ளதோ, அந்தளவிற்குத் தனிநபர் கணக்குகளை முறைப்படுத்தும் பொறுப்பினை செய்தி நிறுவனங்கள் ஏற்றிருக்க வேண்டும். அன்றன்றைக்கான பொழுதுபோக்காகக் கடந்துசெல்ல வேண்டிய பொருள் (Content) என்ற செய்திகளின் அதிகாரப்பூர்வமான உரிமத்தை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.

அரசியல், சமூக உரையாடல் என இணை ஊடகமாகச் செயற்படும் சமூக வலைத்தளத்தை பொது ஊடகம் திறம்பட வழிநடத்தியிருக்கலாம். சமூக ஊடகங்கள் அதைப் பார்த்து ஒரு நிதானத்தையும் உள்ளடக்கத்தையும் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால், பொது ஊடகங்கள் சமூக வலைத்தளங்களைக் கையாளும் இடத்தை விட்டுக்கொடுத்து, உதிரிகளால் ஆன சமூக ஊடகங்களுக்கு அடிபணிந்ததே துயர்.

ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், வெவ்வேறு குழுக்களிடையே மோதலை உண்டாக்க வேண்டும், உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்ற வைரல் நோய்க்கு அனைத்து ஊடகங்களும் ஆட்பட்டிருக்கின்றன. சமூக வலைத்தள விவாதத்தில் எவையெல்லாம் களைய வேண்டிய விஷயங்கள் என்று சமூக வலைத்தளங்களுக்குள்ளேயே விவாதம் எழுந்த வேளையில், செய்தி நிறுவனங்கள் அவற்றை தமது செய்தி நுகர்வுக்கான வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தத் தொடங்கின. அந்தவகையில், போட்டோ கார்டுகளில் வெளியிடப்படும் குறுஞ்செய்திகளை ‘தூண்டல் (Woke) கலாச்சாரத்தின்’ வடிவம் எனலாம். கெடுவாய்ப்பாக, இன்று சமூக வலைத்தளங்களில் பல போலிச் செய்திகளை கட்டமைப்பு ரீதியான பொது ஊடகங்களே உருவாக்குகின்றன.

2

போட்டோ கார்டு செய்திகள் குறிப்பான அறிவிப்பு, உடனடி செய்தியை சற்று முன் அறிவிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்று அவை டிஜிட்டல் நுகர்வோருக்குப் பரவசமூட்டும் சேவையை முன்வந்து செய்கின்றன. போட்டோ கார்டின் வரம்பு குறுகியது. குறைவான சொற்களில் சொல்ல வரும் செய்தியை முழுமைப்படுத்த வேண்டும். வார்த்தைகளைச் சுருக்கும் நிலையில் அது குழப்பத்தையும் தவறான அர்த்தத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. போட்டோ கார்ட் செய்திகள் முழுமையானவையல்ல, உறுதியானவையுமல்ல. இதில், எந்தளவிற்குப் பொறுப்புணர்வு வேண்டும் என்று செய்தி நிறுவனங்கள் உணரவில்லை. ஏனெனில், டிஜிட்டல் வெளியில் தமது மரபார்ந்த நிர்வாக அக்கறை அவசியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

போட்டோ கார்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் செய்திகளை வைத்தே அது டிஜிட்டல் தூண்டலுக்குப் போடப்படும் தீனி என்பதை முதலில் அறியலாம். இது நிறுவனங்களின் அரசியல் சார்பைப் பொறுத்து வேறுபடும். இரண்டாவது, முன்னும் பின்னும் வெட்டப்பட்ட செய்தியில் தேர்ந்தெடுக்கப்படும் தகவல் செய்தியின் முழுமையை மறுக்கிறது. அரை அர்த்தத்தை வழங்குகிறது. மூன்றாவது, காலச் சூழல், எதிர்நிலையில் வைக்கப்படும் கேள்வியைத் தவிர்த்து பதில் அளிப்பவரின் துண்டுக் கருத்தை மட்டும் முன்னிறுத்துவது (Project). மூன்றிற்கும் சமீபத்திய போட்டோ கார்டுகளிலிருந்தே உதாரணங்களைத் தரலாம்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாபற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதியின் பதிலை இவ்வாறு கார்டு போட்டது ஒரு செய்தி நிறுவனம்.

‘மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடில்லை. ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி இல்லை.

— அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டுவதில் உடன்பாடில்லை என்று சொல்லிவிட்டு, ராமர் கோவிலுக்கு திமுக எதிரி இல்லை என்கிறார் உதயநிதி. அதாவது, ஏணி சின்னத்தில் ஒரு குத்து, தென்னமரச் சின்னத்தில் ஒரு குத்து என்பதாகவே செய்தியைக் கடத்த விரும்பியது கார்டு. பரவலாக அவ்வாறே அது சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆனால், ராமர் கோவில்பற்றி பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கான உதயநிதியின் பதிலை அப்படியே காண்போம்.

‘கலைஞர் ஏற்கனவே சொன்னது போல், நாங்கள் எந்த மதத்திற்கும் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது. அங்க கோவில் வர்றது பிரச்சனை கிடையாது. ஆனால், அங்க உள்ள மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில்தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது’ என்றார்.

அமைச்சர் உதயநிதி உண்மையில் சொல்ல வருவது நேரடி வீடியோவில் புலப்படுகிறது. திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, ஆதலால் அங்குச் சாதாரணமாகக் கோவில் வந்தால் பிரச்சனையில்லை. ஒரு மசூதியை இடித்துவிட்டு கோவில் வருவதில் ஏற்பில்லை.

திமுக அயோத்தி ராமர் கோவிலை எதிர்ப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் உதயநிதி. ஆனால், அது போட்டோ கார்டில் வரும்போது ராமர் கோவிலுக்கு ஆதரவுக் கருத்தாக மாறுகிறது. அதைப் பலப்படுத்த, உதயநிதி பேட்டியில் பின் சொன்ன தகவலை மேலேயும், முன் சொன்ன தகவலை கீழேயுமாக வடிவமைத்திருக்கிறார்கள். செய்தியை வழங்க வேண்டும் என்பதைவிட அதை டிஜிட்டல் கிளர்ச்சிக்குத் தூண்ட வேண்டும் என்ற முனைப்பே இதில் பிரதானமாக இருந்திருக்கிறது.

இதுபோன்ற செய்திகளுக்கு டிஜிட்டலில் இயங்கும் எந்த மூத்த ஊடகமும் விதிவிலக்கல்ல. கடந்த ஒருவாரச் செய்திகளிலேயே பல தகவல் திரிபுகளை உதாரணப்படுத்த முடியும்.

பொது ஊடகங்கள் போட்டோ கார்டில் செய்திகளை வழங்குவதற்குப் பதிலாக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. மேற்சொன்னதில் மேலும் கீழும் மாற்றிய மேற்கோள் ஓர் உதாரணம். இதுபோல், செய்தியின் தன்மைகளையே நீர்த்துப்போகச் செய்யும் அளவிற்கு வெட்டி ஒட்டுதலும் நடக்கிறது. ரஜினிகாந்த்தைப் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன கருத்தை காலச் சூழலைக் கடந்து ராமர் கோவில் விவாதத்தோடு பகிர்ந்து இரண்டுக்கும் தொடர்புப்படுத்துவது, ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்காத அத்வைத சங்கரச்சாரிகளை சூத்திர மோடிக்கு எதிரான கிளர்ச்சி என்று உருவகப்படுத்துவது என பல நிலைப்பாடுகளை உற்பத்தி செய்திருக்கின்றன இந்நிறுவனங்கள்.

3

உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் (Post-Truth) பொய் மட்டும் பரவுவதில்லை. பல உண்மைகளும் பொய்மைப்படுத்தப்படுகின்றன என்பார்கள். ‘காங்கிரஸ் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்று மம்தா சொன்னது உண்மை. ஆனால், ‘மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வேண்டும். பாஜக இந்துக்களைக் குழப்புவதுபோல் காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் ஆளும் பிராந்தியங்களில் முஸ்லிம்களைக் குழப்பினால் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்ற அவர் பேசிய தகவலை அறியும்போது, உண்மை பொய்மையாகிறது. விளைவாக இந்தியா கூட்டணியிடையே மோதல், காங்கிரஸைச் சிறுமைப்படுத்திய மம்தா என்கிற ரீதியில் விவாதத்தை உருவாக்க முடிகிறது.

செய்திகளின் வடிவத்தை முறையற்றுக் கொடுக்கும் ‘போட்டோ கார்டுகள்’ இதையே செய்கின்றன. தமிழ்ச் சூழலிலுள்ள ஒரு சில ‘உண்மை கண்டறியும்’ தளங்களும் டிஜிட்டல் திரட்சிக்கு ஏற்றவாறே செயற்படுகின்றன. குறிப்பாக, கட்டமைக்கப்பட்ட ஊடகங்கள் உற்பத்தி செய்யும் போலிச் செய்திகள்பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. தமிழ் ஊடகங்களுக்கு இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களையும் ஆட்கொண்டிருக்கலாம்.

‘போட்டோ கார்டு’ ஒரு நவீன செய்தி வடிவம். அதிகம் பரவும் முக்கிய ஊடகமாக அது மாறியிருக்கிறது. எனவே, அதைக் கையாள வேண்டிய வழிமுறைபற்றி விவாதிப்பது நலம். தலைவர்களின் உரைகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆகியவற்றிலிருந்து உருவாகும் கார்டுகளுக்கு முறையான காணொளி அல்லது விரிவாக்கப்பட்ட சுட்டியின் இணைப்பை கேப்ஷனில் வழங்குவது போன்றவை முதற்படியாக இருக்கும். டிஜிட்டலில் செய்தியை பண்டமாக மட்டும் பார்ப்பது தாண்டி ஆரோக்கியமான சமூக அரசியல் சூழலின் தேவையாக அணுகும் பொறுப்புணர்விலிருந்து தொடங்குவோம்.

— மு. அப்துல்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.