பூலோகவியாசன் என்றொரு பௌத்த இதழ்

தமிழ் இதழியல் வரலாறு இன்னும் முழுமைபெறாத ஒன்றாகவே இருந்தாலும் குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் இதழியல் வரலாற்றுக்கான ஆதாரப்பூர்வமான நூல்களாக பல ஆண்டுகளாக அவை இருக்கின்றன. இவற்றில் அ.மா.சாமி, மா.ரா.அரசு, பெ.சு.மணி ஆகியோரின் புத்தகங்கள் தமிழ் இதழியல் வரலாற்றிற்கான மேற்கோள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இவற்றில் தலித் இதழ்கள் குறித்து அறிவதற்கு சிறு குறிப்புகளே உள்ளன. உதாரணமாக, அ.மா.சாமியின் ‘19ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்’ மற்றும் ‘திராவிட இயக்க இதழ்கள்’ ஆகிய இரண்டு நூல்களிலும் பறையன், ஒரு பைசா தமிழன், பஞ்சமன், திராவிடப் பாண்டியன் போன்ற பத்திரிகைகள் குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற முடிகிறது. பெ.சு.மணியின் ‘விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள்’ புத்தகத்திலும் தலித் இதழ்கள் குறித்து ஆசிரியரின் பெயர், இதழ் தொடங்கப்பட்ட வருடம் போன்ற ஒரு சில தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. தலித் இதழியல் குறித்து ரவிக்குமார் எழுதிய ‘எழுதா எழுத்து’ (தலித், 2002) எனும் கட்டுரையில் கூறப்பட்ட எட்டு தலித் இதழ்களும் எம்.சி.ராஜா எழுதிய ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ (ளிஜீஜீக்ஷீமீssமீபீ பிவீஸீபீus) புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இதழ்களேயாகும்.

அலாய்சியஸின் பண்டிதர் அயோத்திதாசர் தொகுப்பிலுள்ள அன்பு பொன்னோவியத் தின் முன்னுரையில் தமிழன் பத்திரிகை மற்றும் எம்.சி.ராஜாவின் புத்தகத்திலிருந்து சில தலித் பத்திரிகைகளைப் பட்டியலிடுகிறார், ஜி.றி.கமலநாதனின் “விக்ஷீ. ரி. க்ஷிமீமீக்ஷீணீனீணீஸீவீ, வி.கி, ஙி.லி. வீs ஸிமீயீutமீபீ ணீஸீபீ tலீமீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ திணீநீts கிதீஷீut tலீமீ ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீ’s ஷிtக்ஷீuரீரீறீமீ யீஷீக்ஷீ ணினீணீஸீநீவீஜீணீtவீஷீஸீ வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ” புத்தகத்திலும் எம்.சி.ராஜா புத்தகத்திலிருந்த தலித் பத்திரிகைகளே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தலித் இதழ்கள் குறித்த முழுமையான வரலாறு நமக்குக் கிட்டவில்லை. அதை நேர்செய்யும் ஒரு முயற்சியாக பூலோகவியாசன் எனும் தலித் இதழ் குறித்த வரலாற்றை காலனிய ஆவணங்கள், தலித் இதழ்கள் ஆகியவற்றின் துணைகொண்டு இக்கட்டுரை அமைகிறது. பரவலாக அறியப்படும் இரட்டைமலை சீனிவாசனின் பறையன் இதழின் ஒரு நறுக்கு மட்டுமே கிடைக்கும்போது பூலோகவியாசன் இதழின் ஒருவருடத் தொகுப்பு கிடைத்திருப்பது தலித் இதழியல் ஆய்வை மேலும் ஒருபடி நகர்த்தியிருக்கிறது. இதுவரை தொகுப்புகளாக வந்திருக்கக்கூடிய தலித் இதழ்களில் தமிழன் (1907-1914) முழுமையாகவும் இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழின் ஒருவருட (1919-1920) தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்த வகையில் பூலோகவியாசன் தலித் இதழ்களின் தொகுப்பு வரிசையில் மேலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.

பூலோகவியாசன் இதழ் 1903ம் வருடம் அக்டோபர் மாதம் சென்னையில் தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரன்பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டு 1917 வரை வெளிவந்தது. இந்த இதழ் எண்.16, ஆனைக்கார கோனான் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை என்னும் முகவரியில் ஜி.வேதமாணிக்கம் பிள்ளை (முத்துவீரன் பிள்ளையின் மைத்துனர்) என்பவருக்குச் சொந்தமான பூலோகவியாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இந்த அச்சகத்தின் அப்போதைய மதிப்பு ரூ.700 ஆகும். மேலும் அச்சகத்திலிருந்து மாதம்தோறும் ரூ.25 வருவாய் கிடைத்ததாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பண்டிதரான பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளையிடம் எம்.சி.ராஜா மற்றும் ஏ.எஸ்.சகஜானந்தர் ஆகியோர் தமிழ் இலக்கியம் கற்றுள்ளனர். இவர் சகஜானந்தரின் இலக்கிய ஆசிரியருள் ஒருவர் என்பதை சகஜானந்தர் தனது நான்காவது ஹரிஜன மாநாட்டின் வரவேற்பு பிரசங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் சாதியில் பிறந்த முத்து வீரன்பிள்ளை 1910ஆம் வருடம் இந்து மதத்திலிருந்து புத்த மதத்தைத் தழுவினார். இதே காலக்கட்டத்தில் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்து செயல்பட்டுவந்த அயோத்தி தாசருக்கும் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளைக்குமான தொடர்புகள் குறித்த சில ஆதாரங்கள் இந்தத் தொகுப்பில் கிடைக்கின்றன. பிற தொகுப்புகளும் கிடைக்கும்போது அவர்களுக் கிடையிலான முழுமையான தொடர்புகள் தெரியவரும்.

பூலோகவியாசன் இதழில் ‘பறையர் மகாஜன சபை’ கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன. இரட்டைமலை சீனிவாசன் 1900-ல் தென்னாப்பிரிகா சென்றவுடன், அவர் தொடங்கிய பறையன் பத்திரிகை முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில் பறையர் மகாஜன சபைக்கான ஆதரவு பத்திரிகையாக பூலோகவியாசன் வெளிவந்தது. பர்மா தொழிலதிபரும் பர்மா முனிசிபல் சேர்மனாகவும் இருந்த ஆதிதிராவிட செல்வந்தர் பெ.மா.மதுரைப்பிள்ளை குறித்த செய்திகள் இந்த இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தன. ரங்கூனில் மதுரைப்பிள்ளைக்குச் சொந்தமான மதுரை பிரதர்ஸ் அண்டு கம்பெனி எனும் அச்சகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட வருட காலண்டர் குறித்த விளம்பரம், ரங்கூனில் மதுரைப் பிள்ளை வெகுவிமரிசையாகக் கொண்டாடிய மதுரைவீரன் சுவாமி பூஜை குறித்த செய்தி போன்றவை இடம்பெற்றுள்ளன. மதுரைப்பிள்ளையின் மனைவி ஆதிலெட்சுமியம்மாளின் மரணச்செய்தியும் பூலோகவியாசனில் வெளியிடப்பட்டது. இந்தச் செய்திகள் மதுரைப்பிள்ளைக்கும் பூலோகவியாசனுக் குமிடையே இருந்த நெருக்கத்தைக் காட்டுகின்றன. இந்த நெருக்கத்தின் மேலும் ஒரு ஆதாரமாக 1907-ம் ஆண்டு பூலோகவியாசன் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீரனுக்கு நாவலர் பட்டமும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தார் மதுரைப்பிள்ளை. இதன் பிறகு அவர் பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் என்றே அறியப்பட்டார்.

அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்த ஏ.பி.பெரியசாமி புலவர், தமிழ்மாது இதழை நடத்திய சொப்பணேஸ்வரி அம்மாள் ஆகியோர் பூலோகவியாசன் இதழிலும் எழுதி வந்தனர். ஏ.பி.பெரியசாமி புலவர் ‘சாக்கைய பவுத்தர்கள்’ எனும் தொடரையும், சொப்பணேஸ்வரி அம்மாள் ‘இளவயதில் கலியாணம் செய்தல்’ எனும் கட்டுரையையும் எழுதினார். தலித் அறிவுக் குழுக் களுக்கிடையே நிகழ்ந்துவந்த கருத்து மோதல்கள் குறித்த சில குறிப்புகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன. குறிப்பாக பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதியில் ‘பறையன்’ எனும் சொல் குறித்து நிகழ்ந்த முக்கியமான கருத்து மோதலில் அயோத்திதாசரை தலைமையாகக் கொண்ட அறிவுக்குழு திராவிடப் பாண்டியன் இதழ் மூலம் ‘பறையன்’ எனும் சொல் பூர்வ பவுத்தர்களை இழிவுபடுத்தி கீழ்நிலைப்படுத்துவதற்காக சாதியை தோற்றுவித்தவர்களால் பரப்பப்பட்ட ஒன்று எனும் கருத்தைக்கொண்டிருந்தனர். இரட்டைமலை சீனிவாசனை தலைமையாகக் கொண்ட அறிவுக்குழு (பறையர் மகாஜனசபை) ‘பறையன்’ எனும் சொல்லை வெளிப்படையாக ஒவ்வொருவரும் அறிவித்துக் கொள்வதன் மூலமே இம்மக்கள் மீதான மற்றும் அச்சொல்லின் மீதான இழிவைப் போக்க முடியும். அதாவது இழிவு-கீழான-அசுத்தமான என்று அர்த்தம் கற்பிக்கப்பட்ட ‘பறையன்’ என்ற சொல்லுக்கான மரியாதையான அர்த்தத்தை நாமே உருவாக்கிக் கொள்ளவேண்டும் எனும் கருத்தைக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாகவே இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய இதழுக்கு ‘பறையன்’ என்று பெயரிட்டார். இந்தப் பிரச்சினை நீதிமன்றம்வரை சென்று இரட்டைமலை சீனிவாச னுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பூலோகவியாசன் ஆதரித்த இரட்டைமலை சீனிவாசன் காங்கிரஸ் இயக்கம் குறித்து கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதும் இந்த இதழ் காங்கிரஸ் இயக்கத்தின் கூட்ட நடவடிக்கைகளை எவ்வித விமர்சனமுமின்றி பதிவுசெய்துள்ளது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் பூலோகவியாசன் சுதேசிய எதிர்ப்பு இதழாக வெளிவந்தது. டெமி அளவில் வெளிவந்த இவ்விதழின் விற்பனை ஆரம்பகாலங்களில் 300 ஆக இருந்தது. இதன் விற்பனை 1910களுக்குப் பின்பு சிறிது குறைந்து பின்பு 1917ல் இதன் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீர நாவலரின் மறைவைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இதற்கெனத் தொடங்கப்பட்ட பூலோகவியாசன் அச்சகத்தை முத்துவீர நாவலரின் மனைவி முருகம்மாளின் பெயருக்கு மாற்றம் செய்யக்கோரி அரசுக்கு மனு செய்யப்பட்டது. அச்சகச் சட்டப்படி அச்சகத்தின் பெயர் மாற்றத்திற்கு வைப்புத்தொகையாக ரூ.500 கட்டவேண்டும், இதை முருகம்மாள் கட்டத்தவறியதால் அச்சகமும் முடிவுக்கு வந்தது.

நமக்குக் கிடைத்த ஒரு வருடத்தொகுப்பு மற்றும் அரசு ஆவணங்கள் சிலவற்றின் துணை கொண்டு இதுவரை வெறும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த பூலோகவியாசன் இதழின் வரலாற்றை ஓரளவு கட்டமைக்க முடிந்துள்ளது. பூலோகவியாசனில் அரசியல், கல்வி, சமூகம், மதம், விவசாயம், புதினங்கள், விளம்பரங்கள் என அனைத்து விசயங்களும் வெளிவந்து ஒரு முழுமையான இதழாக வெளிவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் இதழ்கள் அனைத்து விசயங்களும் கலந்த ஒரு கலவையாகவே வெளிவந்தன. ஒரு சில தீவிர இதழ்கள் (தமிழன்) மட்டுமே கருத்தியல் சார்ந்த விசயங்களுக்கு மட்டும் அதிகம் இடம் தருபவையாக இருந்தன.

பூலோகவியாசன் – தமிழன் உறவு

தமிழன் (18, ஜனவரி,1911) இதழில் ‘சாதி பேதமற்ற திராவிடர்கள்’ எனத் தலைப்பிட்டு, “பூலோகவியாசனுள் வரைந்துள்ளக் கருத்தை அசத்தியர்களாலும், அசப்பியர்களாலும், துன்மார்கர்களாலும் பொறாமை கொண்டு பூர்வ பௌத்தர்களுக்களித்துள்ள சாதிப்பெயர்களை யகற்றி சுயம்பில் (சென்செஸ் காலத்தில்) வெளிவருவதுடன் மதக் களிம் பேறியுள்ள மற்றவர்களுக்கும் விளக்கி பௌத்த காலத்தில் சேர்க்க வேண்டுமென்னும் கோரிக் கையால் வரைந்ததென்பது கருத்தாம். அன்னோரோதனும் பிறர்க்குரைத்தனுமாகியச் செயலில் நிகழ் வாராயின் அழகும் ஆனந்தமுமேயாம்” என்ற செய்தியின் மூலம் பௌத்த அடையாளத்திற்காக பூலோகவியாசனின் பங்களிப்பு தெரிய வருகிறது. அயோத்திதாசப் பண்டிதரோடு நெருக்கமாக செயல்பட்டு வந்த ஏ.பி.பெரியசாமி புலவர் ‘சாக்கைய பௌத்தர்கள்’ எனும் தொடரை மூன்று தொடராக எழுதியுள்ளார். மேலும் தமிழகச் சூழலில் இதுவரை பௌத்தத்தின் வீழ்ச்சியில் தீண்டாமையின் தோற்றத்தை விளக்கும் சான்றாக அயோத்திதாசரின் தமிழன் இதழ் மட்டுமே அறியப்பட்டு வந்த சூழலில் பூலோகவியாசனின் பௌத்தத்திற்கும் இந்து ஆரியருக்குமான முரண் நோக்கில் சாதி மற்றும் தீண்டாமையின் தோற்றத்தை விளக்குவது என்பதெல்லாம் தமிழனுக்கும் பூலோக வியாசனுக்குமான கொடுக்கல் வாங்கல்கள். இதிலிருந்து அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் இதழுக்கு அடுத்தபடியாக பூலோகவியாசன் மற்று மொரு பௌத்த இதழ் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

பூலோகவியாசன் இதழின் கடிதங்கள் பகுதி யில்; “விகடனும் பாஷிதனும்” என்று தலைப் பிட்ட ஒரு கடிதத்தை பொதுநலப்பிரியன் என்பவர் எழுதியிருந்தார். இக்கடிதத்தைப் பிரசுரிக்க முடியாது என ஆசிரியர் அறிவித்துள்ளார். இதற்குக் காரணமாக அவர் “சில காலம் முன் நடந்து மறைந்த ‘திராவிடப்பாண்டியன்’ ‘பறையன்’ எனும் பத்திரிகைகளும் ‘மஹாவிகடனும்’ ஒன்றுக்கொன்று தூற்றித்தூறி அடைந்த அவமா னத்தையுலகம் மறந்துவிடவில்லையே” என்று பத்திராதிபர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திராவிடப்பாண்டியனுக்கும் பறையனுக்குமிடையில் நடந்த கருத்து மோதல் உறுதிப்படுகிறது. இதையே பெரியசாமி புலவர் குறிப்பாக தமிழனா? பறையனா? என்ற தலைப்பில் “அந்தோ பறையரென்றாலும் பழி, தமிழனென்றாலும் பழி இவ்விதக் கோளரிகள் நமக்குள்ளேயச் செய்து கொண்டால் ஜெயம் பெறுவதெங்ஙனம்? என்று சீர்படப்போகிறோம்” என்று எழுதுகிறார். இங்கே ‘தமிழன்’ என்பது அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம், ‘பறையன்’ என்பது இரட்டைமலை சீனிவாசன் முன்வைத்த அடையாளம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதில் பெரியசாமி புலவர் பௌத்தம் குறித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் என்றும் அவர் இந்த பறையன் ஜ் தமிழன் விவாதத்தில் நடுநிலைமையே வகித்தவந்தார் என்பதும் தெளிவு.

வாசகர்கள்

பூலோகவியாசன் இதழுக்குக் கடிதம் எழுது வோரின் புனைப்பெயரைக் கொண்டு அவர்களின் அரசியல் சார்பு மற்றும் விழிப்புணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, உண்மை ஞானப் பறையன், ஆத்மநேசன், அவதானியார், செந்தமிழ் பாநு, தேசிகன், கருப்பண்ணாச்சாரி, சோதரப்பிரியன், அஷ்டவதானியார், ஓர் பரோபகார சிந்தையான், கண்டுகளித்தோன் ஆகிய புனைப்பெயர்களில் பூலோகவியாசனில் கடிதம் எழுதி வந்தனர்.
ஒவ்வொரு பறையர் மகாஜன சபைக் கூட்டத்திலும் இரட்டைமலை சீனிவாசன் தென் னாப்பிரிக்காவிலிருந்து எழுதிய கடிதத்தை வாசித்துக் காண்பித்தனர். மேலும் பறையர்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் எந்தச் செய்தித்தாள்களில் வந்தாலும் அதைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாசித்துக்காட்டும் வழக்கம் இருந்துள்ளது. உதாரணமாக பூலோகவியாசனின் ஏப்ரல் மாத இதழில் வெளியான பறையர் மகாஜனசபை கூட்ட அறிக்கையில் மைசூரிலிருந்து வெளியான ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை ஜி.ஸி.றி. தீனதயாளம் பிள்ளை சங்கத்தின் முன் வாசித்துக் காட்டியதும், கனம் சுபேதார் மாரிமுத்தாப்பிள்ளை விஜயா பத்திரிகையில் வெளிவந்த பஞ்சமர் விசயத்தையும் வாசித்தனர் என்பதும் தெரியவருகிறது. பறையர் குறித்த செய்தி, கட்டுரை எந்தப் பத்திரிகையில் வந்தாலும் பறையர் மகாஜனசபை கூட்டத்தின்போது அதை வாசித்துக் காட்டுவது எனும் மரபு இம்மக்கள் பத்திரிக்கை வாசிப்பு எனும் அறிவுச் செயல்பாட்டில் கொண் டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையைக் காட் டுகிறது.

மேலும் எந்தப் பத்திரிகையில் தாழ்த்தப்பட்டோர் குறித்த கருத்துகள் வெளியிடப்பட்டாலும் அதற்கு எதிர்வினை யாற்றும் செயல்பாடும் வரலாற்றில் துலக்க மாகத் தெரிகிறது. வாசகர்கள் என்பவர்கள் செயலற்ற வாசகர்களாக இல்லாமல் எதிர்வினை யாற்றக் கூடிய வாசகர் களாக இருந்துள்ளனர்.

‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ தொகுப்பிற்கான முன்னுரையில் அன்பு பொன்னோவியம் “ஆதிதிராவிடன், மஹாவிகடதூதன், பூலோகவியாசன், பறையன், ஆதிதிராவிட மித்திரன் போன்ற பல பத்திரிகைகள் கிடைத்திருக்குமாயின் இன்னும் பல செய்திகள் தெரிய வந்திருக்கும். அவை இன்று கிடைப்பனவாக இல்லை” (பக்.ஙீஙீக்ஷி) என்று கூறுகிறார். அவரின் கவலையை முழுமையாகப் போக்க முடியாவிட்டாலும் அவர் குறிப்பிட்ட இதழ்களில் ஒன்றான பூலோகவியாசன் குறித்து கட்டுரை வெளியிடுவது அன்பு பொன்னோவியத்திற்கு அர்ப்பணிப்பதாகும். ட

நன்றி: தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்

‘பெரியசாமிப் புலவர்’ புகைப்படம் – நன்றி: ஸ்டாலின் ராஜாங்கம்

(நன்றி: அம்பேத்கர்.இன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.